இனபச் சுதந்திரத் திருநாள்
சக்தி சக்திதாசன்
இனிய பாரத தேசத்தின்
இனபச் சுதந்திரத் திருநாள்
என்று மகிழ்ந்திருக்கும்
எண்ணற்ற சொந்தங்கள்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி ?
ஆத்திரம் கொண்டு பாடினான்
அன்புத் தமிழ்ப் புலவன் பாரதி
அவன் பாதம் வணங்கி மகிழ்ந்திடுக
அன்றைய தியாகிகளின் உழைப்பால்
இன்றைய பாரதம் பாரில் மிளிர்கிறது
என்றும் இவ்வுண்மையை மறக்காது
என் இனிய இளைய தலைமுறை
தட்டில் சோறின்றிக் கலங்கித்
தமிழ் ஒன்றே தம் சொந்தம் என்று
தவித்திருக்கும் மக்கள் துயர் துடைக்க
தம்பி தங்கையர் சங்கற்பம் பூண்டிடுவீர்
கொழிக்கும் செல்வம் ஓரிடத்தில்
செழிக்கும் வகை வேண்டாம் என
பழித்தே நீவிர் அனைத்தையும்
ஒழித்தோர் சமுதாயம் கட்டிடுவீர்
உழைப்போர் உயர்வது நியாயமே !
உழைப்பைச் சுரண்டும் வகையோர்
உணர்ந்திட்டு ஏழை சிரிக்கும் வழி
உரைத்திட்டால் உலகம் நிமிர்ந்திடும்
இன்றைய இச் சுதந்திரத் திருநாளில்
இனிய பாரத இளம் நெஞ்சங்கள் அனைத்தும்
ஈடில்லாத் தியாகிகளின் உழைப்பை நினைத்து
இயக்கிடுவீர் பாரதத்தை அவர்தம் வழியில்
அப்துல் கலாம் எனும் ஓர் அறிஞர்
அழகாய்ச் சொன்ன நம்பிக்கை இன்று
அவர் முன்னே நனவாகும் தருணமிது
அனைவரும் இணைந்தே பாரதம் உயர்த்திடுவீர்
அடிமை விலங்கை ஒடித்த தலைவர்கள்
அமைதியாய் துயில்கிறார் சமாதிகளில்
அவர்தம் ஆன்மாக்கள் ஆனந்திக்கும் வகையில்
ஆக்கிடுவீர் ஓர் சமதர்ம பாரதம்
அகிலத்தின் விழிகள் அனைத்தும் இன்று
அதிசயத்துடன் நோக்கும் இந்திய தேசம்
ஆன்மீகம், விஞ்ஞானம் இரண்டையும்
அழகாய் இணைத்தே முன்னேறிடும் தேசம்
பற்பல மொழிகள், பற்பல கலாச்சாரங்கள்
பாரதம் என ஒன்றாய் வாழும் இனிய காட்சி
பாரினில் அனைவர்க்கும் ஓர் உதாரணமாய்
பாரிய உண்மையாய் வாழுது பாரீர்
அன்புடன் எனது இனிய வாழ்த்துக்கள்
அன்பினிய பாரத உறவுகள் அனைத்திற்கும்
அன்னைத் தமிழின் பாதம் பணிந்தே
அன்புடன் தூவுகிறேன் வாழ்த்து மலர்களை
படத்திற்கு நன்றி :
http://www.flagfoundationofindia.in/photo-gallery.html