பூரண சுதந்திரம் யாருக்கு ?
சி. ஜெயபாரதன்
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டி களுக்கு !
கையில் இருப்பதைக்
கவனமாய் வைத்துகொள் !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரண சுதந்திரம்
ஒரு போர்க்களம் !
பஞ்ச பாண்டவர்
பகடை ஆடுவர் சூதில்
பத்தினியைப் பணயம் வைத்து !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர் முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம்
ஒரு குருச்சேத்திரம் !
ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம் !
பூரணச் சுதந்திரத்தில்
மதம் பிடித்த யானைகள்
மானிடரை மிதிக்கும் !
விட்டு விடுதலை ஆகும்
சுதந்திரம் !
விதிகளுக்கு அடங்கிய
சுதந்திரம் !
உரிமை யில்லாத
சுதந்திரம் !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா
சுதந்திரம் ?
எட்டித் தொட முடியாச்
சிகரத்தில்
சீராகத் தோன்றும்
பூரண சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டி
போராடுகிறார்
போலிச் சாமியார்
புதிய பூமிக்கு !
‘பூரண சுதந்திரம்
ஒரு போர்க்களம் !’
இதையே ஜே.எஸ்.மில். “Vigilance is the price of Liberty ” என்றார். நல்லதொரு கவிதை.
உரிமை யில்லாத
சுதந்திரம் !
அன்பின் ஐயா,
///கட்டவிழ்த் தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா
சுதந்திரம் ?///
உண்மைகளைச் சுதந்திரமாய் சொன்ன அருமையான கவிதை.
அன்புடன்
ஜெயஸ்ரீ