இந்திய தேசிய இயக்கத்தின் கொடை
ரஞ்சனி நாராயணன்
நமது சுதந்திரப் போராட்டத்தை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இந்தப் போராட்டம் வெறும் சுதந்திரம் கிடைக்க வேண்டும்; அந்நியர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக மட்டும் நடத்தப்பட்ட போராட்டம் இல்லை. சுதந்திரத்திற்காக போராடிய அதேவேளையில் சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற வரைபடமும் இந்தக் காலத்தில் வரையப்பட்டது; இப்போது நாம் காணும் சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு செயலும் இந்தப் போராட்டத்தின் போது உருவாகிய இந்திய தேசிய இயக்கத்தினால் வழி நடத்தப்பட்டது. சுதந்திரம் கிடைத்தபின் இந்தியா சந்தித்த சவால்கள் என்னென்ன, தலைவர்களின் முன்னே எழுந்த கேள்விகள் என்னென்ன இவற்றையெல்லாம் இந்திய மக்களும், இந்தியத் தலைவர்களும் எப்படி எதிர்கொண்டனர் என்பதைப் பற்றிய கட்டுரை இது.
தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு சலில் மிஸ்ரா எழுதிய ‘Legacy of the Struggle’ என்னும் கட்டுரையின் மொழியாக்கம் இது. இந்தக் கட்டுரை டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் 10.8.2014 அன்று வெளியானது. சுதந்திரப் போராட்டம் பற்றியும், இன்றைய இந்தியாவின் நிலை பற்றியும் புதுவிதக் கோணத்தில் இந்தக்கட்டுரை பேசுகிறது. சமீபத்தில் படித்த கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரையை வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
——————————————————————————————————————————————-
இந்திய தேசிய இயக்கம் மூன்று வகையில் சுதந்திர இந்தியாவுடன் தொடர்பு உடையது. முதலில் நவீன இந்தியா எப்படி அமையவேண்டும் என்ற வரைபடம் இந்த இயக்கத்தின் கருவில் உதித்ததுதான். இரண்டாவதாக இந்திய சமுதாயத்தில் ஒரு ஆழமான, மரபுவழி தடத்தை இந்த இயக்கம் விட்டுச் சென்றது. மூன்றாவதாக இந்த இயக்கத்தின் வழி நடைபெற்ற போராட்டங்களுக்கும், சுதந்திர இந்தியாவின் கையாளப்பட்ட அரசியல் பொருளாதார நெறிகளுக்கும் இடையே வியக்கத்தக்க ஒற்றுமைகள் உண்டு. இவைமட்டுமல்லாமல் இந்த இயக்கத்திற்கு ஒரு உலகப்பின்னணியும் உண்டு. இவை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்கு ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது.
19ஆம் நூற்றாண்டின் முடிவில் ஏகாதிபத்தியம் என்பது நன்றாக வேரூன்றி இருந்தது. சில ஐரோப்பிய நாடுகளின் ஆத்திகம் நிலைபெற்றிருந்தது. இந்த நிலை இப்படியே நீடிக்கும்; இதுவே இயற்கையானது என்றும் சில நாடுகள் நம்பத்தொடங்கின. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சக்தி வாய்ந்த இயக்கங்கள் பிறந்து ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் நிலவி வந்த இந்த ஏகாதிபத்திய முறைக்கு சவால் விடுத்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1945 – 1960 ஆண்டுகளின் நடுவே சுமார் 120 நாடுகள் வெளிநாட்டினரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன.
இப்படி விடுதலை பெற்ற நாடுகளின் முன் சில கேள்விகள் எழுந்தன: விடுதலை மற்றும் நாட்டின் வளம் இவை இரண்டும் இந்த நாடுகளின் குறிக்கோள் ஆக இருந்த நேரத்தில் அடிமைத்தளை நீங்கிய முன்னேற்றம் என்பது சாத்தியமா? சுதந்திரத்துடன் கூடிய வளமை என்பது எப்போது கிடைக்கும்? என்ற கேள்விகள் எழுந்தன. இவற்றை அடைய பல தடைகள் இருந்தன. ஏகாதிபத்தியம் என்பது ஒரு தடையே ஆனாலும் அது ஒன்று மட்டுமே தடையாக இல்லை. தொழில்துறை முன்னேற்றம் என்பது இந்த ஏகாதிபத்தியத்தினால் தள்ளிக் கொண்டே போயிற்று. சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கிய பின்னும், அரசியல் குழப்பங்கள், நவீன கருத்துக்களைக் கொண்ட நிறுவனங்கள் இல்லாமை, பொருளாதார உள்கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்படுவது கடினமாகவும் கைகெட்டாமலும் போயின. உலகப் போருக்கு பின் உலகின் வடக்கு பாகங்கள் சுதந்திரமாகவும், வளமாகவும், தெற்கு பாகங்கள் சுதந்திரம், செல்வச் செழுமை என்ற இரண்டிலும் பின்தங்கியும் இருந்தன. இந்த சுதந்திரம், செல்வச் செழுமை இரண்டுமே ஐரோப்பிய நாடுகளின் சொத்து என்ற எண்ணம் கூட நிலவி வந்தது இந்த காலகட்டத்தில்.
சுதந்திர இந்தியா இந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தீவிரமாக முயன்று வந்தது. இந்தியத் தலைவர்கள் சுதந்திரம் செல்வச் செழுமை இரண்டையுமே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு நாட்டை முன்னேற்ற விரும்பியதால் இரண்டின் முன்னேற்றமும் மிகவும் மெதுவாகவும், சரிசமமான முன்னேற்றம் இல்லாமலும், அங்கங்கே முன்னேற்றங்கள் என்ற நிலையிலும் இருந்தன. பிரமாதமான முன்னேற்றம் என்று நாம் மார்தட்டிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒட்டுமொத்த முன்னேற்றம் என்பது நாம் வெட்கப்பட்டும் வகையில் நிச்சயம் இல்லை.
இந்திய மக்களின் ஆயுட்காலம் சுதந்திரத்திற்கு முன் 32 வருடங்கள். கற்றவர்களின் சதவிகிதம் 14%. உணவுப் பற்றாக்குறை மிகவும் அதிகம். பட்டினிச் சாவுகள் அதிசயமல்ல. இன்று சூழ்நிலை மிகவும் மாறியிருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இந்த முன்னேற்றங்களை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்டமைப்பில் பெற்றிருக்கிறோம் என்பது பெருமைக்குரியது.
இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது வெள்ளையர்களை வெளியேற்றுவது என்பதுடன் நிற்கவில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக நவீன இந்தியாவின் கட்டுமானப் பணிக்கான அஸ்திவாரம்தான் இந்தப் போராட்டம். நவீன இந்தியாவை உருவாக்குவதில் ஒரு பகுதி தான் சுதந்திரப் போராட்டம். சுதந்திர இந்தியாவில் ஏற்படப்போகும் மிக முக்கிய முன்னேற்றங்களுக்கு இந்திய தேசிய இயக்கம் ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்திய தேசிய இயக்கத்தின் நிலைபாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 1947 க்குப் பிறகு நிகழ்ந்த அரசியல் பொருளாதார முன்னேற்றங்களை அறிய முடியாது. சுதந்திர இந்தியாவின் பிரஜைகளுக்கு இந்திய தேசிய இயக்கம் தனது விலையுயர்ந்த சொத்தாக பல உயர்ந்த எண்ணங்களையும், நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும், விழைவுகளையும் விட்டுச் சென்றுள்ளது. இவையெல்லாம் நமது அரசியல் சாசனத்தில் நெறிமுறைப்படுத்தப் பட்டுள்ளன. நமது அரசியல் சாசனம் இந்திய தேசிய இயக்கத்தின் தயாரிப்புதான்.
நிர்வாக இயந்திரம் என்பது இங்கிலாந்தின் காலனித்துவ அடிப்படையில் அமைந்திருந்தாலும் சுதந்திர இந்தியாவின் சிந்தனைப் போக்கு முழுவதும் இந்திய தேசிய இயக்கத்தாலேயே உருப்பெற்றிருக்கிறது. இந்திய மக்களின் பொதுவான நம்பிக்கைகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் ஒரு இந்தியா உருவானது இந்த இயக்கத்தின் விளைவுதான். இந்திய தேசத்தின் பிரதிநிதியாக மட்டுமில்லாமல் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதும் இந்த இயக்கத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருந்தது. ஏனெனில் சில ஆங்கில அறிஞர்களும், இனவரைவியலாளர்களும் (ethnographers) இந்திய தேசியம் என்பதை உருவாக்குவது மிகவும் கடினம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இந்தியாவின் பரப்பளவு, மதம், மொழி, கலாச்சாரம் இவைகளால் நிலவும் வேற்றுமைகள் காரணமாக ஒருங்கிணைந்த இந்தியா என்பது தூரத்துப் பச்சை; உண்மையில் இத்தனை பன்முகத்தன்மையுடன் கூடிய தேசத்து மக்கள் தம்மை ஒரு தேசத்தவர் என்று அடையாளம் காட்டிக் கொள்வது நடைமுறை சாத்தியமில்லை என்றனர். ஆனால் தேசிய தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி இதை வலுவாக மறுத்தார். ‘இந்திய நாட்டின் மக்கள் இப்போது தங்களுக்கான ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களது வேற்றுமைகள் இந்த ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கும் பணிக்கு இடையூறு விளைவிக்காது’ என்றார். காந்தி சொன்னார்: ‘இந்தியா வேற்றுமைகள் நிறைந்த பெரிய, மிகப்பெரிய நாடு. ஒவ்வொரு மதமும், கலாச்சாரமும், மொழியும் ஒன்றுக்கொன்று இணையாக, ஒன்று அடுத்ததற்கு உதவுவதாக இருக்கும். எதிராக செயல்படாது. இந்தநிலை உருவாக பல வருடங்கள் ஆகலாம். ஒருநாள் இந்நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் நான் இறக்க விரும்புகிறேன்’ என்றார். ஜவஹர்லால் நேரு இதனையே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று விவரித்தார். இந்த ‘வேற்றுமைகள் எங்களது பலவீனம் அல்ல; எங்கள் பலம்’ என்றார் அவர். வேற்றுமைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த இந்தியாவாக இந்நாடு இருக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர் சுதந்திர இந்தியாவின் தலைவர்கள்.
தொழில் முன்னேற்றம் என்பது நமது நாட்டை வளமாக்கும் என்றாலும் இந்த மாறுதலுக்காக நாம் கொடுக்கும் விலையும் அதிகம்தான். மக்கள் வேறிடங்களுக்குக் குடிபெயர்தல், இருப்பிடங்கள் தொழிற்சாலைகளாக மாறுவது இவையெல்லாம் ஒரு சமூகத்தைப் பெரிதும் பாதிக்கும். இந்தப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதுவும் இந்த தேசிய உணர்வுதான்.
ஜனநாயக அரசியல் என்பதுவும் நமக்கு தேசிய இயக்கம் கொடுத்த கொடைதான். ஜனநாயகமாக்குதல் என்பது மக்கள் பெருமளவில் அரசியலில் பங்கு கொள்வது மற்றும் குடியுரிமைகளை ஊக்குவிப்பது என்ற இரு பிரிவுகளைக் கொண்டது. உலக சரித்திரத்திலேயே மிகப்பெரிய இயக்கம் இந்திய தேசிய இயக்கம் தான் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. முதலில் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பங்கு கொண்டாலும், போகப்போக எளிய மக்களும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டனர். பெண்கள் அதிக அளவில் பங்கு கொண்ட இயக்கமும் இதுவே. சிறுபான்மையினரும் தங்கள் தேவைகளுக்காக போராடுவது – வேறு யாருடைய தலையீடும் இல்லாமல் – என்பது ஜனநாயக அமைப்பு இவர்களுக்குக் கொடுத்த நம்பிக்கை என்று சொல்லலாம். முழுமை பெற்றதாக இல்லாமல் போனாலும் இந்தியாவின் ஜனநாயகம் உயிர்ப்புடன் முன்னே சென்றுகொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
வாக்குரிமை என்பது படிப்பறிவு அதிகம் இல்லாத இந்தியாவிற்கு நல்லதல்ல என்ற கருத்து வெளியானபோது நமது தலைவர்கள் சொன்ன பதில் இது: படிப்பறிவு அதிகம் இல்லாதபோதும் சுதந்திரம் வேண்டுமென்று ஒன்றாகக் கூடி போராடிய மக்களுக்கு, தங்களுக்கு வேண்டிய தலைவர்களைத் தாமே தேர்ந்தெடுப்பதற்கும், சொந்தமாக அரசியல் முடிவுகளை எடுப்பதற்கும் வேண்டிய முதிர்ச்சியும் இருக்கும்’.
இந்திய தேசிய இயக்கம் இந்த உலகிற்கு அளித்த செய்தி இதுதான்: ‘இந்திய நாடு தனது மரபுகளை மீறாமல், நவீனத்துவத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும்’.
1958 ஆண்டு நமது பிரதமர் நேரு தனது உரையில் கூறினார்: ‘
‘நவீன பொருளாதார முன்னேற்றத்திற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்குமா? அதற்காக நமது பழமையை மறக்காமல் கடைபிடிக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. வேறு யாரிடமும் விடை இருப்பதாகவும் தெரியவில்லை.விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் வீரியத்துடனும், உள்ளார்வத்துடனும் வரவேற்க வேண்டிய அதே நேரத்தில் மனித வாழ்வின் மற்ற முக்கிய தேவைகளை நாம் மறக்கக் கூடாது. இதனால் நாம் இந்தியாவிற்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கும் தேவையானவற்றை செய்து தர இயலும். பொறாமையும், வன்முறையும், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகில் இந்தியாவின் நட்பு நிறைந்த குரல் இந்த அழுத்தங்களைக் குறைக்க நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை ஒலிக்கும்’.
எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
நன்றி: டெக்கன் ஹெரல்ட் செய்தித்தாள்