சுதந்திர நாள் பிரதிக்ஞை

நாகேஸ்வரி அண்ணாமலை

நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இன்னும் வரிசையில் நின்று நம் முறை வரும் வரைக் காத்திருக்கும் பழக்கத்தைப் படிக்கவில்லையே. இதை எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்? நான் பல ஆண்டுகள் வாழ்ந்தது அமெரிக்காவில். சில மாதங்கள் வாழ்ந்தது டோக்கியோவில் அதாவது ஜப்பானில். சில வாரங்கள் தங்கியிருந்தது நெதர்லேண்ட்ஸிலும் ஆஸ்திரேலியாவிலும். சில நாட்கள் சுற்றுப் பயணம் செய்தது கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்ட்ரியா, ஸ்விஜர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், இஸ்ரேல், போர்ச்சுகல், துபாய், அர்ஜெண்டைனா, உருகுவே, சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள். இந்த நாடுகளை நான் இங்கு பட்டியலிடுவதின் நோக்கம் இங்கெல்லாம் நான் போய் வந்திருக்கிறேன் என்று பறை சாற்றிக்கொள்வதற்காக அல்ல. எந்த நாட்டிலுமே வரிசையில் நிற்கும் பழக்கம் இல்லாமல் இல்லை என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான்.

ஒவ்வொரு முறை நான் தாயகம் வரும் போதும் பல விஷயங்கள் என்னை வேதனைக்குள்ளாக்குகின்றன. அதிலும் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்டும் ஒரு முறைப்பாடு (system) உள்ள அமெரிக்காவில் வாழ்ந்து விட்டு இந்தியா திரும்பும்போது, அந்தச் சமூகத்திலிருந்து இந்தச் சமூகத்திற்கு என்னை மாற்றிக்கொள்ளும் போது பல விஷயங்கள் மனதை வேதனைப்படுத்துகின்றன. வறியவர்களையும் எளியவர்களையும் பணபலமும் ஆள் பலமும் படைத்தவர்கள் படுத்தும் பாடு, மனிதன் மிருகங்களைப் படுத்தும் பாடு என்பவை என் மனதை மிகவும் வேதனைக்குள்ளாகுபவை. இந்த முறை இவையெல்லாவற்றையும் விட என்னை அதிக வேதனைக்கும் வெட்கத்திற்கும் உள்ளாக்கியது விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் நுழைந்து குடிபுகல் பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது நடந்த ஒரு சம்பவம்.

விமானம் தரை இறங்குவதற்கு அரை மணி முன்னதாகவே குடிபுகல் பாரத்தை விமானப் பணிப்பெண்கள் பயணிகளுக்குக் கொடுத்து விடுவார்கள். நாங்கள் பயணம் செய்த விமானக் கம்பெனியின் அசிரத்தையால் எல்லாப் பயணிகளுக்கும் தேவையான அளவு பாரங்கள் விமானத்தில் இல்லை. அதற்கு வருத்தம் வேறு தெரிவித்துக் கொண்டார்கள். அதனால் சில பயணிகள் விமான நிலையத்தை அடைந்த பிறகு விமான நிலையத்திலிருந்து அந்தப் பாரத்தை வாங்கி நிரப்ப வேண்டியதாயிற்று. அப்படிச் செய்தவர்களில் நாங்களும் சேர்த்தி. வரிசையில் நிற்பதற்குப் பதில் பாரங்களை நிரப்ப வேண்டிய வேலை வந்து விட்டதால் நாங்கள் வரிசையின் கடைசியில்தான் நிற்க வேண்டியதாயிற்று. எங்களைப் போல் இன்னும் சிலரும் இருந்ததால் விமான நிலைய அலுவலர் ஒருவர் குழந்தைகளோடு பயணம் செய்தவர்களுக்கும் சீனியர்களுக்கும் இன்னொரு தனி வரிசை அமைத்துக் கொடுத்தார். அதில் எங்களைப் போன்றோர்களை நிற்கும்படிக் கூறினார்.

ஆனால் மேலே குறிப்பிட்ட இரண்டு வகையைச் சேராதவர்களும் இந்த வரிசைக்கு அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்து கொண்டனர். ஏற்கனவே வரிசையில் நின்றிருந்தவர்களையும் தள்ளிக்கொண்டு முன்னே போக முயன்றனர். குடிபுகல் பாரத்தைப் பரிசீலித்து பயணிகளை உள்ளே அனுப்பும் அதிகாரிக்கும் அந்த அதிகாரி ஒருவருடையதைப் பரிசீலித்துக்கொண்டிருக்கும் போது மற்றவர்கள் நிற்க வேண்டிய இடத்தைக் குறிக்கும் மஞ்சள் நிறக் கோட்டிற்கும் இடையில் அத்தனை பேர் நின்று கொண்டிருந்தார்கள். அதிகாரி ஒருவருடையதைப் பரிசீலித்து அனுப்பியதும் இடையில் நின்றவர்கள் முண்டியடித்துக்கொண்டு அதிகாரி கையில் தங்கள் பாரத்தைக் கொடுப்பதில் முனைந்தனர். நான் சிறு பிள்ளையாக இருந்தபோது சினிமாக் கொட்டகையில் நடந்த சம்பவம்தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. தியேட்டரில் கூட்டம் என்றால் இப்படித்தான் எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்க முயற்சிப்பார்கள். யார் கை முதலில் நுழைகிறதோ அந்தக்கையிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்தக் கையில் டிக்கெட்டையும் மீதிப் பணத்தையும் டிக்கெட் கவுண்டரில் இருப்பவன் திணிப்பான்.

விமான நிலையத்தில் யார் முதலில் பாஸ்போர்ட்டை அதிகாரி கையில் திணிக்கிறார்களோ அவர்கள் கையில் இருந்து அதை எடுத்துக்கொண்டு அதைப் பார்வையிட ஆரம்பித்தார். அவராவது மஞ்சள் கோட்டிற்குப் பின்னால் போகும்படி யாரையும் சொல்லவில்லை; விமான நிலையத்தைச் சேர்ந்த மற்ற யாரும் இதை ஒழுங்கு செய்ய முன் வரவில்லை.

வெளிநாட்டைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சியை அவர் எங்கும் பார்த்திருக்க மாட்டார். யாரிடமோ ஏதோ கேட்டுப் பார்த்தார். எந்தச் சரியான பதிலும் அவருக்குக் கிடைக்கவில்லை. எல்லா விமான நிலையங்களிலும் குடிபுகல் பகுதியில் இருப்பவர்கள் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொள்வார்கள். அவர்களைப் பார்த்தாலே மஞ்சள் கோட்டிற்கு வெகு பின்னால்தான் நிற்கத் தோன்றும். இந்தியாவில் என்னடாவென்றால் அவரும் கண்டிப்புக் காட்டவில்லை. பயணிகளும் விதியை மதித்து நடக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த வெளிநாட்டுப் பயணி இந்தியாவைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட வரிசையில் காத்திருந்து நம் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியைக் கூடக் கடைப்பிடிக்க நாம் கற்றுக்கொள்ளவில்லையே. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் இந்த அடிப்படை விதியைக் கடைப்பிடிப்போம் என்று இந்தச் சுதந்திர தினத்தில் நாம் ஒவ்வொருவரும் பிரதிக்ஞை எடுத்துக்கொள்வோமே.

படத்திற்கு நன்றி: http://www.guardian.co.uk/travel/2007/apr/01/flights.escape

1 thought on “சுதந்திர நாள் பிரதிக்ஞை

  1. உங்கள் வேதனை புரிகிறது. ஆனாலும் பாருங்கள். சில வருடங்கள் முன்னால், இந்திய குடிமகன் திரும்பி வரும்போது
    கொடுக்க வேண்டிய ஃபாரத்தின் அடிப்படை தகவலை, கிளம்பும்போதே பதித்து, கையில் கொடுத்து விட்டார்கள். வரும்போது வேலை குறைந்தது. அந்த முறையை நான் ஒரு மேல்நாட்டுக்கு பரிந்துரை செய்தேன். அவர்களும் அசந்து போனார்கள். அந்த இந்தியா இப்படி இறங்கி விட்டது.

Leave a Reply

Your email address will not be published.