சின்னப்பசங்களும் விஜயவாடாவும்

10

திவாகர்

நாம் எப்படியாவது  ஒரு நாடகத்தை எழுதியே தீரவேண்டுமென தேவா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.

“பின்ன என்னடா.. இதெல்லாம் ஒரு டிராமா.. இதையெல்லாம் பார்த்துவிட்டு கை வேற தட்ட சொல்றாங்க.. முடியாதுடா.  நாம் ஒரு டிராமா போட்டே தீரணும்!”

தேவா அவ்வளவு  கண்டிப்பாகச் சொன்னதற்கு காரணம் இருந்தது. விஜயவாடா ராலி கம்பெனியில் பணிபுரியும்  திருவாளர் சாரி,  அவருக்கு முடிந்த அளவில், ஏதோ சுமாராக  கதை அமைத்து திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலையில் அந்த குறு நாடகத்தை மேடையேற்றினார். ஆனால் சீன் செட்டுகள் இல்லை…. ஸ்கூல் பெஞ்சினால் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தடுக்கி விழாமல் பார்த்து தப தபவென அவரவர்  வரவேண்டியது, தங்களுக்குத் தெரிந்த வசனத்தை பேச வேண்டியது, அதிலும் சிலர் மறந்து போய் ‘பே’ என்று நின்றிருக்கும் போது, சாரி மேடையின் கீழிருந்து ‘போதும் அங்கே நீ நின்றது.. ஓடியா.. ம்.. அடுத்தது.. நெக்ஸ்ட்’ என்பார்.. அப்பாடா, பிழைத்தோம் என்றே அந்த ‘நடிகர்’ மேடையிலிருந்து அசட்டுச் சிரிப்புடன் கீழே வருவார்.. பிறகு இன்னொரு நடிகர்.. இதே கூத்துதான்.. வசனங்கள் கூட அந்தக் கால சூழ்நிலைக்குக் கூட அரதப் பழசு போலத்தான் இருந்தது. “என்ன மாமி, ஆத்துல சௌக்கியமெல்லாம் எப்படி? இப்படியாகப்பட்ட வசனங்கள் (மீதி எதுவும் ஞாபகம் இல்லை) அத்தோடு இல்லாமல் நடுநடுவே ’நாடக நடிகர்களை ஊக்குவிக்க கைதட்டவும்’ என்ற அறிவிப்பு (அப்போதைய தமிழ்ச் சங்கம் (தென்னிந்தியக் கலை மன்றம் என்று பெயர்) மற்றும் திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலை செயலாளரான திரு பாண்டியன் அவர்கள் – ரொம்ப நல்ல மனசுதான்) மைக் மூலம் கூவிக் கொண்டே இருப்பார்..

’ஏதோ கூத்து போல நினைத்துக் கொள்ளேண்டா’ என்று தேவாவை நான் சமாதானப்படுத்தினாலும், அடிக்கடி கையைத் தட்டி ஆதரவு தாருங்கள் என்று ஒவ்வொரு முறை பாண்டியன் மைக்கில் சொல்லும்போதும் அதற்கேற்றாற்போல வந்திருந்த தமிழ் ஜனங்கள் வேகமாக கை தட்டுவதும் அவனுக்கு கோபத்தை வரவழைத்துக் கொண்டே இருந்தது. (இளம் வயசு.. எனக்கே அப்போது 22 தான், என்னை விட சில மாதங்கள் பெரியவன் அவன்)..

’இல்லை.. இனிமே இப்படியெல்லாம் விடக்கூடாது.. நாடகம்னா இப்படி இல்லைன்னு இந்த ஜனங்களுக்குப் புரிய வைக்கணும்.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து எழுதிடுவோம்.. பெரிய சீன் செட்டு எல்லாம் வெச்சிடுவோம்.. வீடு செட்டுன்னா.. வீடு மாதிரி காமிச்சுடுவோம்.. ஆபீஸ்ன்னா அது ஆபீஸ் மாதிரிதான் இருக்கணும்.. இதோ இந்த பெஞ்ச் மேலெல்லாம் ஏறி டிராமா போட முடியாது.. நல்ல ஸ்டேஜ் உள்ள ஆடிட்டோரியத்துலதான்..’

