பெருவை பார்த்தசாரதி

ஆகஸ்டு 15, 2012, இந்தியாவின் 66 வது சுதந்திர தினம். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அனைத்துத் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, சுதந்திர தினச் சிறப்பு உரையாற்றுவது வழக்கம். பாரதப் பிரதமர் திரு. மன்மோகன் சிங், இந்தியாவின் 66-வது தனது சுதந்திர தினச் சிறப்பு உரையை ஆற்ற இருக்கிறார். மற்ற தலைவர்களின் உரையை விட, பிரதமரின் சுதந்திர தினச் சிறப்பு உரைக்கு மதிப்பு அதிகம் என்பதை அனைவரும் அறிவோம்.

அடிமைத் தளத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கத் தவறுவதில்லை. செயற்கைக்கோள் அனுப்புவதில் நாம் மற்ற நாடுகளின் கவனத்தை நம் பக்கம் திருப்பி இருக்கிறோம். இதற்கு முழுமுதற் காரணகர்த்தாவாக விளங்கியவர் நமது முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம். தொடர்ந்து அவர் கொடுத்த ஊக்கத்தினால் இந்தத் துறையில் நாம் சிறந்து விளங்குகின்றோம். முன்பு இருந்ததை விட இப்போது நம் இந்தியா, அணு ஆயுத உற்பத்தியிலும் முன்னேறியிருக்கிறது, உலக மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் நாம் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இளைஞர்களின் கல்வி ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கிராமப்புற வளர்ச்சியில் மற்ற நாடுகளை விட அதிக அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அவ்வப்போது இயற்கைப் பேரழிவு ஏற்பட்ட போதிலும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளின் கனவு ஓரளவுக்கு நனவாகியிருக்கிறது என்றும், வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெற இன்னும் நாம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதும் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வேண்டுகோளாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்ட பிறகு, அடுத்த பத்தாண்டுகளில் தொழில் துறையில் கண்ட வளர்ச்சி விகிதம், பின் வருகின்ற அடுத்தடுத்த பத்தாண்டுக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, அந்த வளர்ச்சி விகிதத்தின் அளவு வீழ்ச்சி நிலையில் தான் உள்ளது என்பது இந்திய அறிஞர்களின் கருத்து. அப்படி இருந்த போதும், சமூக முன்னேற்றத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியைப் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் பொருளாதாரத்தில் சற்றுப் பின் தங்கியிருக்கிறோம் என்பதை அறிய முடியும். சுதந்திர தினத்தின் போது மட்டுமே, நமது நாட்டின் வளர்ச்சியை மட்டும் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளுகின்ற நம் நாட்டுத் தலைவர்கள், வளர்ச்சி அடையாத பல துறைகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை இந்தியாவோடு ஒப்பிடும் போது பல துறைகளில் பின் தங்கி இருப்பதற்கு நாட்டை ஆளும் தலைவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே காரணமாக அமைந்து விடுவதை நம் அனுபவத்தில் உணர்கிறோம்.

“இந்திய மக்களாகிய நாம் மனித குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்” என்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் ஆற்றிய உரை உலகின் தலைசிறந்த பேச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறதே தவிர, அதைக் கடைப்பிடிப்பவர்கள் இன்று இருக்கிறார்களா?… என்ற கேள்விக்கு விடை காண முடியவில்லை.

இன்று சுதந்திரதின வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் அதே சமயத்தில், நம் நாட்டில் உள்ள தலையாய பிரச்சினைகளுக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காண முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சுதந்திர நன்னாளிலாவது நாட்டில் நிலவும் பிரச்சினைகளையும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற வழியையும் பற்றிச் சற்று நினைவு கூர்வோம்.

வல்லரசு நாடுகளோடு நம் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்ப்பதோடு முடிந்து விடுகிறது?… வல்லரசாவதற்கான வழியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோமே தவிர இன்று வரை இந்தியா வல்லரசாவதற்கு எடுக்கும் முயற்சிகள் பல தேக்க நிலையில் உள்ளது.

சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தியவர்களைப் பற்றி நாலு வார்த்தைகளைச் சொல்லி, இனிப்பு வழங்கி விட்டால் அன்றய சுதந்திரதினம் அன்றோடு மறக்கப்பட்டு விடுகிறது என்பதே இன்றைய உண்மை நிலை. சுதந்திரத்துக்கு முன் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளின் கனவுகள் எல்லாம் கடந்த 66 வருடங்களில் முழுவதுமாக நிறைவேற்றப் பட்டுள்ளதா?… என்ற கேள்விக்கு எவரும் இன்னும் பதில் சொல்ல முடியவில்லை. சுதந்திரம் அடைந்து 66 வருடத்திற்கு பின்னும் இந்த வினாக்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால் அதற்கான காரணம் என்னவென்று சிந்திக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு.

ஒவ்வொரு முறை சுதந்திர தினம் வரும் போது, கொடியேற்றும் விழாக்களைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவதில் அரசுக்கு இருக்கின்ற அக்கறை, நாட்டின் அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிகளில் கவனம் செலுத்தப்பட்டாலும், அதிக அளவில் முன்னேற்றம் இல்லை…. சுதந்திரப் போராட்டத் தியாகிகளின், சுதந்திர இந்தியாவைப் பற்றிய எதிர்காலக் கனவுகள் நனவாக வேண்டுமெனில், இளைய தலைமுறையினரை நல்வழிப் பாதையில் நடத்திச் செல்லுகின்ற மனஉறுதி அரசுக்கு வரவேண்டும்.

நாட்டை ஆக்கப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு, அரசாங்கத்துக்கும், குடிமகனுக்கும் இருக்கின்ற கடமைகள் ஏராளம். இன்று இந்தியா எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளையும் அதனைத் தீர்க்கின்ற வழிமுறைகளையும் ஆராய்ந்து பார்த்து, அதைச் செயல்படுத்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்தியா வல்லரசு நாடாகும் கனவை நனவாக்க முடியும் என்பதே வல்லுனர்களின் கருத்து.

அரசியல் தலைவர்கள், தேசியக் கொடியை ஏற்றுவதற்குச் செய்யும் செலவுகளைக் கணக்கிட்டால் கோடியைத் தாண்டி விடுகிறது, அந்தக் கோடிக்கணக்கான பணத்தில், ஒரு கிராமத்தைத் தத்து எடுத்து, அதனை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும்.

அன்றாடம் நாளிதழ்களின் பக்கங்களைப் புரட்டினால், கொலை கொள்ளை, தீவிரவாதம் போன்ற செய்திகள் இடத்தை நிரப்புகின்றன. தனிநபர் ஒழுக்கத்தில் அக்கறை இல்லாததால், இன்று தீவிரவாதத்தின் கையில் படித்த இளைஞர்கள் சிக்கி இருக்கிறார்கள், தகுதி, திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், இளைஞர்கள் தவறான வழிகளில் செல்லுவதைத் அரசாங்கத்தால் தடுக்க முடியும்.

இந்தியனின் இரத்தத்தில் பிழிந்து எடுக்கப்பட்ட பணமெல்லாம், அந்நிய நாடுகளில் கருப்புப் பணமாகத் தஞ்சம் அடைந்து விட்டது. மதம் என்ற பெயரில் மடாதிபதிகளின் ஆஸ்ரமத்துக்குள், கணக்கில்லாமல் அழியாத் தங்கமென அடக்கலம் அடைந்து விடுகிறது. குற்றங்களைத் தடுக்க இந்தியாவில் சட்டங்கள் பல இருந்தும் அதை நிறைவேற்றுவதில் இன்னமும் தடுமாற்றம் காணப்படுகிறது.

“ஊழலற்ற இந்தியா” உருவாக ஒத்துழைப்போம் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் தவறாமல் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, அதைச் சரிவரப் பின்பற்றாமலேயே 66 ஆண்டுகள் கழிந்து விட்டது. சுதந்திரத்துக்குப் பின்னால் வந்த அனைத்துத் தலைவர்களும் ஊழலுக்கு எதிராகச் சூளுரைத்துத் தோற்றுப் போகிறார்களே தவிர, உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி காண முடியவில்லை.

நெடுஞ்சாலை வழித்தடங்கள் சரியில்லை, வாகன நெரிசல்களுக்கு விடை இல்லை, நெடுஞ்சாலைகள் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் குறுஞ்சாலைகள் ஆகி விட்டதால், விரைவான வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. முறையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டத்தில் வழியிருந்தாலும், ஊழல், லஞ்சம் போன்றவற்றால் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த முடியவில்லை.

சத்தியம், தர்மம், நேர்மை, சட்டம், ஒழுங்கு, உண்மை இவைகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்வதைத்தான், தேசியக் கொடியில் இடம் பெற்றிருக்கும் அசோகச் சக்கரம் விளக்குகிறது. அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசத்தலைவர்களிடம் இருந்த நேர்மை, கடமை, நாட்டுப் பற்று, நாணயம், நேரம் தவறாமை போன்றவற்றை, என்றைக்கு இந்திய இளைஞர்களிடம் காந்தியக் கொள்கையோடு காண்கிறோமோ!… அன்று தான் உண்மையான சுதந்திர தினத்தை நாம் அனுபவித்துக் கொண்டாடமுடியும்.

இன்று மஹாகவி பாரதி உயிருடன் இருந்திருந்தால், அவரின் பாட்டுத்திறத்தால், இன்றைய வையத்தைப் பற்றி இப்படித்தான் பாடியிருப்பார்!….

மனதில் உறுதி வேண்டும்,
அரசியல் தலைவர்களின் வாக்கினிலே நேர்மை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கயவர்களின் கைவசமாவதைத் தடுக்கவேண்டும்,

காரியத்தில் உறுதி வேண்டும், அந்தக் காரியம்
கையூட்டு பெறாமல் நடைபெறும் நிலை வேண்டும்.

பெண் சிசுக்கொலைத் தடுத்து சுபஜனனம் வேண்டும்.
பெண் விகிதாச்சாரம் நாட்டில் பெருகவேண்டும்.

பெரிய கடவுள் (சூரியன்) காக்க வேண்டும்
பற்றாக்குறை இல்லா மின்சாரம் வேண்டும்.

மண் பயனுற வேண்டும்,
மணல் வெளிகள் அடுக்கு வீடாவதைத் தவிர்க்க வேண்டும்,

காணி நிலம் வேண்டும், அந்தக்
கனவு மெய்ப்பட வேண்டும், அதைக்
கயவர்களிடமிருந்து பேணிக்காக்க பராசக்தி அருள் வேண்டும்

பத்துப் பதினைந்து தென்னைமரம் பக்கத்திலே வேணும்
அலைபேசி கோபுரத்தை மாற்றிட வேணும், அங்கு
கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்.

தேசிய நதிகளுக்கோர் பாலம் அமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
தென்னகத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

மனதில் உறுதி வேண்டும்,
ஊழலற்ற இந்தியா உருவாக, எல்லோர்
மனதிலும் உறுதி வர வேண்டும்.

மனதில் உறுதி வேண்டும்.
தீவிர வாதத்தால், அவ்வப்போது
துவண்டு கிடக்கும் பாரதத்தைத் தூக்கி நிறுத்த,
மனதில் உறுதி வேண்டும்.

அண்ணல் காந்தியடிகளும், பண்டித நேருவும் கண்ட வருங்கால இந்தியா பற்றிய பலவிதக் கனவுகளை நனவாக்கும் மன உறுதியோடு வல்லமை மின் இதழின் சார்பாக நாமும் நம் “2012 சுதந்திர தின வாழ்த்துக்களை” மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வோம்.

‘ஜெய் ஹிந்த்’

1 thought on “மனதில் உறுதி வேண்டும்!

  1. Well Said. The above article is so impressive . Its a universal truth that everyone wants a developed India but no one cares to accomplish it. i guess it happens only when we get a true hearted leader .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *