நாகேஸ்வரி அண்ணாமலை

ஒரு வழியாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.  நான் விரும்பிய மாதிரியே ஜனாதிபதி ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  இரு கட்சிகளும் தங்கள் கொள்கைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல, எதிர்க்கட்சியைத் திட்ட, பல கோடி டாலர்களைச் செலவிட்டனர்.  இவ்வளவு செலவழித்து, இத்தனை பேர் பங்கு கொண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு அதே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்; அமெரிக்க மேலவையான செனட்டில் முன்போலவே ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது; கீழவையில் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது பழைய நிலையைத் தொடர இத்தனை பணம் செலவழித்திருக்க வேண்டுமா என்று கேட்கத் தோன்றுகிறது.

சுமார் ஏழு ஆண்டுகளாக, அதாவது புஷ்ஷின் இரண்டாவது பதவிக் கால ஆரம்பத்திலிருந்தே, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னி ஜனாதிபதிப் பதவிக்கு வர முயன்று வந்ததாகக் கூறுகிறார்கள்.  2005-லிருந்தே இந்தப் போட்டிக்குத் தன்னைத் தயார்ப்படுத்தி வந்த ராம்னி 2008-இல் நடந்த குடியரசுக் கட்சி முதல்நிலைத் தேர்தலில் ஜான் மெக்கெயினிடம் தோல்வியுற்றார்.  அந்த வருடம் நடந்த பொதுத் தேர்தலில் மெக்கெயின் ஒபாமாவிடம் தோல்வியுற்றார்.  ஒபாமா பதவிக்கு வந்த ஓராண்டிலேயே ராம்னி ஒபாமாவைத் தாக்க ஆரம்பித்தார்.  மறுபடி 2012-இல் நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் போட்டியிட, ஒன்பது பேர் பங்கேற்ற குடியரசுக் கட்சி முதல்நிலைத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இப்படிப் பல ஆண்டுகளாக அவர் ஒபாமாவின் அரசியல் கொள்கைகளையும் அவர் அரசியல் நடத்தும் விதத்தையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.

இவர் இடத்திற்குத் தகுந்த மாதிரி பச்சோந்தி போல் பல வேஷங்கள் எடுப்பார் என்று இவர் பற்றிக் கூறப்படுவதுண்டு.  2006 வரை மாசசூசெட்ஸ் மாநில ஆளுநராக இருந்த இவர் அப்போது கடைப்பிடித்த கொள்கைகளிலிருந்து ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடத் தொடங்கியதும் வேறுபட ஆரம்பித்தார்.  அந்த மாநிலத்தில் எல்லோருக்கும் கட்டாய மருத்துவ இன்சூரன்ஸைக் கொண்டுவந்த இவர் ஒபாமா கொண்டுவந்த, நாடு முழுவதற்குமான கட்டாய இன்சூரன்ஸ் திட்டத்தை வெகுவாகத் தாக்கினார்.  ஒரு மாநிலத்திற்குரிய சரியான திட்டம் நாடு முழுவற்கும் சரிப்படாது என்று சொன்னாரேயொழிய ஏன் சரிப்படாது என்று ஒரு போதும் சொல்லவில்லை.

இப்படி மாற்றிச் சொன்னதெல்லாம் கூட தப்பில்லை. சரமாரியாகப் பொய்களைக் கூறத் தொடங்கினார்.  அதுதான் என்னைப் போன்றவர்களுக்கு அவர் மேல் அதிக எரிச்சலை ஏற்படுத்தியது.  பேட்ரிக் டேனியல் மொய்னிஹன் கூறியது போல், அவரவர் கருத்துக்களைக் கூற எல்லோருக்கும் உரிமை உண்டு.  ஆனால் உண்மைகளைத் திரித்துக் கூற யாருக்கும் உரிமை இல்லை.  அமெரிக்க அரசியல் வரலாற்றில் பல நேர்மையற்ற அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள்   ஒரு துணை ஜனாதிபதி கொலையே செய்திருக்கிறாராம்.  இருந்தாலும் ராம்னி அளவிற்கு உண்மையை முழுவதுமாக மாற்றிக் கூறியவர்கள் இல்லையாம்.  இவர்தான் உண்மையை முழுவதுமாக திரித்துக் கூறுவதில் முதல்வர்.

புஷ்ஷின் கொள்கைகளிலிருந்து  இவர் தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டாலும் புஷ் தன் காலத்தில்  தொடுத்த இரண்டு யுத்தங்களால்தான் அமெரிக்காவின் கடன் மிகப் பெரிய அளவை அடைந்தது என்று ஒரு போதும் கூறவில்லை.  அமெரிக்காவின் கடன்சுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் பத்து சதவிகிதத்திற்கு மேல் வளர்ந்ததற்கும் ஒபாமாதான் பொறுப்பு என்பது போல் எல்லாக் கூட்டங்களிலும் கூறிக்கொண்டிருந்தார்.  ஒபாமா செய்ததாக, செய்துகொண்டிருப்பதாக, இவராகக் கற்பனை செய்துகொண்ட தவறுகளைப் பற்றிக் கூறினாரேயொழிய தான் எப்படி அவற்றைத் திருத்தி அரசியல் நடத்துவேன் என்று மாற்றுத் திட்டம் எதையும் ஒரு போதும் கூறவில்லை.  வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்று கூறினாரேயொழிய எப்படி என்று சொல்லவில்லை.

ஒபாமா அளவிற்கு இவர் திறமைசாலியல்ல.  உலக அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது.  மில்லியன் கணக்கில் வேலைகளை உருவாக்குவேன் என்று மிகப் பெரிய பொய்யாகச் சொன்னார்.  வேலையில்லாமல், அதனால் மருத்துவ இன்சூரன்ஸ் இல்லாமல் இருக்கும், பல அமெரிக்கர்களுக்கு இவர் கூறியது நம்பிக்கை கொடுத்தது. இந்த நம்பிக்கை ஒபாமாவைப் பற்றி இவர் கூறிய பொய்களை  இவர்களின் கண்களிலிருந்து மறைத்தது.  இவருக்கு மக்களிடம் ஆதரவு கூடியது.  இருவருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்படும் அளவிற்கு ராம்னிக்கு ஆதரவு பெருகியது.

என்னைப் போன்றோருக்கு இது  மிகுந்த அதிர்ச்சியைக்  கொடுத்தது.  பொய்களாகச் சொல்லும் இவரை எப்படி அமெரிக்க மக்கள் நம்புகிறார்கள் என்று பல அமெரிக்க நண்பர்களிடம் கேட்க  ஆரம்பித்தேன்.  ‘புஷ்ஷை இரண்டு முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்த நாடல்லவா இது.  அமெரிக்கர்களின் முட்டாள்தனத்தை குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்’ என்று சிலர் சொன்னார்கள்.   புஷ்ஷைத் தேர்தெடுத்த அமெரிக்கர்களின் முட்டாள்தனம் இருக்கட்டும்.  இந்த புஷ்ஷே எவ்வளவு பெரிய முட்டாள் என்பது நேற்றுத் தெரிந்தது.  இவர் தேர்தல் தினத்தன்று ஓட்டுப் போட வந்த போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஒபாமாவிற்கு ஓட்டுப் போட்டுவிட்டாராம். அதை அப்படியேயாவது விட்டிருக்கலாம்.  தேர்தல் அதிகாரிகளிடம் தான் தவறுதலாக ஓட்டுப் போட்டுவிட்டதாகவும் அதைத் திருத்தவேண்டும் என்றும் கூறினாராம்.  அப்படிச் செய்வதற்குச் சட்டத்தில் வழி எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டார்களாம்.  மிகுந்த கோபத்துடன் வெளிவந்த புஷ் இனி வரப் போகும் பல ஆண்டுகளில் தானும் தன் மனைவியும் வாக்குச் சீட்டை எப்படித் திருத்தி அமைப்பது என்ற பிரச்சாரத்தில் ஈடுபடப் போகிறார்களாம்!  வாக்குச் சீட்டுகளைத் தயாரிக்கும் கம்பெனி ‘எங்கள் வாக்குச் சீட்டுகளில் எந்தக் குறையும் இல்லை.  அதை நாங்கள் திருத்தி அமைக்கப் போவதில்லை’ என்று கூறிவிட்டது.

தேர்தல் தினம் நெருங்க  நெருங்க எனக்கு மிகவும்  உதறல் எடுக்க ஆரம்பித்தது.  ராம்னி ஜெயித்துவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது.  நண்பர்கள் பலரிடம் ‘ஒபாமா ஜெயித்துவிடுவார் அல்லவா?’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டேன்.  சாலையில் போவோர் வருவோரிடமெல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு குழம்பிப் போயிருந்தேன்.  தேர்தல் தினத்தன்று வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் ஓட்டுச்சாவடிக்குச் சென்று அங்கு ஏதாவது விபரம் கிடைக்குமா என்று ஆராய ஆரம்பித்தேன்.  அங்கு நிறைய முதியோர் ஓட்டுப் போட வந்திருந்தனர்.  வழக்கமாக முதியோர்களின் வாக்குகள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கே என்றாலும் இப்போது ராம்னி கூறியிருக்கும் பொய்களால் இவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டிருக்கலாமோ என்ற பயம் இருந்தது.  இனி எப்படியும் பிழைக்க மாட்டார்கள் என்ற கட்டத்தில் முதியோர்களுக்காகும் செலவைக் குறைக்க எண்ணி அந்தச் செலவுகளை மெடிக்கேரிலிருந்து (இது முதியோர்களுக்காக மத்திய அரசு நடத்தும் மருத்துவ இன்சூரன்ஸ்) குறையுங்கள் என்று ஒபாமா சொல்லப் போக,   இதையே ராம்னி திரித்து ‘உங்கள் வாழ்க்கையில் தலையிட ஒபாமாவிற்கு உரிமை இல்லை’ என்று கூறினர்.  வயதான காலத்தில் எத்தனை முதியோர்கள் ஒபாமா சொன்னது என்ன, அதை எப்படி ராம்னி திரிக்கிறார் என்று ஆராய்ந்துகொண்டிருக்கப் போகிறார்கள்?  ஒரு சிலரிடம் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டேன்.  முதியோர் நடைவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த ஒரு முதியவரிடம் கேட்ட போது அவர் ஒபாமாவிற்கு வாக்களித்ததாகக் கூறினார்.  நாங்கள் வசிக்கும் இல்லினாய் மாநிலத்தில் எப்போதும் ஜனநாயக் கட்சி வேட்பாளர்தான் ஜெயிப்பார்.  அதனால் சிகாகோவில் கிடைக்கும் செய்தியை வைத்து ஒபாமா ஜெயிப்பார் என்று சொல்ல முடியாதே என்று எண்ண ஆரம்பித்தேன்.

இரவு தேர்தல் முடிவுகள்  வெளிவந்து ஒபாமா இரண்டாவது  முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தி வரும் வரை  இந்த மனஉளைச்சல் இருந்து  கொண்டே இருந்தது.  தேர்தல்  முடிவு வந்ததும் ஏதோ ஒரு  பாரம் இறங்கியது போல் இருந்தது.  இனி நான்கு வருடங்கள் அமெரிக்கா  போகும் பாதையை ஒபாமா நிர்ணயிப்பார்.  உள்நாட்டில் மாணவர்களின்  கல்விக் கடன் சுமை குறையும்.  பெண்களுக்கு கருத்தடைச் சாதனங்களை உபயோகிக்கும் உரிமை தொடர்ந்து இருக்கும்.  சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது ஓரளவாவது குறையும்.  வெளிநாட்டு விவகாரங்களிலும் ஒபாமாவின் மிதமான கொள்கை தொடரும்.  இஸ்ரேல் ஈரான் மீது படையெடுக்க ஒரு போதும் ஒபாமா ஒத்துழைக்க மாட்டார் எனற நம்பிக்கை பிறக்கிறது.

வாழ்வில் பொய்மையை வாய்மை வெல்லும் என்பதையும், தீமை ஒழிந்து நன்மை பிறக்கும் என்பதையும், இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்பதையும் நினைவுகூர தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.  உலகிலேயே அதிகப் பணம் படைத்த, அதிக வலிமை வாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபராக ஒபாமா தேர்தெடுக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  இதை அமெரிக்க மக்கள் எனக்குக் கொடுத்த தீபாவளிப் பரிசாக நான் கருதுகிறேன்.  அவர்களுக்கு என் நன்றி.

படத்திற்கு நன்றி :

http://www.bbc.co.uk/news/20216166?ocid=bbccom_in_ppc_Google_obama_US%20Election%20-%20Post%20Election_Barack%20Obama

3 thoughts on “தீபாவளிப் பரிசு

  1. ராம்னி என்ன பொய் சொன்னார் என்று சொல்லமுடியுமா?
    ஒபாமா சொல்லாத பொய்யா? வந்த நாள் முதல் இந்த நாள் வரை கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தினத்துக்கொரு posture எடுக்கும் ஒபாமாவை விடவா ராம்னி பச்சோந்தி? பெங்காசியில் அமெர்க்கக் குடிமக்கள் நால்வர் இறந்த நிலையிலும் ஒபாமா கட்சி நிதி திரட்டிக் கொண்டிருந்த பொறுப்புள்ள தலைவர் – இவரை ராம்னி மிஞ்ச முடியாது தான்.

    தெளிவான விவரங்கள் எதுவும் இல்லாமல் இது போன்ற சொந்தக் கருத்தைப் பொய்மையாகப் பரப்பும் உங்களைப் போன்றவர்கள் பேச்சும் போக்கும் அதிர்ச்சியளிக்கிறது. இதைப் படிப்பவர்கள் ஒபாமா என்னவோ காந்தியின் குரு போலவும் ராம்னி என்னவோ ராவணணுக்கு குரு போலவும் நினைக்கக் கூடுமே? பொறுப்பில்லாமல் இப்படி எழுதுவது வருந்தத் தக்கது.

    இன்னும் நான்கு வருடங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் சீரழிய வாய்ப்பு மிகவும் அதிகம். அதற்கு ஒபாமா மட்டும் காரணமில்லை; உங்களைப் போன்ற பல்லாயிரம் கண்மூடிகளும் காரணம்.

  2. ஒபாமாவின் insuranceன் முழு விவரம் தெரியாமல் இப்படி எழுதுகிறீர்களே? ஒபாமாகேர் என்பது அமெரிக்க constitutionக்குப் புறம்பானது. சுப்ரீம் கோர்ட் வரை போய் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஏற்கப்பட்டது – எனினும் constitutionக்குப் புறம்பானதே. ஒபாமாகேர் படி காப்பீடு பெறவில்லையென்றால் வரி கட்ட வேண்டிவரும். வேலையில்லாமல் சம்பளமில்லாமல் திண்டாடித் தெருவில் நிற்கும் ஏழை காப்பீடு வாங்க முடியாமல் வரி கட்ட வேண்டுமா? விவரம் தெரியாமல் இப்படி எழுதுகிறீர்களே?

  3. இலினாய் டெமொக்ரேட் மாகாணம், இங்கே இப்படித்தான் நடக்கும். இதே டெமோக்ரேட் காரர்கள் 2000ல் பில் க்லின்டன் பக்கமே வரவேண்டாம் என்றார்கள் – இந்தத் தேர்தலில் பில் க்லின்டன் இவர்களுக்கு அரசியல் குரு.
    இந்தியர்கள் பொதுவாக டெமோக்ரேட் கட்சிக்காரர்களே. அதில் தவறில்லை. ஆனால் எதிர்கட்சியைப் பற்றிப் பொது ஊடகத்தில் எழுதுவதாக இருந்தால் முழு விவரங்கள் தெரியாமல் எழுதக்கூடாது. அல்லது, தன்னுடைய கட்சி ஆதரவை முதலில் வெளிப்படுத்திவிட்டுப் பிறகு விருப்பப்படி எழுதலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *