ராம் என்கிற ராமசாமி
கோதை வெங்கடேஷ்
ஆகஸ்ட் 14 .கிளிபச்சையில் ஊதா,மாம்பழ கலரில் அரக்கு, பொன்வண்டு கலரில் நேவி ப்ளூ ,பாலும் பழமும் கட்டம் என்று பல வர்ண பட்டுப்பாவாடைகள் சரசரக்க, கூட்டமாய் சின்னப் பெண்கள். ஏழு வயதிருக்கும்.அம்மாக்கள் எல்லாரும், தங்கள் ஒப்பனை திறமையை முழுதாக, தங்கள் பெண்களிடம் வெளிப்படுத்தியிருந்தார்கள். ரோஸ் பௌடரும் பளீரென்ற உதட்டுச் சாயமும் கண் மையும் அதீதமாக இருந்தாலும் , குழந்தைகளுக்கு அழகாகவே இருந்தது. குடை ஜிமிக்கி, வங்கி, ஒட்டியாணம்,குஞ்சலம் போன்றவை அணிந்த பெண்குழந்தைகளை பார்க்க முடிவது இந்த பள்ளி விழாக்களில் தான்.
“ஆடுவோமே,பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…”
என்று கும்மி அடித்து ஆடிய குழந்தைகளை பேரானந்தத்துடன் ரசித்துக் கொண்டிருந்தது கூட்டம். பாட்டு முடிந்து, படிக்கட்டு இறங்கும் போது கையில் மூவர்ணக் கொடியை வைத்துக் கொண்டு பாரதமாதாவாய் அலங்காரம் செய்து கொண்டிருந்த குழந்தை தடுக்கி விழப்போனதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களில் பெரும்பாலானோர்,
“அச்சச்சோ”
என்று குரல் எழுப்பினார்கள்.தன் சொந்த உதிரம் அல்லாதவர்களிடம் வெளிப்படுத்தப்படும் போது, தாய்மை மேலும் அழகாய் தோற்றமளிக்கிறது.
சரியான சமயத்தில் எங்கிருந்தோ ஒரு பையன் வந்து,அந்தக் குழந்தையைத் தாங்கிப் பிடித்தான்.ஓடி வந்த அவள் தாயின் கையில் கொடுத்தான்.
கூட்டத்தின் கவனம், குழந்தையிடமிருந்து திசை திரும்பி அந்த பையனிடம் சென்றது. வெள்ளைவெளேர் என்ற குர்தாவில் தேசியக் கொடியை குத்திக் கொண்டிருந்தான். அரும்பு மீசை, அவன், குழந்தைக்கும் இளைஞனுக்கும் நடு நிலையில் இருந்தான் என்று பறைசாற்றியது. அவன் இதழ்களில் லேசாக வீற்றிருந்த குறுநகை ,அவனுக்கு ஒரு வசீகரத்தை அளித்தது. ஆனால் பார்த்தவரை கண்கொட்டாமல் பார்க்கச் செய்தது, அவனது கண்கள். தீக்ஷண்யம் பொருந்திய அந்த கண்களில் ஒரு வசியம் இருந்தது.அதன் காந்த சக்தியிலிருந்து தப்பிப்பது கடினம்..
பாரதி அவனை சற்றே பெருமிதத்துடன் பார்த்தாள்.”சொந்த பிள்ளைய ரொம்ப ரசிக்க கூடாது.அம்மா கண்ணு பட்டுரும் “என்று அவள் பெரியம்மா சொன்னது நினைவுக்கு வந்தது .பாரதி சுதந்திர போராட்ட வீரரின் பேத்தி.தேச சேவையில் ஈடுபட்டு உயிரிழந்தவரின் வம்சாவளி என்பதில் அந்த குடும்பத்துக்கு அளவிட முடியாத பெருமை.இன்னும் வாசலில் “தூக்கு மேடை ராமசாமி “என்ற பெயர் பதித்திருந்த கல் இருந்தது.சுதந்திர தினமும் குடியரசு தினமும் மூவர்ண கொடி ஏற்றி அவர்கள் வீட்டில் கொண்டாடப்படும் .இனிப்புகள் வழங்கப்படும். அந்த தேசப்பற்று என்னும் தணலை அணையாது ,அடுத்த தலைமுறைக்கு வழங்கும் கடமையை, செவ்வனே செய்ததாக நினைத்து கொண்டாள் பாரதி.அவள் தன் மாமன் மகனையே மணந்து, ஆகஸ்ட் 15 ,பிள்ளை பிறந்த போது,அவள் பாட்டி மிகவும் சந்தோஷப்பட்டாள்.பிள்ளைக்கு ராம் என்று பெயர் சூட்டப்பட்டது.கொள்ளுத்தாத்தாவின் ஜாடை என்று பேசிக்கொள்ளப்பட்டது.
சின்ன வயதிலிருந்து சங்கீதம் பயிற்றுவிககப்பட்ட ராம்க்கு நல்ல சாரீரம்.பாரதியும் பாரதிதாசனும் கரைத்து குடித்திருந்தான்.அவன் தந்தைக்கு அடிக்கடி மாற்றலாகும் வேலை என்பதால் பல பள்ளிகள் மாறியிருந்தான்.எந்த பள்ளியிலும் அவனுடைய பாட்டு இல்லாமல் விழா நிறைவு பெற்றதில்லை.இதோ,புதிதாக இந்த ஆண்டு சேர்ந்திருக்கும் பள்ளியிலும் பாடவிருக்கிறான்.
நிகழச்சிகள் தொடர்ந்தன.”why this kolaveridi ?” என்று இந்தியர்கள், ஆங்கிலேயர்களை பார்த்து பாடுவது போல் வார்த்தைகள் மாற்றி எழுதப்பட்டிருந்தது சிலர் அபத்தம் என்று கொந்தளித்தனர்.சிலர் ரசித்தனர் . மாறுவேட போட்டியில் காந்தியும் பாரதியும் நேதாஜியும் வந்தார்கள்.பல கட்டபொம்மன்கள் “எங்கள் குலபெண்டிருக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்து பட்டிமன்றம் நடந்தது.”திரைகடலோடியும் திரவியம் தேடுவது சரியா தவறா? “என்று.
முத்தாய்ப்பாக தேசபக்திப் பாடல்கள் பாட ராம் மேடையேறினான். மேடையை குனிந்து கண்களில் ஒற்றிக்கொண்டு அவன் ஏறிய பாங்கில் ஒரு பெரிய மனுஷத்தனமிருந்தது .பல சபைகள் கண்டவன் போல் தெரிந்தது. மைக்கை சரிச்செய்ய அவன் நண்பன் சட்டென்று முன்புறத்திலிருந்து மேடையில் தாவியேறினான் . எழுந்து அருகில் வந்த தலைமை ஆசிரியை சொன்னார், “கண்ணா,எல்லாத்துக்கும் ஈஸியா ஒரு வழி இருக்கு. சரியாய் ஒரு வழி இருக்கு.நம்ம எப்பவும் சரியான வழியை தான் சூஸ் பண்ணனும்.மேடையில் இப்படியா ஏறுவாங்க?'”சாரி,மேடம்.” என்றான் அவன்.
ராம் மிருதுவான குரலில் சொன்னான்,”நீங்க தப்பா நினைச்சுக்கலன்னா நான் ஒண்ணு கேக்கலாமா, மேடம்? “”கேளு,கண்ணா ” என்றார் அவர்.
“நாளைய சுதந்திர தினத்துக்கு இன்னிக்கு கொடி ஏத்தி ,நாளைக்கு லீவ் விடறது ஈஸியான வழியா இல்லை,சரியான வழியா?”
ஒரு சில வினாடிகள் மௌனத்திற்கு பிறகு தலைமை ஆசிரியை மைக்கில் சொன்னார்,”நாளை காலை ஒன்பது மணிக்கு கொடி ஏத்த எல்லாரும் கட்டாயம் வரணும்.”
ராமின் கணீரென்ற குரலில் உருக்கமாக ஒலித்தது ,”தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம்….”
நான் மிகவும் அனுபவித்துப் படித்தக் கட்டுரை இது. வாழ்த்துக்கள், கோதை வெங்கடேஷ்.
என் கால் பூமியில் பாவ மாட்டேன் என்கிறதே,அய்யா,வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி .
அருமையான கதை கோதை. கற்பிப்பது சுலபம். ஆனால் கற்பிப்பதை கடைபிடிப்பது…மிக அழகாக ஒரு சிறு கதை வடிவில் வாழைபழத்தில் ஊசி ஏற்றியிருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
மனோகரன்
விசாகை.
BRILLIANT