அவளொளி அருளொளி!

5

கவிநயா

தீபாவளி. அல்லது தீப ஆவளி. தீபங்களின் வரிசை என்று பொருள்.

தீபம் என்றாலே ஒளி. எந்த விதமான இருளையும் அழித்து விடுகின்ற ஒளி. தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் தாத்பர்யமே, நமது அஞ்ஞான இருள் நீங்கி நாம் மெய்ஞ்ஞான ஒளி பெற வேண்டும் என்பதற்காகத்தான். எண்ணெயே நம் பழவினைகள்; திரியே நமது அகங்காரம். ஞானமாகிய ஒளி ஏற்றப்படுகையில், பழவினைகளும், அகங்காரமும் சிறிது சிறிதாகக் கரைந்து, எரிந்து, அழிந்து விடுகின்றன.

தீப ஆவளியன்றும் அமாவாசை இருளை நீக்கக் கூடிய தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து, புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, பலகாரங்கள் செய்து, பரிசுகள் பரிமாறிக் கொண்டு, அமர்க்களமாகக் கொண்டாடுகிறோம்.

ஒளி என்பதற்கு புற இருளை நீக்கும் ஒளி என்றும் பொருள் கொள்ளலாம்; அக இருளை, அறியாமையை நீக்கும் அறிவொளி என்றும் பொருள் கொள்ளலாம். இத்தகைய ஒளிக்கு மூலகாரணமாக இருப்பவள் யார்? சூர்யனையும், சந்திரனையும் நமக்குத் தந்தவள் யார்? அவற்றிற்கு ஒளியூட்டி உலவ விட்டவள் யார்? மாயை எனும் இருள் அகற்றி, நம் அகங்களில் ஞான தீபம் ஏற்றுபவள் யார்? ஒளி அனைத்துக்கும் ஆதார ஸ்ருதியாக இருப்பவள் யார்?

அகிலத்துக்கெல்லாம் அன்னையான ஸ்ரீ மாதாதான் அவள். அன்னை புவனேச்வரி. அகிலாண்டேச்வரி. அபிராமி. மீனாக்ஷி. ஆதி பராசக்தி. ஸ்ரீலலிதாம்பிகை.

அவள் எப்படிப்பட்டவளாம்? அவள் “ரவிப்ரக்யா”, சூரியனைப் போன்ற காந்தி உள்ளவள்; “உத்யத்பானு சகஸ்ராபா” ஆயிரம் சூரியர்கள் உதித்தது போன்ற ஒளியுடையவள். ஒரே ஒரு சூரியனைக் கூட நம்மால் கண் கொண்டு நேராகப் பார்க்க முடிவதில்லை; அத்தனை பிரகாசம். ஆயிரம் சூரியர்கள் சேர்ந்து உதித்தால்! அத்தகைய அவளேதான் “தேஜோவதி” யும். பிரகாசமாயிருப்பவள்.

அது மட்டுமல்ல; அவளை “ஸதோதியாயை” என்று வர்ணிக்கிறது, லலிதா சகஸ்ரநாமம். அதாவது, எப்போதும் உதயமாகி இருப்பவளாம். கதிரவனாவது இரவில் மறைந்து பகலில் தோன்றுகிறான்; சந்திரனோ இரவில் மட்டுமே உலா வருகிறான். அது போலல்லாமல், எந்நேரமும் பிரகாசிப்பவளாம் நம் அன்னை. அப்படி எந்நேரமும் தன் ஹ்ருதயத்தில் அவள் பிரகாசித்ததால்தான், அபிராமி பட்டருக்கு அமாவாசையும் பௌர்ணமியாகத் தெரிந்தது போலும்!

அவளது இன்னொரு நாமம், “தாப த்ரய அக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா” என்பது. தாப த்ரயம் என்பது மூன்று விதமான துன்பங்களைக் குறிக்கும். வெயில் சுட்டெரிக்கையில் நிழலில் ஒதுங்கினால் மிகவும் ஆறுதலாக இருக்கிறது. நெருப்பின் வெம்மைக்கு, குளிர்ச்சி சுகமாக இருக்கிறது. அதைப் போலத்தான்,  முற்பிறவி வினைகளும், இப்பிறவித் துன்பங்களும், மற்றும் இயற்கைச் சீற்றங்களும் நம்மை மாற்றி மாற்றி வாட்டிக் கொண்டிருக்கின்றன. குளிர் நிலவின் ஒளியைப் போல இதம் தந்து, நம்மை இந்த மூன்று விதமான அக்கினியினின்றும் காக்கிறாள், நம் அன்னை என்பதே இந்த நாமத்தின் பொருள். ஆயிரம் சூரியப் பிரகாசத்தோடு இருந்தாலும், அடியவர்களுக்கு நிலவைப் போலக் குளிர்ந்தும் இருக்கிறாள்! என்னே அவள் கருணை!

“த்ரிகோணாந்தர தீபிகா” – மூலாதாரத்தில் இருக்கும் அக்னியின் சக்ரமான த்ரிகோணத்தின் நடுவில் இருப்பவள்.

“த்யுதிதராயை” – ஒளி பொருந்தியவள்

“ஆசோபனாயை” – பரிபூர்ணமான சோபையுடையவள்

‘சந்த்ரமண்டல மத்யகாயை’ – சந்திரமண்டலத்தின் நடுவில் இருப்பவள். – சஹஸ்ராரம்

‘பானு மண்டல மத்யஸ்தாயை’ – சூர்ய மண்டலத்தின் நடுவில் இருப்பவள். – ஹ்ருதயம். ‘பகாராத்யாயை’ – சூர்ய மண்டலத்தில் ஆராதிக்கத் தக்கவள்

‘வஹ்னி மண்டல வாஸின்யை’ – அக்னி மண்டலத்தில் வசிப்பவள். – மூலாதாரம்

ஆக, அவளே சூர்யனாகவும், சந்திரனாகவும், அக்கினியாகவும் பிரகாசிக்கிறாள்.

அதனால்தான் அவளை “பரம்ஜ்யோதி” என்று போற்றுகிறது லலிதா சகஸ்ரநாமம். இந்த உலகிற்கு ஒளியூட்டுகிறது என்று எதையெல்லாம் நாம் நினைக்கிறோமோ, அவை அனைத்திற்கும் அவளிடமிருந்தே அந்த ஒளி கிடைக்கிறதாம்.

‘ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே!’ என்கிறார், அபிராமி பட்டரும். ஒளியும் அவள்தான். அந்த ஒளியின் பிறப்பிடமாகத் திகழ்பவளும் அவளேதான். மேலும், “மணியே, மணியின் ஒளியே”, என்பார் பட்டர். மணியும் அவளே; மணி தரும் ஒளியும் அவளே.

அவளே “மஹாமாயை”யும். மாயையாகவும், அதனை அகற்றும் ஞான ஒளியாகவும், அவளே இருக்கிறாள். “என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்றன் அருள் ஏதென்று அறிகின்றிலேன்”, என்கிறார், பட்டர். “என் மனதில் இருந்த வஞ்சம் என்ற இருளைத் துடைத்தெறிந்து அங்கு ஒளிவெள்ளமாய் நிரம்பி இருக்கும் உனதருளை என்னவென்று சொல்லுவேன்”, என்கிறார்.

“அஜ்ஞான த்வாந்த தீபிகா” – அஞ்ஞான இருளை அகற்றி ஒளியூட்டும் தீபம் போன்றவள்.

“பக்த ஹார்த தமோபேத பானுமத் பானுஸந்தத்யை” – பக்தர்களின் அக இருளைப் போக்கும் சூரிய கிரணம் போன்றவள். பலப்பல வருடங்களாக இருண்ட கிடந்த அறையில் கூட ஒரே ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தால், இருள் உடனே அகன்று விடுகிறது, கொஞ்சம் கொஞ்சமாக அகல்வதில்லை; அது போல அம்பிகையின் அருள் கிடைத்து விட்டால், நொடியில் அஞ்ஞான இருள் அகன்றுவிடும் என்று சொல்லுவார்,  குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

அவளே ‘ஸர்வாதாராயை’ – எல்லாவற்றிற்கும் ஆதாரனமானவள்.  ஒளிக்கு மட்டுமல்ல; சகலத்திற்குமே ஆதாரம் அவள்தான்.

அதனால் தீப ஆவளியன்று ஒளியனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவளை நினைத்துப் போற்றுதல் சாலப் பொருத்தம்தானே!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்!

அன்புடன்

கவிநயா

நன்றி: அமரர் ‘அண்ணா’ எழுதிய ‘லலிதா சகஸ்ரநாம பாஷ்யம்’, மற்றும் http://maduraiyampathi.blogspot.com

பி.கு: இதில் வருகின்ற ஒவ்வொரு நாமத்தையும் பற்றி இன்னும் விரிவாக எழுதலாம் என்றாலும், தீபாவளிக்காக ‘அவளே ஒளி’ என்கிற பொருளையொட்டி வருகின்ற நாமங்களைத் தொகுத்து எழுத வேண்டும் என்று தோன்றியதால், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இங்கே சுருக்கமாக எழுதி இருக்கிறேன். குற்றம் குறை இருப்பின், அம்மா மன்னிப்பாளாக.

“வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே!”

படங்களுக்கு நன்றி :

http://en.wikipedia.org/wiki/File:Bhuvaneshvari.jpg

5 thoughts on “அவளொளி அருளொளி!

  1. அன்பு கவிநயஅ அந்த ஜோதிஸ்வரூபிணியைப்பற்றி எழுதி அவளின் அருளையும் பெற்றுவிட்டீர்கள்
    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *