எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு

1

விமலா ரமணி

1947 ஆகஸ்ட் 15.. இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று எங்கும் கோலாகலம்.நான் அப்போது சிறுமி. சுதந்திரம் பற்றியோ பாரதத் தாய் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்தது பற்றியோ அத்தனை ஒன்றும் விபரம் தெரியாது.

யுத்த சமயத்தில் ஒரு மணி நேரம் கடிகாரத்தின் நேரத்தை முன்னதாக வைத்து விடுவார்கள். தெரு விளக்கெல்லாம் ஆறு மணிக்கே அணைக்கப்பட்டு விடும். வீட்டிலேயும் எட்டு மணிக்குள் அனைவரும் உறங்கப் போய் விடுவோம். யுத்த பயம். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது என் தாயும் தந்தையும் கவலைப்பட்டுப் பேசிக் கொண்டிருப்பதை நான் கேட்டுக் கொண்டிருப்பேன்.

சர்ச்சிலின் அரசியல் சாணக்கியத்தனம், ஹிட்லரின் ஏவுகணைத் திறமை இப்படிப் பலப் பல செய்திகளை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பேன். காந்திஜியின் அஹிம்சைப் போராட்டம் பற்றி, அவர் சுற்றுப் பயணம் பற்றி.

எங்கள் திண்டுக்கல்லுக்குக் கூட அவர் வந்திருந்தார். (என் பள்ளிப் படிப்பெல்லாம் திண்டுக்கல் செயின்ட் ஜோசப் மகளிர் பள்ளியில்தான்) காந்திஜியைத் தரிசிக்க என் தாயுடன் நானும் போயிருந்தேன். ஏகக் கூட்டம் தள்ளி இருந்துதான் பார்க்க முடிந்தது.

ஜப்பான்காரன் தூத்துக்குடியில் குண்டு போட்டபோது சென்னையிலிருந்த எங்களின் உறவினர்கள் சிலர் தத்தம் வீடு வாசலை விற்றுவிட்டு இடம் பெயர்ந்த நிலை ஜப்பானின் அடுத்த இலக்கு சென்னை என்பது அனைவரின் யூகம். கடைசியில் நிலைமை மாறியது வேறு விஷயம். உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்து இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்.. இனிப்புப் பரிமாற்றம்…

நாம் இருவர் திரைப்படத்தில், மறைந்த டி,கே பட்டம்மாள் அவர்கள் பாடிய ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற இசைத்தட்டைக் கஷ்டப்பட்டு வாங்கினேன். அப்போதெல்லாம் மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இசைத்தட்டுத்தான். எங்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அதில் சாவி கொடுத்தால் ஒரு பக்கம் மட்டும்தான் பாடும். மறு பக்கத்திற்கு மறுபடியும் சாவி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சுருதி இறங்கி விடும். நான் சாவியும் கையுமாகத்தான் கிராமபோன் அருகே அமர்ந்திருப்பேன்.

இந்த ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்ற இசைத்தட்டுக்கு ஏகக் கிராக்கி. அப்போது அதன் விலை ஆறு ரூபாய் மட்டுமே. எனக்கு இந்த இசைத்தட்டுக் கிடைக்கவில்லை. அழுது பிடிவாதம் பிடித்து தெரிந்தவர் மூலமாய் மதுரையிலிருந்து ஆள் அனுப்பி இந்த இசைத் தட்டை அம்மா மூலம் வாங்கி வரச் செய்தேன். அதன் கோடுகள் அழியும்படி அந்தப் பாடலைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தேன். ‘மகான் காந்தி மகான்’ என்று பேபி கமலா பாடிய பாடலும் எனக்கு மனப்பாடம். ‘கருணா மூர்த்தி காந்தி மஹாத்மா’ என்ற பாடலும் அப்படியே.

நவராத்திரி கொலுவுக்குப் போனால் ‘மகான் காந்தி மகான், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’தான் என் பாடல் லிஸ்ட். அது ஒரு இனிய பொற்காலம். இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

”நாம் இருக்கும் நாடு நமதென்றறிவோம் இது
நமக்கே உரிமையாம் என்பதறிவோம்” என்பதை நான் அன்று அநுபவித்துப் பாடினேன்.

இன்று,,,?

அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகி நமக்கே உரிமையாம் என்று அநுபவிக்கப் படாதபாடு படுகிறார்கள். நாட்டின் வளமைகளைத் தமதாக்கிக் கொள்கிற சுரண்டல் மனோபாவம் வந்து விட்டது.

நவராத்திரியே கிடையாது, அப்படி இருந்தாலும் பாடுகிற பாட்டு என்னவாக இருக்கும்? ”நான் அடித்தால் தாங்கமாட்டே, வீடு போய் சேர மாட்டே” இதுதான் சுமாரான வன்முறை அற்றபாடல், மற்றதெல்லாம் கொலைவெறிப் பாடல்கள். கள்ளுக்கடை மறியல் நடத்திப் பெண்கள் துயர் துடைத்தார் காந்நிஜி. இன்று பெண்கள் பப்புக்குப் போய் பீர் அருந்துகிறார்களாம்.

இது நாகரீகத்தின் வளர்ச்சியா, கலாச்சாரச் சீரழிவா?

ஆங்கிலேயனை விரட்டி விட்டோம்? ஆனால் அந்நியக் கலாசாரங்கள் இங்கு ஆழப் புதைந்து விட்டன. காந்திஜி சொல்லுவார், ”நான் வீட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்தே வைத்திருக்கிறேன். அந்நிய கலாசாரம் இதன் உள்ளே வழியாக வரட்டும். ஆனால் என் நாட்டின் கலாச்சாரம் இதன் வழியாக வெளியே போய் விடக் கூடாது.

இரண்டாவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விவாகரத்துக்கள், டேட்டிங் சேர்ந்து வாழும் முறை. இன்னும் என்ன என்னமோ…

அந்நிய நாட்டில் வேலை நிமித்தம் குடியேறியவர்கள் தம் குழந்தைகள் ஓரளவு பெரியவர்கள் ஆனதும் இந்தியா திரும்பி வர ஆசைப்படுகிறார்கள். ஏனெனில் அந்நிய மண்ணின் கலாசாரங்கள் அவர்களை எந்த அளவுக்குப் பாதிக்கும், சீரழிக்கும் என்பதை அவர்கள் உணருகிறார்கள்.

ஆனால் இங்கு,,,,?

தினசரிகளைப் புரட்டினால்….? ஐந்து வயதுச் சிறுமி கற்பழிப்பு, பள்ளிச் சிறுமிகள் கடத்தப்படும் அபாயம், விபச்சாரத்தில் சிறுமிகளை ஈடுபடுத்தும் அவலம், சோறுபோட்ட மூதாட்டியையே நகைளுக்காகக் கொலை செய்யும் நம்பிக்கைத் துரோகம், கள்ளத் தொடர்பு, கால் பவுன் மோதிரத்திற்காக விரலையே வெட்டும் துணிவு, காதலனுடன் சேர்ந்து கொண்டு தன் கணவனைக் கொல்லும் மனைவி? ஏன்? ஏன்? இப்படி அதற்கு யார் பொறுப்பு?

அனைவருக்கும் டென்ஷன், விலைவாசி ஏற்றம், டென்ஷனைக் குறைக்க சின்னத் திரையைப் பார்த்தால் அது என்ன கற்றுத் தருகிறது?

மாமியார் மருமகள் போராட்டம், தகாத உறவுகள், பழிவாங்கும் மனப்பான்மை, தரம் கெட்ட விளம்பரங்கள், கண் கூச வைக்கும் உடை அலங்காரங்கள், வன்முறையைப் போதிக்கும் திரைப்படங்கள். ‘ஏன் பாடத்தைப் படிக்கவில்லை?’ என்று கேட்டால் தன் ஆசிரியரையே கொலை செய்யும் கொடூரம், சின்னச் சின்னத் தோல்விகளைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்குப் போகும் இளைய தலைமுறை.

காதலர் தினத்தைக் கொண்டாட மாண்டிசோரி குழந்தைகள் கூட கையில் காதல் கடிதங்களை வைத்துக் கொண்டு அலையும் பரிதாபம்..

இதுதான் காந்திஜி கண்ட எதிர்கால இந்தியாவா?

நாம் எங்கோ தவறு செய்து விட்டோம், நமது பெருமைகளை உணராமல் அதை இளைய தலைமுறையினருக்குச் சொல்லாமல் காலம் கடத்தி விட்டோம்.

ஏதோ ஒரு தப்பான மயக்கத்தில் உறங்கி விட்டோம்.. பலன்? நமது கலாச்சாரங்கள் நம் கண் முன்பே காணாமல் போய் விட்டன,,,

நமக்குள்ள வளமைகள் சிறப்புகள்..

உலக வரலாற்றிலேயே முதன் முதலாய் கி.மு 700ல் தஷசீலத்தில் நாளந்தா பலகலைக் கழகத்தை நிறுவிக் கலாசாரம் கட்டிக் காத்தவர்கள் நாம். கல்வியின் கண்களாய் விளங்கியது அந்தப் பல்கலைக் கழகம். ஆயுர்வேதம் முதன் முதலில் தோன்றியது இங்குதான்.

சிந்துவெளி நாகரீகம் நமது பழம்பெருமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கணிதத்திற்கு இன்றியமையாத ஜீரோவைக் கண்டுபிடித்தது ஆர்யபட்டா என்கிற இந்திய அறிவாளி…

இன்னும் எத்தனை எத்தனையோ நம் இளைஞர்களிடம் திறமைகள் மண்டிக் கிடக்கின்றன. 35 விழுக்காடு இந்திய மருத்துவர்கள் தாம் அமெரிக்காவில் இருக்கின்றனர். 36 விழுக்காடு விஞஞானிகள் அமெரிக்காவில் நாசாவில் பணி புரிகின்றனர். நம் தாய் மண்ணின் திறமைகள் கடல் கடந்து பட்டொளி வீசிப் பறக்கினறன. ஆனால் நாம் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறோம்.

பொழுது புலர்ந்தது என்று பாரதி சுதந்திரத் தேவிக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடினான்.

மீண்டும் துயிலெழுப்ப ஒரு பாரதி வர மாட்டான், ரத்தம் சிந்த ஒரு காந்திஜி வர மாட்டார், அவதாரங்கள் முடிந்து விட்டன.

இனி நாம் தான் கல்கி அவதாரம் எடுத்துத் தீமை ஒழித்து நியாயத்திற்காகப் போராடித் தன்னலமற்று வாழ்ந்து ‘வாழு வாழவிடு’ என்ற கோட்பாட்டுடன், காந்திஜி பெருமைப் படுத்திய பெண்மையைப் பெருமைப் படுத்தி வாழப் பழகிக் கொண்டால் நிச்சயமாகப் புதியதொரு சுதந்திரத் தினம் புதுமையாய் மலரும்.

இது தான் அனைவருக்கும் நான் சொல்ல விரும்பும் சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள். அன்று தான் ‘ஆடுவோமே’ என்று நாம் பாட வேண்டும்.

வாழ்க சுதந்திரம், வளர்க நல் எண்ணங்கள்.

படங்களுக்கு நன்றி: http://www.punjabigraphics.com/pg/independence-day-india/page/24

http://www.24point0.com/creating-content/creative-ways-to-use-editable-ppt-images

http://news4u.co.in/tag/vocalist

1 thought on “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு

  1. ‘இனி நாம் தான் கல்கி அவதாரம் எடுத்துத் தீமை ஒழித்து நியாயத்திற்காகப் போராடித் தன்னலமற்று வாழ்ந்து ‘வாழு வாழவிடு’ என்ற கோட்பாட்டுடன்…’

    ~ இது முடியுமே. நல்ல நினைவாற்றல் கட்டுரை. அந்த நாளின் யோக்கியதையில் ஒரு பின்னம் வந்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *