வேர்கள் வெளியே தெரிவதில்லை
ஷைலஜா
பல்வேறு கவிஞர்களையும் பல்வேறு தலைவர்களையும் ஈர்த்தது இந்தச் சொல். பல போராட்டங்களுக்கும் இயக்கங்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தது இந்தச் சொல்தான்!
ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு விடுதலை (ஃப்ரீடம்) பெற்ற நாள் சுதந்திரதினம் என்பதாகும்.
’What a powerful word, Among the most used,
recognised and acted upon words in the world’
சில மாதங்கள் முன்பு ஒரு ஆங்கில இதழில் ஒரு கட்டுரையை அறிமுகப்படுத்தும் வகையில் மேற்கண்ட வாசகங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த ஃப்ரீடம் என்பதில் உள்ள ஃப்ரீ (free) என்பதன் பொருள் என்ன? சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம் தமிழ்ச்சொற்களஞ்சியத்தில் ஃப்ரீ என்ற அடைமொழிக்கு (அட்ஜெக்டிவ்) நாற்பத்து எட்டு வகையான அர்த்தங்கள் (meanings) கொடுக்கப்பட்டுள்ளன.
free என்ற சொல்லின் 48 வகையான அர்த்தங்களில் ஒரே ஒரு அர்த்தத்தைப் பற்றித்தான் உலகம் அதிக அளவில் பேசிக்கொண்டிருக்கிறது. அந்த அர்த்தம் இலவசம் என்பதாகும்
அதாவது இலவசங்களின் கவர்ச்சி, நுகர்வு கலாச்சாரம் பெருகிவரும் இந்த நாட்களில் இலவசம் என்ற சொல் அனைவரையும் வசீகரிக்கிறது, தன்வசப்படுத்துகிறது!
இப்போதெல்லாம் இலவச இணைப்பு இல்லாத பொருட்களையே நாம் வாங்குவதில்லை. ஒருபொருளை வாங்கினால் இலவசமாய் இன்னொரு பொருள் கிடைக்கும் என்பதாலேயே அந்தப் பொருளைத் தேடிப்போய் வாங்குகிறோம்.
புத்தாண்டு பொங்கல் சலுகை!
ஒரு சேலை வாங்கினால் இன்னொரு சேலை ஃப்ரீ!
பை ஒன் டேக் ஒன் ஃப்ரீ!
ஒரு மிக்சி வாங்கினால் ஒரு மினிகுக்கர் இலவசம்!
லாப்டாப் ஒன்று வாங்கினால் விசிடி இலவசம்!
10கிராம் தங்கம் வாங்கினால் அரைகிராம் இலவசம்!
இன்னும் இன்னும் நிறைய இருக்கின்றன. பட்டியல் மிகப்பெரிது!
விளம்பரங்கள் கண்ணை இழுக்கின்றன, காதுகளைக் குளிர்விக்கின்றன, கால்களைக் கடை தேடி நடக்க வைக்கின்றன, கைகளை பர்சைத் திறக்க வைக்கின்றன.
இலவசங்களின் கவர்ச்சி, சாமான்யர்களை மிகவும் இழுக்கிறது.
“டூத்பேஸ்டுக்கு ஃப்ரீ என்ன தரப்போறீங்க கடைக்காரரே? உறைல ஃப்ரீ கேட்டுவாங்குங்கன்னு போட்டு இருக்குதே!”
“போனவாட்டி இலவசமா தந்த ஷாம்பூ மகாமட்டம், போங்க”
“இந்தவாரம் அந்த பத்திரிகயோட, ஃப்ரீயா என்ன தந்திருக்காங்க? போனவாரம் ’சாட்சி’ மிள்காய்தூள் கிடச்சுதே, ஊறுகாய்க்குப் போட வசதியா இருந்தது”
“ஆமாங்கம்மா… இந்தவாட்டி ஊறுகாயே கொடுத்திருக்காங்க ஃப்ரீயா! இந்தாங்க இலவச பாக்கெட்!”
கடைகளில் இப்படி உரையாடல் நடக்கிறது.
கிராமங்களில் ஆங்கிலமொழி அறிவு இல்லாதவர்கள் வாயில் கூட ’ஃப்ரீ’ என்ற சொல் பிரியமுடனே வருகிறது.
எந்த பொருளின் அட்டை உறையில் ஃப்ரீ என்ற சொல் இருக்கிறது எனத்தேடி வாங்குவதே நம் வேலையாகி விட்டது.
பொருளின் விலையை விடவும் காருக்கு செலவழித்த பெட்ரோல் செலவு அதிகமாயிருந்தாலும் ஃப்ரீ என்பதற்காக ஓடுகிறோம்!
“இலவசம் எனது உரிமை, அதை விட்டுக் கொடுக்கமாட்டேன்” என்னும் மனோபாவம் நம்முள் தோன்றி விடும் மாயம் அது!
“சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்ற திலகரின் முழக்கம் நினைவுக்குவருகிறது.
இந்த நுகர்வு கலாசாரம் இன்னமும் தொடருமானால், இன்னும் சில ஆண்டுகளில் பள்ளி வகுப்பில் ஃப்ரீ என்பதற்குப் பொருள் இலவசம் என்று மட்டுமே மாணவர்கள் கூறுவார்கள்.
இந்த இலவச மோகத்தைப் புரிந்துகொண்டு தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளும் மக்களிடம் இதனை நன்கு பயன்படுத்துகிறார்கள்.
இலவசத்திற்கும் ஓர் விலை உண்டு. அதை நம்மில் பலருணர்வதில்லை. “இந்தவிலை நமது சுதந்திரமாகக் கூட இருக்கலாம்” என்று ஒரு மனிதர் ஆற்றாமையாய் கூறியதை ஒரு பத்திரிகையில் படிக்க நேர்ந்தது.
தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ!
என பாரதி பாடியது போல கண்ணீர் விட்டுப் பெறப்பட்டது சுதந்திரம்! இன்று நாம் ஃப்ரீயாக அதாவது சுதந்திரமாக அனுபவிக்கும் பேச்சுரிமையிலிருந்து அனைத்து உரிமைகளுக்கும் தமது இன்னுயிரினைக் கொடுத்து சுதந்திரம் வாங்கித்தந்த பெருந்தலைவர்களை நினைத்துக்கொள்வோம். வேர்கள் வெளியே தெரிவதில்லைதான். ஆனால் நாம் நிற்கும் மர நிழலுக்கு அதுவே ஆதாரம் என்பதை உணர்வோம்.
சுதந்திரத்தின் மதிப்பை உணர்வோம், மற்றவர்க்கும் உணர்த்துவோம்!
ஜெய்ஹிந்த்!
ஃப்ரீ வந்து, ஃப்ரீடத்தை அடித்துக்கொண்டு போச்சு.