விடுதலைக் குரலுக்கோர் அகராதி
உமா மோகன்
விடுதலைத் தருணத்தில் பிறந்தவர்களெல்லாம் மூத்த குடிமக்கள் ஆகிவிட்டபோதும், இன்னும் விடுதலை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திர தேசத்துக்கான தகுதி நமக்கு உண்டா? நம்மை ஆளும் வல்லமை நமக்கு இருக்கிறதா? போன்ற கேள்விகளை யாராவது அகழ்வாராய்ச்சி செய்து அம்பலத்தில் வீசுவது அவ்வப்போது நிகழத்தான் செய்கிறது.
பிரபஞ்சம் முழுவதும் ஏதோ ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு இயங்குவது போலவே, தன்னளவிலான சுதந்திரச் சுழற்சிக்கும் உரிமை பெற்றிருக்கிறது- உயிர் அனைத்தும் அவ்வாறே…!
மனிதர்கள் நிறம், உருவம், உயரம், உடலமைப்பு போன்ற இயல்பான வேறுபாடுகளோடு, தாங்களே உருவாகிக் கொண்ட இனம், மதம், மொழி, வட்டார வேறுபாடுகளுக்குள்ளும் ஒன்றுபட்டு இயங்குகிறார்கள். தன் ரத்தம், தன் குடும்பம் என்பது தொடங்கி, தனக்கான குழுவை அடையாளம் காண்பதில் ஒரு இனந்தெரியா வசீகரம் மனிதனுக்கு உண்டு. இந்த வசீகரம் வக்கரிக்கும் போதுதான் குழு சார்ந்த குழப்பங்கள் வெடிக்கக் காண்கிறோம்.
ஆதிகாலந்தொட்டே, தனது ஆளுமையை எல்லைகடந்து விஸ்தரிக்க விரும்புவதும் மனித இயல்பே! புதிய குடியேற்றங்களும், கலப்பினங்களும், புதிய சாம்ராஜ்யங்களும், புதிய நாகரிகங்களும் இவ்வழி பிறந்தவையே…!இன்று, அன்டார்டிகாவிலும், செவ்வாயிலும், சந்திரனிலும் எட்டிப்பார்ப்பதை எல்லாம் நாம் இதன் நவசிந்தனையாகத்தான் கருத வேண்டும்.
இதன் இடைக்காலச் செயல்வழிதான், மேற்கத்திய மனிதர்கள் வணிகம் என நம்பக்கம் புறப்பட்டு வந்ததும், வணிகத்தை உரிமையோடு செய்ய கொஞ்சம் கொஞ்சமாக மண்ணின் உரிமையை மறைத்து ஆளுகையைக் கையில் எடுத்ததும் நிகழ்ந்தது.குறு நிலங்களுக்குள் பிரிந்து ஒடுங்கிக் கிடந்த மக்கள், சற்றே தாமதமாய்த் தங்கள் சுதந்திரம் பறிபோனதை உணர்ந்தனர். முழுமையாய் உணரவும், மீளவும், சில நூற்றாண்டுகளும், தியாகத் தலைவர்களும், உத்தமத் தொண்டர்களும், உன்னத இயக்கங்களும் தேவைப்பட்டது!
பொதுவெளியில் தன் உரிமைகள் தடைப்படுவதை உணராத அளவில், தன் வாழ்க்கை சென்று கொண்டிருக்குமானால், அன்றும், இன்றும், என்றும், சராசரி மனிதன் விடுதலை பேசுவதில்லை. தன்னளவில் அடிமைப்பட்ட நிலையிலும், அதையே இயல்பாகக் கருதி வாழும் வரையில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவும் இயலாது. இது, பால், இன, சாதி, மத, பொருளாதார மேலாதிக்கங்கள் அத்தனைக்கும் பொருந்தும்.
இந்தப் புரிதல்களோடு பார்க்கும்போதுதான், நம் தேச விடுதலையின் மதிப்பு நமக்குப் புரியும். குடும்பங்களில் பெண்ணடிமைத்தனம், தெருவிலோ தீண்டாமை, சாதி-மத ஏற்றத்தாழ்வுகளுக்குச் சற்றும் குறைவிலாத பொருளாதார ஏற்றத்தாழ்வு -இத்தனைக்குள்ளும் சிக்குண்டு கிடந்த நம் தேசத்தை சீர்திருத்த முற்பட்ட முயற்சியின் ஒருமைல் கல்லே -அன்னியரிடமிருந்து விடுதலை பெற்றது !
ஆட்சி நிர்வாகம் கைமாறியதால் அன்றே சகலமும் மாறிவிடாதபடி முன்னேறிய உலகத்தினின்று பல நூற்றாண்டு காலம் பின்தங்கியிருந்த மாபெரும் மக்கள் கூட்டம் நாம்…!
மற்ற குறைபாடுகளைப் போக்கி, சகலரும் சகலமும் பெறுவதான சுகவாழ்வு லட்சியப் பாதையில் பல தடைகள் உள்ளனதான்.! ஆனாலும், பூமி புரண்டு இமயம் எழுந்தது போல் இந்தப் புதிய உலகு நோக்கிய இந்தியப் பயணத்திற்கு இடையூறாக நிற்பது சுயநலம்.. சுயநலம்…இதுதான், கடமையைப் புறக்கணித்துக் கையூட்டு வாங்க வைக்கிறது… ஓட்டைப் பேருந்தில் பிஞ்சுகளை ஏற்றி உயிர்ப் பலி வாங்குகிறது… எத்தனை முறை ஏமாந்தாலும், புதிய விளம்பரங்களின் பின் ஓட வைக்கிறது… எந்த விதிமுறையையும் வளைக்கப் பார்க்கிறது…. ஊழல், மோசடி.. என ஆவேசத்துடன் விமர்சித்தவாறே, தன் தேவைக்குக் குறுக்குவழி தேடச் சொல்கிறது.
இந்தச் சுயநல மலையைப் புரட்டுவதே, பொடிப் பொடியாக்குவதே புதிய விடுதலைக் குரலாக இருக்க முடியும்! இந்த அடிமைத் தளையை நாம் அறிந்து கொண்டாலல்லவா இது சாத்தியம்…!
படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Independence_Day_(India)
சுயநலத்தின் ஆசைநாயகி, விழிப்புணர்ச்சி வற்றிப்போனது.