வீர சுதந்திரமும் இருபகடைகளும்
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 15, 2012
‘வீர சுதந்திரம் வேண்டி’ நின்றோம், நூறாண்டுகளுக்கு மேலாக. பாரதமாதாவின் பாதாரவிந்தங்களில் நெடுஞ்சாங்கிடையாக வீழ்ந்து வணங்கிய யக்ஞ எஜமானர்கள், உடல், ஆவி, சொத்துபத்து எல்லாவற்றையும் அக்னிகுண்டத்தில் அர்ப்பணித்தனர். தேசபக்தி என்ற நெய்யை, ஆஹூதி செய்ய, செய்ய, விடுதலை வேள்வித்தீ ‘தக தக’ வென்று கொழுந்து விட்டு, எரிந்தது. ஓங்கி வளர்ந்தது, நற்றாயின் புதல்வர்கள் யாம் என்ற கர்வம். பட்டொளி வீசி பறந்தது மூவர்ண கொடி. அதன் மையத்தில் சுழன்றது, தர்மசக்ரம். பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரதநாடு என்ற திருமந்திரம் ஒலித்தது. ஓம் ஓம் என்று ஆசி அளித்தனர் தேவர். தரணியெங்கும் எமது புகழ் பரவியது.
அன்றொரு நாள் இதே தினமாகிய ஆகஸ்ட் 15, 1947 அன்று, எம் தாயும், தந்தையும், உடன்பிறப்பும், பெற்றெடுத்த திருமகனும், திருமகளும், சுற்றமும், நட்பும், மூதாதையும், வாரிசும் ஆன பாரத வர்ஷம் என்ற தெய்வீக திரு நாடு, பாரதமாதா என்ற நாமகரணத்துடன், புத்துயிர் பெற்று, புதுமை பெண்ணாக, ஒய்யாரமாக அன்ன நடை போட்டு, அருகில் வந்தாள். நூபுர கங்கையிலும், தலைக்காவேரியிலும், திரிவேணி சங்கமத்திலும், நர்மதை துவாரத்திலும், கோதாவரி சுழலிலும், மஹாநதி வெள்ளத்திலும், பிரஹ்மபுத்ரா என்ற ஒரே ஆண் நதியின் காதல் அரவணைப்பிலும், கும்பகோணம் மஹாமஹ குளத்திலும், ராமேஸ்வர தீர்த்தங்களிலும், வாசனாதி திரவியங்களும், மூலிகைகளும் கலந்த ஜலத்தில், மூழ்கி, மூழ்கி, மங்கள ஸ்நானம் செய்து எழுந்தாள், புதிய பொலிவுடன். தேவகணங்கள் சாமரம் வீசின. கின்னரர்கள் வீணாகானம் மீட்டினர். கந்தவர்கள் நடனமாடினர். அணிகள் பல பூண்டு சர்வாலங்கரபூஷிதையாக, கண் கவர் வண்ண ஆடைகள் அணிந்து, மஞ்சள் பூசி, கன்னியாகவும், தர்மபத்னியாகவும், அன்னையாகவும், தேவதையாகவும் காட்சி தந்தாள். மருண்டேன். மயங்கினேன். அவளிடம் ஒன்றிப்போனேன். வேதங்கள் முழங்க, உபநிஷதுகள் உரைக்கப்பட, நாலாயிர திவ்ய பிரபந்தங்களும், சைவத்திருமுறைகளும், சமணமும், பெளத்தமும் அடுத்து வர, குர்பானி ஓத, அதிகாலை குரான் குரல் எடுக்க, விவிலிய பிரார்த்தனைகள் ஜெபிக்கப்பட, குருக்ஷேத்திரத்தில் என்றோ நடந்த ‘துமிலோ பவது’ என்பது போல், ஆனால், நன்நிமித்தமாக, அமளி ஒன்று எழுந்தது. அது கோடானு கோடி மக்களின் ஆனந்தத்தின் எதிரொலியே. அன்றைய தினம் நடு நிசியில், நடுத்தெருவில் கூட்டம் கூட்டமாக நின்றோம். கட்டித் தழுவிக்கொண்டோம். மிட்டாய்கள் பரிமாற்றிக்கொண்டோம். ஒலித்தது வானொலி. கண்களாக மாறி காதுகள் டில்லி தர்பாரை தரிசித்தன. உமக்கு அது புரியாது. நீவிர் சிறுசுகள். பிரதமர் ஜவஹர்லால் நேஹ்ரு, அன்னையின் மணாளன் போல், நமக்கெல்லாம் தந்தை போல், டீக் ஆக ஆடையும், உடையும் அணிந்து, ரோஜாமலர் ஒன்றை சூடி, ஆணழகி/ பெண்ணழகன் போல் ஜொலித்தார். ‘நாம் நற்கதியிடம் சரணாகதி’ என்று ஒலித்தார். ஒரே ஆரவாரம். பூமாரி சொரிந்தது. வானம் குனிந்து ஆசி கூறியது. கடலலைகள் மோதித்தழுவி ஆசி கூறின. தேவர்கள் வாழ்த்தினர். மற்றொரு முறை, தேவகணங்கள் சாமரம் வீசின. கின்னரர்கள் வீணாகானம் மீட்டினர். கந்தவர்கள் நடனமாடினர். நாமும் பாடினோம்; ஆடினோம். அண்ணல் காந்தியோ நவகாளியில் ஒற்றைப்படை தீயணைப்புப் படையாக பணி செய்ய சென்று விட்டார்.
இன்று ஆகஸ்ட் 15, 2012. சுதந்திர தினம். வீரம் காணாமல் போயிருந்தது. புதிய ஜனாதிபதி, வரிந்து, வரிந்து எழுதிய சம்பிரதாய சொற்பொழிவை நேற்று ‘ஏனோ தானோ’ என்று படித்தார. இன்று காலை, பிரதமர் செங்கோட்டையில் மூவர்ணக்கொடி ஏற்றி, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, இயந்திர கதியில் ‘அதையும், இதையும்’ சொன்னார். எல்லாரும் கை தட்டினார்கள். பிறகு தூசி தட்டினார்கள். எனக்கு என்னமோ பழைய ஞாபகங்கள். ‘டில்லி சலோ’ என்ற நேதாஜியின் தாரக மந்திரம் ஒலித்தது. 1963ம் வருடம், நான் அங்கு கடமை ஆற்றியதும், நேஹ்ருஜி என் மைந்தனை கொஞ்சியதும் கண் முன் நின்றது.
அறுபத்தைந்து வருடங்கள் கழிந்தனவா! அவற்றில் பெரும்பகுதி, களப்பிரர் காலம்; இருண்ட காலம். வயசாயிடுத்தோல்லியோ! குறை காண்கிறேன். அவை இருப்பதால் தானே, எனக்கும், உமக்கும், அந்த அதோகதி!
நாட்டுப்பற்று பெருங்காய டப்பா வாசனையாக போய்விட்டது.மக்களின் பிரதிநிதிகளில் பலர், பிரதிகூலமாக வாழ்ந்து, பிரதிவாதிகளாக, பணமூட்டைகளாக, கட்டை பஞ்சாயத்துகளாக மாறி விட்டனர். ரூபாய் நோட்டுகளில் மஹாத்மா காந்தியின் சித்திரத்தைப் பதித்து, அவற்றை கறுப்புப்பணமாக்கி, வெளி நாட்டில் ஒளித்து வைத்து, அவரை கூனிக்குறுகும் அளவுக்கு அவமதித்து விட்டோம். மத்திய அரசு, மாநில அரசுகள் எல்லாவற்றிலும், வீடு திருடல், கல்லையும், மண்ணையும் அள்ளி, கண்களில் மிளகாய் பொடி வீசும் அவலங்கள், சுரங்கச்சுரண்டல், 2ஜி, விளையாட்டு, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி, குப்பைத்தொட்டி, எண்ணெய், வாயு, கட்டுமானம் எல்லாவற்றிலும் ஊழல் மிகுந்து, அதுவே வாடிக்கையாகப்போன அவமானம். எல்லாவற்றிலும் தேசத்துரோகம் கண்கூடு. தவறு செய்து சிறை செல்பவர்களின் சிரித்தமுகம், இந்த அவலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. இனவாதமும், காழ்ப்புணர்ச்சியும், பேத்துமாத்தும் எங்கும் நிறைந்த இந்தியாவின் பாரதமாதா விக்கி, விக்கி அழுகிறாள். கேசம் கலைந்த அலங்கோலம். நகைகளை கழட்டி அடமானம் வைத்து விட்டார்கள், அருமைந்தர்கள். கிழிந்த புடவையும், ரவிக்கையும். மஹாகவி பாரதியார் என்றோ அலறியது போல, அன்னையை அரைக்காசு என்று கூவி விற்கிறார்கள். என்ன இருந்தாலும்…
அஞ்சேல். அஞ்சேல். அஞ்சேல். பாரதவர்ஷம் பழம்பெருநாடு. வரலாற்றுப்போக்கில் அது துண்டாடப்பட்டு, குட்டி குட்டி குறுநில மன்னர்களால் ஆளப்பட்டிருந்தாலும், மிலேச்சர்கள் கையில் அகப்பட்டு கூண்டு காகமாக இருந்திருந்தாலும், ‘வாலு போச்சு! கத்தி வந்தது! என்ற வகையில் அரசியல் விடுதலை பெற்று, பொருளியல், சமூகவியல், மனித இயல் கோணங்களில், இற்செறிக்கப்பட்டு கற்பு இழந்திருந்தாலும், அவற்றிலிருந்து விடுதலை பெற இயலும். அதற்கு, மக்கள் யாவரும் விழிப்புணர்வு கற்க வேண்டும். பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, கவனம் தேவை. அவர்களை தட்டிக்கேட்கும் துணிவு வேண்டும். மக்களாட்சியை இழந்தால், பாரதமாதா வன்முறைக்கு உட்படுத்தப்படுவாள். அடுத்து வரக்கூடிய அவலத்தைக் கூற நா கூசுகிறது.
நம்மடவர்களே! இந்தியர்களே! சாக்கிரதை. என்றோ ஒரு நாள் ஒரு தர்மிஷ்டன், துருபதனின் உடன்பிறப்பை ‘இரு பகடை’ என்றான். திருவுருவின் மானபங்கத்துக்கு வழி வகுத்தான். நமக்கு வேண்டாம், இந்த ‘இரு பகடை’ விஷ விளையாட்டு.
சித்திரத்துக்கு நன்றி:
http://img.dinamalar.com/data/aanmeegam/large_103009709.jpg
