விடுதலை
-கவிஞர் காவிரிமைந்தன்
அடிமையின் விலங்குகள் ஒடித்து
‘விடுதலை’ அடைந்ததோர் தேசம்!
அகிம்சையின் வழியினில் நின்று
அண்ணல் காந்தியின் யுத்தம்!!
இந்திய மண்ணின் பெருமை
சரித்திரம் தினசரிப் பேசும்!
புண்ணிய பூமியிது என்றே
புத்தனும் பிறந்தான் போலும்!
இனத்தால் மதத்தால் வேறுபட்டு
இந்தியர் என்பதில் ஒன்றுபடும்
ஜனத்தொகை நூற்று இருபதுகோடி
ஜனநாயகம் தழைத்திடும் புனிதபூமி!
மலர்கள் பலவும் மாலையாக
மார்பில் சூடும் விதம்போலக்
கலைகள் பன்முக தரிசனங்கள்
பாரதத் தாயின் மடியிலன்றோ?
வடக்கே இமயம் தெற்கே குமரி
எல்லைகள் விரிந்த நாடு!
வளங்கள் பலவும் நி்றைந்து வழியும்
வல்லமை இதற்கிணை கிடையாது!
வளர்ச்சிப் பணிகள் அடுக்கடுக்காக
வளரும் பாரதம் பாரு!
வந்தே மாதரம் வந்தே மாதரம்
மந்திரச் சொல்லைக் கூறு!
சுயநலவாதிகள் சூழ்ச்சியாலே
சுரண்டப்படுவது நடக்க…
மற்றுமொரு விடுதலைப் போருக்கு
மக்கள்படை அணிவகுக்க…
நீதியும் நேர்மையும் நெறிகளும் அறமும்
நிறைந்திட வழிகள் வகுப்போம்!
யாவரும் ஓர் குலம் யாரும் ஓரினம்
என்றே மனங்கள் இணைவோம்!
விடுதலை என்கிற சொல்லின் அர்த்தம்
முடிந்தது என்று கருதாதீர்!
முட்டிமுளைக்கும் விதைநெல்லுக்கு
மண்ணைப் பிளக்கும் நாளே விடுதலை!
மூடிக்கிடக்கும் விழிகளுக்கு
இமைகள் திறந்தால் விடுதலை!
இருளில் தவிக்கும் உலகத்திற்குக்
கதிரவன் வருகை விடுதலை!
பசியில் வாடும் ஏழையர்க்குப்
பஞ்சம் தொலைந்தால் விடுதலை!
அணையில் பதுங்கும் வெள்ளத்திற்குத்
திறக்கும் நாளே விடுதலை!
கூண்டில் அடைத்த பறவைக்குக்
கதவுகள் அகன்றால் விடுதலை!
பள்ளியில் படிக்கும் மாணவர்க்குத்
தேர்வினில் வெற்றி விடுதலை!
எண்ணிய வண்ணம் காரியங்கள்
எடுத்து முடித்தால் விடுதலை!
தொடரும் ஆயிரம் பிரச்சனைகள்
தொலைந்து போனால் விடுதலை!
யாழினில் தூங்கும் இசையதற்கு
மீட்டும் விரலால் விடுதலை!
ஏங்கித் தவிக்கும் இதயத்திற்குத்
தாங்கும் துணையால் விடுதலை!
நோயினில் வாடிடும் உயிருக்கு – அது
தீர்கின்ற நாளே விடுதலை!
அடிமையாய் வாழும் வாழ்க்கையில்
விடுதலை ஒன்றே விடுதலை!!