சுதந்திரதின வாழ்த்துக்கள்!
-சக்தி சக்திதாசன்
ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !
அடைந்து விட்டோம் சுதந்திரம் என்றே
ஆனந்தக் கூத்தாடினான் பாரதிப் பாட்டன்
அன்றொருநாள் அன்னைத் தமிழில்!
ஆயிற்று ஆண்டுகள் பலவும்
அடைந்தோமா அவன்தன் கனவுகளை?
நிறைந்தன செல்வம் சிலரிடம்!
வழிந்தது கண்ணீர் பலரிடம்!
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகைகள்
அதுகூடப் பெருமைதான் பாரதத்திற்கு
இருப்பினும் அருகிருக்கும் குடிசைகளை
இன்பமிகு வீடுகளாக்கும் காலம் வரட்டும்!
கலைகள் கலாசாரங்கள் பலதையும்
காலம் காலமாய்க் காத்திருக்கும் பாரதம்
பல்வேறு மொழிகள் பல்வேறு மதங்கள்
பாசமாய் வாழ்ந்திடுவதும் இப்பாரிய பூமியில்!
அன்னை பூமியின் அனைத்து நாடுகளும்
அளப்பரிய ஜனநாயகம் என வியந்திடும்
வித்தியாசங்கள் நிறைந்த மாநில மலர்களால்
வியப்பானதோர் பாரதம் என்றோர் மாலை!
அடிமை விலங்கொடித்து இந்தியா தன்னை
அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து
அண்ணல் காந்தியின் அஹிம்சை வழியில்
அடைந்த சுதந்திரப் பொன்னாள் இதுவே!
புதியதோர் உலகம் செய்வோம் அங்கே
புதுமைகள் பலவும் செய்வோம் என்றே
பூத்துக் குலுங்கும் பொருளாதார மரத்தில்
பறிக்கும் கனிகள் அனைவரையும் உயர்த்திடட்டும்!
இன்றைய இந்தியா உலகில் பெரும் பலம்
இயற்றிடும் நாளும் தொலைவினில் இல்லை
இதயம் நிறைந்த மகிழ்வோடு நானும்
இனிமை நிறைந்த வாழ்த்துக்கள் தூவி
இந்தியச் சுதந்திரத் திருநாள் தன்னில்
இனிய சகோதர சகோதரியர் அனைவருக்கும்
இன்று போலல்லாது இன்னும் மகிழ்வுடன்
வாழ்க ! வாழ்க ! என்றே வாழ்த்துகிறேன்!