விசாலம்

கொடி காத்த குமரன்

நம் சுதந்திர நாள்,  ஆகஸ்டு 15 அன்று   பலர்   டிவி முன் உட்கார்ந்து  பொழுதைப் போக்கி   பின் ஏதோ ஒரு சினிமாவுக்குச் சென்று  நேரத்தைக்கழித்து விடுகிறார்கள்.  ஏதோ ஒன்றிரண்டு  டி.வி சானல்கள்  நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டும்படி  கப்பலோட்டிய தமிழன்   மஹாத்மா காந்திஜி என்று காட்டினாலும், கையில் இருக்கும்  ரிமோட் அதை மாற்றி விடுகிறது. பல  நடிக நடிகைகள் பற்றி அறிய சானல்  மாற்றப்படுகிறது. சிலருக்கு  அது ஒரு விடுமுறை நாள்   என்பதால் சேர்ந்தாற்போல் லீவு போட்டுவிட்டு எங்கேயாவது ‘அவுட்டிங்’  போய்விட  சௌகரியமாக  அமைந்துவிடுகிறது. தற்போது இந்தச் சுதந்திரம்   அளவுக்கு மீறி  நியாயத்திற்கு மதிப்பு இல்லாமல் மனசாட்சியும் இல்லாமல் தாறுமாறாக   உபயோகப்பட்டு வருகிறதை நினைத்தால்  மனம்  வருந்துகிறது.

அன்று இந்தச்சுதந்திரம் வாங்க   எத்தனை பேர்கள் தங்கள்   உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.  பல சிறுவர்களும், இளைஞர்களும்  இதில் சேர்ந்து   ஆங்கிலேயரிடம் சாட்டை அடி வாங்கி இருக்கின்றனர். இந்தக்காலத்தில்  குழந்தைகளுக்கு அத்தனை நாட்டுப்பற்று  இருக்கிறதா என்ற சந்தேகம் சில சமயம் வருகிறது. பெற்றோர்கள்   தேசத்தியாகிகளைப் பற்றி எழுதி இருக்கும்   புத்தகங்களைப் படித்து  தங்கள் குழந்தைக்களுக்கு அடிக்கடி சொல்லி அவர்கள் உள்ளத்திலும் நாட்டுப்பற்றைத் தூண்ட  வேண்டும்.

கொடி காத்த குமரனின்  கதை, வடநாட்டில் பகத்சிங், சுக்தேவ் அவர்களின் சரித்திரம்   இன்றும்  நம் கண்களில் நீரை வரவழைக்கும். இளைஞர்கள்  தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும்  நாட்டுப்பற்றுடன் செயலாக்கக்  கற்றுக் கொள்ள வேண்டும். இது போல் செய்தால்,   பஸ்கள் எரித்தல், ரயில் வண்டியின் கண்ணாடியை உடைத்தல்  போன்ற செயல்களில்  ஈடுபட  அவர்கள்  யோசிப்பார்கள்.  இது நம் நாடு,  இவை நம் நாட்டுப்பொருட்கள்  என்று மனதில் பட அங்கு அழிக்கும் எண்ணம் எப்படி வரும்?

பகத்சிங்

சரித்திரத்தில்  பொன்னேடுகளால் எழுதப்பட்ட   பகத்சிங், சுகதேவ்  என்ற பெயர்கள் வந்தவுடன்   எனக்கு ஸ்ரீமதி துர்க்காதேவியும்   நினைவில்  வருகிறார். ஸ்ரீமதி துர்க்காதேவி  சுதந்திரப் போரில் பங்கு பெற்றவள். எல்லோரும் அவரை   துர்கா பாபி  (bhabhi)  என்று அழைப்பார்கள்.  ஹிந்தியில் bhabஹ்i  என்றால்  அண்ணி என்று பொருள். அவரது கணவர்    திரு  பகவதி  சரண் வோஹ்ராவும்   இந்தச் சுதந்திர முழக்கத்தில்  இருந்தார். அவருக்கு ஒரு குட்டிப் பாப்பாவும்  இருந்தது. துர்காதேவி  எல்லா சுதந்திரப் போராட்ட   வீரர்களுக்கு  பொருளும், மனத்திற்கு  இதமாக   ஆதரவும் கொடுத்தும் உதவுவார். சோர்ந்து போகும் சிப்பாய்களை ஊக்குவிப்பார். அவரை ஆங்கிலேய சிப்பாய்கள்  துரத்தினாலும்    அவர்     சிறிதேனும் பயந்தது   கிடையாது. ஒருநாள்   வீர பகத் சிங்கும் சுகதேவும்  அவர்  வீட்டுக் கதவைத் தட்டினார்கள். பின்னால் அவர்களது நண்பன் ராஜகுருவும் நின்றிருந்தான். அவர்கள் முகத்தில்  பதட்டம்  தெரிந்தது. அவர்கள் அப்போதுதான் ஒரு பெரிய ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றுவிட்டு  வந்திருந்தார்கள். ஆகையால் அவர்களைத் துரத்தி   வந்துக்கொண்டிருந்தது  ஒரு படை.

சுக்தேவ்

அதிலிருந்துத் தப்பித்துக்கொள்ள   நடுவில்  திசை மாறி ஸ்ரீமதி துர்காதேவியின்  வீட்டிற்கு   வந்தனர்.   இரவு நேரம் கதவு  டபார் டபார் என்று இடிக்கப்பட,  துர்க்காதேவி சிறிது கூட பயமில்லாமல் கதவைத்திறந்தார். எதிரே நின்றது  பகத்சிங் , சுகதேவ்,  ராஜகுரு. மூவரையும் அடையாளம் கண்டு கொண்ட துர்க்காபாய்  அவர்களை அவசரமாக உள்ளே அழைத்துப் போனார். விவரத்தைக் கேட்ட பின்  அவர்கள் தப்பிக்க ஒரு  யுக்தி சொன்னார். அந்த யுக்தியின் படி தன்  கணவரின் சூட்டை எடுத்து வந்தார். அதாவது பகத்சிங்கை தன் கணவர் போல் கோட் சூட்டு டையுடன்  அலங்கரிக்கும் ஏற்பாடுதான் அது.  பின் ராஜகுருவை  ஒரு  வேலைக்காரன்  போல் உடைகள் அணிவித்தாள். பின்  அவளும் அவர்களுடன்   ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்  கொல்கொத்தா போகும்  வண்டியில் அமர்ந்து கொண்டாள். ஒருவருக்கும் இவர்களைப் பற்றி   சந்தேகமே வரவில்லை. பார்த்தால் பெரிய பணக்கார குடும்பம்  போல் இருந்தது. கணவன், மனைவி,  வேலைக்காரனுடன் ரயிலில் பயணிப்பது போன்று ஒரு நாடகம். அவர் கணவரும் முதலிலேயே ஸ்டேஷனுக்குச் சென்று பல உதவிகள் செய்தார்.துர்க்காபாயின் யுக்தி வெற்றி கண்டது.  ஒருவருக்கும் ஒரு சந்தேகமும் வராமல்  பகத்சிங்கையும் ராஜகுருவையும்  காப்பாற்றிவிட்டார்.

துர்கா பாபி

இதுபோல் பலருக்கு துர்காதேவி மிகத்துணிச்சலுடன் உதவி இருக்கிறாள்.   தில்லியில்  பகத் சிங்  தில்லி அசம்ப்ளி  மேல்  குண்டு போட  பகத்சிங் சுகதேவ்  ராஜகுரு மூவரும்  பிடிபட்டனர். துர்காதேவியின் மனம் துடித்தது.     ஒவ்வொரு ஆபீசரிடமும் போய்   அவர்களை விட்டு விடுமபடி கண்ணீர் பெருக வேண்டிக்கொண்டாள். ஆனாலும் அவர்கள்  கேட்கவில்லை. அவர்களுக்குத் தூக்குத்தண்டனை வழங்கப் பட்டது. பின்னர் துர்க்கா தேவியும் அவரது நண்பர்களும் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும்   ஜெயிலைக் குண்டு போட்டு தகர்த்தப்  பார்த்தனர்.  ஆனால் எல்லோரும் பிடிபட்டனர்.   துர்க்காதேவி ஜெயிலில் அடைக்கப்பட்டாள், ஒரு வருடமா, இரண்டு வருடமா?  மூன்று வருடங்கள் ஜெயிலில்.  அங்கு எல்லா சித்ரவதையும்   தாங்கிக் கொண்டாள்.  அவளுடைய எல்லா   நண்பர்களும் இறந்து போனார்கள். ஆனால் கடவுளுடைய அருளால்  இவர் மட்டும் 1947ல் கிடைத்த சுதந்திரத்தைக் காணும் பாக்கியம் பெற்றார். பின் அவர்  அவருடைய 92 வது வயதில்    காலமானார்.

இந்தியர்கள் தாங்கள் இழந்த சுதந்திரத்தைத் திரும்ப பெறுவதற்கு போராடியது வியப்பல்ல.  ஆனால்  வெளி நாட்டுப் பெண்கள்  இந்தியப் போராட்டத்தில் பங்கு பெற்று ஜெயிலுக்கும் போய் இந்தியர்களுடன் ஒன்றி நின்றிருப்பது மிகவும் போற்றி பாராட்டுவதற்குரியது   தான். இவர்கள் சுதந்திரப்போரில் மட்டும் பங்கு பெறவில்லை. இந்தியாவின் கலாச்சாரம்  வேதாந்தம், பண்பாடு என்று பல விதத்திலும் ஈடுபட்டு    இந்திய மண்ணிலேயே தங்கியும்விட்டனர்  என்பது எவ்வளவு பெரிய விஷயம்.   அவர்கள் மேற்கத்திய வாழ்க்கையை வெறுத்து  அங்கு இருந்த போலி ஆடம்பரம், பணத்தாசை  எல்லாம் பிடிக்காமல் அமைதியை நாடி   இந்தியாவிற்கு வந்தனர்.

சிஸ்டர் நிவேதிதா

இதில் மார்கரெட் எலிசபெத் நொபிள் என்பவரை மறக்க முடியாது. அயர்லாந்துவாசியான இவரை சுவாமி விவேகானந்தரின் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன.இந்தியாவுக்கு வந்து வேதாந்தத்தைப் படித்து  பல இந்தியப்பெண்மணிகளின் தரத்தை உயர்த்த  பாடுபட்டார். சுவாமி விவேகனந்தர் இவரை பெண்சிங்கம் என்று அழைத்தாராம். இவரது பெயரை   “சிஸ்டர் நிவேதிதா”  என்று மாற்றியவரும் சுவாமி விவேகானந்தர் ஜி தான். ஸ்ரீ ரவீந்த்ரநாத் தாகூர்  இவரை  ‘லோகமாதா’ என்றழைத்தார்.  ஸ்ரீஅரவிநத கோஷ்  இவரை  “அக்னிசிகா ” என்று அழைத்தார். இவர்   ஒரு  பொது  நல சேவிகா, ஒரு ஆசிரியை, ஒரு படைப்பாளி என்ற பல ரூபங்கள் கொண்டிருந்தார்.      எல்லாவற்றையும் மிக திறமையுடன் நடத்தி வந்தார். 1898 ல்  இவர் ஆரம்பித்த பள்ளி இன்றும் “ஸ்ரீராமகிருஷ்ண  சாரதா மிஷன் சிஸ்டர் நிவேதிதா ஸ்கூல் ” என்று  நடந்து வருகிறது.

அடுத்து என் மனதில் நிற்பது பாண்டிசேரி அன்னை தான். பாரிஸில் பிறந்து மீரா அல்பஸா என்ற பெயருடன் விளங்கியவர். பின்னால்  ஸ்ரீஅரவிந்த மஹா புருஷரால்  இவர் எல்லோருக்கும் “மதர்’ ஆகி பாண்டிசேரியிலேயே  தங்கிவிட்டார். ஸ்ரீ அரவிந்தர் அவரை

அன்னை

மூன்றுதேவிகள் கொண்ட பராசக்தியாக அடையாளம் கண்டு கொண்டு தன்  ஆச்ரமத்தை நடத்தும்படி  அவரிடமே ஒப்புடைத்தார். அன்றிலிருந்து அவர்  “டிவைன் மதர் ‘ஆனார் . இன்றும் பல கோடி மக்கள் அவர் வழியைப்பின் பற்றி  அவரைப்பூஜிக்கின்றனர்.  அன்னை நிறுவிய  “ஆரோவில்” என்ற இடம்  சர்வதேச நகரம் என்று சொல்லும்படி  இருக்கிறது.  இதில் பல  தேசத்திலிருந்து மக்கள் அமைதியை விரும்பி  இயற்கை  சூழ்நிலையில்  எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

அயர்லாந்து வாசியான   அன்னிவூட் என்பவர்    திருமதி அன்னிபெசன்ட் அம்மையார் ஆனார். இவரை நாம் மறக்க முடியாது. இந்தியாவில் தியசாபிகல் சொசைட்டி நிறுவியதும் இவர்தான். இவர் பல தடவைகள் ஆங்கிலேயர்கள்     செய்யும்   அநியாயச் செயலைக் கண்டித்திருக்கிறார். 1914ல் “தி இன்டியன்  நேஷனல் காங்கிரஸில்” சேர்ந்து அதில் முக்கிய பங்கும் வகித்தார். பெண்களுக்கு சம உரிமையைகேட்டு   ஸ்ரீலோகமான்ய திலகருடன்  சேர்ந்து ” சர் மான்டேகு” விடம் எழுத்து மூலம்  கடிதம் கொடுத்தவர்  இவர்.

அடுத்ததாக  என் நினைவுக்கு வருவது    மீராபென், சரளாபென். இருவருமே காந்திஜியின் வளர்ப்பு பெண்கள் எனலாம்.  மஹாத்மா காந்திஜி போகும் இடமெல்லாம்  நிழல் போல் இவர்களும் போவார்கள். மீராபென், சரளாபென் என்ற பெய்ரைப்பார்த்தால் ஏதோ குஜராத்தி  பெண்கள் போல் இருக்கும்  ஆனால் இருவரும் வெளியூர்வாசிகள் தான். இந்தியா வந்த பின்  இந்திய கலாசாரத்தைப் பின்பற்றி பெயரும் மாற்றிக் கொண்டார்கள்.

மீரா பென், சரளா பென் காந்தியுடன்

மேடலின் ஸ்டேட்  மீரா பென் ஆனார்.  கேதரின் மேரி சரளாபென் ஆனாள்.  மீராபென் காந்திஜியுடன் கூட “இரண்டாவது வட்டமேஜை மஹாநாடு” சென்றிருந்தார். அங்கிருந்தபடி  இந்தியர்களுக்கு காந்திஜியின்  பிளான் எல்லாம் அவ்வப்போது    தெரிவித்துக்கொண்டிருந்தார். காதி இயக்கத்தையும் நடத்தினார். சரளா பென்  இந்திய சுதந்திர போராட்டக் கைதிகளுக்கு  பல விதங்களில் உதவிபுரிந்தார். காந்திஜியின் கடைசி  மூச்சு வரை  இவர்கள் காந்திஜியின் வலதுகரமாக இருந்து  பலவகைகளிலும் உதவினர்.

இவர்களைப்போல் பலர் இருந்தனர். புகழுக்கு ஆசைப்படாமல் நாட்டுக்காகவே உழைத்து தியாகி ஆகினர். அந்த நாள் இனி வருமா? வரவேண்டும். வரவழைக்க வேண்டும்.  அதெல்லாம் இந்தக்கால இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது.  அவர்கள் மனது வைத்தால் பாறையைக் கூட நகர்த்தலாம்.

சுதந்திர தின நல்வாழ்த்துகள்     ஜெய்ஹிந்த்

 

3 thoughts on “அந்த நாள் இனி வருமா?

 1. நான்கு கட்டுரைகளில் எழுத வேண்டியதை சுருக்கி ஒரு கட்டுரை எழுதிவிட்டீர்கள், விசாலம். விசாலமாக மறுபடியும் எழுதவும். நான் நீங்கள் கேட்கும் சமாச்சாரம் தேடித்தருகிறேன்.

 2. அன்பு இன்னம்பூரான் ஜி எழுத எழுத இடுப்பு நெளிய ஆரம்பித்துவிட்டதால் எல்லாவற்றையும் கொஞ்சம் சுருக்கி விட்டேன். நான் அன்னையின் பக்தை அவரைப்பற்றி மிகவும் விஸ்தாரமாக
  என் பிளாக்கில் எழுதியிருக்கிறேன் அன்னிபெசன்ட் அவர்களைப் பற்றி மேலும் எழுத ஆசை .
  அதேபோல் மணிபென் சரளாபென் பற்றியும் இன்னும் அறிய ஆசை ..
  திருமதி ருக்மிணி அருண்டேல் நடத்தி வந்த கலாக்‌ஷேத்ரா நேரில் பார்த்திருக்கிறேன்
  சாந்திநிகேதன் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது என் கட்டுரைப்படித்து மடலிட்டதற்கு மிக்க நன்றி

 3. அன்னி பெஸண்ட் ஒரு அற்புதமான புதிர். அவரை பற்றிய லிங்குகள் அனுப்புகிறேன், தனி மடலில். மணிபென் தந்தைக்ககாகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். சரளாபாய் ஸாராபாய் ஒரு புரட்சியாளர். மஹாத்மா காந்தி ஒருவருக்குத்தான் அது புரிந்து இருந்தது.. ருக்மணி அருண்டேலின் விவாகம் ஒரு ருசிகரமான நிகழ்வு. ஹிந்து இதழ் அதை எதிர்த்தது. அவர் என் மருமகளின் ஆச்சாரியர்/அத்தை. நான் அவருடம் அளவளாவியிருக்கிறேன். கேட்ட விவரம் தருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *