முதல் குத்துவிளக்கு எரிந்தது
–விசாலம்.
மல்லஸ் ராஜா தேசாய் வேதனையுடன் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருந்தார். அவரது மனைவி ராணி சென்னம்மா குதிரையை வேகமாக ஓட்டியபடி அரண்மணைக்கு வந்துசேர்ந்தாள். தன் கணவர் முகம் மிகவும் வருத்தமாக இருந்ததையும் கண்டாள். முழு அரண்மணையே மௌனத்திலும் வேதனையிலும் மூழ்கியிருந்தது.
“ஏன் எல்லோரும் இத்தனை சோகத்தில் மூழ்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
இதைக்கேட்டவுடனேயே அவளது பணிப்பெண் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.. “ராணி மா ..உங்கள் அன்பு மகன் மரித்துவிட்டான். ராஜ்ஜியத்தின் வருங்கால இளவரசன் இந்த உலகை விட்டே போய் விட்டான். “
இதைக்கேட்ட ராணியின் தலையில் ஒரு பேரிடி விழுந்தது.. கண்கள் இருண்டன. ஆனாலும் தன்னை சுதாரித்துக்கொண்டாள்..சாதாரணமாகத் தூங்குவது போல் கிடந்த மகன் அருகில் சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
“ஏன் கண்ணா? எங்களையெல்லாம் விட்டு விட்டுப் போய் விட்டாய்? அத்தனை என்ன அவசரம்? இந்த நாட்டைக்காக்க உன்னையல்லவா நம்பியிருந்தேன். என் நாட்டு மக்களுக்கு நான் இப்போது என்ன சொல்வேன் ? எனக்குப்பிறகு உன்னை சிம்மாசனத்தில் ஏற்றி உன் வீரத்தையும், உன் நாட்டை ஆளும் திறமையும் பார்க்க ஆசைப்பட்டேனே! இப்படி ஏமாற்றி விட்டுப்போய் விட்டாயே?” என்று கதறினாள். என்னதான் ராணி ஆனாலும் அவளும் ஒரு தாய் தானே!
எல்லா காரியங்களும் முடிவடைந்தன. இப்போது தன் ராஜ்ஜியத்தைக்காக்க உடனே ஒருவனை ஸ்வீகாரம் செய்துக்கொண்டு தனது புத்திரனாக ஆக்க வேண்டும். யோசனை செய்வதற்கு நேரமில்லை. ஆகையால் உடனேயே ‘சிவலிங்கப்பா ‘என்ற சிறுவனை தத்து எடுத்துக்கொண்டாள். ஆனால் அவளது போதாத காலமோ என்னமோ, அப்போது வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி இதற்கு யமனாக அமைந்தது. ஏதாவது ராஜ்ஜியத்தில் வம்சம் தழைக்க மக்கட் செல்வங்கள் இல்லை என்றால் அந்த ராஜ்ஜியத்தை கிழக்கு இந்திய கம்பெனியாக வந்த ஆங்கில அரசு தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள ஆரம்பித்தது. இது எழுத்துவடிவம் எடுத்தது 1848ல் தான் என்றாலும் அதனது விதை ஆரம்பத்திலேயே விதைக்கப்பட்டது. இதை நியதியாக ஆக்கினவர் பின்னால் வந்த லார்டு டல்லௌஸி (1848 லிருந்து 1856 வரை) இதில் ஒரு ராஜ்ஜியத்தில் வம்சம் வளர குழந்தைகள் இல்லையென்றாலும், இறந்துவிட்டாலும் அந்த ராஜ்ஜியம் கிழக்கிந்தியக் கமபெனிக்குச் சேர்ந்துவிடும் என்று தெளிவாக சட்டமாக்கப்பட்டு அதன்படி செயலாற்ற தொடங்கியது . ஆனால் 1824லேயே கழுகுக்கு மூக்கில் வியர்தது போல் ராணி ஆண்டு வந்த கிட்டூரைப் பிடுங்கிக்கொள்ள ஆங்கில அரசு ரெடியாக இருந்தது. இது குறித்து ஒரு செய்தி தாங்கிய கடிதத்தை எடுத்துக்கொண்டு ஒரு சேவகன் ராணியிடம் வந்து சேர்ந்தான். தன்னிடம் இருந்த செய்தி ஓலையை கொடுத்தான்.
“மகாராணி அம்மா, இந்தக்கடிதத்தைப் படித்துப்பார்த்து செய்யவேண்டியதை உடனே செய்யும்படி உங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது”
ராணி பொறுமையாகப்படித்தாள். “அதெல்லாம் முடியாது… என் ராஜ்ஜியத்தை ஒருவருக்கும் கொடுக்க நான் தயாராக இல்லை. என்னை நம்பியிருக்கும் மக்களை நான் காப்பாற்ற வேண்டும். நான் தத்தெடுத்துக்கொண்ட மகன் எனக்கு இருக்கிறான். அவன் தான் வருங்கால இளவரசன். இதுவரையில் நான் கப்பமும் கட்டினதில்லை. இந்தச்செய்தியை நீ அவரிடம் போய் சொல் ” என்றாள்.
ஆனால் ஆங்கிலேயர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ராஜ்ஜியத்தைக்கொடுக்கவில்லையென்றால் போர் நடக்கும் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டனர். ராணி கவர்னரிடமும் இந்தப்பிரச்சனையை எடுத்துச்சென்றாள். அப்போது இருந்த லார்ட் எலிபின்ஸ்டன் மறுத்துவிட்டார். தவிர அவளிடமிருந்து சொத்து, நகை எல்லாம் பறித்துக்கொள்ளப்பட்டது. அந்தக்காலத்திலேயே அது சுமார் பதினைந்து லட்சம் இருக்கும் என்றால் இந்தக்காலத்தில் பல கோடிகளாக இருக்க வேண்டும் !
இத்தனையும் போதாமல் ராஜ்ஜியத்தையும் பறிக்க போர் தொடுத்தனர். இப்போதுதான் தென் இந்தியாவில் சுதந்திர போரின் முதல் குத்துவிளக்கு இந்தப்பெண்மணியால் ஏற்றப்பட்டது. சாதாரணமாக முதன் முதலாக இந்தியாவில் சுதந்திரப்போரில் பங்கு பெற்ற வீராங்கனை யார் என்று கேட்டால்
ஜான்ஸி ராணி லட்சுமி பாய் என்ற பதிலோ, ராணி அஹல்யாபாய் என்ற பதிலோ வரும் ஆனால் இவர்கள் வருவதற்கு பல வருடங்கள் முன்னாலேயே கிட்டூரை ஆண்டு வந்த ராணி சென்னம்மா போர் முழக்கம் செய்தாள். தன் நாட்டைக் காப்பாற்ற தேவியிடம் வேண்டினாள். பாரதமாதாவின் முன் மண்டியிட்டு சுதந்திர தீபம் ஏற்றினாள்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்தாள். இவளுடன் போர் புரிய இருநூறு சிப்பாய்களும், நான்கு பெரிய பீரங்கிகளும் மதராஸிலிருந்து வரவழைக்கப்பட்டனர். ஆனால் போரில் ராணி சென்னம்மா ஆங்கிலேயரை விரட்டி அடித்தாள். வாள் வீச்சு என்ன! வில் அம்பு என்ன! என்று எல்லோரையும் சுழல அடித்தாள். கலெக்டர் செயின்ட் ஜான் தாக்கரே பாலப்பா என்ற போர் தலைவரால் கொல்லப்பட்டார். சர் வால்டர் எலியட் என்பவரும், மிஸ்டர் ஸ்டிவென்சனும் பிடிபட்டனர். ராணி சென்னம்மாவுக்கு கருணை உள்ளம், எனவே பிடிப்பட்டவர்களை மன்னித்து இரு பக்கமும் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு செய்தனர். சாப்ளின் என்பவர் இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் பசுத் தோல் போர்த்திய புலியாக அவர் இருந்தார் என்பதை ராணி உணரவில்லை.
திடீரென்று இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். இதை ராணி எதிர்ப்பார்க்கவில்லை. இந்த தடவையும் ராணி மிக வீரமாக தாக்கி தாமஸ் முன்றோ வின் மருமகனை கொன்றாள். ஆனால் எதிரிகளின் படைப்பலம் அதிகமாக இருந்ததால் அவள் பிடிப்பட்டாள். ஆங்கிலேயர்கள் அவளை பைதாங்கல் கோட்டையில் சிறை வத்தனர். சிறையிலும் ராணி கீதை போன்ற பல ஆன்மீக புத்தகங்களைப் படித்தவண்ணம் இருந்தாள். தினமும் தேவியின் பூஜையும் செய்துவந்தாள். 1829ல் பாரத மாதாவுக்கு ஒரு ஜெய் போட்டபடி இந்த உலகை விட்டு மறைந்தாள். ராணிக்கு உதவிய சங்கோலி ராயண்ணா என்பவர் தப்பி ஓடி சிவாஜி போல் கொரில்லா சண்டையில் ஈடுபட்டார். ஆனால் அவரும் பிடிப்பட்டு தூக்கிலிடப்பட்டார். தத்து எடுக்கப்பட்ட சிவலிங்கப்பாவையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. இது போல் ஈஸ்ட் இன்டியன் கம்பெனி பிடுங்கிக்கொண்ட இடங்கள் கண்ணனூர், குடகு, கோழிக்கோடு, சூரத், நாக்பூர், ஜெய்பூர், உதய்ப்பூர், ஜான்ஸி , ஔத் என்பனப் போன்ற பல இடங்கள்.
இன்றும் ராணி சென்னம்மாவுக்கு கிட்டூர் உற்சவம் என்ற பெயரில் அக்டோபர் மாதம் 22ந்தேதியிலிருந்து 24 ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. லாவணி என்ற மராத்திய புகழ் நடனம் ராணி சென்னம்மாவின் சரித்திரத்தைக்கொண்டு ஆடப்படுகிறது. இவளைக்குறித்த பல பாடல்கள் நாட்டுப்பாடலாகவும் நடனப்பாடலாகவும் பாடப்பட்டு வருகின்றன. இவளை மரியாதை செய்ய ” கிட்டூர் சைனிக் ஸ்கூல் ” என்ற கல்விக்கூடமும் உருவானது.
பல ஆண்டுகள் கடந்தபின் இந்திய அரசு விழித்துக்கொண்டது. ராணி சென்னம்மாவைக் கௌரவப்படுத்த நினைத்தது. இந்திய வரலாற்றிலே முதல் பெண்மணியாக திருமதி பிரதிபா பாட்டீல் குடியரசு தலைவர் பதவியில் அமர்ந்தார். 11 செப்டம்பர் 2007ல் முதன்முதலாக சுதந்திரப்போரில் நுழைந்து வீர தீரத்துடன் போராடிய ராணி சென்னம்மாவுக்கு முதல் பெண் குடியரசு தலைவர் ஸ்ரீமதி பிரதிபா பாட்டில் ஒரு அழகிய சிலையை திறந்து வைத்தார். அப்போது இருந்த பிரதம மந்திரி திரு மன்மோஹன் சிங், பாரதீய ஜனதா பார்ட்டியின் மூத்த தலைவர் திரு எல் கே அத்வானி, கரனாடகா மந்திரி எச் டி குமாரசுவாமி போன்ற தலைவர்கள் விழாவைச் சிறப்பித்தனர். ராணி சென்னம்மாவின் சிலையை வடித்தவர் சில்பி விஜய் கௌர்.
மிகவும் தத்ரூபமாக உயிருடன் பேசுவது போல் வடித்துக்கொடுத்திருக்கிறார். இதை அரசாங்கம் அன்பளிப்பாக கொடுத்தது என நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. இந்த அழகுச் சிலையை ‘கிட்டூர் ராணி சென்னம்மா மெமோரியல் கமிட்டி’ வழங்கியது நல்ல வேளையாக நடத்திக்கொடுக்கவாவது மந்திரிகள் வந்தனரே அதுவரை சந்தோஷம் தான். பின்னர் பெங்களூரிலும் ராணி சென்னம்மாவுக்கு ஒரு சிலை வடிக்கப்பட்டுள்ளது.
ராணியுடைய சமாதி பைதாங்கல் தாலுக்காவில் உள்ளது. ஆனால் ஒரு சின்ன தோட்டம் அதைச்சுற்றி அமைத்திருந்தாலும் அது தற்போது இருக்கும் நிலைமை அந்தோ பரிதாபம். ஒரே குப்பை, துர்நாற்றம், அசுத்தம் என்று பார்ப்பவர்களை அழ வைக்கிறது . தேச பக்தி எங்கே மறைந்து போனது?
தேசத்திற்காக தங்கள் உயிரையே விட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நாம் செய்யும் கைமாறு தான் என்ன? நாம் அதில் பங்கு பெறாவிட்டாலும் பங்கு பெற்றவர்களையாவது தகுந்த மரியாதை செலுத்தி நம் உள்ளத்தில் நினைவு கொள்ள வேண்டாமா? வருங்கால குழந்தைகளுக்கு தேசபக்தி வளர இவர்களின் சரித்திரங்களை கதையாக எடுத்துகூறி அவர்கள் நெஞ்சிலும் தேச பக்தியின் வித்தை விதைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ! இது நம் கடமையும் கூட . பார்க்கலாம் பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்வோம். நல்லதே நடக்கட்டும்
சுதந்திர நாள் இனிய வாழ்த்துகள்