ஆனந்த தீபாவளி
ஆனந்த தீபாவளி கொண்டாடுவோம்
அன்றோர் அசுரன் அழிந்ததற்காய்….
அடுத்த முறை தீபாவளி கொண்டாடுவோம்…சில
அசுர குணங்கள் அழிவதற்காய்…
பாகுபாட்டை பட்டாசாய்க் கொளுத்திடுவோம் – நல்ல
பண்பாட்டை பலகாரமாய்ச் சுவைத்திடுவோம்!
வேறுபாட்டை விறகாக்கி எரித்திடுவோம் – என்றும்
விழிப்புணர்வை புத்தாடையாய் உடுத்திடுவோம்!
மதவெறியை மத்தாப்பாய்க் கருக்கிடுவோம் – உயர்
மனிதநேய மலர்ச்செண்டை ஏந்திடுவோம்!
ஜாதிமுறைக்கு சவப்பெட்டி செய்திடுவோம் – ஒற்றுமை
ஜோதியேற்றி தேசமெங்கும் சுடர் கூட்டுவோம்!
ஏற்றத்தாழ்வை எரிதழலில் பொசுக்கிடுவோம் – பார்
போற்ற வாழ்ந்து புகழ்மாலை சூட்டிடுவோம்!
மாற்றங்கூறும் மறுமலர்ச்சி மடல்வரைவோம் – ஒளிர்
ஊற்றுநீராய் உண்மைநேசம் உயரவைப்போம்!
இயலாமை தனைநீக்கி இன்புறுவோம் – இங்கு
இரப்போரின் நிலைமாற்ற இயங்கிடுவோம்!
கல்லாமை தனைக்கழித்து களிப்புறுவோம் – என்று
சொல்லாலே சூளுரைத்து செயல்காட்டுவோம்!
ஆனந்த தீபாவளி கொண்டாடுவோம்
அன்றோர் அசுரன் அழிந்ததற்காய்….
அடுத்த முறை தீபாவளி கொண்டாடுவோம்…சில
அசுர குணங்கள் அழிவதற்காய்…
படத்திற்கு நன்றி