கனவு சாம்ராஜ்யத்தில்
சாந்தி மாரியப்பன்
அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர்
எனது சாம்ராஜ்யத்தில்.
பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால்
கழுவிக்கவிழ்த்து விட்ட
மணிமேகலையின் அட்சயபாத்திரம்
சிலந்திகளின் உறைவிடமாகிவிட,
சுமையற்ற கல்வியாலயங்களில்
குடி புகுந்த சரஸ்வதி
நிரந்தரக்கொலுவீற்றிருந்தாள்
சிறார்களின் புன்னகைகளில்..
பேராசையுடனலைந்த
வரதட்சணை வேதாளத்தின் தலை
சுக்கு நூறாகச்சிதறி விட
பெண் சிசுக்களுக்கென்று மட்டும்
மடி சுரந்த
எருக்கிலமும் கள்ளியும்
அடிமாடுகளாய்ப்போய்க்கொண்டிருந்தன
அடுப்படியில் பலியிடப்படுவதற்கென்று..
கேட்டுப்பெறாமல்
தானாய்க்கிடைத்த சுதந்திரக்காற்றில்
கொல்லைப்புற மருதாணியும்
முற்றத்துத் துளசியும் வாசம் பரப்பி வர
அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்
எனது கனவு சாம்ராஜ்யத்தில்..
படத்திற்கு நன்றி:http://mrbeo9x.deviantart.com/art/Dream-World-143241273
பெண் சிசுக்களுக்கென்று மட்டும் மடி சுரந்த
எருக்கிலமும் கள்ளியும்
அடிமாடுகளாய்ப்போய்க்கொண்டிருந்தன
அடுப்படியில் பலியிடப்படுவதற்கென்று..
இந்த வரிகளைப் படித்தபோது உடம்பே சிலிர்த்தது.
எப்படி முடிகிறது…இப்படி எழுத?
வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி முகில் தினகரன்.
கனவுகள் மெய்ப்பட வேண்டும். மிக அழகான கவிதை.