அவன் சொல்லிக் கொண்டே போகும் வேகத்திலேயே நிறுத்தினேன்.. ‘இருடா.. உன் கற்பனைக்கு அளவு வெச்சுக்கப்பா.. நம்ம டிராமா எழுதினா அதை எவன் போடுவான்..”

உடனே நண்பன் மணி முன்வந்தான்.. “ஏன்.. இந்த தமிழ்ச் சங்கம் போடாதா.. குப்பை டிராமாவெல்லாம் போடறாங்க.. நம்ம டிராமாவைப் போடக் கசக்குதோ.. வுட்ருவோமா.. ஒரு கை பார்க்க மாட்டேன்..” என்றவன் இல்லாத தன் முஷ்டியை முறுக்கினான். “டேய்.. நான் சொல்றேன்.. நீங்க எழுதறீங்க.. இவங்க போடறாங்க.. அவ்வளவுதான்..”

பொதுவாக மணி சொன்னால் எங்களிடையே மறு பேச்சோ, அல்லது மறுப்போ வராது. மணியைப் பற்றி விவரமாகவே முன்பே இன்னொரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.. இருந்தாலும் இங்கேயும் சொல்லி விடுகிறேன். ’ஆந்திரப் பத்திரிகா’ வில் மணி வேலை பார்க்கிறான். கொஞ்சம் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்தாலும், அவன் மேல் நிறைய பேருக்கு ஒரு சொல்ல வொண்ணாத பயம் இருக்கும். அப்படித்தான் பேசவும் செய்வான். அதுவும் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பாடசாலை செயலாளருமான பாண்டியனுக்கும் இவனுக்கும் ஆகவே ஆகாது. இவன் என்ன சொன்னாலும் எதிர்ப்பவர் பாண்டியன்.. அதனால் எனக்கு மனதில் சந்தேகம்தான் இவன் எப்படி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எங்கள் மேடை நாடகத்தைப் போடுவான்..

ஆனால் மணி நிஜமாகவே ஜகத்ஜாலக் கில்லாடிதான். பிடித்தால் புளியங் கொம்பைப் பிடிக்க வேண்டுமெனச் சொல்வார்களே, அதைப் போல தமிழ்ச் சங்கத்தில் அப்போதைக்குப் பலம் வாய்ந்த சுந்தரம் நாடாரைப் பிடித்து விட்டான். அவரும் ’வெகுளியாக’ நாங்கள் மிகப் பெரிய நாடகம், அதுவும் உண்மையான நாடகம் போடப் போகிறோம் என்றதும் அதிசயித்து விட்டார்.. “அட.. ’சின்னப்பசங்க’.. எவ்வளோ ஆர்வமா இருக்கீங்க.. நீங்க போடுங்க.. எங்க வேணும்னாலும் போடுங்க.. நம்ம தமிழ்ச் சங்கத்து மூலமா ஏற்பாடு செய்யறோம். நான் பாண்டியனைக் கூப்பிட்டு சொல்லிடறேன்..” என்று பச்சைக் கொடி காட்டி விட்டார். சுந்தரம் நாடார் ஒரு வணிகர்.. நாடார்கள் நிறைந்த விஜயவாடாவில் எல்லோரின் நன் மதிப்பைப் பெற்றவர். குறிப்பாக அந்தக் கால கட்டத்தில் தமிழ்ப் பள்ளி கூட அவர் சொல் கேட்டுதான் செயல்பட்டு வந்தது.

நாடகம் போடுவதற்கான செலவுகளையெல்லாம், ரிகர்சல் உட்பட  அவர்கள் தலையில் தான் முதலிலேயே கட்டினோம்.. எல்லாவற்றுக்கும் பாண்டியன் மறுப்பு சொல்லிக் கொண்டே வந்தாலும் சுந்தரம் நாடாரின் மிகப் பெரிய ஆதரவுக்கு முன் எடுபடவில்லைதான். எனக்கு அடிப்படையில் பாண்டியன் மீது எந்த வருத்தமும் இல்லைதான். அவர் சந்தேகம் எதிர்ப்பும் ஒருவகையில் நியாயம் கூட. ”எல்லோருமே சின்னப் பசங்களா, விளையாட்டுப் பிள்ளைங்களா இருக்காங்களே.” என்று அவர் அடிக்கடி தம் கவலையை சொல்லி வருவார். ஆனால் மணி மிக ஸ்ட்ராங்காக அதரவு கொடுத்துக் கொண்டே இருந்ததால் பாண்டியனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை. விஜயவாடா ரயில்வே இன்ஸ்டிட்யூட் பெரிய ஆடிட்டோரியம் கட்டி எல்லோருக்கும் வசதி செய்து கொடுத்ததால், அந்த இன்ஸ்டிட்யூட்டையே நாடகத்துக்காக பேசச் சொல்லி விட்டோம். ஒவ்வொரு மாதமும் இங்கே ஒரு ஞாயிறன்று பதினாறு எம் எம் ரீல் தமிழ் சினிமா காட்டி (ஓட்டி) தமிழ் மகாஜனங்களின் ’கலை’யார்வத்தைப் போக்கி வந்த தமிழ்ச் சங்கம் தனது அடுத்த மாதாந்திர நிகழ்ச்சியாக தமிழ் நாடகம் என தங்கள் அங்கத்தினர்களுக்கு அறிவிப்பும் கொடுத்து விட்டது,

சரி, பிறக்கப் போகும் குழந்தையை பள்ளிக்கூடம் வரை சேர்ப்பதற்கான திட்டங்களெல்லாம் முடிந்தாலும் யார் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள்.. குழந்தை எப்போது பிறக்கும்? அப்போதைய நிலை அதுதான். நாடக ஏற்பாடு முடிந்ததே தவிர நாடகத்துக்கான கதை, நடிகர்கள்,  யார் நாயகன், யார் நாயகி. – இவை எல்லாம் கூட சரி, ஏதோ அப்படி இப்படி இறங்கி விட்டாலும் ’சின்னப் பசங்க’ செய்யும் நாடகத்தை நம் ஜனங்கள் ரசிப்பார்களா.. டென்ஷன் டென்ஷன் தான். ஏனெனில் நாங்கள் எங்களை அறியாமலே ஒரு தவறு செய்து விட்டோம். அது நாங்கள் ஏன் இப்படி நாடகம் போட வேண்டும் என்ற காரணத்தைப் பகிரங்கமாகச் சொன்னது தான் (ஏற்கனவே போட்ட நாடகத்தை சற்றுப் பெரிதாகக் குறை வேறு சொல்லி விட்டோம்). இதனால் அந்த நாடகத்தை ஏற்பாடு செய்திருந்த பல பெரிசுகள், அவர்களுக்குத் துணையாக நின்ற பாண்டியன், இவர்களெல்லாம் கசப்புடன் மனவாட்டமுற்றனர் என்பது தெரிந்தாலும், அந்த வயசும், துடிப்பும் எங்களுக்கு அவர்கள் மீது சற்று அலட்சியத்தைச் சற்றுக் கூடவே கொடுத்ததுதான். அத்தோடு நல்லதொரு நாடகத்தைத் தந்து விட்டால் இனி அவர்களும் நம் வழிக்கு வந்தே ஆக வேண்டும் என்ற அசட்டு நம்பிக்கையும் ஏராளமாகவே இருந்தது கூட.

விஜயவாடாவில்  எம் நண்பர்கள் வட்டம் மிகப்  பெரியது. ஓரிருவரைத் தவிர எல்லோருமே சமவயதுக்கார இளைஞர்கள். இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் சிரமமே தவிர நாடகத்தில் நடிப்பதற்கு ஆட்கள் அதிகம் உண்டு என்ற நம்பிக்கை எப்போதுமே இருந்தது.

நானும் தேவாவும் முனைப்பாக இயங்கினோம்.. சில நீண்ட இரவுகள் கதைக்காக செலவழிக்கப்பட்டன. ஒரு வழியாக கதை தயாராகியது. பெயரும் சூட்டி விட்டோம் ”சாமியாருக்குக் கல்யாணம்” என்பதுதான் நாடகத்துக்குப் பெயர். எங்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் காண்பிக்க வேண்டாமோ.. தலைப்பே காண்ட்ராஸ்ட் ஆக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் அப்போதே இருந்தது.

கதை (?) – ஒரு இளைஞன்.. அவன் மனம் துறவு மனப்பான்மையை அதிகம் விரும்புகிறது. அவன் அம்மா கவலைப்படுகிறாள். எப்படி இந்த சாமியார் பையனைத் திருத்தி இகலோகத்தில் சம்சார சாகரத்தில் தள்ளுவது என்பதுதான்.. சாமியாருக்கு ஒரு நண்பன், இந்த அம்மாவுக்கும் ஒரு அண்ணா, அதாவது பையனுக்கு மாமா, இந்த நண்பனும், மாமாவும் திட்டம் போட்டு அவனை வழிக்குக் கொண்டு வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு சங்கடம் வந்து விடுகிறது. கழுவும் நீரில் நழுவி ஓடும் மீனைப் போன்ற சாமியாரை விடாமல் துரத்தி கடைசியில் கல்யாண மேடை ஏற்ற வைப்பதுதான் கதை. ஒரே ஒரு பெண் வேஷம் தான். நண்பன் பாபுவின் தங்கை எங்களுக்கெல்லாம் ரொம்பவே செல்லம் என்பதால் அவளும் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டாள். நான் தான் வயதான மாமா (பசங்களிடம் நடிகன் என்பவன் எந்த மாதிரி வேஷமானாலும் நடிக்க சித்தமாக இருக்க வேண்டுமென்ற அறிவுரை கொடுத்து மாட்டிக் கொண்டதால் ஏற்பட்ட சோதனை, இன்னொன்று எல்லோருமே வயதான பாத்திரம் என்பதால் ஒதுங்கிப் போனது கூட), தேவா அதிருஷ்டக்காரன், அவன்தான் அந்த நண்பன் பாத்திரம்.

இன்னொரு உண்மை என்னவென்றால் எங்களால் நண்பர்கள் வட்டத்திலிருந்து தாண்டிப் போய் பெண் வேஷத்துக்கு ஆள் தேட முடியவில்லை. இந்தப் பழைய பெரிசுகள் எங்கள் மீது கொண்ட மனவாட்டத்தால், அவர்கள் வீட்டில் இருந்த பெண்கள் யாரும் எங்களோடு ஒத்துழைக்க முடியாத சூழ்நிலை.. இன்னொரு விஷயம் எல்லோருமே ’சின்னப் பசங்க’ என்பதால் ஒரு பயம் கூட கூடவே இருந்திருக்கலாமோ என்னவோ.. விஜயவாடா தமிழர்கள் இந்த விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் கூட..

ஆனால் இந்தக் கஷ்டம் பின்னாட்களில் எனக்கு விசாகப்பட்டினத்தில் எந்நாளும் இருந்ததில்லை. அங்கு போடப்பட்ட என்னுடைய நாடகங்களில் நான்கு பெண் வேஷங்கள் கூட உண்டு.. (எல்லோரும் நல்லவரே என்ற பெயர் பின்னால் ஏற்பட்டதாலோ என்னவோ).

நாடக நடிகர்கள்  சரியாக அமைந்தாலும் சாமியார் வேஷத்துக்கு தோதான ஆள்  அமையவில்லை.. ரொம்பவே சிரமப்பட்டோம்.. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் முதல் வரியே பேசத் திணறினார்கள். இதற்கும் காரணம் உண்டு.. சாமியார் என்று சொல்லிவிட்டோம், அவருக்கு இகலோக வாழ்க்கையிலும் சம்சார சுகத்திலும் வெறுப்பு என்று வேறு சொல்லிவிட்டோம். இப்படிப் பட்டவர் ஆர்டினரி தமிழ் பேசினால் தகுமா.. சுத்தத் தமிழ்தான், சுந்தரத் தமிழ்தான் என்று சொல்லி, அவர் பேசுவதற்கான வசனங்கள் யாவும் நல்ல தமிழ் நடையில் அமைத்தாயிற்று. ஆனால் எங்கள் போதாத காலம் இந்த ’சின்னப் பசங்க’ நல்ல தமிழில் பேச மிகவும் சிரமப் படுகிறார்கள்..

இத்தனைக்கும் ஏறத்தாழ ஆறு  பேர் கதாநாயனாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களும் சிரமம் பட்டு, எங்களுக்கும் சிரமம் கொடுத்துக் கொண்டிருந்தனர். முயன்றாலும்  முடியாமல் போனதுதான் மிச்சம். அப்போதுதான் திருவாளர் கோவிந்தராஜன் என்கிற கோவி எங்களிடம் மாட்டினார். நல்ல தமிழில் சாதாரணமாகவே உரையாடும் வழக்கத்தைக் கொண்டவர். தெய்வமே இப்படிப்பட்டவரை சமயம் பார்த்து எங்களிடம் அனுப்பி வைத்தது என்றுதான் மனதில் எங்களுக்குத் தோன்றியது. அருமையாக ரிகர்சல் சமயத்தில் நடித்தார்.

(தெய்வமே  சமயம் பார்த்து இவரை  அனுப்பினாலும் கோவிக்கு  தெய்வ நம்பிக்கை அறவே கிடையாது. பெரியாரின் சீரிய ’பக்தர்’. இப்போதும் சென்னையில் கறுப்பு யூனிஃபார்மில் ’கோரா’ எனும் பெயரில் பெரிய அளவில் திராவிடக் கழகத்துக்கு தன்னால் முடிந்த அளவில் தொண்டு (கடவுள் இல்லை கடவுள் இல்லை என்றுதான்) செய்துகொண்டுதான் இருக்கிறார், ஆனால் இவருக்கு பட்டை பட்டையாக விபூதி பூசி நடிக்க வைத்தது அவருக்கு நன்றாகவே நினைவு இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.).

நாடக நாள். ’திவா-தேவா’ வின் ’சாமியாருக்குக் கல்யாணம்’ மேடையேறப் போகும் சுப தினம். ஏனோ தமிழ்ச் சங்கத்தின் முந்தின நாடகம் நினைவுக்கு வந்தது. இதுவரை அருமையாகச் செய்தவர்கள் மேடையில் வசனம் மறந்து போய் ‘பே பே’ என்று முழித்துக் கொண்டு நின்றால் என்ன செய்வது?.. எனக்கு வயிற்றைக் கலக்கியது.. காலையில் கூடியிருந்த நடிக நண்பர்கள் அனைவரிடமும் மீட்டிங் போட்டு சொன்னேன்.. ‘டேய் சின்னப் பசங்க’ன்னு எல்லோரும் நம்மைப் பேசிக்கிறாங்க.. கொஞ்சம் மானத்தைக் காப்பாத்துங்கப்பா.. வசனத்தைக் கோட்டை விட்றாதீங்க.. ஹால் பெரிசு. ஜனங்களும் நிறைய பேர் வருவாங்க,, ஒண்ணு பண்ணுங்க.. நீங்கள்லாம் பெரிய புத்திசாலிங்க.. உங்க நாடகத்தைப் பாக்கற அத்தனை பேரும் அடி முட்டாளுங்க’ன்னு நினைச்சுங்குங்கடா.. அப்போ பயம் போயிடும்..’

”அப்படிங்கறே.. அப்படியே நினைச்சுட்டாப் போச்சு.. பின்னே நான் நடிக்கறதையெல்லாம் பாக்கறவங்க அடி முட்டாள்தானே” என ஒரு நண்பன் ஜோக்கடித்து அதற்கு அவனே சிரித்துக் கொண்டதும் வேறு விஷயம்தான்.

நாடகம் ஆரம்பமாயிற்று.. டி.வி. இல்லாத காலம்.. ’கலைத்தாகத்தால்’ காய்ந்து போயிருந்த தமிழ் ஜனங்களுக்கு இந்த மாதிரி முழுநீள நாடகம் எல்லாம் பிற மாநிலங்களில் கிடைப்பது அரிது என்பதால் நல்ல கும்பல்.

முதல் காட்சி போனதே தெரியவில்லை.. (நான் இரண்டாவது காட்சியிலிருந்து தான் வருவேன் என்பதால் என்னால் முதல் காட்சியை நன்றாக ரசிக்கவே முடிந்தது). சின்னப் பசங்க ரொம்ப ஜோராப் பண்ணாங்க.. எல்லோரும் நன்றாகவே செய்கிறார்கள்.  நான் கடைசியில் கொடுத்த ’அட்வைஸ்’ வேலை செய்கிறது போலும் என்ற நினைப்பில் அடுத்த காட்சியில் நான் உள்ளே நுழைகிறேன்.. நுழைந்ததுமே சபையைப் பார்த்தால் முதல் வரிசையில் ஓரத்தில் மேடை விளக்கின் ஒளி வெள்ளத்தில் நல்ல செக்கச் சிவந்த கலரில் பாவாடை தாவணியோடு நன்றாகக் கண்களை விரித்துக் கொண்டு யாரோ ஒரு பெண் ஆ’வென வாயைப் பிளந்து ரசித்துக் கொண்டிருப்பதுதான் கண்ணில் பட்டது.

ஆரம்பிக்க வேண்டிய வசனமே மறந்து போய் விட்டது. ஒரு நொடிதான்.. ஆனால் சமாளித்துக் கொண்டு வசனம் பேசியதும் மற்ற பிற காட்சிகளில் அந்தப் பக்கம் பார்வையைத் தவிர்த்ததும் வேறு வேறு விசயங்கள். (அறிவுரையெல்லாம் ஊருக்குதான்)

நாடகம் மிகவும்  ரசிக்கப்பட்டதும், அடுத்த நாளில் இண்டியன் எக்ஸ்பிரஸிலும், தெலுங்கு பேப்பர்களிலும் வந்ததும், பழைய பெரிசுகள் கொஞ்சம் ஏமாற்றத்தோடு எங்களைக் கை குலுக்கி வாழ்த்தியதும், அதற்குப் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் அவ்வப்போது பேசப்பட்டதும் சொல்லிக் கொண்டே போகலாம் தான். ஒன்றே ஒன்று.. அதற்குப் பிறகு எங்களை யாருமே ‘சின்னப் பசங்க’ என்று பார்க்கவில்லை என்று மட்டும் சொல்லலாம். எனக்கு மட்டும் ஒரு வருத்தம்.. இந்த நாடகத்துக்கு ஆதி காரணமாக இருந்த திருவாளர் சாரி மட்டும் அன்று வரவில்லையே என்று தான்

10 thoughts on “சின்னப்பசங்களும் விஜயவாடாவும்

  1. மேடையில் நிற்கும் பெரியவர் நீங்கள் தானா:)
    நல்ல் முயற்சி.
    இளமை வேகம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.

    வாழ்வில் பதின்ம வயதுகளிலும் இருபதுகளிலும் இந்த டிராமா வெறி
    எல்லொரையும் பிடித்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்..

    மீண்டும் அந்தக் காலத்துக்குப் போன உணர்வு. மிக நன்றி.
    ஓ.அந்தச் சிவப்புத் தாவணிப் பெண் யாரென்று கண்டு பிடித்தீர்களா.

    1. நன்றிம்மா!
      நாடகம் போடுவது என்பது எல்லா வயதிலும் தாக்கத்துக்கு ஆளாவது உண்டு.

  2. ரசித்தேன் 🙂

    வல்லிம்மாவின் கேள்விதான் எனக்கும் 🙂 சிவப்பு தாவணி என்ன ஆச்சு?

    1. நன்றி கவிநயா!

      சிவப்பு தாவணி யாரோ?!!

      என் நண்பன் தேவா இதைப் பற்றி தனி மடலில் எழுதும்போது இதற்கு பதில் எழுதினான். அவனை வல்லமையில் பதிவு செய்யக் கேட்டிருக்கிறேன்.

  3. ஆஹா….

    எனக்கும் அந்தப் பழைய நாட்கள் நினைவிற்கு வருகின்றது. 1987 ல் விஜயவாடாவிற்கருகே இருக்கும் நூஜ்விட் என்ற ஊரின் ஆந்திரப் பல்கலையின் முதுநிலை விரிவாக்க மையத்தில் பெளதிகம் பயின்ற அந்த நாட்களில் நீண்ட நாடகங்கள் 3 போட்ட அனுபவம் உண்டு.

    1,ஓன் மோர் டாக்டர்…. (வசனமே இல்லாத நாடகம்…. கமலின் பேசும்படம் வெளிவருவதற்கு முன்பே என் நாடகம் முன் மாதிரி… :):):)…. பின்னாளில் இந்த நாடகமே சென்னைத் தொலைக்காட்சியில் 1995ல் அரங்கேற்றம். )

    2. தொங்கா….

    3 ஆவது நாடகம் தற்சமயன் நினைவினில் இல்லை. பெயர் மறந்து போனது.

    மூன்று நாடகங்களும் சூப்பர் ஹிட். நல்ல நகைச்சுவை நாடகங்கள். அந்தப் பல்கலைக்கழகமே மிரண்டு போனது. அத்தனையும் நான் தமிழில் சொல்லச் சொல்ல என் சக மாணவ நண்பர்கள் தெலுங்கில் எழுதி மனப்பாடம் செய்து தெலுங்கில் அரங்கேற்றம் செய்தோம். அன்றையப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அன்றைய ஆந்திரக் கல்வி அமைச்சர், இன்னும் மற்ற அமைச்சர்கள் என அனைவரும் பாராட்டினர்.

    டாக்டர் சோமசேகர் ராவ் என்ற புரபசர் நல்ல கோர்டினேட் செய்தார்.

    சங்கரன், நான், பத்மநாபன் என மூன்றே மூன்று தமிழ் மாணவர்கள்.

    அந்த நாட்களெல்லாம் அது ஒரு கனாக்காலம்.

    விஜயவாடாவில் அந்த திருவள்ளுவர் பாடசாலையை பலமுறைக் கடந்து சென்றிருக்கின்றோம். கனகதுர்கா அம்மம் கோவில், அங்கிருக்கும் ஹோட்டல் கற்பகம் (அன்றையக் காலகட்டங்களில் எங்களுக்கு தமிழ் சோறு சாப்பிட எண்ணம் ஏற்பட்டால் அங்குதான் செல்வோம்.) எல்லாம் ஒரு கனவாய் இப்பொழுது என் மனக் கண்ணில் விரிகின்றது.

    உங்களின் அனுபவங்கள் அருமை திவா.

  4. ரிஷி!
    உங்கள் பதிவுக்கு நன்றி முதலில்
    விஜயவாடாவிலிருந்து 30 கி.மீ தூரமுள்ள நூஜிவிடு அறிவோம். நூஜிவிடு ரசாலு மாம்பழங்கள் மிக அதிகமாக வாங்கப்படும் வகைகளில் ஒன்று. மிகவும் ருசியானவை. அந்த நூஜிவிடு ரசாலு போலவே உங்கள் அனுபவங்களும் மிகவும் ருசியாக இருக்கின்றன. தமிழன் எங்கு போனாலும் தம் முத்திரையைப் பதிக்காமல் திரும்புவதில்லை போலும்.

  5. ஹா..ஹா ..அருமையாக ,இருந்தது.

    அந்த ,நாடகத்தில் ,,அந்த பெண் யார் என்பது ,எனக்குதெரியும், நான் அப்போதே ,பத்து நாள் அலைந்து தேடி கண்டு பிடித்தேன் ,அனால் என்னை மன்னித்து விடு ,,அவள் விலாசம் உனக்கு சொல்லாமல் போனதற்குக் காரணம் உண்டு.
    ,

    என்னதான் தாயும் பிள்ளையா இருந்தாலும் வாயும் வயுரும் வேறுதான் ,காரணம்,நீ சிகப்பு ரோசா .நான் கருப்பு நிலா , அவள் உன்னை நாடகத்தில் நீ எந்த வேஷம் போட்டாயோ ,அந்த வயதில் தான் நீ இருப்பாய் என்று அவள் நினைத்து கொண்டு இருந்தது மற்றொரு காரணம் , உன்னை ,நேரில் பார்த்து இருந்தால் ,சத்தியமாக உன்னை ,,”லவ்” பண்ணாட்டியும்,,’அட் ,லீஸ்ட் ,உன்னிடம்,,பேசியாவது இருப்பாள்,ஜெஸ்ட் ஒரு பிளாஷ் பாக்,,உன் அண்ணன் …கல்யாணத்தில் ,எங்களை பார்த்து ,,உன் மைத்துனி ”’டேய் ”திவா…யாருடா ,,அதுங்க ,,வெஸ்ட் இண்டீஸ் ,,ட்ரூப்ல இருந்து தப்பிச்சு வந்த போலே இருக்கு ,,,அவள் கூட இருந்த பெண்கள் எலோரும் சிரித்து கலாய்க்க’..அதற்கு பழி தான் ,,அவள் விலாசம் சொல்லாமல் போனதற்கு மற்றொரு கரணம் ,,,,அப்படி இருந்தாலும் பரவா இல்லை !!! பிறகு நம் ரூமில் எங்கள் எல்லோரிடமும் அதையே போட்டு ,அறுத்து இருப்பாய்,- அந்த பெண்ணுக்காக,அடுத்து ஒரு நாடகம் போட என்னை தூண்டி இருப்பாய் – நானும் எதற்கு மீண்டும் நாடகம் போடச் சொல்கிறான் என்பதே தெரியாமல் பல நாள் தூக்கம் இல்லாமல் கதை எழுதி, ஐயோ, இப்ப நினைத்து பார்த்தாலும் பயங்கரமா இருந்தது

    சாரி,,என்னை மன்னித்துவிடு,,,,நண்பா !உனக்குத்தான் ,,துரோகம் செய்து விட்டேன் ,,அவளுக்கு ,,இரண்டு பெண்கள்,,அதில் ஒன்றை ,,உன் மகனுக்கு ,,முடித்துவிட்டால் ,,”கொன்றால் பாவம்,”தின்றால் ‘போகும் அல்லவா,,

    தேவா ,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *