அன்னை அபிராமி பத்து
இசைக்கவி ரமணன்
சன்னிதியில் இருவரும் சாமரம் வீசநான்
சகதியில் உழல்கின்றதோ?
சாகா தெனைச்செய்து பாகா யுருக்கிவிடும்
தரிசனம் நழுவிவிடுமோ?
முன்னிற்கும் வினைவெறும் முட்டையோ டென்பது
மூளைக் குறைக்கவிலையே
மூளைக் குறைத்தாலும் முதுபெரும் மனதுக்கு
முன்னிலை புரியவிலையே
நின்றயிடம் சன்னிதி நேரிலோ நிம்மதி
நெஞ்சிலோ அமைதியிலையே!
நிகரற்ற ஒளிமுன்னில் நகராமல் இருளொன்று
நெருடுவது புரியவிலையே
என்றைக்குத் தீருமோ? எந்தவிதம் நேருமோ?
ஏழைக்கு வாழ்வுவருமோ?
என்னாளும் முழுநிலவும் இருசெவியில் குழையாடும்
என்றனபி ராமியுமையே! (1)
எட்டத்தில் கிட்டாமல் கிட்டத்தில் எட்டாமல்
என்னமாய் நிற்கிறாய் நீ!
இமைதுளியும் கொட்டாமல் மனதிலெதும் ஒட்டாமல்
விலகாமல் நிற்கிறேன் நான்
திட்டங்க ளில்லாமல் திசையேது மறியாமல்
விரைகின்ற மேகம் போலே
திரியவைத்தாய் நன்கு திணறவைத்தாய் பின்பு
திரைநீக்கிப் புரியவைத்தாய்
கொட்டங்கள் தீர்ந்ததே கூத்துக்கள் நின்றதே
கொட்டகை காலியாச்சே!
பொல்லாத நினைவுகளும் பூவான நினைவுகளும்
புணருவது தாங்கவிலையே!
திட்டுக்குள் என்னுயிரைத் திரியாக்கி உன்னினைவைத்
தீபமாய் ஏற்றுதாயே!
திக்கெட்டும் உன்னாமம் தினமும்கரை மோதுமொரு
திவ்யசுக அபிராமியே! (2)
கண்ணுக்குள் சென்றுமனம் கடைகின்ற தாலிதனைக்
கடையூ ரெனச்சொல்வ தா?
கடவாத மாயைகள் நடமாட முடியாத
கடவூ ரெனச்சொல்வ தா?
கண்ணற்ற என்போன்ற கடையரையும் காப்பதால்
கடையூ ரெனச்சொல்வ தா?
கடமைகள் மடமைகள் யாவும் கடப்பதால்
கடவூ ரெனச்சொல்வ தா?
எண்ணற்ற பெருமைகள் எல்லாமும் உனதாக
எதையென்று நான்சொல்வது?
என்றும்நான் உன்னவன் என்றும்நீ என்னவள்
என்பதே இதமானது!
மண்மீது விண்வைத்து மத்தாய்க் கடைந்துயிரில்
மத்தளம் கொட்டும் தாயே!
மனமுனது சுகமெனது மலர்துவளும் பதமெனது
இதுமாயை அதுகன்மம் இந்தமுகம் ஆணவம்
என்றார்க்கும் தெரிகின்றதே
இவ்வழியும் அவ்வழியும் இடையில்வரும் செவ்வழியும்
எல்லார்க்கும் விரிகின்றதே
இதுநன்மை அதுதீமை இதுசெய்கை அதுவிளைவு
எளிதாகப் புரிகின்றதே
இடையின்றிப் பெரியோர்கள் இறங்கிவந் தேசொல்லும்
இதமொழிகள் சுடுகின்றதே
இதைநாடி ஓங்குமனம் அதிலோடி விழுகின்ற
இன்னல்கள் குறையவிலையே!
இசைபாட வரும்நேரம் வசைநாவில் வருகின்ற
ஈனம் விளங்கவிலையே!
பதம்வேண்டும் பதமொன்று தான்வேண்டும் என்கின்ற
பக்குவம் அருள்க தாயே!
பாவிநெஞ்சில் ஊடு பாவு விளையாடுகிற
பாவையபி ராமிவுமை யே! (4)
கைவிட்ட உயிருக்கும் கைகாட்டி அருள்கின்ற
கருணையுன் னியல்பல்லவா?
காலனையு தைத்ததிரி சூலனின் பதத்துகளில்
காண்பதுன் முகமல்லவா?
பொய்விட்ட நெஞ்சினில் புலரிபோல் எழிலார்ந்து
பூப்பதுன் விழியல்லவா?
பொல்லாத சொல்லென்னும் பொல்லாப்பு தீர்ந்துவரும்
மெளனமுன் மொழியல்லவா?
கைவிட்ட பையிலே காசில்லை பசியிலே
கண்ணெலாம் இருளுதம்மா
கால்விட்ட பாதையில் தடுமாறி வருகிறேன்
கைத்தாங்கல் இல்லையம்மா
பொய்யான மெய்விட்டு மெய்தொட்டுப் பார்க்கப்
புறப்பட்ட வன்கதியிதே!
பூதொட்டுப் பார்க்கவும் புலனதிரு கின்றதே
எல்லைநீ! என்னாளும் எல்லைக்குள் வாராத
எழிலான தொல்லையும் நீ!
ஏற்றம்நீ! கவ்வும் இறக்கம் நீ! வாழ்வில்
எ.ல்.லா மாற்றமும் நீ!
அல்லைநீ! உண்டுநீ! அவரவர்க் கங்ஙனே
அசையாமல் இசைபவள்நீ!
அறுதிநீ! இளகாத உறுதிநீ! இன்பங்கள்
யாவைக்கும் ஆரம்பம்நீ!
முல்லைநீ! கொல்கின்ற மூர்க்கம் நீ! முத்தத்தின்
முன்மருவும் மூச்செலாம் நீ!
மொத்தத்தில் விரிகின்ற சித்தத்தில் நிறைகின்ற
பித்தத்தின் மொத்தமும் நீ!
எல்லாமும் நீயென்று சொல்லாரச் சொல்கிறேன்
என்னுயிரின் பீலியழகே!
என்னையுன தேயென்று என்றுகொண்டாடுவாய்
என்றனபி ராமிவுமை யே! (6)
கண்ணார உன்னைநான் காணவேண்டும் நெஞ்சம்
கண்ணீரில் ஓடவேண்டும்
காதார உன்னழகைப் பாடவேண்டும் உன்றன்
கண்கள் சிரிக்கவேண்டும்
விண்வாரக் கண்வேண்டும் மண்வாழச் சொல்வேண்டும்
விந்தைகள் திகைக்கவேண்டும்
வீதிமுனை யில்பேசும் சேதியெங்கும் உன்றன்
வித்தாரம் விரியவேண்டும்
அண்ணாந்து நான்பார்க்க அங்குள்ள தேவர்கள்
ஆவென்று பார்க்கவேண்டும்
அன்னையருள் இந்தவிதம் கண்டதிலை என்னும்படி
உன்னையெனில் வார்க்கவேண்டும்
எண்ணாமல் கேட்கிறேன் எதிர்நிற்ப துன்பிள்ளை
எண்ணாமல் தருகதாயே!
ஈசன்விழி கூசுமெழில் பேசும்வடி வே! பாடும்
எங்களபி ராமிவுமை யே! (7)
கங்கையில் நின்றுடலம் கரைந்தாலும் என்னுயிரின்
கறைகளினும் கரையவிலையே
கண்ணெதிரில் உன்னைநான் கண்டபோதும்கொடுங்
கசடுகள் சிரிக்கின்றதே
கண்கண்ட துண்மையா? கயமைதான் உண்மையா?
கட்டாயம் தெரியவேண்டும்
காலைவந்தா லுமிருள் காலாட்டி நிற்கின்ற
காரணம் புரியவேண்டும்
புண்தீர்ந்த தென்றுநான் பூரித்த போதெலாம்
புன்மைநகை செய்கின்றதே!
புகும்போது குருடாகிக் காலிடறித் தலைமோதிப்
புலம்புவது தொடர்கின்றதே!
மண்தின்னும் முன்பென்னை மலராக்கிக் கணமேனும்
மார்பினில் சூடுதாயே!
மங்கும்விழி பொங்கியெழ மனம்விம்மிச் சோர்கிறேன்
என்னெதிரில் நிற்பதும் என்னுள்சி ரிப்பதும்
என்னுயிரில் உயிரானதும்
எட்டாத உயரங்கள் தொட்டென்னைப் பார்ப்பதும்
ஏழைக்கு வந்தவாழ்வும்
முன்நேரும் செயலன்றி மூளும்சிந் தையின்றி
முயலாமல் செல்லும் பொழுதும்
மறுகணம் தெரியாமல் மனமறிய விரும்பாமல்
நதியிலோர் இலையானதும்
உன்சித்தம் அல்லவா? உன்சிந்தை அல்லவா?
உன்சொந்தம் நானல்லவா?
உந்தினால் அசைகிறேன் உதறினால் விழுகிறேன்
ஊதினால் உயிர்கொள்கிறேன்
அன்பென்ற வார்த்தையின் ஆனந்த வடிவமே!
ஆதாரமே! அருவமே!
அன்னையே! பிள்ளைக்கு யாவுமே! என்னுயிரின்
ஆசையபி ராமைவுமை யே! (9)
உருவமோ அருவமோ உண்மையோ பொய்தானோ
உன்னையறி வார்களுண்டோ?
உலகினோர் சிமிழ்களுக் குற்றவிதம் நிறைவதால்
உன்தன்மை அதுமட்டுமோ?
குருவினைத் தந்தனை குருதந்த ஒளியினால்
கொஞ்சமுன் னைக்காட்டி னாய்
குருவிக்கும் யானைக்கும் தாகத்தைத் தீர்க்கவே
கொள்ளாத நதியாகினாய்
திருவுக்கும் அருள்புரியும் பெருவிந்தையே உன்னில்
தீரவே நான்விழைகிறேன்
தீரும்வரை உன்றன்பதம் சேரும்வரை உன்னையே
தீராமல் காணவந்தேன்
ஒருசிறிதும் உனைமனது மறவாமல் அதில்முழுதும்
ஊற்றாய் நிறைக தாயே!
உயிரிலே அமிழ்தாக அமிழ்திலே நிலவாக
ஓச்சும் அபிராமி உமையே! (10)
ரமணன்
படங்களுக்கு நன்றி :
http://www.eprarthana.com/temples/nagapattinam/tn1268abir.asp?tid=1268
அன்பு ரமணர் ஜி அன்னை அபிராமி நேரில் வந்து நின்று விட்டாள். போன்ற பிரமை .எப்படி இப்படி
நீர்வீழ்ச்சிப்போல் கவிதை பெருக்கெடுத்து ஓடுகிறது .அப்படியே பிரமித்து நிற்கிறேன் ,
வணங்குகிறேன்