முகில் தினகரன்

கடவுளுக்குக் கொடுப்பதை நிறுத்தி விட்டுத்
துன்பப்படுபவர்களுக்குக் கொடு
அவர்களுக்கு நீ கடவுளாகத் தெரிவாய்!
(அன்னை தெரசா)

குடிசைக்கு வெளியே தன் ஹைதர் காலத்து சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்த அங்கமுத்துவின் அருகில் வந்து குழைந்தாள் அவன் மனைவி சரோஜினி.

“என்னடி. என்ன சமாச்சாரம்?, நீ குழையறதைப் பாத்தா எதுக்கோ அடி போடுறேன்னு நல்லாத் தெரியுது. என்னன்னு சொல்லித் தொலை.”

“வந்துங்க தெனமும் பழையதையும், கீரைத் துவையலையுமே தின்னு தின்னு சலிச்சுப் போன கொழந்தைக இன்னிக்குப் பூரிக் கிழங்கு வேணுமின்னு கேக்குதுக.”

“”விருட்”டென்று நிமிர்ந்தவன் “என்னது, பூரிக்கெழங்கா?. ஏய், அது செய்யணும்னா பூரி மாவு வாங்கணும், உருளைக் கெழங்கு வாங்கணும், எண்ணை வாங்கணும் எங்க இருக்கு அதுக்குப் பணம்?”

“அதான் அந்த உண்டியல்ல முக்கால் வாசி நெறைஞ்சிருக்கல்ல. அதிலிருந்து”

“ச்சே அந்தப் பேச்சே ஆகாது, அது சாமி கோயிலுக்குப் போறதுக்குன்னு போட்டுட்டு வர்ற காசு”

“அட, அது எல்லாத்தையுமா எடுக்கச் சொல்றேன். கொஞ்சமா எடுத்தா என்ன?”

“ம்ஹூம். அது சாமி காசு. தொடப்படாது, அவ்வளவுதான்” கறாராய்ச் சொன்னவனைக் கோபமாய்ப் பார்த்து முனகியபடியே குடிசைக்குள் சென்றாள் சரோஜினி.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

“ஏங்க, கொழந்தை ஜூரத்துல அனத்திட்டுக் கெடக்கு. டவனாஸ்பத்திரிக்கு இட்டுட்டுப் போலாம்ங்க”

“அடடா. இப்பக் கைவசம் காசில்லையே” தாடியை “வரட், வரட்” டென்று சொறிந்தவன் “சரி. கொழந்தையத் தூக்கிட்டுக் கௌம்பு. நம்ப வைத்தியர்கிட்டக் கொண்டு போய்க் காட்டுவோம். அவரு ஜூரத்துக்கு ஏதாச்சும் பச்சிலைச் சாறு தருவாரு”

“வேண்டாங்க, அந்த உண்டியல்ல இருந்து கொஞ்சம் பணம் எடுத்திட்டுப் போயி டவனாஸ்பத்திரியிலேயே காட்டலாம்ங்க”

“ஏய். நீ என்ன எப்பப் பார்த்தாலும் அந்த உண்டியல் மேலேயே குறியா இருக்கே. நான்தான் சொல்றேனே. அது சாமி கோயிலுக்குப் போறதுக்குன்னு சேர்க்கற காசுன்னு. அதைத் தொடப்படாது. புரிஞ்சுக்க”

அதற்கு மேல் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாத சரோஜினி குழந்தையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டாள் வைத்தியர் வீட்டுக்கு.

நான்கு நாட்களுக்குப் பிறகு,

“அப்பா. எங்க இஸ்கூல்ல பொருட்காட்சிக்குக் கூட்டிட்டுப் போறாங்க அதுக்கு இருபத்தஞ்சு ரூபா கொண்டாரச் சொன்னாங்க” மூத்தவன் கோரிக்கை வைக்க,

“அடப் போடா இவனே!. அந்தப் பொருட்காட்சிச் சனியனெல்லாம் பணக்காரப் பயலுவளுக்குத்தான். நம்ம மாதிரி ஏழைப்பட்டவங்களுக்கல்ல”

பையன் கண்ணைக் கசக்க அம்மாக்காரி வந்தாள் அவனுக்கு ஆதரவாய்.

