வேண்டும் விடுதலை!
-முனைவர் இராம. இராமமூர்த்தி
விடுதலை பெற்றனம்; வெள்ளைய ரகன்றனர்
இந்திய ரனைவரும் இன்பக் கனவினில்
மூழ்கித் திளைத்தனர்; துன்பம் அகலும்;
பாலுந் தேனும் ஆறாய்ப் பெருகும்;
இனிஇந் நாட்டில் அடிமைகள் தோன்றார்;
பசியும் பணியும் பிறந்தே போகும்
என்ற எண்ணம் எங்கும் திகழ்ந்தது!
ஆட்சி யாளர்கள் ஆலைகள் கண்டனர்;
ஆற்றில் அணைகள் பெருகத் தோன்றின;
பெருந்தொழில் பெருக முனைப்புக் காட்டினர்;
கல்விக் கூடங்கள் பெருகின; பெருகின;
சிற்றூ ரெல்லாம் நகர்மய மாயின;
அறிவியற் புரட்சியால் நுகர்பொருட் பெருக்கம்
நிலத்தினும் வானினும் பெருகி நின்றது;
ஊக வாணிகப் பெருக்கத் தாலே
பொருள்களின் விலையோ வானைத் தொட்டது;
செல்வ ரேபெருஞ் செல்வ ராயினர்;
கைத்தொழில் நெசவும் கழனிவே ளாண்மையும்
மெல்ல மெல்ல அழியத் தொடங்கின;
விளைநில மெல்லாம் வளமனை யாயின;
மாநிலப் பகையால் ஆறும் வறண்டது;
சிற்றூர் மக்கள் பெருநகர் நோக்கினர்
தொ(ல்)லைக் காட்சியும் கணினி வரவும்
தாய்மொழி சிதையப் பெருந்துணை புரிந்தன;
பொருட்பே ராசையால் தாயும் தமிழும்
காப்பா ரின்றிக் காப்பகம் நோக்கின!
இனியும் இந்நிலை தொடரு மாயின்
தமிழும் தமிழ்நா கரிகமும் விரைவில்
மாண்டே போகும் வையகம் தூற்ற!
அதனால்,
வாய்மை வள்ளல் காந்தி யடிகள்
கண்டநன் னெறியை வழாமல் போற்றுவம்!
எளிய வாழ்வு; பொதுநலம் பேணல்;
தாய்மொழிக் கல்வி யதனைப் போற்றல்;
கைத்தொழில் செய்தல்; இயற்கைவே ளாண்மை
இவற்றை யிரண்டு கண்களாய்க் காத்தல்;
நலமே செய்யும் நல்லாட்சி அமைய
ஊழ லற்ற சமூகம் காண
அண்ணல் காட்டிய அமைதி வழியில்
நாளும் மாற்றம் விளைந்திட வேண்டிக்
காண்போம் அறவழிப் புரட்சி ஒன்றை;
பெறுவோம் புதிய விடுதலை தனையே!