என்றேனும்………..
என்றேனும்…….
வார்த்தைச் சங்கிலிகளால்
இழுத்துக் கொண்டோடுகிறது…
காலம்.
முன் வருபவரை
பின் தள்ளியுமாய் …
பின் வருபவரை
முன்னிழுத்துமாய்
தன்போக்கில் போகிறது.
திசைகளைப் பற்றிய
கவலையேதுமில்லை அதற்கு.
யார் நம்மை
பின் தொடர்வார் என்கிற
எதிர்பார்ப்புமில்லை.
அதன் போக்கும்
நோக்கும் பற்றிய
எவர் கேள்விக்கும்
நின்று பதில் சொல்ல
அதற்கேது நேரம்?
ஆயினுமென்ன…
விடாது காலத்தைப்
பின்தொடர்கின்றேன் ..
என்றேனும் ஓர்நாள்
காலம் எனைப்
பின்தொடரும் எனும்
உலராத நம்பிக்கையோடு……….
– மு. முருகேஷ்