புதுவை எழில்

ஆகஸ்ட் மாதம் 15 –ஆம் நாள் சிறப்பை அனைவரும் அறிவர். இந்த நாளுக்கு இன்னும் ஒரு மகத்துவம் உண்டு. அது… கற்பனையும் வரலாறும் கலந்த இக் கதையைப் படித்தால் தெரிய வரும்.

பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது வெறும் பூமி மட்டும் அல்ல – அந்த வெள்ளைப் பாதிரியின் உள்ளமும்தான். ஓலை வேய்ந்த குடிசை. அதனுள், புன்னகை பூத்த முகத்தினளாய் விளங்கும் மாதா ஓவியம். அதன் முன் மண்டியிட்டு இருந்த அவர் மனத்தில்தான் எத்தனைக் குமுறல்கள்!

”மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது உபகார சகாயத்தை மன்றாடிக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒரு போதும் கேள்விப்பட்டது இல்லையே! அப்படி இருக்க, உன் பிள்ளைகளுக்கு ஏனம்மா இத்தனைச் சோதனைகள்? பருவ மழை பொய்த்துப் போனது ஒரு நாளா, இரு நாளா? ஒரு மாதமா , இரு மாதமா? கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக அல்லவா சோதனைகளும் வேதனைகளும் தொடர்கின்றன! ஆறு குளமாகி, குளம் குட்டையாகி.. இப்போது இம் இம்.. புஞ்சையே இல்லாமல் எங்கும் நஞ்சையே பெருகிக் கிடந்த தஞ்சை மாநிலத்துக்கா இந்தக் கதி!” – அவர் உள்ளத்தில் பெருமூச்சு அனல் மூச்சாக வெளிப்பட்டது.

“பசி, பட்டினி, பஞ்சம் என்று மக்கள் படும்பாடு கொஞ்சமா, நஞ்சமா! பஞ்சத்தின் கொடுமையால் வறட்சியின் கடுமையால் எவ்வளவு கொடுமைகள்! பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பார்களே, எவ்வளவு உண்மை! அதோ, அன்று, சொந்த மகளையே ஒரு வேளைச் சோற்றுக்காக விற்று விட்டு வந்து கதறிக் கதறி அழுதாளே அந்தத் தாய்! என்ன கொடுமை! என்ன கொடுமை! உடலை விற்கத் துணிந்து விட்ட மக்கள் இப்போது ஆன்மாவுக்கும் அல்லவா விலை பேசத் தொடங்கி விட்டார்கள். என் மக்கள்- பல ஆண்டுகளாகப் பாடுபட்டுச் சத்திய வேதத்தில், உத்தமத் திருச்சபையில் நான் கொண்டு வந்து சேர்த்த மக்கள் இப்படி மந்தை ஆடுகளாய்ச் சிதறிப் போகிறார்களே!” – குப்பென அவர் கண்களில் கண்ணீர்ப் பூக்கள். மனதின் ஆதங்கம் மாதாவுக்குப் புரியாதோ! புரிந்தும் ஏன்தான் மவுனியாகிப் போனாளோ! இன்னும் இப்படி எவ்வளவு கொடுமைகளோ!” அந்த வெப்பத்திலும் அவர் உடல் நடுங்கியது! அந்த நடுக்கத்தை அதிகப்படுத்துவது போல் அருளப்பன் பதறியபடியே வேகமாக உள்ளே நுழைந்து கதறினான். “சாமி, சாமி, மோசம் போய் விட்டோமுங்க.. “

அநாதையாய்க் கை விடப்பட்ட அவனை எடுத்து வளர்த்து ஆளாக்கி வரும் அந்த வெள்ளைப் பாதிரி, “அருளப்பா, பதறாமல் செய்தியைச் சொல்” என்றார். அவன் சொன்னான்.

இடி விழுந்த மரம் ஆனார் அவர். “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். மாதாவே, இதுவும் உன் சோதனையுள் ஒன்றா?” அவர் கைகள் செபமாலையை இறுகப் பற்றின. “மாதாவே.. ” கண்களை மூடி ஆவேசமாகச் செபிக்கத் தொடங்கினார்.

எவ்வளவு நேரம் அப்படிச் செபித்தாரோ தெரியாது. சரசரவென ஆள்கள் உள்ளே நுழையும் ஒலி கேட்டது. சிறிது தயக்கத்துக்குப் பின் “சாமிகளே, தைரியநாத சாமிகளே.. ” என்ற குரல் கேட்டுக் கண் திறந்தார். அந்த ஊரில் அவர் பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆத்மா அந்த ஊரின் பெரியவர்தான். அவர் தலைமையில் நாலைந்து சின்னப் பெரியவர்கள். தரையில் விரித்திருந்த பாயில் அமரும்படிச் சைகை செய்தார் வெள்ளைப் பாதிரி. யாரும் அமர்வதாகத் தெரியவில்லை. எல்லார் முகங்களிலும் ஒருவித இறுக்கம். “அம்மா, இன்னும் ஒரு சோதனையா?” என்று எண்ணிய வண்ணம், “ஐயா, சொல்லுங்க” என்றார் பாதிரியார்.

பெரியவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ” தைரியநாத சாமிகளே, ஒங்களுக்குத் தெரியாதது ஒன்னும் இல்ல.. சுருக்கச் சொல்லிப்புடறேன்: சாமிங்க கோவிச்சுக்கப் படாது..”

பீடிகையின் பலத்திலேயே சாமிகளுக்குத் தெரிந்து போயிற்று, பெரியவர் என்ன சொல்ல வருகிறார் என்று. “மேலே சொல்லுங்க ” என்பது போல் மவுனமாகத் தலை அசைத்தார்.

“எதோ பசியோ பட்டினியோ பஞ்சமோ.. இத்தனை வருசம் ஒங்க போதனைய ஏத்துக்கிட்டு ஒங்க மதத்துல சேந்து இருந்தோம். ஆனா, ஆனா இப்ப இந்தப் பயங்கரப் பஞ்சதுக்குக் காரணம் சொந்த மதத்த உட்டுப் போட்டு நீங்க கொணாந்த மதத்துக்கு மாறுனதுதான்.. அப்படின்னு”

பெரியவர் தொடருமுன் சாமிகளின் கண்கள் சரேல் என ஏறிட்டுப் பார்த்தன. “இல்ல, இல்ல அப்படின்னு நாங்க சொல்லல. ஆனா, தஞ்சாவூர் மகாராஜாவான மராட்டிய மன்னர் அப்பிடி அப்பிபிராயப் படுறாரு. அதனால மதம் உட்டு மதம் மாறுனவங்க ரெட்டிப்பா வரி கட்டணுமுன்னு தண்டோரா போட்டுட்டாரு. நீங்க கேள்விப்பட்டீங்களோ என்னவோ..” பெரியவர் இழுத்தார்.

“ஆம், அருளப்பன் வந்து சொன்னான்” – சாமிகள் மெல்லச் சொற்களை உதிர்த்தார்.

“எத்தனை வருசத்துக்கு இந்தப் பஞ்சம் நீடிக்குமோ! எத்தனை வருசத்துக்கு நாங்க இப்பிடி ரெட்டிப்பு வரி கட்ட முடியுமுங்க? சாமிக நல்லா யோசிக்கணுமுங்க..”

“பெரியவரே, புரியுது, புரியுது! அதனாலே நீங்க அத்தனை பேரும்..”

“ஆம்” என்பது போல் தலை அசைத்தார்கள் வந்திருந்த அத்தனை மேட்டுக்குடி மிராசுகளும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஐம்பது அறுபது பேர் இருப்பார்கள். அப்படின்னா ஏறக்குறைய முன்னூறு நானூறு பேர் சத்திய வேதத்தை விட்டு விலகிச் செல்லப் போகிறார்கள்! “மாதாவே, மாதாவே! வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் கொடுமை அல்லவா இது! முன்னேர் எவ்வழி பின்னேர் அவ்வழி. ஊர்ப் பெரியவரே திருச்சபையை விட்டுப் போறார்னா, மத்தவங்க..” ஊளை இட்ட உள்மனத்தை அடக்கி விட்டுச் சாமிகள் சொன்னார், “பெரியவரே, நான் யாரையும் கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்யல. ஒங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே இது நல்லா தெரியும். ஒங்க விருப்பம் போலச் செய்ங்க. என்ன இருந்தாலும் நீங்க என் மக்கள் இன்னிக்குப் போனாலும் நாளைக்கு ஒங்கள மறுபடி கொண்டு வந்து சேர்ப்பா, அந்தத் தாய்” – நம்பிக்கையோடு அவர் கண்கள் ஓவியத்தின் மீது படிந்தன. அவர் மந்தையின் ஆடுகள் ஒவ்வொன்றாய் வெளியேறின..

“மாசற்ற மரியாளே, மாதவச் செல்வியே! இந்தக் கொடுமைகள் தீர என்ன வழி?” மனப் பாரம் அழுந்த மறுபடி செப மாலையை உருட்டலானார் சாமிகள். மதியம் அருளப்பன் கொண்டு வந்த கஞ்சியைக் கூட அருந்த மனமில்லை அவருக்கு.

தீவிழி விழித்துச் சிவந்து போன ஆதவன் துவண்டு போய் மேற்குப் பக்கம் சாய்ந்து கொண்டு இருந்தான், ஓய்வு எடுக்க. மறுபடி சாமிகள் குடிலில் ஆளரவம். மெல்லக் கண்களைத் திறந்தார். இன்னுமொரு கூட்டம் – ஒட்டிய வயிறும் உலர்ந்த உடலுமாய் நாலைந்து குடியானவர்கள். “மாதாவே, மறுபடி இன்னொரு சோதனையா?” அமரும்படிச் சைகை செய்தார். வந்த கும்பல் மரியாதையாகவே நின்றது. தாழ்த்தப் பட்ட இனத்தின் தலைவர் மெல்லிய குரலில் தொடங்கினார் :

“சாமிங்க எல்லாந் தெரிஞ்சவங்க.. நம்ம ஊரு பெருந்தனக்காரங்க எல்லாரும் சத்திய வேத்த உட்டுட்டுப் பூட்டாங்க.. “

“அதனால நீங்களும் .. ” – சாமிகள் முடிக்கவில்லை.

“ஐயோ சாமி, அப்படி இல்லீங்கோ நீங்க எங்களுக்கு செஞ்சிருக்கிற நன்மைகளுக்கு எங்க தோல செருப்பாச் செஞ்சு ஒங்களுக்கு போடலாமுங்க! எங்க நோவு நொடிக்கு நீங்க மருந்து குடுக்கலியா! எங்க கொளந்த குட்டிங்க நாலு எளுத்து படிக்க முடிஞ்சது ஒங்களாலதானே! அட அத உடுங்க.. எல்லாரும் சமம், அயலவன நேசின்னு சத்திய வேதம்தான சாமி கத்துக் கொடுத்தது! அப்டி இருக்க, ஒங்கள வுட்டுட்டு ஓடிப்போயிருவமா? இதோ மாதா சத்தியமா நாங்க ஒங்கள விட்டுப்போட்டு வேதத்த உட்டுட்டு ஓடிட மாட்டோஞ் சாமி” தைரியநாத சாமிகளின் மன வெப்பத்தை தணிக்கும் மெல்லிய தென்றல்! “நல்லது மேலே சொல்லுங்க” – அமைதியாகக் கூறினார் சாமியார்.

“சாமி, நம்ம வேதக்காரங்க கிட்ட சொல்லி சாக்கிரதையா இருக்கச் சொல்லன்னுமுங்கோ!” – சாமிகள் புருவங்கள் சற்றே வளைந்தன கேள்விக் குறிகளாக.

“தரங்கம் பாடி டேனிசு மிசினரி ஆளுங்க வந்து சுத்தறாங்க.. நம்ப வேதக்காரங்களுக்கு வல போடறாங்க! காசு தாரேன், சாப்பாடு போடறேன், மிசினரி மதத்துக்கு வந்துடுங்கன்னு கமுக்கமா கூப்புடறானுவ. நம்ம சனங்களும் பசி பட்டினிக்குப் பயந்து அவங்க வேதத்துல சேந்துக்க ஒப்புக்குறாங்க.”

“மாதவே, மரியாளே! மறுபடி சோதனை மேல் சோதனை தேவையா?” உள்ளத்தில் மீண்டும் ஒரு முள்.

சத்திய வேதத்தின் மேல் இருந்த தங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தி விட்டு அந்தக் குடியானவர்கள் கிளம்பிப் போனார்கள். சாமியின் கண்கள் மாதாவின் மேல் நிலை குத்தி நின்றன. “இத்தனைச் சோதனைகளுக்கும் முடிவுதான் என்ன? அம்மா, நீ உதவிக்கு வாராயோ?” ஓவிய மாதாவின் புன்னகை பதில் கூறுவதாகத் தெரியவில்லையே!

கலகலவெனக் கோவிலின் மணி ஓசை. திடுக்கிட்டுக் கண் விழித்தார் சாமிகள். கருக்கல் கலையத் தொடங்கி இருந்தது. வழக்கம் போல் கைகள் வேதாகம ஓலைச் சுவடிகளைத் தேடின. காலையில் கண் விழித்ததும் வேதாகமத்தைப் புரட்டிக் கண்ணில் படும் முதல் ஓலைச் சுவடியின் திருவசனத்தைப் படிப்பது அவர் வழக்கம். அன்று அவர் புரட்டிய ஓலையில் பளிச்சென அவர் கண் முன் பளிச்சிட்டது ஒரு வசனம்: “கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்..”அட, மத்தேயு சுவிசேஷம்! “யாரிடம் எதைக் கேட்பது? எங்கே எதனைத் தேடுவது? எப்படி எவ்விடத்தில் போய்த் தட்டுவது?” – புரியவில்லை சாமிகளுக்கு. மாதாவின் ஓவியத்தைப் பார்த்தார். புன்னகையே பதிலாகக் கிடைத்தது. அன்று முழுவதும் அதே நினைவு. பொழுதும் போனது. இரவும் ஆனது.. புதிருக்கு விடை? கிடைக்கவில்லை அவருக்கு.

நள்ளிரவு.. திடீர் எனக் கோடிச் சூரிய ஓளி அந்த அறையில் சூழ்வதை அவர் உணர்ந்தார். கண்கள் மூடி இருந்தாலும் காட்சி தெளிவாகவே இருந்தது. பன்னிரு நட்சத்திரங்கள் திருமுடியை அலங்கரிக்க, பிறை நிலவோ திருவடியில் தவங் கிடக்க மேகங்களே ஆடையாக.. புன்னகை முகத்துடன் அன்னை! கண்கொள்ளாக் காட்சியில் தன்னை மறந்திருக்கிறார். அன்னை திருவாய் மலர்ந்தருளுகிறாள் : “மகனே, வானமும் வையமும் கூட ஒழிந்து போம்! வேத வசனங்கள் என்றைக்குமே பொய்யாகா! உன்னால் குணம் பெற்ற ஒருவர் உனக்குக் கொட்டிக்கொடுக்கத் தயாராக இருக்கிறார் என்பதை மறந்து விட்டாயே! அவரிடம் போய்க் கேள். பிரிந்து போன நம் மக்களைத் தேடிப் போய் இந்த அன்னைக்கு ஆலயம் எழுப்ப உதவச் சொல்லிக் கூட்டி வந்து அனைவரையும் என் அடைக்கலத்தில் விடு. இரட்டிப்பு வரி விதித்த மன்னர் கதவைத் தட்டி நியாயம் கேள்..”

“ஆகட்டும் அம்மா. ” அவள் பாத மலரடிகளைப் பணிந்து கண்ணைத் திறந்தால் வெற்றுக் குடில் சலனமற்றுக் காட்சி அளித்தது! கண்டது எல்லாம் கனவா நனவா? தெரியவில்லையே! ஆனாலும் அந்த அன்னையின் திரு உருவம் அவர் மனத்தில் ஓவியமாய் நிலைத்து விட்டது. அவள் சொற்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

விடுவிடுவென எழுந்தார்; எழுத்தாணியும் ஓலையும் கையுமாக அமர்ந்தார். விடிய விடியப் பல திருமுகங்கள் எழுதி முடித்தார். காலைத் திருப்பலி நிறைவு பெற்றது. உடனே அருளப்பனை அழைத்தார்; இரவு தான் கண்ட காட்சியை அவர் விவரித்த போது, அவன் விழிகள் வியப்பால் மலர்ந்தன!

“ஆம் அருளப்பா!அன்னை சொன்னது உண்மையே! கொட்டிக் கொடுக்க ஒருவன் தயாராக இருக்கிறான். பல வருசங்களுக்கு முன்னால் நடந்தது. நான் ஐரோப்பாவை விட்டு இந்தியா வந்த புதிது. பலருக்கும் இலவச வைத்தியம் செய்து வந்த வேளை. ஊர் பேர் தெரியாத ஒருவன் – தீராத நோயால் அவதிப் பட்டவன், என்னிடம் வந்த சேர்ந்தான். எல்லா வைத்தியர்களும் கைவிட்டு விட்டார்களாம். என்னால் முடிந்த வரை மருந்துகள் கொடுத்தும் குணம் அடைவதாகத் தெரியவில்லை. ஆகவே, மிகவும் நம்பிக்கையோடு மாதாவிடம் அவனை அடைக்கலப் படுத்தினேன்; அவனுக்காக மன்றாடி வந்தேன். மருந்து ஒருபக்கம், மாதாவிடம் மன்றாடல் மறுபக்கம்.. அடடா.. என்ன புதுமை! மெல்ல மெல்ல அவன் நோய்க் கொடுமை தணிந்தது. ஒரு நாள் முழுமையாக மறைந்தே போனது! அடுத்த நாள், அவனைக் காணோம். எப்படித் திடீரென வந்தானோ அது போலவே திடீரென மறைந்து விட்டான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சில நாள்கள் கழிந்தன. திடுதிப்பெனக் குதிரைகளில் சிப்பாய்கள் வந்து இறங்கினார்கள். அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது என்னை அமர வைத்தார்கள்; மாலை மரியாதையோடு எங்கோ அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். “ஏன், எதற்கு?” என்று கேட்டேன். யாரும் பதில் சொல்லவில்லை. அரண்மனையில் அல்லவா பதில் காத்திருந்தது! ஆமாம் அருளப்பா, ஆமாம்!” – சாமிகள் குரலில் ஒரே உணர்ச்சி மயம். கனவில் பேசுவது போலவே தொடர்ந்தார்.

“அரண்மனை வாயிலில் என்னை அரவணைத்து வரவேற்றது வேறு யாரும் இல்லை – ஊர் பேர் தெரியாத அநாதை என எண்ணி எவனுக்கு நான் வைத்தியம் செய்தேனோ – மாதா வசம் அடைக்கலம் ஆக்கினேனோ அதே ஆள்தான் அவன்! சாதாரண ஆள் இல்லை அவன், அருளப்பா! அந்த நாட்டையே, ஆற்காட்டையே ஆளும் நவாப்பாம். தான் குணம் அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டுப் பொன்னும் பொருளும் மணியும் அணியுமாக என் காலடியிலே கொண்டு வந்து கொட்டினான். “துறவிக்கு ஏனப்பா இத்தனைப் பெருஞ் செல்வம்?” என்று ஒரு கையால் எல்லாவற்றையும் ஒதுக்கி மறுத்தேன். அவன் குணம் அடைந்தது மருந்தின் மகிமையால் அல்ல மாதாவின் புதுமையால் என்று எடுத்துச் சொன்னேன். அவன் நம்பவில்லை. நாடு விட்டு நாடு வந்த என் தைரியத்தை, செல்வத்தைக் கால் தூசாக மதிக்கும் என் மன உறுதியைப் பாராட்டிய அந்த ஆற்காட்டு நவாப் வழங்கிய பட்டம்தான் ‘தைரியநாதர்’ என்பது. அது மட்டும் அல்ல, கேள் அருளப்பா. “

சற்றே நிறுத்திய சாமிகள் மேலே தொடர்ந்தார். “இத்தனைச் செல்வமும் உங்களுக்கே உரியது. இன்று நாளை அல்ல, எவ்வளவு காலம் கடந்து வந்து கேட்டாலும் இவை உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்காக் காத்திருக்கும் – இன்ஷா அல்லாஹ்” என்று உறுதி கூறி வழி அனுப்பி வைத்தான். அன்றோடு அவனை மறந்தே போனேன். அதன் பின் எத்தனையோ ஊர்கள், எவ்வளவோ மக்கள், ஏதேதோ பணிகள்! இன்று அந்த வாக்குறுதியை அன்னை நினைவு ஊட்டினாள். அந்தப் பரிசுகளுக்கு உரியவள் அவள் அல்லவா! ஆகவே ஆற்காட்டு நவாப்பிடம் உன்னை அனுப்புகிறேன். இதோ என் முத்திரை பதித்த முடங்கல். அவன் தரும் பொருளை எல்லாம் பத்திரமாகக் கொண்டு வந்து சேர். அவற்றை இந்த மக்களுக்கு வெறுமனே வாரி இறைப்பதில் பயன் இல்லை. அன்னைக்கு ஆலயம் அமைக்கும் புனிதப் பணியில் மக்களை ஈடுபடுத்துவோம். அந்த உழைப்புக்கு ஊதியமாக உணவுப் பொருள்களை வழங்குவோம். அவர்கள் பசியும் தீரும், மாதாவுக்குக் கோவிலும் அமையும்.. ” சாமிகள் கண்களில் கனவுகள் விரிந்தன.

அருளப்பன் ஆற்காட்டுக்குப் புறப்பட்டுப் போன கையோடு வேறு சில சீடர்களைச் சாமிகள் அழைத்தார். “அன்னை அழைக்கிறாள், தனக்கோர் ஆலயம் அமைக்க! அப்பணியில் உழைக்கும் அனைவருக்கும் உணவும் பொருளும் வழங்கப்படும். ஆகவே, திரும்பி வாருங்கள்” என்று அழைக்கும் ஓலைத் திருமுகங்களை அவர்கள் வழியாகப் பல இடங்களுக்கும் அனுப்பி வைத்தார்.

இறுதியாகத் தாமே தஞ்சாவூர் சென்று மராட்டிய மன்னர் அரண்மனைக் கதவைத் தட்டினார். சகல ராஜ மரியாதைகளோடு அவரை வரவேற்றார் மராட்டிய மன்னர். அன்னை தந்த காட்சியையும் அவளுக்கு ஆலயம் எழுப்ப இருப்பதையும் சாமிகள் கூறக் கேட்ட மன்னரின் கண்கள் பனித்தன. “சாமிகளே, பருவ மழை பெய்யவும் பஞ்சம் தீரவும் அந்த மாதாவிடம் மன்றாடுங்கள். ரெட்டிப்பு வரியை ரத்து செய்வது மட்டுமல்ல, மாதா ஆலயம் எழுப்ப இருக்கும் அந்த ஊரையும் இறையிலி தானமாகத் தங்களுக்கே பட்டா செய்து தருகிறோம். இனி, அந்த ஊர் மக்கள் எமக்கு எந்த வரியும் கட்ட வேண்டியது இல்லை.. “மனமார மன்னர் அறிவித்த போது, ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற விவிலிய வசனத்தைக் கண் முன்னே உண்மையாக்கிய மாதாவின் அருளே அருள் என மனம் உருகிப் போனார் சாமிகள்.

பிறகு –

பிரிந்து போனவர்கள் திரும்பி வந்தனர், “தேடுங்கள் கண்டடைவீர்கள்” என்ற வேத வசனத்துக்கு ஏற்ப. மாதா காட்சி தந்த ஓலைக் குடில் கோவிலாக உருவெடுக்கப் பணிகள் தொடங்கின. சாமிகள் பம்பரமாகச் சுற்றினார் ; மக்களை இயக்கினார். காலை முதல் மாலை வரை பல பணிகளில் ஈடுபட்ட சாமிகள், இரவுகளில் தம் புதுக் குடிலில் ஓய்வு எடுப்பதாகத் தெரியவில்லை! விடிய விடிய மினுக், மினுக் என அவர் குடிலில் விளக்கு எரிவதை மக்கள் பார்த்தனர். இது பற்றிச் சாமிகளிடம் சாடை மாடையாகப் பேசுக் கொடுத்தால் ‘நமட்டுச் சிரிப்பே’ பதிலாகக் கிடைத்தது!

ஆறு மாதத்தில் முடிந்து இருக்க வேண்டிய பணிகள் ஓராண்டுக்கும் மேலாகவே நீடித்தன. தண்ணீர்ப் பஞ்சம் ஒரு காரணம். என்றாலும் சாமிகளுக்கும் அதில் பங்கு உண்டு. உழைப்புக்கு ஊதியம் என்ற போர்வையில் எல்லா மக்களுக்கும் உணவு கிடைக்க சாமிகள் கையாண்ட தந்திரம் அது! பஞ்சம் முழுமையாகத் தீரவில்லைதான். இருந்தாலும் அதன் கொடுமை வெகுவாகத் தணிந்து வந்தது. மாலை – வேலைகள் நிறைவு பெற்ற பின், மாதா பக்தி முயற்சிகளைத் தொடங்கித் தொடர்ந்து நடத்தி வந்தார் சாமிகள். பணிகள் ஒரு புறம், பஞ்சம் தீர மாதாவை நோக்கிச் செபங்கள் மறு புறம்.. எனக் காலம் விரைந்து ஓடியது.

ஆலயம், புத்தம் புது மணமகளாகக் கம்பீரமாக உருப்பெற்று நின்றது. ஆலய அர்ச்சிப்புக்கான நாளும் வந்தது. சாமிகளின் அழைப்போலை நாலா புறமும் பறந்தது. ஊர் எங்கும் ஒரே அமர்க்களம். விழா நாள் .. ஆலயத்துள் கோவில் மணிகள் முழங்க நாதஸ்வர இன்னிசை ஒலிக்க .. சாமிகள் பீடத்தில் ஏறி நிற்கிறார். மறு கணம் அமைதி.

“மாதாவின் மைந்தர்களே! அன்னையின் பக்தர்களே!” என்று விளித்துத் தான் கண்ட காட்சி, வேத வசனங்கள் நிறைவேறிய முறை.. எல்லாவற்றையும் விளக்குகிறார். மாதா தேரைச் சுற்றி இருந்த திரைச் சீலை மெல்ல விலக.. “ஆகா, ஆகா! அற்புதம், அற்புதம்!” என்ற குரல்கள் எழும்புகின்றன.

ஆம், சாமிகள் நேரில் கண்ட அன்னை அந்தத் தேரில்! பன்னிரு நட்சத்திரங்கள் திருமுடியை அலங்கரிக்க, பிறை நிலவோ திருவடியில் தவங் கிடக்க , மேகங்களையே ஆடையாக.. அன்னையின் திரு உருவக் கோலத்தைக் கண்டு அனைவரும் மெய்ம்மறக்கின்றனர். இரவுகளில் கண் விழித்த சாமிகளின் கைவண்ணம்! சாமிகள் தொடர்ந்தார் :

“இன்று ஆகஸ்ட் 15 -ஆம் தேதி. அன்னை விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விழாவைக் கத்தோலிக்கத் திருச்சபை கொண்டாடும் நாள். இந்த நல்ல நாளில் அன்னையின் விருப்பத்துக்கு ஏற்ப, நம் அனைவரையும் இந்த ஊரையும் அன்னைக்கே அடைக்கலம் ஆக்குவோம். நமக்கு அடைக்கலம் தரும் இந்த அன்னையை இனி ‘அடைக்கல அன்னை’ என்றே அழைப்போம்.. உடனே, ‘அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்’, அடைக்கலத் தாயே எங்களைக் காப்பாற்றும்’.. என்றெல்லாம் பக்தர்கள் பரவசப்பட்டனர்.

“நம் ஊருக்கு இனிமேல் அடைக்கல அன்னையே காவல். அவள் காவலிலே இருக்கும் நமக்கு இனி எந்தக் குறையும் இராது வராது! மாதாவே காவல் கொண்ட ஊரான நம் ஊருக்கு இனிமேல், காவலூர், திருக்காவலூர் என்பதே பெயராகட்டும்! இந்தப் பஞ்ச காலத்தில் அன்னைக்குச் சூட்டப் பூக்கள் கிடைக்கவில்லை. ஆகவே, என்றுமே வாடாத தமிழ்ப் பாக்களைச் சூட்டுகிறேன். ‘தைரியநாதர்’ என்ற என் பெயரையும் ‘வீரமாமுனிவர் ‘ என மாற்றிக்கொள்கிறேன். இதோ, ‘திருக்காவலூர்க் கலம்பகம்’, இதோ, ‘அன்னை அழுங்கல் அந்தாதி’, இதோ, ‘அடைக்கல நாயகி வெண்கலிப்பா’ , ‘அடைக்கல மாலை’, .. இதோ அன்னை காலடிகளில் புத்தம் புதுப் பூக்களாய் ஓலைச் சுவடிகள்! பகல் தோறும் உழைத்துக் களைத்தாலும் இரவுகளில் உறங்காது சாமிகள் கண் விழித்த காரணம் இப்போதல்லவா தெரிகிறது! மக்கள் வியந்தனர்!

அவர்கள் வியப்பை இன்னும் உச்சிக்குக் கொண்டு போனார் சாமிகள் “இந்த அடைக்கல அன்னை கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்ல, பிற மதத்தவர்க்கும் அடைக்கலம் தருபவள்; அருள் புரிபவள். ஆகவே, காணிக்கையாக மராட்டிய மன்னர் அனுப்பிய பட்டுப் புடவையை அன்னைக்கு உடுத்துவோம். இனிமேல் என்றும் நம் அடைக்கல அன்னை நம் பெண்களைப் போலவே புடவை அணிவாள். ஆற்காட்டு நவாப்பின் பரிசான நவரத்தினப் பதக்க முத்து மாலை அன்னையை அலங்கரிக்கட்டும்! அடைக்கல அன்னையை நோக்கி மன்றாடுவோம்! பஞ்சம் மறையும், எங்கும் வளம் நிறையும்”.

இது வரை இல்லாத புதுமையாக அடைக்கல அன்னைக்குப் புடவை உடுத்துகிறார்கள் ; முத்து மாலை அணிவிக்கிறார்கள். திருத் தேரை ஊர்ப் பெரியவரும் குடியானவத் தலைவரும் மராட்டிய மன்னரின் மந்திரிப் பிரதானியும் ஆற்காட்டு நவாபின் உப தளபதியும் தம் தோளில் தாங்குகின்றனர். தேர்ப் பவனி தொடங்குகிறது.

ஆலயத்துக்கு வெளியே தேர் வரும்போது, “பூரண மரியாளே, பிரியதத்த மாதாவே பெஞ்சாதிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.. “வீரமாமுனிவர் கண்ணீர்க் குரலில் செபமாலை தொடங்கிய தருணம்..

பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது! அன்னையின் முகத்தில் அதே மெல்லிய புன்னகை! சட்டென ஒரு பெரும் மழைத் துளி வீரமாமுனிவரின் தலையில் விழ, மேலே நிமிர்ந்து பார்த்தால்.. கருகருவென மேகங்கள்! பட்பட்டென மழைத்துளிகள் பன்னீர் தெளித்தன !

சாமிகள் கண்களில் கண்ணீர் மழை!

மக்கள் உள்ளங்களில் பக்தி மழை!! தஞ்சை அதன் சுற்றுப்புறங்களில் எல்லாம் நல்ல மழை!

பி கு : ஏலாக்குறிச்சி, திருக்காவலூர் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூர், வீரமாமுனிவர் கட்டிய கோவில், அந்த அடைக்கல அன்னையின் திருஉருவம்.. இன்றும் அங்கே உள்ளன. இயேசுவின் தாயான கன்னி மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விழாவைக் கத்தோலிக்கத் திருச்சபை ஆகஸ்ட் மாதம் 15 -ஆம் நாள் கொண்டாடுகிறது. இதன் தொடக்கம் கி. பி நான்காம் ஆம் நூற்றாண்டு என்பர்.

(காண்க : http://beggarsallreformation.blogspot.in

ஆகஸ்ட் மாதம் 15 –ஆம் நாள், அன்னையின் திருநாளில் இந்தியா விடுதலை அடையவேண்டும் என்பது இறைவன் திருவுளம் போலும்!

படத்திற்கு நன்றி: http://www.stmarysboston.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *