இந்தியா-இன்னும் கட்டமைக்கப்பட வேண்டும்!

1

அருண் காந்தி

சுதந்திரம்-கருவுற்ற நிலங்களின் கனவு. ஒரு தேசத்தின் வரலாறு அதன் சுதந்திர காலகட்டத்திலிருந்து தான் தோன்றுகிறது. தேசத்தின் வளர்ச்சியை சுதந்திரத்திற்குப் பின்பு இருந்து தான் கணக்கிடுகின்றனர். தேசம் பிறந்த பின் ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சியை அளவிடும் மானியாகத் திகழ்வது சுதந்திரம் அடைந்த அந்த திருநாள். அந்த நாளில் தேசம் கடந்து வந்த பாதை எல்லோராலும் பெருமிதத்துடன் திரும்பிப் பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் எல்லாம் தனக்கே உரித்தான வரலாற்றுடன் அதை எட்டிப் பிடித்திருக்கின்றன.இன்னும் பல போராடிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம்,அறிவியல் மற்றும் கலை இலக்கியப் பண்பாடு என்பது எந்த ஒரு தேசத்திற்கும் மிக முக்கியமானதாகும். இவற்றில் வகிக்கும் முன்னிலையும் தன்னிறைவும் தான் அந்த தேசத்தின் மக்களை மகிழ்விக்கும். உலக அரங்கில் ஒளிரச் செய்யும்.

அறுபத்தி ஐந்து வயதை எட்டிய சுதந்திர இந்தியாவின் அரசும் மக்களும் இன்னும் சுதந்திரம் முதல் எல்லாவற்றிற்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அடிப்படை தேவையை நிறைவு செய்ய தேசம் தடுமாறுகிறது.நிம்மதியான வாழ்க்கைக்கு மக்கள் போராடுகின்றனர். ஐம்பது சதத்திற்கு மேலான மக்கள் இன்னும் வறுமைக் கோட்டை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கழிப்பறை வசதியின்றி கூட வாழ்கின்றனர். மின் தன்னிறைவு ஒட்டு மொத்த தேசத்திற்கே பெரும் சவாலாக மாறிக் கொண்டிருக்கிறது. நீர் பற்றாக்குறை மாநிலங்களை வாட்டி வதைக்கிறது. அறுபது சதம் விளை நிலங்களைக் கொண்ட இந்திய தேசம் விவசாயத்தில் இன்னும் எண்ணற்ற முன்னேற்றங்களையும் மேம்பாடுகளையும் காண வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் வளர்ச்சிக்கான இடமும் தளமும் எண்ணற்று கிடக்கின்றன.

மக்களின் மன நிலையோ இன்னும் கவலைக்கிடம்.சமூக குற்றங்கள் இன்றைக்கு மலிந்து கிடக்கின்றன.ஒவ்வொரு தலை முறை மாற்றத்தின் போதும் முன்பிருந்ததை விட ஒரு முதிர்மனநிலை வர வேண்டும். வாழ்க்கை மீது காதல் வர வேண்டும். சகோதரத்துவம் தழைக்க வேண்டும். அது தான் சமூக வளர்ச்சியின் அடையாளம். ஆனால் காலமாற்றத்தில் நம்மிடையே அணியும் ஆடையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர மக்களின் மனம் பாழ்பட்டுக் கொண்டே செல்கிறது.

நம் பாட்டனும் பூட்டனும் செய்த வன்முறையை, கொடுங்கோன்மையை இன்று நாமும் செய்கிறோம்.

இங்கே வெறும் குறைகள் மட்டும் காட்டப்பட்டிருகின்றன. உலகம் மெச்சக் கூடிய சாதனைகளை நாம் செய்திருக்கிறோம்.இந்தியா ஒரு மிகப் பெரிய தேசம்.இப்படி சில குறை நிறைகள் இருக்கத்தான் செய்யும். வானுயர்ந்த கட்டிடங்களும் அதன் அடியில் உலகின் மிகப் பெரிய ஸ்லம்மும் இருப்பது தான் எங்கள் இந்தியா. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களும், எண்ணற்ற நடைபாதைப் பரதேசிகளும் வாழும் தேசம் தான் எங்கள் இந்தியா என சமூக ஏற்றத் தாழ்வுகளை பெருமையுடன் கொண்டாடும் நமது குணம் இன்னும் கொடுமை.

மக்கள் நலனைப் பேணாத எந்த தேசமும் தேசமும் தேசம் அல்ல. இந்தியா-இன்னும் கட்டமைக்கப்பட வேண்டும்!

1 thought on “இந்தியா-இன்னும் கட்டமைக்கப்பட வேண்டும்!

  1. மக்கள் நலனைப் பேணாத எந்த தேசமும் தேசமும் தேசம் அல்ல. இந்தியா-இன்னும் கட்டமைக்கப்பட வேண்டும்!

    ~ யாரால்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *