அதற்குப் பதிலாகத்தான் இது!

திவாகர்

(முன்னுரை – இந்த சரித்திர சிறுகதைக்கு ஆதாரம் எல்லாம் ஆந்திர வடபகுதியில் அவ்வப்போது பாடப்பட்டுவரும் நாடோடிப்பாடல்கள்தான். (ஆந்திர ஞானபதகேய சாஹித்யமு) விசாகப்பட்டினம் அருகே பத்தாம் நூற்றாண்டு கோயிலான சிம்மாசலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது)

”ஆனாலும் இந்தக் கோபம் ஆகவே ஆகாது.. எல்லாம் அந்த சிம்மாசலத்தான் சொரூபம்.. அப்படியே அமைஞ்சிருக்கு”

மங்காவின் வார்த்தைகளை காந்தா கிருஷ்ணமாச்சாரி சிறிதும் பொருட்படுத்தவேயில்லை. ஆனாலும் கோபத்தை மட்டும் அப்படியே தக்கவைத்துக் கொண்டு சொல்லிவிட்டார்.

“இதோ பார் மங்கா.. உனக்கும் வேண்டுமானால் அடிவாரம் போய் அவர் உபதேசம் கேட்டுக்கோ.. அதன்படி நடந்துக்கோ.. ஏன் ஊர்லே எல்லோருமே அப்படித்தானே இருக்கா.. அப்படியே நீயும் இருந்துக்கோ.. என்னால் முடியாது.. எனக்கு இருக்கவே இருக்கான் சிம்மாசலத்தான்.. அவன் பார்த்துப்பான்.. எனக்குப் போகணும்”

அவர் எழுந்து கொண்டார்.

“எங்கே போகணும்.. கோபப்பட்டுண்டே ஓடினா எப்படி? எனக்கு பதில் சொல்லிவிட்டுப் போங்கோ” என்று வழி மறித்த மங்காவை முறைத்துப்பார்த்தார்.

“என் பதில்தான் உனக்குத் தெரியுமே.. நிதானமா நடந்துக்கோ மங்கா..” அவரும் கோபத்தைக் குறைத்து சற்று நிதானமாகத்தான் சொன்னார்.

:”இதோ பாருங்கோ.. நாம் இங்கே தனியா சுவாமி காரியம் பண்ணிக்க வரலே.. எல்லாரும் கூட்டம் கூட்டமா குடும்பம் குடும்பமா பொறந்த ஊரை விட்டு இங்கே வந்திருக்கோம். மறுபடியும் பொறந்த மண்ணை மிதிக்கப் போறோமோ இல்லையோ.. இங்கேயே நம்ம ஜன்மம் முடிஞ்சுடும்தான் எனக்கு என்னவோ படறது.. இதோ நம்மளைத்தேடி அந்த மகான் ராமானுஜ சுவாமியே வந்துருக்கார். அவராலதான் நம்ம ஜன்ம சாபல்யம் ஆகும்னு எல்லோரும் பேசிக்கிறா.. நமக்கு நல்லது செய்யறதுக்காக வந்த உடையவரைப் போய் பார்க்க மாட்டேன்கிறது என்ன நியாயம், சொல்லுங்கோ கோபக்கார பிராம்மணரே..”

மடியைப்பிடித்து இழுக்காத குறையாக நின்று அதே சமயத்தில் கோபம் முகத்தில் தெறிக்க நின்றாலும் அந்த அழகு மட்டும் தான் சிறுவயதில் பார்த்ததிலிருந்து மங்காவின் சிவந்த முகத்தில் இம்மியளவு கூட குறையவில்லை என்பதையும் நினைத்ததால் அவர் முகத்தில் சற்று சாந்தம் கூடவே வந்தது. மங்காவின் தோளைப்பிடித்து அவள் கண்களைப் பார்த்துப் பேசினார்.

“இதோ பார் மங்கா.. உடையவர் வைஷ்ணவாளுக்குப் பெரியவர்தான்.. ஆனா எனக்கு மட்டும் அவரை விடப் பெரியவன் அந்த சிம்மாசலத்தான் மட்டும்தான். உடையவர் ஒரு சந்நியாஸி.. அவர் ஒவ்வொரு கோயிலுக்கும் போகறதும் அங்கே தங்கி உபதேசம் பண்றதும் வருவதும் ஒரு சகஜமான விஷயம்.. எல்லார்கிட்டேயும் எப்படியோ, அதே போல நான் சாதாரணமாதான் அவர்கிட்டே நடந்துக்க முடியும்.. நான் பிரத்தியேகமாய்ப் போய் பார்த்து வீட்டுக்குக் கூப்பிட்டு அவருக்கு பாத பூஜை பண்ணனும்னு நீ வற்புறுத்தறது எனக்குப் பிடிக்கலே..”

”இதோ பாருங்கோ.. உடையவரைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுதான் பேசறிங்களோ.. நாளைக்கு நான் முன்னாடியே மேலே போயிட்டாலும் ஜன்மசாபல்யம் வேணுங்கிறது நான் ஆசைப்படறது தப்பா.. எனக்கும் கொஞ்சம் ஞானம் இருக்கு.. ஒருதடவை அவரைக் கூப்பிட்டு மரியாதை பண்ணினா என்ன குறைஞ்சிடும்..”

”ஜன்ம சாபல்யம் அப்படி இப்படின்னு பேசி என் மனசை மாத்தாதே.. சிம்மாசலத்தான் இருக்கறவரை நமக்கு என்ன குறை? உனக்கு எப்படி சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலே. என்னோட தனிப்பட்ட மரியாதை எல்லாம் இதோ அந்த சிம்மாசலத்தானுக்குதான்.. வேற யாருக்கும் நான் சிறப்பா பண்ணமாட்டேன்., இதையே திருப்பித் திருப்பிப் பேசி என் கோபத்தை அதிகமாக்காதே”

”கோபம்.. கோபம்.. இந்தக் கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை..” மங்கா முணுமுணுத்தாலும் அவர் காதில் அது நன்றாகவே விழுந்தது..

மலைப் பகுதியில் வீசும் சில்லென்ற காற்றும் சுற்றிலும் மலர்ந்து அழகைப் பரப்பியிருந்த சண்பக மலர்களின் வாசமும் இந்தக் கோபக்காரரை மாற்றவே முடியாதோ என்பது போல சற்று அதிகமாக வீசி தங்கள் கருத்தைத் தெரிவிக்க முற்பட்டன. மங்காவின முகத்தில் மெல்லிய கவலை ரேகைகள் படர ஆரம்பித்ததையும் லட்சியம் செய்யாமல் மேலே போட்டிருந்த வஸ்த்திரத்தை எடுத்து மார்பில் குறுக்காகக் கட்டிக்கொண்டு கர்ப்பக்கிருகத்தில் நுழைந்தார். பக்தர்கள் யாரும் இல்லை.. இப்போதெல்லாம் கூட்டம் இங்கே மலைமேல் உள்ள கோயிலில் இல்லை.. மலையடிவாரத்தில்தான்.. அதுவும் உடையவர் தங்கியிருந்த ராஜமாளிகையில் எந்நேரமும் கூட்டம்தான். ’எல்லாருக்கும் அந்த ராமானுஜர்தான் பெரிய தெய்வமாகத் தெரிகிறாரே.. இவனைப் பார்க்க யார் வருவார்’ என்ற கேள்வி அவர் மனதில் தோன்ற அவர் சிம்மாசலத்தானைப் பார்த்தார்.. அவன் வழக்கப்படி இவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர பதில் சொல்லவில்லை.. இவன் இந்த நேரத்தில் பதில் சொல்லுவான்? இருக்கட்டும் இவன் எங்கே போகிறான். ராத்திரியில் நான் பாட்டு பாட, இவனுக்கு ஆடியாகவேண்டுமே.. இரவு வரட்டும், எப்படியும் இன்று கேட்டு விடுவது.. பகல்பொழுதுதான் பேசவே மாட்டானே. சிலையாகவே இருந்து கொண்டு திருடன் போல பார்ப்பான்…. பகல் திருடன்..

ஆனால் அதென்ன இந்த மங்கா சொல்வது.. ஜன்ம சாபல்யம் என்றால் உடையவர்தாம் தரவேண்டுமாமே.. முகதிக்கு வழி அவர்தானோ.. இருக்கட்டும்.. இவள் சொன்னது உண்மையாகவே இருக்கட்டும், அது எல்லோருக்கும் பொருந்தட்டும்.. ஆனால் இந்த காந்தாகிருஷ்ணமாச்சாரியான எனக்குப் பொருந்துமோ.. தான் யார்..

கிருஷ்ணமாச்சாரியாருக்கு சற்று நிம்மதிதான்.. எல்லோரையும் போல தான் இல்லை.. ஆமாம்.. தனக்குள்ள பிரத்தியேகமான இந்தப் பாடல் கலை மற்றவர்களை விட தன்னை சற்று மேல்தட்டிலே வைத்துள்ளது. இந்த காந்தா கிருஷ்ணமாச்சாரியின் பாட்டுதான் பெருமை.. இந்தப் பாட்டுதான் சிலைபோல நிற்கும் வராகநரசிம்மனைக் கூட உயிர்பெறச் செய்து என் பாட்டுக்கு அவ்னை ஆடவைக்கிறது.. என் பாட்டுக்கு அவன் அடிமை.. அது எனக்கு மட்டுமே தெரியும்.. இருக்கட்டும்.. இரவு வரட்டும்.. ஆடிக்கொண்டே இருப்பவனை சற்று நிறுத்தி இந்த முக்தி விஷயத்தைக்கூட கேட்டுவிடவேண்டும். ஆனால் இவையெல்லாம் நம் நினைவில் அந்தச் சமயம் பார்த்து தோன்றவேண்டுமே.. அதுவும் அவன் வந்துவிட்டால் என்னையே நானறியமுடியாதே.. இல்லை.. இன்று நல்ல சுய நினைவில் இருந்து கேட்டுவிடவேண்டும்.. மங்காவுக்கு பதில் சொல்லிவிட வேண்டும். முக்தி பிரசாதமாய் நம் முன்னே சிம்மாசலத்தான் இருக்க உனக்கேன் அடுத்தவர் பற்றி கவலை.. உடையவர் காண்பாரோ அவன் நடனத்தை.. இல்லை அவர் கேட்டாரோ நம் பாடலைத்தான்.. அதுவும் சிம்மாசலத்தானைப் பாடப் பாடத்தான் எத்தனை இனிமை. இந்த இனிமை ஒன்று போதுமே..

இரவு வந்தது. கிருஷ்ணமாச்சாரியார் வழக்கம்போல ராக்கால பூசைகளை முடித்துவிட்டு இளையவர்களையும் அனுப்பி வைத்தார். எல்லோரும் சென்றதும் உள்ளே நுழைந்து கொண்டார். வெளிக்கதவுகளையும் சார்த்தி விட்டார்.

வராகமுகத்தான் அன்று ஏனோ மிக அழகாக இருந்தான். சிறிய தீபஒளியில் அவன் அழகுமுகம் கம்பீரமாக அவரைப் பார்த்து சிரித்தது போல பட்டது. அவன் அருகே சென்றார். வராகமுகத்தான் விசித்திரமானவன்.. மனித உடலும், சிங்க நகமும் அவனை எவ்வளவு கம்பீரமாகக் காண்பிக்கின்றன..

காந்தா கிருஷ்ணமாச்சாரிக்கு வாத்சல்யம் அதிகமாக அவன் முதுகைத் தடவினார். பின்னால் அவன் வால் அவர் கைக்குத் தட்டுப்பட்டது. ஓ சிம்மத்தின் வால் அல்லவோ.. அவர் கை பட்டதும் சிலிர்த்தது போல அவர் உணர்ந்தார். தனக்கே இத்தனை சிலிர்ப்பு உள்ளதே.. இந்த இரணியனுக்கு தான் வதைபடும் காலத்தில் நரசிம்மத்தால் பிளக்கப்பட்டபோது எப்பேர்பட்ட சிலிர்ப்பு உண்டாகி இருக்குமோ.. நரசிம்மத்தை நினைத்ததும் அவர் பாட ஆரம்பித்து விட்டார்.

ஒரு பக்தன் கேட்டிடவே எவ்வுயிர்க்கும் பரவியவன்

ஒரேகடவுள் இவனென்ற இரணியனை வதைத்தாயே

ஒரு கடவுள் உண்டென்று ஊருக்குரைத்தாயே அந்த

ஒரேகடவுள் நீயன்றோ வராக நரசிம்மா!

அவ்வளவுதான்.. பாடல் வந்ததுமே அந்த சிலை மாயத்தால் அப்படியே உயிர் பெற்றதுபோல அங்கேயே ஆட ஆரம்பித்தது.. ஆட ஆட வராகமுகத்தான் உருவம் மாறியது.. வராகம் மனித வடிவம் எடுத்தது அழகான கூந்தல்கள் அலைபாய முகத்தில் கண்களில், புருவத்தில் ஒளி வீச, புன்னகையா அது.. ஆஹா, இறைவா.. நீ எப்படி வந்தாலும் உன்னைப் போற்றாதோர் யார்தான் உள்ளார்.. கங்கணம் கட்டிய கைகளும் ‘கால்களில் கொஞ்சிய சலங்கைகள் என கிருஷ்ணாமாச்சாரியை மயக்கின… மறுபடியும் அதே பாடல் பாடு.. இன்னும் பாடு’ என்று கேட்டு வாங்கிக்கொண்டு பரமபுருஷன் ஆடினார்..

அவர் பாட, இவர் ஆட, அவர் கண்ணில் அப்படியே ஆனந்த கண்ணீர் பாய அந்த இடமே கிருஷ்ணமாச்சாரியார் மனதில் மறைந்து விட்டது. அங்கே வெறும் விண்வெளி, ஆகாயம், இதோ ஒளிதீபமாய் மாறி வராகநரசிம்மன் ஆடுகிறான்.. தன் பாடல் மட்டும் தன் செவியில் நன்றாகக் கேட்கிறது.. அவன் அபிநயமும் பாடலின் சுவையும் அதனால் ஏற்பட்ட ஆனந்தமும்.. இன்னும் நமக்கு என்ன வேண்டும்.. எதுவும் வேண்டாம்.. இதுவே போதும்.. இதுவே நிலைக்கட்டும்.. இந்த பிரபஞ்சத்தில் மொத்தமே தானும் அவனும்தான்.. வேறு யார் இருக்கிறார்கள்.. யாரும் இல்லை.. எதுவும் இல்லை.. ஆகா.. இதுவல்லவா இன்பம்.. இறைவா.. எத்தனை கோடி இன்பம் இறைவா..

’மறந்து போய்விட்டதா கோபக்காரரே.. முக்தி வேண்டும் எனக் கேளுங்களேன்..’ எனப் பின்னால் திடீரென ஒரு கேள்வி.. மங்காதான் நின்றிருந்தாள்.. விண்ணில் பறந்துகொண்டே பாடிக் கொண்டிருந்தவரை மடியைப் பிடித்து நிறுத்தினாள்.. மங்காவா இவள்…. ஏய்… எங்கே ஓடுகிறாய்.. நில்… இல்லை, அவள் இவர் வார்த்தைக்குக் கட்டுப்படவில்லை.. ’முக்தி முக்தி, மறந்துவிடவேண்டாம்’ எனக் கத்திக்கொண்டே ஓடிவிட்டாள்.. மறைந்துவிட்டாள் விண்ணில்..

“சிம்மாசலேசா.. என்ன விளையாட்டு இது.. பாடல் நடுவில்? என்ன சொல்கிறாள் மங்கா.. எல்லாம் உன் வேலையா?”

“இல்லை கிருஷ்ணா.. காலையில் உன் மங்கா உன்னிடம் போட்ட சண்டை உன் நினைவில் குறுக்கே வந்தது.. அவ்வளவுதான் அது போகட்டும்.. நீயேன் பாடுவதை நிறுத்தி விட்டாய்.. நீ பாடு.. நான் ஆடுகிறேன்.. இந்த வேலை எனக்கும் உனக்கும் சுகமே!”

கண்ணில் பொங்கிய நீரைத் துடைத்துக்கொண்டே அவன் பாதம் அருகே வந்தார் காந்தாகிருஷ்ணமாச்சாரி.

“நாம் இப்படியே காலத்தை ஓட்டிவிடலாமா, அப்படி முடியுமா?”

“ஏன்.. முடியாதா? உனக்கு ஏதாவது அனுமானமா?”

”சிம்மாசலேசா.. உன்னால் ஆடிக்கொண்டிருக்க முடியும்.. என்னால் எப்போதும் இப்படியே பாட முடியுமா?”

அவன் காலைப் பிடித்து சற்று அமுக்கினார்.. பாவம்.. கால் வலிக்க ஆடுகிறான்.. கால் வலிக்குமே.. வராகநரசிம்மர் சிரித்தார்.

”ஏன் கிருஷ்ணா.. ஒரே கடவுள் என என்னை வைத்துப் பாடினாய்.. அந்த ஒரே கடவுள் என்ற நான் உன்னை எப்போதும் இங்கே பாடவைக்க முடியாதா..”

“ஆமாம்.. கடவுள்தான்.. ஒரே கடவுள்.. எனக்கு எல்லாமே நீதான்.. உன்னால் எல்லாமே முடியும் என்றுதான் மங்காவிடம் சொல்லிவிட்டு வந்தேன்..”

“நீ சொன்னதை நான் கேட்டேன்.. என் பக்தன்.. என் ஆவலை பூர்த்தி செய்கிறாய்.. உனக்கில்லாத உரிமை என் மேல் யாருக்கும் இல்லை. உனக்கும் எனக்கும் வேறென்ன வேண்டும்.. நீ பாடிக்கொண்டே இரு.. நான் ஆடிக்கொண்டே இருக்கிறேன்..”

இறைவனின் பூரணகருணையால் காந்தாகிருஷ்ணமாச்சாரிக்குக் கண்ணில் மறுபடி நீர் பொங்கியது.. ”ஆஹா இந்த உன் கருணைதான் என்னை அப்படிப் பேசவைத்தது.. சிம்மாசலேசா.. அதே கருணைதான் மங்காவையும் இங்கே வரவழைத்ததோ என்னவோ, நான் ஒன்று உன்னைக் கேட்பேன்.. தருவாயா?..”

“கிருஷ்ணா.. உனக்கு என்ன வேண்டும்.. எல்லாமும் உன்னிடம் உண்டே.. அன்பான அழகான மங்கா, பாசமான குடும்பம், கஷ்டமில்லா சுக ஜீவனம். அமைதியான கோயில், சுந்தரமான மொழி, தேனிசைப் பாடல், உன் பாடலுக்கு அடிமையாகிக் கிடக்கும் ஒரே கடவுள் என உன்னால் போற்றப்படும் நான்.. இன்னும் உனக்கு என்ன வேண்டும்?”

கிருஷ்ணமாச்சாரி தலையை அசைத்து ஆமாம் போட்டார். “எல்லாமே நீ கொடுத்ததுதான் சிம்மாசலேசா.. எனக்கு என்ன குறை.. ஆனால் இன்று காலையிலிருந்து மனதில் ஒரு கிலேசம்”

“உனக்கு என்ன பயம்?”

“ஜன்மசாபல்யம் வேண்டும்.. முக்திப் பிரசாதம் வேண்டும்.. அதைத் தந்தருள்வாயா.. எனக்கு மட்டுமல்ல.. என் மங்காவுக்குக் கூட..”

”உனக்கு எதற்கு அது?”

“இறைவா.. இது என்ன கேள்வி.. மனித வாழ்க்கையே இதற்கான போராட்டம்தானே.. மனிதஜன்மம் எடுதததே இன்னமும் மேன்மை பெறத்தானே.. எங்களுக்கு முக்தியைப் பரிசாகக் கொடுக்கக் கூடாதா”

“உனக்கு ஆண்டாளைத் தெரியுமா.. அவள் இந்த முக்தி என்பதையே மறுத்துப் பேசி தனக்கு எப்போதும் சேவகமே வேண்டும் எனப் பாடிக் கேட்டுப் பெற்றவள்..”

“தெரியும்.. ஆனால்..”

:”கிருஷ்ணா! பிறவிகள் எல்லாம் ஒரு சக்கரத்தின் இயக்கமே.. அது சுழல்கிறது.. சுழற்சிக்கு ஏற்றவாறும் வினைப்பயனுக்கு ஏற்றவாறும் பிறப்பு ஏற்படுகிறது என்பதை நீயே ஒருமுறை பாடியிருக்கிறாய்.. மறந்துவிட்டாயா?”

காந்தாகிருஷ்ணமாச்சாரியின் முகத்தில் ஏமாற்றம்..தெளிவாக வெளியே தெரிந்தது.. “அப்படியானால் முக்தியை அருளமாட்டாயா”

“நான் அப்படி சொன்னேனா.. உனக்கு என்ன குறை.. தினம் தினம் நா தித்திக்க மனதும் தித்திக்கப் பாடுகிறாயே.. இப்படியே இருப்போமே என்று சொன்னேன்..”

”அப்படியானால் இந்த மங்கா சொன்னது வாஸ்தவம்தானா.. உடையவர் மட்டும்தான் முக்தி அளிக்கத் தகுதி பெற்றவரா?” கிருஷ்ணமாச்சாரியின் குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது…”

“உடையவர் போன்றவர்களை ஒரு காரணப்பிறவியாகப் பார்க்கவேண்டும். உலகில் எவ்வளவோ மக்கள் கஷ்டத்தில் உழலுகிறார்கள். அவர்களுக்கு அவர் பிறவி உதவுகிறது.. உனக்கென்ன கஷ்டம் இங்கே என்றுதான் முதலிலிருந்தே உன்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..”

கிருஷ்ணமாச்சாரிக்கு இன்ன்மும் கோபம் அதிகமாக வந்தது.. “ஓஹோ.. என் பாடல் உனக்கு உயர்த்தி இல்லை, ஆனால் உடையவர் உயர்த்தியோ.. ஏனெனில் அவர் காரணப்பிறவி!

அவர் ஆக்ரோஷம் குரலிலும் தெரிந்தது..

“நீயும் காரணப்பிறவிதான்.. உன்னைத் தவிர இத்தனை அழகாக யார் பாடுவார்கள்,. உன் பாடல் எனக்கு மகா இன்பமாக இருக்கிறது…”

“போதும் உன் சமாதானம்.. என் பாடல் அத்தனை இன்பம் என்றால் நான் கேட்டதைத் தரவேண்டுமல்லவா..”

“கிருஷ்ணா.. உனக்கு உன் கோபம்தான் உன் சத்ரு.. கோபம் கொள்ளாதே.. மிகுந்த அபாயமானது கூட”

“நீ வீணாக வார்த்தையை வளர்த்துகிறாய்.. என் பாடல் உனக்கு இனிக்கிறது.. அதற்கு பிரதிபலன் கொடுக்கவேண்டாமா”

“பிரதிபலன் தினம்தான் என் ஆடலை ரசித்து, ஆனந்தம் கண்ணில் நீர் பொங்க அனுபவிக்கிறாயே.. அதுதான்.. அதற்குப் பதிலாகத்தான் இது.. அதற்கும் இதற்கும் சரிப்போயாகிவிட்டது. நான் வேறு யாருக்காகவாவது இப்படி வெளியே வந்து ஆடினேனா? உனக்கு மட்டும்தானே ஆடினேன்.. உன் பாடலுக்கு மட்டும்தானே ஆடினேன்.. ‘காணக் கண் கோடி வேண்டும் உன் ஆட்டம் காண’ என்று நீதானே பாடி அனுபவித்தாய்.. அந்த அனுபவம்தான் பிரதிபலன்..”

’என்ன வார்த்தை.. அதற்கும் இதற்கும் சரிப்போயிற்றாமே.. இந்த வார்த்தையை மங்காவிடம் சொன்னால் அவள் சிரிக்கமாட்டாளா.. ’அப்போதே சொன்னேன் கேட்டீர்களா பிராம்மணரே’ என்ற கேலிப் பேச்சு பேச மாட்டாளா.. ’உடையவரிடம் போவோம் வாருங்கள்’ என்று கையை தர தரவெனப் பிடித்து மலையிறங்க வைத்து விடுவாளே..’ஏமாற்றம் மிகப்பெரிய கோபமாக உருவெடுத்தது. காந்தாகிருஷ்ணமாச்சாரி தன்னிலை மறந்தார்.. தனக்கு உதவாத சிம்மாசலத்தான் இங்கு இருந்தால்தான் யாருக்கு என்ன பயன்?

“ஓ.. அப்படியானால் என் பாடல்களின் இனிமை பிரதிபலன் கொடுத்தாகிவிட்டதா.. என்னை இழிவு படுத்துகிறாய் சிம்மாசலேசா”

“ஏன் அப்படி எடுத்துக் கொள்கிறாய் கிருஷ்ணா.. நான் நியாயதர்மத்தைத்தான் சொன்னேன்.. அதுவும் நீ சொல்லியவைதான்.. சாட்சிக்கு உன் பாடல்களைத்தானே குறிப்பிட்டேன்..”

“என் பாடல் என் பாடல் என்று சொல்லி சொல்லி கடைசியில் என்னை ஏமாற்றிய சிம்மாசலேசா.. அந்த என் பாடல் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.. உன் கோயில் எரிந்து போகும் பார்”

கோபம் ஒருகணம்தான்.. திடீரென தன்னிலை உணர்வது போலத் தெரிந்தது அவருக்கு.

எரிந்து போவதா.. என்ன வார்த்தை இது.. சட்டென வாயில் அந்த வார்த்தை வந்துவிட்டதா.. எரிந்து போகட்டும் என்ற வார்த்தை அவனைப் பாடும் இந்த வாயில் வந்துவிட்டதா.. வரக்கூடாத அந்த வார்த்தை, அய்யோ.. இப்படி சாபம் விடலாமா.. வேண்டாம் வேண்டாம்.. அப்படியெல்லாம் நடக்கக்கூடாது.. என்னை மன்னித்து விடு சிம்மாசலேசா.. அப்படியெல்லாம் உனக்கு ஒன்றும் ஆகக்கூடாது.. ஐய்யோ என்னை மன்னித்தருள் சிம்மாசலேசா.. என் வாக்கில் ஏன் அப்படி ஒரு வார்த்தை வந்தது.. கோபம் கோபம்..

அதே சமயத்தில் தன்னுடன் இதுவரை பேசிக்கொண்டிருந்த வராகநரசிம்மமும் தன்னை சிலைக்குள் அர்ப்பணித்துக் கொண்டதைப் போல அந்த பரமபுருஷ உருவம் மெல்ல மெல்ல மங்கி அடங்கியது. சிம்மாசலத்தான் சிலையில் அடங்கிவிட்டான் என்பதை உணர்ந்த காந்தாகிருஷ்ணமாச்சாரி நடுங்க ஆரம்பித்து விட்டார்

‘ஐய்யோ என்ன வார்த்தை சொல்லிவிட்டேன்..என் சிம்மாசலேசா.. வேண்டாம் இந்த முக்தி..எல்லாமே எனக்கு நீதான்.. நீ ஒன்றே போதும்.. ஐய்யோ, எத்தனை நிதானமாகச் சொன்னாய்.. எவ்வளவு பெரிய யோக்கியதையைக் கொடுத்தாய், எனக்கு நீதான் வேண்டும்.. வா.. வா.. நான் பாடுகிறேன்.. இதோ..”

ஐயோ.. என்ன இது,, பாடல் வரவில்லையே.. இல்லை.. எதுவும் பாடமுடியவில்லை.. பாடல் வர நா மறுத்ததை உணர்ந்தவர் திக்பிரமை பிடித்தவர் போல அங்கேயே உட்கார்ந்து விட்டார்.. எத்தனை பாடல்கள் பாடினோம்.. எத்தனை நாட்களாகப் பாடி வந்தோம்.. அந்தப் பழைய பாடல்களையாவது பாடுவோமே.. இல்லை இல்லை எதுவும் நினைவுக்கு வரவில்லையே.. ஏன் ஏன் சிம்மாசலேசா..

’என்ன பாட்டுப் பாடினேன்.. என்ன பாட்டு பாடினேன்.. இது என்ன என் கோபமே என் சத்ருவா,, என்னவெல்லாம் பாடினேன்.. ஏதேதோ பாடினேனே.. சிம்மாசலேசா.. எல்லாம் எங்கே..’

யாரோ வெளிக்கதவைப் படபடவென தட்டினார்கள். சப்தம் பெரிதாகக் கேட்டதால் உணர்ச்சி வரப்பெற்ற கிருஷ்ணாமாச்சாரி கண்களில் கண்ணீருடனே போய்க் கதவைத் திறந்தார்.. தெரிந்தவர்கள்தாம்..

“சுவாமி.. மங்காவை நாகம் தீண்டிவிட்டது. விஷநாகம்.. அங்கே மங்கா மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள்.. இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.. சீக்கிரம் வாருங்கள்..”

’மங்கா’ என்று ககறிக்கொண்டே கடகடவென ஓடிப்போய் கீழே தரையில் படுக்கவைக்கப்பட்டிருந்த மங்காவைப் பார்த்து அவள் அருகே சென்றார். கண்களில் நீர் அப்படியே வெள்ளமாய் வந்தது..ஏன் இன்று தனக்கு மட்டும் இப்படியெல்லாம்.. அவள் மெல்ல விழித்தாள்.. ‘கிட்டே வாருங்கள்’ என்று அவர் தோளைப் பற்றி தன்னருகே இழுத்தாள்..

மங்காவா இது.. இல்லை இது இது.. பரமபுருஷன்.. இது சிம்மாசலத்தான் அவனேதான்.. இப்போது மங்கா வடிவத்தில் வந்து விட்டான்.. எங்கே அழைக்கின்றான்.. சிம்மாசலேசா..

அவள் மீது அப்படியே சாய்ந்தவர்தாம்…

பக்கத்திலிருந்தவர்களுக்கு ஏதும் புரியாமல் அவர்கள் அருகே சென்றார்கள். அவர்களைத் தொட்டதும்தான் அவர்களின் இதயத்துடிப்பும் ஒரு சேர அடங்கி விட்டதும் தெரிந்தது.

———————————————————-

பின்னுரை – சிம்மாசலநாதரை போற்றிப் பாடும் நாவால் அவர் கோயில் எரியட்டும் என்று சொன்ன காந்தாகிருஷ்ணமாச்சாரியாரின் வார்த்தை பல காலம் கழித்து (18ஆம் நூற்றாண்டில்) ஹைதராபாத் நவாபின் படைத்தலைவன் ஒருவனால் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் மலைத்தேனீக்களின் கூட்டம் அந்தப் படையைத் திருப்பித் தாக்க நவாப் படைத் தலைவன் அடிபட்டு வீரர்கள் திரும்ப ஓடினார்கள் என்பதற்கான சரித்திரக் குறிப்பு இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் காந்தாகிருஷ்ணமாச்சாரியாரின் இனிமையான பாடல் தொகுதிகள் கிடைக்கவில்லை… மறைந்து போய்விட்டன. இவரது சிறப்பான பாடல்களைப் பற்றி அன்னமய்யா கூட பாடியிருக்கிறார்.. உடையவர் ராமானுஜர் அப்போது இங்கு தங்கி இருந்ததாகவும் கிருஷ்ணமாச்சாரி அதை விரும்பாததையும் சரித்திர அறிஞர் திரு கே. சுந்தரம் தனது ’ தி சிம்மாசலம் டெம்பிள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். உடையவரின் ‘முக்தி’ கொள்கையில் காந்தா கிருஷ்ணமாச்சாரியார் பிணக்கு கொண்டிருந்தார் என்பதையும் அந்த நூலில் எழுதியுள்ளார் – பக்கம் 91-92)

22 thoughts on “அதற்குப் பதிலாகத்தான் இது!

 1. மனம் படுத்தும் பாடு. நிலையான பக்தரையும் நிலைகொள்ளாமைக்குத் தள்ளி விடுவது. வாசிக்கையில் வருத்தம் தரச் செய்தது. மிக அழகான நடை. ஊடே பக்தியின் தத்துவங்களைச் சொல்லிச் சென்ற பாங்கு, அனைத்தும் அருமை.

  1. நன்றி கவிநயா.. மனம் படுத்தும் பாடுதான்.. ஏதோ தினம் பாடுகிறோமா.. மனம் இனிக்க பொழுது போகிறதா என்றில்லாமல் எதையோ கேட்கப் போய் உள்ளதையும் இழந்தவரைப் பற்றி என்ன சொல்ல..

 2. என்ன ஆச்சரியமான நிகழ்வு? இந்தக் கிருஷ்ணமாச்சாரியைக் குறித்தும், நவாப் படைகளின் அட்டூழியமும், தேனீக்கூட்டங்கள் குறித்தும் இப்போது தான் நாலைந்து நாட்கள் முன்னர் படித்தேன். இங்கே பார்த்தால் அதையே கதையாக்கி உள்ளீர்கள். கண்ணீர் பெருகச் செய்த உணர்ச்சிப் பிரவாகம். கோபம் சத்ரு என்பதைக் காட்டிய கதை. ஆனாலும் இப்படி எல்லாம் உரிமையுடன் இறைவனுடன் பழகிய மனிதர்களும் இருந்திருக்கிறார்கள். இறைவனும் அவர்கள் ஆட்டத்துக்கெல்லாம் ஆடி இருக்கிறான். அருமையான பகிர்வுக்கு நன்றி.

  1. சிலசமயம் இப்படித்தான் நடக்கும்.. ரசித்தமைக்கு நன்றி கீதாம்மா..

 3. romba naal aachu sir virundhu saappitu.. Independence day virundhu koduththirukkeenga. arumai. Two things. You have not mentioned whether the couple attained Mukthi, but Simhachalaththaan nichayam koduththiruppaan nu oru nambikkaiyai unga kathai koduththirukku. That is the success line of story. Then you have only three characters in the story including the Deity and Udaiyavar not been brought up. That was nice. – Dhevan

  1. தேவன்! உங்கள் வார்த்தைதான் எப்போதுமே விருந்து.. வாசித்தமைக்கு நன்றி..

 4. படிக்கச் சுவையாக இருந்தது. மங்காவின் தூண்டுதல்தான் பட்டர் கோபம் கொண்டு சாபமிட்டதன் காரணமா அல்லது அது உங்களது கற்பனையா?

  1. அன்புள்ள டாக்டர், மங்கா ஒரு கற்பனை பாத்திரம். வாசித்தமைக்கு நன்றி!

 5. Hari Om.
  Beautiful. His devotional renderings has made the Lord dance. This reminds me of Sita, standing beside Sri Rama, she desired for mundane object. Devotion, devoid of any desire, be it mukthi, is supreme.
  guha.

  1. அன்பின் குஹகுமாரி: தங்களுக்கு என்றும் ராமசீதா நினைவு எனத் தெரிகிறது. வாசித்தமைக்கு நன்றி.. ஹரி ஓம்..

 6. கோபமே சத்ரு. என்ன ஒரு வார்த்தை. அனைவருக்கும் அந்த வார்த்தை தெரிந்ததே!. ஆனால் நாம் சாதாரனமானவர்கள். நமக்கு கோபம் வந்தால் அதனால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் படித்தவர்கள், பண்டிதர்கள், பெரியவர்கள், இவர்களுக்கு வந்தால் அந்த தெய்வமே தாங்காது என்று மிக அழகாக, ஒரு சிறு திரியை வைத்து நல்ல கதையாக்கி அருமை அருமை.. அந்த சிம்மாசலத்தான் அருள் உனக்கு பூரணமாக கிடைக்க அவனை வேண்டுகிறேன்.

  1. அன்பு மனோகர், உனது மகிழ்ச்சி எனது மகிழ்ச்சி!.

 7. Vaazhga Vaiyagam X+ Vaazhga Valamudan
  We Experienced the Experience.
  Best wishes Dear Dhivakar.
  We pray and wish u all a welathy, healthy, loving , blissful and an enlightened LIFE( Living In Freedom An Enquiry)

  1. அன்புள்ள திரு முத்துசாமி I.R.S. அவர்களுக்கு, தாங்கள் படித்து ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி, வாழ்க வளமுடன்

 8. சமீபத்தில் Agnosticism என்ற வார்த்தையை ஒரு 26 வயது இளைஞரிடமிருந்து கேள்விப்பட்டேன். அந்த வார்த்தையின் பொருளை ஒரு இணைய தளம் இவ்வாறு விவரிக்கிறது.
  “Agnosticism is the view that the truth values of certain claims—especially claims about the existence or non-existence of deities as well as other religious and metaphysical claims—are unknown and (so far as can be judged) unknowable.”

  அதற்கடுத்து தற்செயலாக Theory of Relativity பற்றி திரு வி த்வாரகநாத் ரெட்டி என்பவர் எழுதிய
  ” The absolute & the Relative” என்ற கட்டுரையில் ” They were the ones that gave it the name GOD.The nearest spelling of that word today by the scientist seems to be DNA”
  என்ற வரிகளைப் படித்தேன்

  இப்பொழுது உங்களின் மிக அருமையாக எழுதப்பட்டுள்ள ” அதற்குப் பதிலாகத்தான் இது!”

  என் நிலை என்ன பாடு பட்டுக்கொண்டிருக்கும் என்று யோசிக்காமல் உங்களின் சரித்திர, சமய, சமூக இலக்கியப் பணியைத் தொடருங்கள் திரு திவாகர் அவர்களே.

  உங்களின் நந்தியாவட்டை பூவின் தாக்கம் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது.

  1. அன்புள்ள கமாண்டர்,
   கடவுள் பற்றிய விஷயம் – இன்னும் இவ்வளவு இருக்கிறதா.. உங்கள் ஆராய்ச்சிகள் வளர்க.. நானும் நிறைய விஷயம் கற்றுக்கொள்கிறேன். ரசித்துப் படித்துப் பதிலளித்ததற்கு நன்றி..
   (இந்த நந்தியாவட்டையின் தாக்கம் என்னுள்ளும் இருந்ததால்தான் அந்தக் கதையே பிறந்தது!!)

 9. இக்கதையை எனக்கு பலமுறை கூறியிருக்கிரீர்கள். அதனைத் தங்கள் கைவண்ணத்தில் காணும்போது மகிழ்ச்சி பன் மடங்கு பெருகுவது இயற்கைதானே. சிம்மாசலத்தான் அருள் என்றும் தங்கள்மீது மழையெனப் பொழியட்டும்.
  ஸம்பத்

  1. ஆஹா.. தங்கள் ஆசிகள் கொள்ளாமல் குறையாமல் இருக்கும்போது எனக்கென்ன கவலை?

 10. அன்பின் திவாகர் அவர்களுக்கு,

  ஒரு சரித்திர நிஜக் கதை…மீண்டும் கண்முன்னே நடப்பதைப் போல படைத்து தந்தமைக்கு நன்றி,.
  சிம்மாச்சலம் இயற்கைச் சூழலில் அமைந்த மிகவும் சக்தி வாய்ந்த புராதனக் கோவில், அழகு.
  மிக்க நன்றி

  அன்புடன்
  ஜெயஸ்ரீ

  1. கவிதாயின் ஜெயஸ்ரீ! ரசித்தமைக்கு நன்றி! ஆம் சிம்மாசலக் கோயில் சோழர் கால வேலைப்பாடுடன் அமைந்த கோயில்.

 11. ஹைய்யோ!!!!

  கதைக்கு நடுவில் ஒரு சின்ன சந்தேகம்( என் அறியாமையை மன்னிக்கணும்)

  வராக நரசிம்மன்?

  விசாகப்பட்டினத்தில் இருக்கும்போது சிம்மாச்சலம் போய்வந்தோம். உக்ரமூர்த்தி என்பதால் திரை போட்டு நாம் இந்தப்பக்கம் நின்னுதான் மூலவரை சேவிக்கணுமாம். முதல்முறையாகப்போயிருக்கிறோம். அர்ச்சனைக்கு அடிவாரத்தில் வாங்கிப்போன தேங்காய் உடைக்க தனிப்பகுதி இருக்கு.
  பட்டரின் உதவியாளர் தேங்காயை உடைச்சார். உள்ளே…. அழுகல்.

  அழுதகண்ணோடு கருவறைத் திரையையும் போய்ப் பார்க்காமல் கீழே இறங்கிவிட்டோம்.

  பல ஆண்டுகளுக்குப்பின் இந்த சம்பவத்தை ஒரு முதிய பெண்மணியிடம் விவரித்த போது……..

  அட! அழுகல் தேங்காயா? நீ அதிர்ஷ்டம் செய்தவள் என்று சொன்னார் குஜராத்தைச் சேர்ந்த அந்த அம்மாள்.

 12. நன்றி திருமதி துளசி கோபால்.

  வராக நரசிம்மர்தான் (பிரஹலாதன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இரண்டு அவதாரங்களின் கலப்பாக சிம்மாசலநாதன் இருப்பதாக கோயில் புராணம் சொல்கிறது.

  அவர் உக்ரமூர்த்தி இல்லை. படுசாந்தம்தான். சந்தனத்தால் ஏன் மூடப்பட்டுள்ளது என்றால் உருவச்சிலை சற்று சேதாரமடைந்து கிடப்பதால் அப்படி செய்திடுக்கலாம்.

  அழுகல் தேங்காய்க்காக உள்ளே சுவாமி தரிசனம் செய்யாமல் வரலாமா..

Leave a Reply

Your email address will not be published.