கதையைப் படிக்கும் முன்:-  இது எழுதப்பட்டது 1986 – ல் என்பதை அறிந்து கொள்ளவும்.

(சு.கோதண்டராமன்)

 

‘ராஜீவ் காந்தி வாழ்க’ என்ற வாசகத்துடன், வாசலில் ஒரு தள்ளு வண்டி நின்றது. பிரதமர் மேல் அபிமானம் உள்ள காய்கறிக்காரர் போலும்! என்று நினைத்துத் தலையை உள்ளே இழுத்துக் கொண்டேன்.

நாகரீகமாக உடையணிந்த ஒரு மனிதர் படியேறி வந்தார். “சார், கம்ப்யூட்டர் வேணுமா?” என்றார். ‘இவர் கம்ப்யூட்டர் என்கிறாரா, கத்தரிக்காய் என்கிறாரா?’

அவர் மீண்டும் கேட்டார், “சார் கம்ப்யூட்டர் தேவைப்படுமா?”

“இது ஆபீஸ் இல்ல, சார். வீடு” என்றேன்.

“இது வீடுகளுக்காகவே ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட கம்ப்யூட்டர். வீட்டு வேலைகள் எல்லாம் செய்யும். உங்களால் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமானால் அதை இயக்கிக் காட்டுகிறேன், நீங்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாங்குவதானால் விலை முன்னூறு ரூபாய் தான்” என்றார்.

‘முன்னூறு ரூபாய்க்குக் கம்ப்யூட்டரா?’ எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் இந்த ஆளுடைய விற்பனை சாமர்த்தியப் பேச்சை ரசிப்போம் என்று நினைத்து, “எங்கே, காட்டுங்கள், உங்கள் கம்ப்யூட்டர் என்னென்ன வேலை செய்யும்?” என்றேன்.

அவர் வாசற்பக்கம் திரும்பினார். வண்டியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த அவரது உதவியாளர், ஒரு சிறிய பெட்டியைக் கொண்டுவந்து கொடுத்தார். டிரான்சிஸ்டர் போல இருந்தது. அதன் தலை முழுவதும் பலாமுள் போல நூற்றுக் கணக்கான சிறிய பட்டன்கள்.

“சொல்லுங்கள், உங்களுக்கு என்னென்ன வேலை செய்யவேண்டும்? எந்தெந்த வேலையெல்லாம் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதோ!, ஆனால் செய்தே தீரவேண்டி இருக்கிறதோ, அதை எல்லாம் இதனிடம் ஒப்படையுங்கள். உங்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் இது முடித்துவிடும்.”

‘மனிதர் நன்றாகக் காதில் பூ சுற்றுகிறார். இந்தப் பெட்டி எல்லா வேலையும் செய்யுமாமே! இவரை மடக்குகிறாற் போல இரண்டு கேள்வி கேட்கவேண்டும்.’

“எனக்குத் தோட்டத்துக்குத் தண்ணீர் விடவேண்டியிருக்கிறது. ஆனால் அலுப்பாக இருக்கிறது. ஒரு தோட்டக்காரனை அமர்த்தும் அளவுக்கு இது பெரிய தோட்டமும் இல்லை. அதை உங்கள் பெட்டி செய்யுமா?”

“இவ்வளவு தானே, தண்ணீர்க் குழாயை ஒவ்வொரு செடிக்கும் எக்ஸ்டென்ஷன் கொடுத்துவிட்டு, எந்தெந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர், எப்பொழுது விடவேண்டும், என்று ப்ரோக்ராம் போட்டுக் கொடுத்துவிட்டால் கரெக்டாகச் செய்துவிடும்.”

அந்தச் சிறிய பெட்டியை நோட்டம் விட்டேன். அது சாதுவாக அவரது கை மேல் உட்கார்ந்து கொண்டிருந்தது.

“அது சரி, என்னவோ புரோக்ராம் என்கிறீர்கள். அதைக் கற்றுக்கொள்ள நான் ஒரு வருடம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமோ?”

“தேவையே இல்லை. எங்கள் கம்பெனிக்குத் தெரிவித்தால் போதும். வந்து புரோக்ராம் போட்டுக் கொடுத்து விடுவோம். நம் பிரதமர் முயற்சியால், நாடு கம்ப்யூட்டர் துறையில் மிகவும் முன்னேறி வருகிறது என்று பேப்பரில் படித்திருப்பீர்கள். இது ஏழாவது ஜெனரேஷன் கம்ப்யூட்டர். ஜப்பானில் இப்போது வந்திருப்பதே ஆறாவது ஜெனரேஷன் தான். இந்த செட்டினுடைய சிறப்பு என்னவென்றால் இது நீங்கள் பேசுவதையும் புரிந்து கொள்ளும். இதற்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும், எப்படி ரிப்பேர் செய்வது என்பதையும் இதுவே தெரிவிக்கும்.” அவர் பேசிக்கொண்டே போனார்.

‘நம் நாட்டுக்கு இப்படி ஒரு பெருமையா’ என்ற வியப்பில் நான் லயித்து நின்ற போது என் மூத்த மகன் ஒரு கேள்வி கேட்டான். “மழை பெய்யும் போது ‘ஜன்னலை மூடு’ என்று சொன்னால் மூடுமா?”

எங்கள் வீட்டில் கூடம் மட்டும் அதிக உயரமான சீலிங் கொண்டது. பழைய கால மாடல். ‘கல்யாணக் கூடம்’ என்பார்கள். மேல் மட்டத்தில் ஜன்னல்கள். மழை பெய்தால் சாரல் அடிக்கும். சாத்த வேண்டும் என்றால் மொட்டை மாடிக்குப் போய்த் தான் சாத்த வேண்டும். என் மூத்த மகனுடைய வேலை அது.

இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லப் போகிறார் என்று நாங்கள் எல்லோரும் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

“இது ஒரு பிரமாதமான காரியமா? ஒவ்வொரு ஜன்னல் கதவிலும் ஒரு மோட்டார்.. மோட்டார் என்றதும் பயந்துவிடாதீர்கள், சின்ன பென் டார்ச் அளவு தான் இருக்கும். வைத்துவிட்டு புரோக்ராம் போட்டுக் கொடுத்துவிட்டால் முதல் துளி தண்ணீர் விழுந்ததும் எல்லாக் கதவுகளும் சத்தமில்லாமல் தானே சாத்திக் கொள்ளும். தொடர்ந்து பதினைந்து நிமிடம் தண்ணீர் விழாமல் இருந்தால், மறுபடியும் திறந்து கொள்ளும்.

“காஸ் தீர்ந்துவிடுவதை முன் கூட்டியே தெரிவிக்க முடியுமா இதனால்?” என் மனைவி தன் பங்குக்குக் கேள்விக் கணையை வீசினாள்.

அசரவில்லை மனிதர். “காஸ் நாப்புடன் ஒரு சிப்பைப் பொருத்திவிட்டால் இன்னும் இரண்டு மணி நேரம் எரிவதற்குத் தேவையான காஸ் இருக்கும் போது, இது அலாரம் ஒலிக்குமாறு செய்யலாம். அது மட்டுமல்ல. அடுப்பின் மேல் பாத்திரம் வைத்தவுடன் தானாகவே எரியும்படியும், எடுத்தவுடன் தானே அணைந்து விடுமாறும் செய்யலாம்.”

கேட்கக் கேட்க எங்களுக்கு ஆர்வம் மிகுதியாயிற்று. உள்ளூர ஒரு சந்தேகம். ‘ஒரு பிளாஸ்டிக் பெட்டியைத் தலையில் கட்டிவிட்டு முன்னூறு ரூபாய் தட்டிக் கொண்டு போய்விடுவாரோ? நான் ஏமாறப்போவதில்லை.’

என் மனைவி, “அதை இப்போதே டெஸ்ட் செய்து விடலாமே!” என்றாள். அவரும் ‘சரி’ என்று கூறிக் கொண்டே சமையலறையின் உள்ளே வந்தார். காஸ் நாப்பில் எதையோ ஒட்டினார். ரெகுலேட்டரில் எதையோ ஒட்டினார்.. மேஜை மேல் பெட்டியை வைத்துவிட்டு அதன் பலாமுள்கள் மேல் விரல்களால் நர்த்தனம் ஆடினார். “இப்பொழுது பாருங்கள்” என்றார்.

என்ன ஆச்சரியம்! பாத்திரத்தை அடுப்பில் வைத்தவுடன் காஸ் நாப் தானாகத் திரும்பியது, ஸ்பார்க் ஏற்பட்டு அடுப்பு பற்றிக்கொண்டுவிட்டது. பாத்திரத்தை எடுத்ததும் காஸ் அடைபட்டுத் தீ தானே அணைந்தது.

‘வந்தவர் ஏமாற்றுக்காரர் இல்லை.’ என் மனைவிக்கு உடனடியாக அந்தக் கருவியை வாங்க வேண்டும் என்ற அவசரம். தீக்குச்சி கிழிப்பதும் நாப்பைத் திருப்புவதும் அவளுக்குக் கஷ்டமான காரியங்கள் அல்ல. ஆனால் அக்கம் பக்கத்தில் இல்லாத புதுமை, முதன் முதலாக நம் வீட்டில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை தான். நச்சரித்தாள். எனக்கும் சபலம் தான் .

“காரண்டி பீரியட் என்ன?”

“இது நவீன தொழில் நுட்பம். ரிப்பேர் வரவே வாய்ப்புக் கிடையாது. அப்படி ஏதேனும் வந்தாலும் அது தானே சரி செய்து கொள்ளும். ஆயுள் முழுவதும் வேலை செய்யும்.”

முன்னூறு ரூபாயை அவரிடம் கொடுத்தேன். “அடுப்பில் பொருத்திய உபகரணங்களுக்காக ஐம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா” என்றார். நியாயமாகத் தான் பட்டது. கொடுத்தேன்.

“மேலும் உங்களுக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ சொல்லுங்கள். வந்து புரோக்ராம் போட்டுத் தருகிறேன். ஒவ்வொரு புரோக்ராமுக்கும் பத்து ரூபாய் தான் கட்டணம்.”

யோசித்து லிஸ்ட் தருவதாகக் கூறி அவரை அனுப்பினேன்.

அடுத்த நிமிடம் எல்லோரும் அடுப்படியில். ஆளாளுக்கு பாத்திரத்தை அடுப்பில் வைப்பதும் எடுப்பதுமாக, அது தானே பற்றிக் கொள்வதையும் அணைவதையும் வேடிக்கை பார்த்து, அன்று இரவுக்குள் சிலிண்டர் காலி. அடுத்த சிலிண்டருக்குப் பதிய வைத்துவிட்டு, ‘இனி அனாவசியமாக விளையாடக் கூடாது’ என்று எச்சரிக்கையும் செய்து வைத்தேன்.

என் மனைவி கெட்டிக்காரி. தன் வேலையை முதலில் சாதித்துக் கொண்டுவிட்டாள். தோட்டத்திற்குத் தண்ணீர் விடுவது என் வேலை. அதை எளிதாக்கினால் தான் எனக்கு மகிழ்ச்சி.

மறுநாள் அந்தக் கம்பெனிக்குப் போனேன். தோட்டத்தின் நீளம், அகலம், செடி வகைகள், தேவையான தண்ணீர் எல்லாம் குறித்துக் கொண்டார்கள். அடுத்த நாள் ஒரு வேனில் குழாய்கள் முதலியன வந்திறங்கின. ஒவ்வொரு செடிக்கும் குழாய்த் தொடர்பு கொடுத்தார்கள். பழைய ஆசாமி மீண்டும் கம்ப்யூட்டர் தலையில் நடனமாடினார்.

“ஆல் ரைட். இனி மாலை 5 மணிக்கு உங்கள் வீட்டில் நீர்ப்பாசனம் தானாக நடைபெறும். நான் மாலையில் வந்து பார்க்கிறேன்.”

சரியாக 5 அடித்ததும், தோட்டத்தில் எல்லாக் குழாய்களும் திறந்து கொண்டு தண்ணீர் பாயத் தொடங்கியது. ‘மாங்கன்றுக்குக் குறைவாகத் தண்ணீர் போதும்’ என்று சொல்லியிருந்தேன். அதற்குரிய குழாய் மட்டும் 2 நிமிடத்தில் தானாக மூடிக்கொண்டது. வாழை மரத்துக்குரிய குழாய் அரை மணி நேரம் கொட்டிவிட்டு நின்றது.

தாங்க முடியாத ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த என்னை நண்பர் நினைவுக்குக் கொண்டுவந்தார். “இந்தாருங்கள், பில். புரோக்ராமிங் 10 ரூபாய், குழாய் போட்ட ஆள் கூலி 300 ரூபாய், சாமான்கள் 4000 ரூபாய், ஆக 4310 கொடுங்கள்” என்றார்.

எனக்கு மயக்கமாக வந்தது. அரை மணி நேரம் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொட்டச் சோம்பியதற்கு, நாலாயிரத்துச் சொச்சம் விலையா? எனக்கு என் மேலேயே ஆத்திரம் வந்தது. முதலிலேயே தீர விளங்க விசாரித்திருக்க வேண்டும். அசட்டுச் சிரிப்புடன் செக் எழுதிக் கொடுத்துப் போகச் சொன்னேன்.

எங்கள் வீடு ஒரு காட்சிக் கூடம் ஆகியது. நண்பர்களும் உறவினர்களும் தங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து வந்து இந்த விந்தைகளைக் காட்ட ஆரம்பித்தார்கள். எங்கள் நகரிலேயே நாங்கள் மட்டும் தான் அதை வாங்கியிருக்கிறோம் என்பதில், கொஞ்சம் பெருமையாகத் தான் இருந்தது. கம்ப்யூட்டரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தோம். அந்த சேல்ஸ்மேன் அடிக்கடி வந்தார். புதுப் புது வித்தைகளைத் தன் செல்லப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனார்.

எங்கள் குடும்பத்தில் எல்லோர் வாழ்க்கையையும் ‘குட்டி தேவதை’ அது தான் அதன் பெயர், ஆட்கொண்டது. அவரவரை உரிய நேரத்தில் பெயர் சொல்லிக் கூப்பிட்டுத் துயில் எழுப்பியது. ஹோம் ஒர்க் செய்து விட்டாயா என்று சின்னப் பையனுக்கு அடிக்கடி நினைவூட்டியது. இன்றைக்கு என்ன டிபன் செய்யலாம் என்று என் மனைவிக்கு ஆலோசனை கூறியது. வானம் கறுத்தவுடன் ஜன்னல் கதவுகள் சாத்திக் கொள்வதும், வாஷ் பேசினில் கை வைத்தவுடன் தண்ணீர் கொட்டுவதும், ஊருக்குப் போகும்போது எடுத்துப் போகவேண்டிய சாமான்களைப் பட்டியலிடுவதும், மின்சாரம் நின்று போனால் ஜெனரேட்டரை ஆன் செய்வதும்..  மாயாபஜார் படத்தில் பார்த்த காட்சிகள் நிஜமாகிவிட்டன.

வீட்டிலிருந்து கடைசி நபர் வெளியேறியவுடன் குட்டி தேவதை கதவைப் பூட்டிவிடும். எங்கள் குடும்பத்தினர் யார் கைவைத்தாலும் திறந்துவிடும். மற்றவர் கை வைத்தால் ‘திருடன் திருடன்’ என்று அலறி ஊரைக் கூட்டும்.

ஊரில் யாரும் பயன்படுத்தாத அலாவுதீன் பூதம் கிடைத்த மகிழ்ச்சியில், வேடிக்கை பார்க்க வருபவர்கள் டிபன் காபி சாப்பிட்டு விட்டுப் பாராட்டும் பூரிப்பில், வங்கி இருப்பு குறைந்து கடன் சுமை ஏறிக் கொண்டு போனது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஒரு நாள் மாலை. அப்பொழுது தான் அலுவலகத்திலிருந்து களைப்புடன் வீட்டிற்கு வந்தேன். குட்டி தேவதை ‘பீப்.. பீப்’ என்று அலாரம் கொடுத்தது. என்னவோ ஏதோ! என்று அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் அதனிடம் வந்தோம். தன் நீலக் கண்களைச் சிமிட்டியபடி, நான் ராமுவிடம் கடன் வாங்கியதை நினைவூட்டியது. ஒரு மாதத்தில் தருவதாக வாக்களித்துக் கடன் வாங்கிய செய்தியை அதனிடம் சொல்லியிருந்தேன். இன்று மாலை ஏழு மணியோடு ஒரு மாதம் ஆகிவிட்டதாம். அதற்குத் தான் இந்த அலறல்.

‘இன்னும் ஒரு மாதம் கழித்துக் கொடுக்கலாம்’ என்று அதனிடம் தெரிவித்து விட்டுச் சாய்வு நாற்காலியில் படுக்கப் போனேன். மீண்டும் அலறல். எலக்ட்ரிக் பில் கட்டவில்லையாம். நாளையோடு கடைசி நாளாம்.

“சனியனே, இந்த இரவு வேளையிலே அதற்கு என்ன அவசரம்?” என்று உரக்கக் கத்தினேன்.

‘கோபப்படுவது உடம்புக்குக் கெடுதல்’ என்ற அறிவுரை அதன் முகத்தில் மின்னியது.

‘மறுபடியும் கத்தித் தொலைக்கப் போகிறது. மொட்டை மாடியில் போய்ச் சற்று நேரம் நிம்மதியாகப் படுத்து வருகிறேன்’ என்று புறப்பட்டேன்.

“வெய்யில் காய்ந்திருக்கிறது. சற்று இருங்கள், தண்ணீர் தெளித்து விடுகிறேன்” என்று என் மனைவி வந்தாள்.

மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்தவுடன் ஜன்னல் கதவுகள் மூடிக் கொண்டன. ‘இதிலே ஒண்ணும் குறைச்சலில்லை’ என்று அலுப்புடன் கூறிவிட்டுப் படுத்தேன்.

‘அடுப்பில் பால் வைத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு என் மனைவி அவசரமாகக் கீழே இறங்கினாள்.

அவள் வீட்டிற்குள் நுழைந்தபோது ஒரே காஸ் நாற்றம். பால் பொங்கி வழிந்து நெருப்பு அணைந்து விட்டது போலும். பாத்திரம் அடுப்பின் மேல் இருந்ததால் நாப் மூடிக் கொள்ளாமல், காஸ் வெளியேறிக் கொண்டிருந்தது.  பெண்களுக்கே உள்ள சமயோசித புத்தியுடன் என் மனைவி குழந்தைகளை வெளியேற்றிவிட்டு, என்னிடம் செய்தி சொல்ல மாடிக்கு வந்தாள்.

எல்லோரும் வெளியே வந்துவிட்டதால் வாசற் கதவு பூட்டிக் கொண்டது. எங்களுக்கு ஒரே தவிப்பு. ஹாலில் மின் விசிறி சுற்றிக் கொண்டிருந்தது. அதில் ஸ்பார்க் வந்ததை காலையில் பார்த்தேன். எலக்ட்ரீஷியனைக் கூப்பிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  காஸுக்கும் ஸ்பார்க்குக்கும் உறவாயிற்றே. உள்ளே போகவும் பயமாக இருந்தது. வாசலில் இருந்த மெயின் சுவிட்சை அணைத்தேன். உடனே கொல்லைக் கட்டிலிருந்த ஜெனரேட்டர், டும் டும்.. என்ற உறுமலுடன் இயங்கத் தொடங்கியது. காஸ் வெளியேறிக்கொண்டிருக்கிறது, தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது, என்ற உணர்வு எங்கள் ரத்தத்தை உறைய வைத்தது.

இந்த மாதிரி நேரங்களில் மிகுந்த பாதுகாப்புடன் செயல்படக் கூடியவர்கள் தீயணைக்கும் படையினர் தான் என்பது ஞாபகத்துக்கு வரவே, ஓடிப் போய்த் தெரு முனையில் இருந்த பூத்திலிருந்து அவர்களுக்குப் போன் செய்தேன்.

ஐந்தாவது நிமிடம் தீயணைக்கும் வண்டி வாசலில் வந்து நின்றது. அவர்களிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறினேன். கதவில் கை வைத்துத் திறக்க முயன்றார்கள். ‘திருடன் திருடன்’ என்று குட்டிப் பிசாசு அலறியது. வாசலில் கூடியிருந்த கூட்டம் திகைக்க, தீயணைப்போர் என்னை முறைக்க நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

“ஒண்ணுமில்லை. ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. நான் திறந்துவிடுகிறேன்” என்று சொல்லிக் கதவில் கை வைத்தேன். அப்படியும் கதவு திறக்கவில்லை. “உள்ளே வராதே, அபாயம்” என்று கத்தல்.

வீரர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய் சிலிண்டரை மூடினார்கள். ஜன்னல் கதவைத் திறக்க முடியாததால் அதையும் உடைத்துத் திறந்தார்கள்.

அரை மணி நேரம் கழித்து ‘நீங்கள் உள்ளே வரலாம்’ என்று அவர்கள் சொல்ல, உள்ளே நுழைந்ததும் ‘இவ்வளவு கலாட்டாவுக்கும் இதுதானே காரணம்’ என்று இருந்த ஆத்திரத்தை எல்லாம் சேர்த்து ‘நாசமாய்ப் போக’ என்று கத்திக் கொண்டே அந்தக் குட்டிப் பிசாசைத் தரையில் விட்டெறிந்தேன்.

‘கோபப்படுவது உடம்புக்குக் கெடுதல்’ என்ற வாசகம் பளிச்சிட அது தரையில் மல்லாந்து கிடந்தது.

 

படத்துக்கு நன்றி..

 

 

 

Leave a Reply

Your email address will not be published.