குந்தி – ஒரு பார்வை

3

திவாகர்

மகாபாரதத்தில் குந்தி தேவியின் வாழ்க்கையை ஆரம்பக்கட்டத்திலிருந்து பார்த்தால்தான் தெரியும்..அந்தத் தாயின் வாழ்வு பால்யத்திலிருந்தே எப்படிப்பட்ட கஷ்டங்களையெல்லாம் சகித்துக் கொண்டிருந்தது என்பது நமக்குப் பரிபூரணமாக விளங்கும்.

சின்னஞ்சிறுவயதில் துர்வாச மகரிஷி மனம் மகிழ சேவை செய்த பாக்கியத்தினால் அவளுக்கு சிறப்பு மந்திரத்தை ஓதினார். சிறப்பு மிக்க தேவ சந்தானம் கிடைக்கும் மந்திரம் அது. கள்ளம் கபடமறியா வயதில் நதிக்கரையில் அதைப் பரீட்சித்துப் பார்த்தாள்.. பிரகாசமிக்க சூரிய தேவன் வந்தான்.. பயந்துவிட்டாள் குந்தி.. ’நான் அறியாமல் செய்த தவறுக்கு என்னை மன்னித்து நீ திரும்பிப் போய்விடு’ என்று கெஞ்சினாள். ’அறியாமல் செய்தாலும் மந்திரத்துக்கான பலனைக் கொடுப்பது என் கடன். ஆனால் இதனால் உடனடிப் பிறப்புக்கும், அதன் மூலம் உன் கன்னித் தன்மை அழியாமல் காக்கவும் வரம் தருகிறேன்’, என்ற சூரியபகவான், மகன் கர்ணனையும் கொடுத்து, வரங்களையும் கொடுத்துப் போனார்.. என்னதான் ஊருக்கும் உறவுக்கும் பயந்து கர்ணனைப் பெட்டியோடு நதியில் விட்டாலும் தாய் மனம் கதறி அழத்தானே செய்யும்..

ஆனாலும் பாண்டு என்கிற குருவம்ச மன்னன் வந்தான் அவளை வரித்தான்.. அவளோடு மட்டுமல்லாமல் மாத்ரி எனும் அரசியையும் மணம் செய்து குந்தியை இருவருள் இவளும் ஒருத்தி என்ற நிலைக்குத் தள்ளினான். குந்தி மனம் வருந்தினாலும் தன்னை அடக்கிக் கொண்டாள். பாண்டுவுக்கென இடப்பட்ட சாபம் அவளை மேலும் பாதித்தது.. அவன் எந்தப் பெண்ணொடு உறவு கொண்டாலும் அவன் அந்தக் கணமே அழிவான்.. இப்படிப்பட்ட நிலையில் ராஜவாழ்க்கை தேவையா என தான் ஏற்றுக் கொண்டிருந்த அஸ்தினாபுர அரசப் பட்டத்தையும் உதறி, தான் மட்டும் தனியே செல்லாமல் கூடவே மனைவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்று வாழ்க்கை நடத்தியதையும் குந்தி பொறுத்துக் கொள்ளத்தான் செய்தாள். அகண்ட அஸ்தினாபுரத்து மகாராணியை ஓரிரவுக்குள் ஆசிரமவாசியாக்கி ஆரண்யத்தில் விடப்பட்டாலும் வேறு வழியின்றி கணவனுக்கு சேவை செய்து வந்தாள். இப்படியே கூட நீடித்திருக்கலாம்.. ஆனால் அவள் விஷயத்தில் விதி இன்னும் விளையாடியது.

முனிவர்கள் சிலர் சொல்லிவிட்டனர். பாண்டு மகராஜா சொர்க்கம் புக வேண்டுமெனில் அவனுக்கு புத்திரபாக்கியம் இருந்தால்தான் உண்டு என்று. ராஜா மனம் வருந்தினான். இக வாழ்க்கையை இப்படியே துன்பத்தில் கழிந்தாலும் மரணத்துக்குப் பின்னும் துன்பம் தொடரவேண்டுமோ என்று மனம் புழுங்கினான். மறுபடியும் குந்தி உதவிக்கு வந்தாள். முந்நாளில் துர்வாச மகரிஷியின் வரங்களைக் கணவனுக்கு நினைவு படுத்தினாள். புத்திரபாக்கியத்துக்காக தனக்குக் கிடைத்த வரங்கள் இப்போது உதவுவதை நினைத்து குந்தியை விட பாண்டுவுக்குப் பரம சந்தோஷம். கணவன் அனுமதியுடன் தனக்கென மூவரும், சக்களத்தியாக இருந்தாலும், மாத்ரிக்கும் மந்திரத்தைப் போதித்து அவள் மூலம் இருவரும் பெறுவதற்கு வழி செய்தாள். ஆனாலும் விதி விடாது துரத்துமே.. பாண்டுவுக்கு ஒருநாள் மோகம் தலைக்கேற மாத்ரியுடன் உறவாட அவன் சாபத்துக்கேற்றவாறு அந்தக் கணமே மரித்தான்.

குந்திதேவி தனக்குள் வேதனையுடன் கணவனுடன் உடன்கட்டையேறத் துணிந்தாள்.. இப்படி தியாகம் செய்தாலாவது தன் கஷ்டங்கள் தீர்ந்து இந்த வாழ்க்கை நிறைவு பெறட்டும் என்ற முடிவுடனே சாகத் துணிந்தவளை மாத்ரி தடுத்தாள். ஐந்து குழந்தைகளை பொறுப்பாக வளர்ப்பது என்பது குந்தி ஒருத்திக்கே சாத்தியம் என்று இளையவள் முந்திக் கொண்டு அந்தப் பெரும் பொறுப்பை அந்தக் காட்டில் அவளுக்குக் கொடுத்துவிட்டு கணவனோடு உடன்கட்டை ஏறிவிட்டாள்.

வனத்தில் உள்ள முனிவர்கள் அறிவுரை கூறினர். கைப்பிள்ளைகளோடு  காட்டில் எப்படி வசிப்பாயாம்.. உன் புகலிடமான அஸ்தினாபுரத்துக்கே போய்விடு என்றனர். பாண்டுவுக்குத்தான் பிள்ளை பிறப்பது சாத்தியம் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்ததால்தானே அவனே காட்டுக்கு ஏகினான். இப்போது பாண்டு இல்லாமல் எந்த முகத்தோடு தான் மட்டுமாக இந்த ஐந்து பிள்ளைகளையும் பாண்டுவின் வாரிசுகள் என ஹஸ்தினாபுரம் கொண்டு செல்வது.. அங்கே விரோதி போல வளரும் கௌரவர்கள் சிரிக்க மாட்டார்களா.. எப்படி இந்தக் குழந்தைகள் பிறந்தனவென கேட்கமாட்டார்களா.. ஒரு பெண்ணுக்கே உரித்தான இத்தகைய தவிப்பும் கஷ்டமும்தான் குந்திக்குக் கூடியது.

நல்ல காலமாக காட்டில் தங்களருகே வசித்துவரும் சத்பிராம்மணர்கள் கூடவர பாண்டவர்களை பீஷ்மரிடம் சேர்ப்பித்தாள். ஆனால் இத்துடன் அவள் கஷ்டம் ஒழிந்ததா.. இல்லையே.. கௌரவர்களின் கொடுமையால் அரக்கு மாளிகை விபத்து, யாருக்கும் தெரியாமல் ஐந்து பிள்ளைகளையும் மறைத்து வாழும் நிலை,, துருபதன் மகள் திருமணத்தால் மறுபடியும் ராஜயோகம் இந்திரப் பிரஸ்தத்தில் கிடைத்தாலும் விதியின் கோர விளைவால் மகன் தர்மபுத்திரனே முன்வந்து சூதாடி நாட்டையும் நல்ல பேரையும் தோற்றது. அதுவரை தன்னால் வளர்க்கப்பட்ட அந்தப் பிள்ளைகள் தம்மைப் பிரிந்து பதின்மூன்று வருட காலம் காட்டில் வாழ்ந்ததனால் ஏற்பட்ட சோகம், எல்லாவற்றிற்கும் மேலாக பாரதப் போருக்கு முன்பாக தன் மூத்த மகன் சூரியபுத்திரனான கர்ணன்தான் என்பது தெரிந்தும் உலகுக்கு அறிவிக்கமுடியாத சூழ்நிலை.. கௌரவ கர்ணன் நட்பு நிலை, பாரதப் போரில் கர்ணன் மரணம்.. ஐய்யோ, அவன் தலையை தன் மடியில் கிடத்தி ’மகனே’ என்று அழைத்தபோது அவள் ஏனைய மகன்கள் உட்பட உற்றவர்கள் பட்ட வேதனையும் எப்படி விளக்க முடியும்..

குந்திக்கு வந்ததைப் போல இப்படிப்பட்ட சோதனைகளெல்லாம் வருங்காலத்தில் எந்தத் தாய்க்குமே வரவேக் கூடாதுதான் என்றுதான் ஆண்டவன் குந்தியைப் படைத்தானோ.. இல்லை போராட்டம் என வரும்போது எந்த ஒரு தாயும் இதைவிட அதிகமாக துன்பத்தை அனுபவிக்கமுடியாது என்று நினைத்துப் பார்த்து அவர்களெல்லாம் ஆறுதல் அடைய என்றே குந்தி எனும் பெண் திலகத்தைப் படைத்தானோ.. என்னவோ.. அவனே அறிவான்…

படத்திற்கு நன்றி :

http://www.tamilhindu.com/2008/12/maabharata-discussions-007/

3 thoughts on “குந்தி – ஒரு பார்வை

 1. இவ்வளவு கஷ்டங்களுக்குப் பின்னும் குந்தி கண்ணனிடம் ‘எனக்கு எப்பொழுதும் துன்பத்தையே கொடு’ என வரம் கோரினாள். ‘ஏன் இந்த விபரீதமான வரத்தினை வேண்டுகிறாய்?’ என்று அவன் வினவ, குந்தி கூறிய பதில் எவரையும் மெய் சிலிர்க்க வைக்கும்.
  ’கண்ணா, துன்பம் இன்றேல் உன்னை மறந்து விடுவோம். உன்னை மறப்பதைவிட மரணமே மேல் அல்லவா?’ என்றாள் அந்த உத்தம மாதர் திலகம்.
  அப்படிப்பட்ட தியாக சீலியைக் குறித்து தாங்கள் இட்டிருக்கும் பகிர்வுக்கு மிக்க நன்றி.
  வணக்கத்துடனும் தீபாவளி வாழ்த்துக்களுடனும் விடைபெறும்
  ஸம்பத்

 2. நல்லா இருக்கு திவாகர். குந்தி இந்த கர்ணன் விஷயத்தில் ரகசியம் காத்ததால் தான் தர்மர் பெண்களிடம் இனி ரகசியமே தங்கக் கூடாது என சாபம் கொடுத்ததாகக் காலக்ஷேபத்தில் கேட்டிருக்கேன். இது எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியாது. மற்றபடி நல்ல கோணத்தில் அலசி இருக்கிறீர்கள்.

  இனிய தீபாவளி வாழ்த்துகள்.

 3. உண்மைதான்.
  குந்திதேவி பட்ட மனத்துயரை எந்த அன்னையரும் பெறவே கூடாது.
  பெற்றாலும், குந்திதேவிபோல் மனத்திடத்துடன் வாழ்வை எதிர்கொள்ள கண்ணன் அருளவேண்டும்.

  அன்பன்
  கி.காளைராசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *