பள்ளிகளில் நீதி பயிற்றுவிக்கும் வகுப்புகள்
-நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியா சுதந்திரம் அடைந்து 68 வருடங்கள் ஆகிவிட்டன. நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. டில்லியில் பள்ளிக் குழந்தைகள் தேசியக் கொடியின் மூவர்ண வண்ணத்தில் 68 என்று அமைத்திருந்ததைப் பத்திரிகையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியத் தாயின் குழந்தைகள் அனைவரும் நன்கு படித்துத் தேறி சிறந்த குடிமக்களாக வளர்ந்து இந்தியத் தாய்க்குப் பெருமை சேர்ப்பார்களாக.
பா.ஜ.க. பதவியேற்ற பிறகு பள்ளிகளில் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் பாடங்களாக வைக்க வேண்டும் என்ற யோசனை பா.ஜ.க.வைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கூறத் தொடங்கியுள்ளனர். பள்ளிகளில் இந்து மதப் பாடங்கள் மட்டும் ஏன் என்று மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அரசைச் சாடத் தொடங்கியுள்ளார்கள். இதற்குப் பதில் எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது.
நான் பள்ளியில் படித்த காலத்தில் நீதி வகுப்பு ஒன்று உண்டு. வாழ்க்கைக்கு வழி காட்டும் நீதிகள் இந்த வகுப்பில் பேசப்படும். இப்போது இத்தகைய வகுப்பு இல்லை. கல்வியின் முழு நோக்கமும் மதிப்பெண் பெறுவதே என்றாகிவிட்டது.
சிறு வயதிலேயே, தேவைப்பட்டால் முதல் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு சில நல்ல நீதி போதனைகளைக் கற்றுக் கொடுப்பதில் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை நான் சிறு வயதில் என் தந்தையிடமிருந்து கற்ற பாடங்கள் இன்றும் எனக்குத் துணைநிற்கின்றன. ‘இளமையில் கல்’ என்பது முதியோர் வாக்கு. இதைப் பின்பற்றிப் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே நீதி கற்பிக்கும் பாடங்களைப் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக வைக்கலாம்.
இந்தப் பாடத் திட்டத்தில் மகாபாரதத்தில் உள்ள சில நீதிக் கதைகளையும், ராமாயணத்தில் உள்ள நீதிக் கதைகளையும் அல்லது இளம் உள்ளங்களுக்கு நீதியைப் போதிக்கும் வாசகங்களையும் சேர்க்கலாம். இந்து மத நம்பிக்கைகளை வலியுறுத்தும் பகுதிகளை விட்டுவிட்டு மற்ற பகுதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அது மட்டுமல்ல கிறிஸ்தவ மத வேத நூலான பைபிளிலிருந்தும் சில நீதி கற்பிக்கும் வாசகங்களையும், இஸ்லாம் மதத்தின் வேதப் புத்தகமான குரானிலிருந்தும் சில நீதி போதிக்கும் வாசகங்களையும் சேர்க்கலாம்.
மூன்று முக்கிய மதங்களிலிருந்து மட்டுமல்ல சமணம், பௌத்தம், சீக்கிய மதம் ஆகியவற்றிலிருந்தும் நீதிக் கதைகளையும் நீதியை போதிக்கும் வசனங்களையும் சேர்க்கலாம். இந்தியாவில் உள்ள பல மதங்களிலிருந்தும் பாடங்களில் சேர்ப்பதால் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் இதற்கு ஆதரவு கிடைக்கும். எல்லாப் பாடங்களும் எந்த ஒரு மதத்தைப் பற்றியும் குறிப்பிடாமல் பொதுவான நீதிகளைக் கற்பித்தால் எந்தப் பிரச்சினைக்கும் இடமில்லை.
இப்படிச் சிறு வயதிலிருந்தே பல மத வேத நூல்களிலிருந்தும் நீதி புகட்டும் வாசகங்களையோ கதைகளையோ குழந்தைகளுக்குக் கற்பிப்பதால் அவர்கள் மனதில் மற்ற மதங்கள் மீது துவேஷம் வராமல் இருக்க வாய்ப்பு உண்டு. எல்லா மதங்களும் ஒன்றே என்ற எண்ணமும், பக்குவமும் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் ஏற்படலாம்.
மேலும் இந்தப் பாடங்களைக் கட்டாயப் பாடங்களாக ஆக்க வேண்டும். இதில் தேர்வு பெற்றால்தான் அந்த வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற முடியும் என்ற விதியையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் இந்தப் பாடங்களில் கவனம் செலுத்துவார்கள்.
ஜாதி, மதம் என்ற வேற்றுமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இந்தியர்கள் எல்லாம் ஒரே இனத்தவர் என்ற உணர்வோடு இந்தச் சுதந்திர தினத்தன்று செயல்பட ஆரம்பிப்போம். நாம் வெள்ளையன் ஆட்சியிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக வாழ வழி வகுத்த நம் சுதந்திர வீரர்கள் கண்ட கனவை நனவாக்குவோம்.