சுதந்திர தினக் கொண்டாட்டம்

நடராஜன் கல்பட்டு

சுதந்திர தினமாம் இன்று
கொண் டாடிடுறார் நன்று
அங்கங்கே கம்பங்கள்
தோரணங்கள் நடுவே
தோன்றிடுது தேசீயக் கொடி அழகிய
ஆரஞ்சு வெள்ளை பச்சை நிறமதிலே

எங்கள் காலனியிலும்
கொண்டாடினோம் இந்த தினம்
அலங்கரிக்கப் பட்ட கம்பம் ஒன்று
அதில் ஏற்றிட தேசீயக் கொடி ஒன்று

ஒரு மேஜை ஒரு நாற்காலி
மேஜை மீது தட்டொன்றில்
சட்டையில் குத்திக் கொள்ள
ஊசி கொண்ட காகிதக் கொடிகள் பல
மற்றொரு தட்டிலே
வண்ண வண்ண மிட்டாய்கள்
வந்திடுவாரே சின்னஞ் சிறு குழந்தைகள்
மாலையொன்று ஆளுயரத்தில்
சால்வையொன்று அதனருகே
மாலையிட்டுப் போர்த்திட
தேசீயக் கொடிதனை
ஏற்றிடப் போகும் தலைவருக்கே

ஏழு மணிக்குக் கொடியேற்றம்
என்றது அறிவிப்பு
ஏழு மணிக்கு வந்திருந்ததோ
இரு கிழங்களும் இரு குமரர்களும்
கிழங்களில் ஒன்று நலச் சங்கத் தலைவர்
மற்றது நான் மனதிலே மகிழ்ச்சி பொங்கிட
இளவட்டத்தில் ஒன்று சங்கச் செயலாளர்
மற்றது கருவூலக் காப்பாளர்

ஏழு பத்துக்கு மேல்
மெல்ல மெல்லக் கூடியது
சிறுவர் சிறுமியர் கூட்டம்
வழக்கம் போல் தவிப்புடன்
அடுத்த இடத்துக் கொடி யேற்றத்திற்குச்
செல்ல வேண்டுமே மிட்டாய்களால்
நிரப்பிடத் தன் பாக்கெட்டுகளை

கொடிகளையும் மிட்டாயினையும்
வழங்கினேன் வந்திருந்த குழந்தைகளுக்கு
ஆர்வமுடன் வாங்கினர் அவர்
ஆரவாரமிட்டே எனக்கு இரண்டு வேண்டும்
மூன்று வேண்டும் எனெக்கு என்று

ஏழரைக்கு வந்தார் தலைவர்
ஏற்றிடலாமா கொடியை என்ற படி
மாலையிட்டு அவரை
சால்வை போர்த்தி
போலிச் சிரிப்பினை முகத்தில் காட்டி
கொடி கட்டி இருந்த கயிற்றினை அவர்
கையில் கொடுக்க அதனை இழுத்துக்
கொடியினைக் கம்பத்தில் உயர்த்தினார்
காலனித் தலைவர் கை தட்டிட
கை தட்டினர் வந்தவர்களும்

பாடுங்கள் தேசீய கீதம்
ஆணையிட்டார் காலனித் தலைவர்
பாட வில்லை யாரும்
பாடினேன் நடுங்கிடும் குரலிலே நான்

இல்லையே ஆர்வம் இளசுகளுக்கு
இன்றொரு நாளேனும்
தம் தேசப் பற்றினைக் காட்டிட
இல்லையே சின்னஞ் சிறுசுகளுக்கும்
இசையொடு கற்றிட தேசீய கீதந்தனை

என்று வரும் அனைவருக்கும் தேசப் பற்று
என்று பிறக்கும் ஆர்வம் தேசீய கீதமதைக் கற்றிட
வந்திடுமா என்றேனும் இவை இரண்டும்
நம் மக்களுக்கே

படத்துக்கு நன்றி

http://chat-with-pushpee.blogspot.in/2010_08_01_archive.html

Leave a Reply

Your email address will not be published.