மகாத்மா காந்தி கொலை வழக்கு – புத்தக விமர்சனம்
மோகன் குமார்
என்.சொக்கன் எழுதிய மகாத்மா காந்தி கொலை வழக்கு என்கிற புத்தகம் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பொதுவாய் எல்லோரும் மகாத்மா வாழ்க்கையைத்தான் அறிவோம். அவரைக் கொன்றது கோட்சே என்று அறிந்தாலும், கோட்சே உடன் இன்னொருவரும் தூக்கில் இடப்பட்டார் என்பதும் அவர் பெயர் என்ன என்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
வரலாற்றின் கருப்புப் பக்கங்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்திலிருந்து சில தகவல்கள் :
* ஜனவரி 30, 1948 – அன்று காந்தி கொல்லப்படுவதற்கு இருபது நாளுக்கு முன்பே கோட்சே உள்ளிட்ட குழு காந்தியை அதே இடத்தில் கொல்ல முயன்றுள்ளது. கையெறி குண்டுகளை வீசி விட்டுத் தப்பி ஓடும் போது மதன்லால் என்கிற நபர் மட்டும் மாட்டிக்கொள்ள மற்றவர்கள் தப்பி விட்டனர். போலீஸ் மதன்லாலிடம் விசாரித்தபோது அவர் நான்கைந்து பேர் சேர்ந்து காந்தியைக் கொல்லத் திட்டம் தீட்டியதைச் சொல்லி விட்டார். ஆனால் டில்லிபோலீஸ் மற்றும் மும்பைபோலீஸ் மிகத் தீவிரமாக இயங்கி குற்றவாளிகளை அடுத்த பத்து நாளைக்குள் பிடிக்கத் தவறி விட்டது.
* காந்தி உயிருக்கு ஆபத்து என்று அறிந்து அவருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றுபோலீஸ் சொன்னதை காந்தி ஏற்கவில்லை. சரியான பாதுகாப்பு இருந்தால் காந்தி கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்றும் இதனால் காந்தியைக் கொன்றது காந்தியேதான் என்று ஒரு கருத்தும் உண்டு; இதே பெயரில் (காந்தியை கொன்றது காந்தியேதான்) ஒரு புத்தகமும் வெளிவந்துள்ளது !
* பாகிஸ்தான் பிரிந்தபோது அவர்களுக்கு நம்மிடம் இருக்கும் பணத்தில் 75 கோடி தருவதாக ஒப்பு கொள்கிறார்கள். அதன்படி முதலில் 20 கோடி தந்தாலும், மீதம் 55 கோடி இந்தியா தரவில்லை. காரணம் அதற்குள் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வந்து விட்டது. ஆனால் இது தெரிந்து காந்தி கோபிக்க, பின் இந்திய அரசு அந்தப் பணத்தை பாகிஸ்தானுக்குத் தந்து விட்டது. ஏற்கனவே காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று எண்ணியிருந்த கோட்சே குழுவுக்கு இது பெரும் கோபத்தைத் தந்து விட்டது
* கோட்சே முதலில் காந்தியின் கொள்கைகளை விரும்பிய மனிதனாக இருந்தார் என்று அறிய ஆச்சரியமாக உள்ளது. பின் ஹிந்துக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சாவர்கர் என்கிற நபரின் follower ஆகி விட்டார் கோட்சே.
* நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்கரே ஆகிய இருவரும் கோட்சே காந்தியைச் சுட்டபோது அவர் உடன் இருந்த நபர்கள். இதில் நாராயண ஆப்தேக்கு தூக்கு கிடைத்தது. கார்கரே உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது
* சுதந்திரத்துக்கு முன்பும் ஒரு முறை கோட்சே காந்தியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றுள்ளார். கூட்டத்தில் இது நிகழ, பலரும் சேர்ந்து காப்பாற்றி விட்டனர். காந்தி அப்போது “அந்த மனிதரை எதுவும் செய்யாதீர்கள். விட்டு விடுங்கள். அவரை என்னுடன் எட்டு நாட்கள் வந்து தங்கச் சொல்லுங்கள். அவரது கருத்தை நான் அறிய விரும்புகிறேன்” என்றார். கோட்சே அவருடன் தங்குவதை (அப்போதும் கொல்ல முயற்சிப்பார் என்பதால்) மக்கள் யாரும் விரும்ப வில்லை.
* காந்தியைக் கொல்ல வாங்கிய துப்பாக்கி பற்றி பெரிய கதையே விரிகிறது. முதலில் ஒரு துப்பாக்கி வாங்கி அது திருப்தி இன்றி அப்புறம் இத்தாலியத் துப்பாக்கி ஐநூறு ரூபாய்க்கு வாங்கி, அதை வைத்துத்தான் காந்தியைச் சுட்டுள்ளனர்.
* காந்தியைக் கொல்ல ஒரு நாளுக்கு முன் கோட்சே தன்னுடன் இருக்கும் கார்கரே மற்றும் ஆப்தேக்கு ஒரு கடிதம் எழுதி அவர்கள் ஊரான மகாராஷ்டிராவுக்கு அனுப்புகிறார். காரணம் அவர்கள் தன்னுடன் இல்லை; ஊரில் இருந்தார்கள் என்று நிரூபிக்க! வழக்கு நடக்கும் போதும் “நான் தான் கொன்றேன்; அவர்கள் உடன் இல்லை” என கோட்சே வாதிட்டாலும், போலீஸ் ஆதாரத்துடன் அவர்களும் உடன் இருந்ததை நிரூபிக்கிறது.
* காந்தியைக் கொல்லப் போகும் முன் முதலில் பர்தா அணிந்து போகலாம் என புது பர்தா வாங்கி முயன்றுள்ளனர். பின் அது சரியாக இல்லை என கோட்சே கூறி ராணுவ வீரன் போன்ற உடை அணிந்து சென்றுள்ளனர். கொல்லும் முன் கோட்சே உப்புக் கடலை சாப்பிட ஆசைப்பட, பல இடத்தில் கிடைக்காமல் கடைசியாய் அவருக்கு உப்புக் கடலை வாங்கித் தந்துள்ளனர் அவருடன் இருந்தவர்கள்.
* குறிப்பிட்ட தினத்தன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வரும் போது கோட்சே சுட வேண்டும் என்று காத்திருக்க, காந்தி உள்துறை அமைச்சர் பட்டேலுடன் தீவிர ஆலோசனையில் இருந்துள்ளார். பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அப்போது ஏதோ கருத்து வேறுபாடு. அது பற்றி காந்தியிடம் பேசியுள்ளார் பட்டேல். பட்டேலுடன் பேசியதில் பிரார்த்தனை கூட்டத்துக்கு நேரமாகி விட்டது என்று அவசரமாகக் குறுக்கு வழியில் காந்தி சென்றுள்ளார். காந்தியை மேடையில் வைத்துத்தான் சுட கோட்சே எண்ணியுள்ளார். ஆனால் காந்தி வழக்கமாய்ச் செல்லும் வழியை விடுத்து, கோட்சே நின்ற இடம் வழியே செல்ல, அங்கேயே அவரைச் சுட்டார் கோட்சே. மூன்று குண்டுகள் மகாத்மா மார்பைத் துளைக்க அங்கேயே இறந்து விட்டார். சுட்ட கோட்சே கைகளைத் தூக்கியவாறு, “போலிஸ்.. போலிஸ்” என்று கத்தியுள்ளார். மக்கள் வந்து அடித்து விடுவார்களே என்று தான் அவர் போலிசை அழைத்துள்ளார்.
* காந்தி இறந்த அன்று ரேடியோவில் காந்தியை ஒரு இந்து சுட்டுக் கொன்றார் என்று திரும்பத் திரும்ப அறிவித்துள்ளனர். அந்த நேரம் இந்து- முஸ்லீம் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்க, காந்தியை ஒரு முஸ்லீம் கொன்றார் என்று மக்கள் நினைத்தால் பிரச்சனை பெரிதாகுமே என்று தான் இப்படி அறிவித்துள்ளனர்.
* இந்த வழக்கு 1948 மே மாதம் துவங்கி தொடர்ந்து நடந்து, 7 மாதங்களில் (1948 டிசம்பர் 30-ல்) முதல் தீர்ப்பு வருகிறது. இதற்கு மேல்முறையீடு செய்யப்பட்டு அது சிம்லாவில் நடக்கிறது. அங்கு பிப்ரவரி 10, 1949-ல் தீர்ப்பு வெளி வருகிறது. கோட்சே மற்றும் ஆப்தே நவம்பர் 15, 1949ல் தூக்கில் போடப்படுகின்றனர். அவர்களை தூக்கில் போடுவதை காந்தி குடும்பத்தினரே எதிர்த்தனர்.
* காந்தியைக் கொன்ற காரணம் என கோட்சே கோர்ட்டில் ஐந்து மணி நேரம் பேசியது “May it please your honour ” என்று புத்தகமாக வெளி வந்துள்ளது. கோர்ட்டில் அன்று கோட்சே பேச்சைக் கேட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுததாகவும், கோட்சேயை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் கூறுமளவுக்கு கோட்சே பேச்சு இருந்ததாகவும் நீதிபதியே தீர்ப்பில் கூறுகிறார்.
****
சில பகுதிகளை தேவைக்கதிகமாக நீட்டிக் கொண்டே செல்வது, பல்வேறு மனிதர்களின் பெயர்கள் அவர்கள் பற்றிய தகவல்கள் நமக்குக் குழப்புவது …. இப்படிச் சிற்சில குறைகள் இருந்தாலும் வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது!
படங்களுக்கு நன்றி: http://newbiography.org/home/biogrphy-of-mahatma-gandhi
http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mohandas_Karamchand_Gandhi
http://www.tollyandhra.in/2012/02/mahatma-gandhi-killed-by-nathu-ram.html
என்னுடைய புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. நீங்கள் சொல்லியிருக்கும் குறைகளை அடுத்தடுத்த பதிப்புகள் / நூல்களில் திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.
: என். சொக்கன்,
பெங்களூரு.
கோட்சே கையில் துப்பாக்கி வைத்திருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள படம் உண்மையானது அல்ல.Nine Hours to Rama, (http://www.youtube.com/watch?v=ZtxRUXo9Wjo&feature=relmfu) என்ற திரைப்படத்தில் வரும் காட்சி அது. இன்று இந்திய தேசியம் பேச ஏதுவாக இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி ஒரே நாடாக உருவாக காரணமானவர் காந்தி. காந்தி இல்லை என்றால் சிறு சிறு தேசங்களாக இருந்திருப்போம். முரண் நகை என்னவெனில் , இன்று இந்திய தேசியத்தைப் போற்றுபவர்கள், கோட்சேவிற்கு நாயக பிம்பம் கொடுத்து , காந்தியின் மரணத்தை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த வகையிலான புத்தகங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை.