ஜாதிகள் இல்லையடி பாப்பா!
— ஷைலஜா.
ஏறத்தாழ100 வருடங்களுக்கு முன்பு, அந்தணர் வீட்டில் பிறந்த பெண்மணி ஒருவர் தீண்டாமைக்கெதிராகப் புயலாகப் புறப்பட்டதுடன், உறவுக்காரர்களின் அவதூறுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு ஹரிஜனப் பெண்ணிற்குச் சமையல் கற்றுக்கொடுத்துத் தன் சமையல்காரராகவும் வைத்துக் கொண்டார் என்றால் அவரின் துணிச்சல்தான் எத்தனை வியப்பு கொண்டது!
இந்திய சுதந்திரத்தில் மிக முக்கியப் பங்காற்றிய தமிழகத்துப் பெண்மணிகளுள் ஒருவரான ருக்மணி லட்சுமிபதிதான் அந்தத் துணிச்சல்காரப் பெண்மணி!
1892ல் சீனிவாசராவ், சூடாமணி ஆகிய பிராமண வைணவத் தம்பதியர்க்கு மகளாய்ப் பிறந்த ருக்மிணி அதிர்ஷ்டவசமாக அந்தக் காலப் பால பருவ மணத்திலிருந்து தப்பி, பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதனால் உறவினர்கள் இவர்கள் வீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள். மகா தவறென்று ஏச்சும் பேச்சும் வீட்டில் கிளம்பின. ஆனால் இவைதான், பின்னாளில், ருக்மிணி பல புரட்சிகள் செய்யக் காரணமாய் இருந்தன.
ருக்மிணி தனக்கு அமைத்துக்கொண்ட மணவாழ்க்கை வித்தியாசமானது. அவருக்கு உடல்நலமில்லாது இருந்த சமயம் வைத்தியம் பார்க்க வந்த டாக்டர் லட்சுமிபதி என்பவர், ருக்மிணிக்கும், அவர் குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கமானார். டாக்டர் லட்சுமிபதிக்கு முதல் மனைவி இறந்து விட்டிருந்தார். ஆனால் மூன்று குழந்தைகள் இருந்தனர். அவரது முற்போக்கான சிந்தனைகளில் கவரப்பட்டு, ருக்மிணி அந்த டாக்டரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்தபோது, ருக்மிணியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் டாக்டர் பிராமணராக இருப்பினும், வேறு பிரிவைச் சேர்ந்தவர். ஆனால் ருக்மிணி தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். இடையில் திடீரெனத் தந்தை இறந்துவிட, ருக்மிணியின் அண்ணன் தங்கையின் பிடிவாதத்திற்கு இறங்கி வரவில்லை எனினும், அவர்களின் சித்தப்பா உதவியுடன், 1911ல் தன் தாய் சூடாமணியின் மறைமுக ஆதரவில், தான் விரும்பியவரையே கைப்பிடித்தார் ருக்மிணி.
இந்தத் திருமணம்தான் ருக்மிணியை ஒரு விடுதலைப் போராட்ட வீராங்கனையாக்குவதற்கு வித்திட்டது எனலாம்.
இயல்பிலேயே முற்போக்கு சிந்தனையும், விடுதலைபோராட்டத் தலைவர்கள்பால் ஈடுபாடும் கொண்டிருந்த டாக்டர் லட்சுமிபதி, மனைவியை கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைத்ததுடன், போராட்டங்களில் பங்கெடுக்கவும் துணைபுரிந்தார்.
டாக்டர் லட்சுமிபதி ஒரு தேசியவாதியாகத் திகழ்ந்தார். அவர் இல்லத்துக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்த தேசபக்தர்களின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்ட ருக்மிணியும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார். கணவரும், மனைவியுமாகக் குழந்தைகளையும் தேசப்பற்றுள்ளவர்களாகவே வளர்த்தனர். கதராடைகளையே அவர்களுக்கு அணிவித்தனர். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் சிலர் இறந்துபோக, இரண்டு பெண்களும், ஒரு மகனும் மட்டுமே எஞ்சியிருந்தனர் (புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியின் மனைவியான டாக்டர் இந்திரா ராமமூர்த்தி ருக்மிணியின் மகள்களில் ஒருவர்).
குழந்தைகள் வளர்ந்து பள்ளி செல்லத் துவங்கியதும், தன் நேரத்தை சமூகப் பணிகளுக்கு அர்ப்பணித்தார் ருக்மிணி. கட்டுப் பெட்டித் தனமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கண்மூடித்தனமான மரபுகளை விட்டு வெளியில் வந்தார். மார்க்ரேட் சகோதரிகள், ராதாபாய் சுப்புராயன், கமலாபாய் சட்டோபத்தியாயா போன்ற அக்காலத்தைய சமூக சேவகர்களுடன் இணைந்து அமைத்த பாரத மகளிர் மகா மண்டலியின் சென்னைக் கிளையின் செயலராக ருக்மிணி தேர்வு பெற்றார்.
சென்னை இளைஞர் சங்கத்தின் தலைவராகவும் ஆனார். சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து இவருக்குத் தெரியவந்த சில முஸ்லிம் பெண்களின் துயர் களையவும் பாடுபட்டார்.
பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் மேல் ருக்மிணி தீவிர கவனம் செலுத்தினார். குடிகாரக் கணவன்மார்களால் மனைவியர் பாதிக்கப் படுவது கண்டு வெகுண்டெழுந்தவர், மதுவிலக்கு கொள்கைகளைத் தீவிரமாக ஆதரித்தார்
- மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால் பெண்கள் சந்திது வந்த தேவதாசி முறையைக் கடுமையாக எதிர்த்தார். பால்ய மணங்களையும் கண்டித்துப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்
- பாரீசில் நடந்த அனைத்துலகப் பெண்களின் வாக்குரிமை சங்கத்தின் கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு இவர் பேசிய பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாட்டுக்காக உழைக்க முடிவெடுத்த ருக்மிணி அக் கட்சியின் மகளிர் பிரிவு செயலரானார்.
- 1930ல் ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்புச் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த போது, குழந்தைக்கு உடல்நலமில்லை என்று கணவரிடம் இருந்து தகவல் வந்தும்கூட போராட்டம் முடியும்வரை திரும்பமாட்டேன் என்று கூறி, பிறகு மற்றவர்களின் வற்புறுத்தலால் சென்று, குழந்தையைப் பார்த்துவிட்டுப் பின் அதைக் கணவரே நன்கு கவனித்துக் கொள்வார் எனத் தெரிந்து மீண்டும் வேதாரண்யம் நோக்கித் திரும்பி வந்தவர் ருக்மிணி. இப்போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக சிறைத்தண்டனை பெற்றார்.
உப்புச் சத்தியாக் கிரகத்தில் சிறைக்குச் சென்ற முதல் பெண்மணி இவரே. பல துணிச்சலான செயல்களுக்கு ருக்மிணி உதாரணமாகத் திகழ்ந்தார். தேச விடுதலைப் பணிகளோடு, பல சமூகப் பணிகளையும் செய்துகொண்டேயிருந்தார். அன்னியத்த் துணி மறுப்புப் பிரச்சாரம், கள்ளுக்கடை மறியல் போன்றவற்றையும் தொடர்ந்து கொண்டேயிருந்தார். அன்னியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்காகச் சிறைத்தண்டனை பெற்றதோடு, அபராதமும் கட்டினார்.
1933ல் காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது, அவருடைய பேச்சுக்களுக்கு முன்னின்று ஏற்பாடு செய்தவர்களில் இவரும் ஒருவர். ஹரிஜன நிதிக்காகக் காந்தியடிகளிடம் ருக்மிணி தன் நகைகளை அளித்தபோது, அவரின் சிறுவயது மகள் இந்திரா அருகில் நின்றிருக்கிறார். காந்தியடிகள் இந்திராவைப் பார்த்து, “எனக்கு உன் அம்மா இவ்வளவு நகைகளைக் கொடுத்துவிட்டார். நீ என்ன தரப்போகிறாய் நம் நாட்டு விடுதலைக்கு?” எனக் கேட்டபோது அம்மாவின் எந்த யோசனையையும் எதிர்பாராது, தன் கையில் கிடந்த தங்க வளையல்களைக் கழட்டிக் காந்தியடிகளிடம் கொடுத்திருக்கிறார் ருக்மிணியின் சிறுவயது மகள் இந்திரா. தாய் எட்டடி. குட்டி பதினாறடி!
பெண்கள் அவ்வளவாக சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்காத அக்காலத்தில் ருக்மிணியின் சேவைகளைப் போற்றும் வண்ணம், பல பதவிகள் தேடி வந்தன.
1934ல் சென்னை மகாஜன சபைக்குத் துணைத்தலைவரானது, 1936ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்றது, 1937ல் சென்னை மாநகராட்சி உறுப்பினரானது, அதே ஆண்டில் சென்னை சட்ட சபை மேலவைக்குத் துணை சபாநாயகரானது முதலியவை அதற்குச் சான்றுகள். 1938ல் ஜப்பானுக்குச் சென்ற அமைதிக்குழுவில் ருக்மிணியும் இருந்தார்.
1940லும் தனிநபர் சத்தியாக்கிரகப் போராளியாக இவர் கைதானார். 1946ல் அமைந்த சென்னைராஜதானியின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சரானார். அப்போது அவர் செய்த வேலைகள் இந்தியா முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்தன. இந்திய அரசுப்பணிகளில் இந்தியர்தான் ஈடுபடவேண்டும் என்ற முடிவை காங்கிரஸின் கொள்கையாக்கி, அப்போது சர்ஜன் – ஜெனரலாக இருந்த வெள்ளையரை நீக்கிவிட்டு அவரது இடத்தில் இந்தியரை நியமித்தார். அனைத்திந்தியாவுக்கும் சென்னையே இந்த விஷயத்தில் முன்னோடியானது.
காந்தியடிகள் இந்தியா வந்தது 1915ல்தான். பெண்கள் விடுதலைப் போராட்டத்திற்கு வர ஆர்வம் காட்டாத 1918லேயே நாட்டுப் பணிகளின்பால் நாட்டம் கொண்டு உழைக்க ஆரம்பித்த ருக்மிணி அவர்கள் தமிழகம் விடுதலைக்குத் தந்த மகத்தான போராளி ஆவார்.
முன்பு, சென்னை ராஜதானி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுக்கையில் ராகுகாலம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது, ” ராகுகாலமாவது, கேதுகாலமாவது, நம் நாட்டைச் சனியனே பிடித்திருக்கிறதே! அதை நீக்கப் பாடுபடுவோம்” என்று சொல்லி அதற்காகவே தன்னை அர்ப்பணித்து சரித்திரம் படைத்துப் பின் 1951ல் இவ்வுலக வாழ்வை நீத்த ருக்மிணி லட்சுமிபதி அவர்களைசுதந்திர தின நாளில் நினைத்துக் கொள்வோம்.
ஜெய்ஹிந்த்!