“அந்த உண்டியல்ல இருந்து கொஞ்சம் காசை எடுத்தாத்தான் என்னவாம்?”

“பார்ரா எத்தனை தடவ சொன்னாலும் திரும்பத் திரும்ப அதையே கேக்குறதை! ஏய். அது சாமி கோயிலுக்குடி எடுக்கப்படாதுடி”

அன்று ஞாயிற்றுக் கிழமை.

குடிசைக்கு வெளியே அமர்ந்து பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்த அங்கமுத்து சற்றுத் தொலைவில் ஒரு வயதான பெண்மணி மிகவும் சிரமப்பட்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வருவதைப் பார்த்து நெற்றி சுருக்கி யோசித்தான். “யாரு இந்தம்மா, ”

அவன் குடிசைக்கு அருகில் வந்ததும் அப்பெண்மணி சட்டென்று மயக்கம் போட்டு விழ பாய்ந்தோடினான் அங்கமுத்து.

அவசர அவசரமாய் அவள் முகத்தில் நீர் தெளித்து உசுப்பினான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பெண் லேசாய்க் கண் விழிக்க கேட்டான். “தாயி. ஆரு தாயி நீ?. இங்க வந்து மயக்கம் போட்டு விழறியே என்னாச்சு தாயி உனக்கு?”

அவளோ பதிலேதும் சொல்லாமல் “பசி. பசி” என்று பிதற்றினாள்.

“என்ன தாயி வயிறு பசிக்குதா?”

அவள் மேலும் கீழுமாய்த் தலையாட்ட,

“ஏய். சரோஜினி உள்ளார போயி சாப்பிட ஏதாச்சும் கொண்டாடி”

அவள் நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கைகளைப் பிசைந்தாள்.

“ஏண்டி, நிக்கறே?, வீட்டுல ஒண்ணுமில்லையா?”

“ஆமாங்க இப்பத்தான் பாத்திரத்தையெல்லாம் கழுவிக் கவுத்து வெச்சுட்டு வர்றேன்”

“அட என்ன புள்ள நீ?” என்று சலித்துக் கொண்டவன் வேடிக்கை பார்க்கக் கூடியிருந்தவர்கள் பக்கம் திரும்பி “ஏங்க. யாராச்சும் வீட்ல இருந்து கொஞ்சம் சாப்பாடு கொண்டு வாங்களேன். பாவம். இந்தம்மா பசியாலதான் மயங்கி விழுந்திருக்கு” என்றான்.

அவன் அப்படிக் கேட்ட மறுநிமிடம் அந்த இடம் காலியானது. வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்தவர்கள் “அய்ய. இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்கிற பாணியில் ஆளுக்கொரு திசையில் பறந்தனர.;

“பசி. பசி” அப்பெண் இன்னும் முனகிக் கொண்டிருந்தாள்.

அதைக் காணச் சகியாத அங்கமுத்து “ஏய். சரோஜினி. உடனே போய் அடுப்பைப் பத்த வெச்சு ஏதாச்சும் பண்ணுடி”

“என்ன பண்ண முடியம்?. களிதான் கிண்ட முடியும்! இப்ப அதுக்கும் வழி இல்ல. ஏன்னா அடுப்புப் பத்த வைக்க சுள்ளி வெறகு வேற இல்லை. போய்ப் பொறுக்கிட்டு வந்துதான் பத்த வைக்கணும்”

“அய்யய்யோ. அது வரைக்கும் தாங்காதே”

“யோவ், நாச்சாயி மெஸ்ஸூல சூடா சாப்பாடு ரெடியாயிருக்கும். போயி ஒண்ணு வாங்கிட்டு வந்து குடுப்பியா. அத விட்டுட்டு சும்மா உக்காந்து யோசனை பண்ணிட்டே இருக்கியே” சைக்கிளில் கடந்து போன ஒருவன் வண்டியைக் கூட நிறுத்தாமல் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனான்.

“அதுவுஞ் செரிதான். ஆனா அதுக்கும் காசு வேணுமே” டிரவுசரைக் குடைந்தான். ஒரே ஒரு ரூபாய் சிக்கியது.

“ஏண்டி. சரோஜினி. உங்கிட்ட ஏதாச்சும் பணமிருக்கா?”

உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

சட்டென்று யோசனை வர ஓடிச் சென்று அந்த உண்டியலைக் குலுக்கி விழுந்த சில்லரைகளைப் பொறுக்கி இருபது ரூபாய் சேர்ந்ததும் நாச்சாயி மெஸ்ஸை நோக்கிப் பறந்தான் அங்கமுத்து.

அவன் வாங்கி வந்து தந்த சாப்பாட்டை வெறி கொண்டவள் போல உண்டு முடித்த அப்பெண் புத்துணர்ச்சி பெற்றவளாய் எழுந்து நின்றாள்.

அவளையுமறியாமல் அவள் கைகள் அங்கமுத்துவை வணங்கின.

“என்ன தாயி. என்னையப் போயி கும்பிட்டுக்கிட்டு, நானென்ன சாமியா?” சங்கோஜத்துடன் சொன்னான்.

“ராசா நீ மனுசன்தான். சாதாரண. ஏழை மனுசன்தான் ஆனா பசியால மயங்கி விழுந்த எனக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுக்க யாருக்குமே மனசு வராதப்ப. உனக்கு வந்திச்சே?. அப்பவே நீ சாமி ஆயிட்டேப்பா. உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டாத் தப்பில்லைப்பா”

நெகிழ்ந்து போய்ச் சிலையாய் நின்றவனிடம்,

“ராசா. உன்னோட நல்ல மனசுக்கு நீயும், உன் சம்சாரமும், உன் கொழந்தைகளும் நூறு வருஷம் எந்தக் குறையுமில்லாம இருப்பீங்கய்யா” சொல்லி விட்டுத் திரும்பி நடந்தவளை நிறுத்தினான் அங்கமுத்து

“தாயி. உடனே போகாட்டித்தான் என்ன? கொஞ்சம் ஆற அமர ஓய்வெடுத்துட்டுப் போலாமே”

“இல்லப்பா. நான் வர்றேன்”

மீண்டுமொரு முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அவள் கிளம்ப,

புல்லரித்துப் போனான் அங்கமுத்து. “உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை எடுத்துட்டுக் கோயிலுக்குப் போயி சாமியை நான் கும்பிடணும்னு நெனச்சேன். ஆனா அந்தக் காசு என்னையே சாமியாக்கி மத்தவங்க என்னையக் கும்பிடும்படி பண்ணிடுச்சே”

ஒரு கோவிலுக்குச் சென்று கடவுளைத் தரிசித்துப் பெறும் ஆன்மிக திருப்தியை அப்பெண்மணியின் வாழ்த்திலேயே பெற்று விட்டதாய் உணர்ந்த அங்கமுத்து, மனைவியின் பக்கம் திரும்பி,

“சரோஜினி. பசங்களுக்கு இன்னிக்குப் பூரி கிழங்கு பண்ணிடு. என்ன?” என்றான்.

அவள் விநோதமாய்ப் பார்க்க,

மூத்தவனை அருகில் அழைத்து “பொருட்காட்சிக்குப் பணம் நாளைக்குக் கொண்டு போய்க் குடுத்துடு. என்ன?” என்றான்.

“அதெல்லாம் சரி. பணம்?” சரோஜினி இழுக்க,

பதிலேதும் பேசாமல் குறுஞ்சிரிப்புடன் சென்று அந்த உண்டியலை எடுத்தான்.

உடைத்தான்.

(முற்றும்)

படத்திற்கு நன்றி: http://www.abwu.org/projects.aspx?project=old-age-womens-home

1 thought on “இவன்தான் மனிதன் (சிறுகதை)

  1. நல்லவேளை! தன் வீட்டு சாமி உண்டியலை உடைத்தான். அரசியல் வாதியாக் இருந்திருந்தால், பக்கத்து வீட்டு உண்டியலை உடைத்திருப்பான். எல்லாருக்கும் சாமி பொது தானே, சின்ன சாமி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *