-விசாலம்

Chandrashekar_azad.bmpசுதந்திரப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது. காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஒரு பதினைந்து வயது பாலகன் வந்துசேர்ந்தான். சேர்ந்த உடனேயே மிகவும்சுறுசுறுப்புடன் கோஷம் முழக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டான். அந்தப் போராட்டத்தில் அவனை ஆங்கிலேயன் பிடித்து அழைத்துவந்தான்.

“உன்பெயர்என்ன?” என்று கேள்வியைஆரம்பித்தான் .

“என்பெயர் ஆசாத் ” (ஆசாத்என்றால்ஹிந்தியில்சுதந்திரம்எனப்பொருள்)

“உன் தந்தையின் பெயர் என்ன?”

“அவர் பெயர் சுதந்திரா!”

“எங்கு வசிக்கிறாய்? வீடு எங்கே?’

“ஜெயில்தான் என்வீடு!”

“என்ன பேச்சில் இத்தனைதிமிரா?”  என்றபடித் தன் பெல்டைக் கழட்டி 

பல அடிகள் அடித்தான்.

மிகவும் தைரியமாக  “வந்தேமாதரம்” என்றபடி நின்றான்அந்தப் பையன்.  யார் அவன் {அவர்} ?  அவர்தான் திரு.சந்திரசேகர ஆசாத். மத்தியப் பிரதேசத்தில் பாவ்ரா கிராமத்தில் பிறந்தவர். முதலில் அவர்பெயர் சந்திரசேகர் திவாரி. தந்தை சீதாராம்திவாரி. தாய் ஜாக்ரினிதேவி. தாய் தன் மகனைக் காசியில் சம்ஸ்கிருத காலேஜில் சேர்த்ததால் சம்ஸ்கிருத அறிவு அவருக்கு அபாரமாக இருந்தது.   அதன்பின் அவர் வாழ்க்கைப்பாதையே மாறியது.

மஹாத்மாவின் கொள்கைகளில் ஈர்ப்புகொண்டு அவரது இயக்கத்தில் சேர்ந்து ஜெயிலுக்கும் போனார். தன் பெயரைத் திவாரி இல்லாமல் ஆசாத் என்று மாற்றிக்கொண்டார். ஆபத்தான நேரங்களில் அவருக்குப் பல தேசபக்தர்கள் உதவினர்.

ஒரு நாள் ரக்ஷாபந்தன்  தினம்…

திரு. சந்திரசேகர ஆஸாதை (Azad)  சல்லடைப் போட்டுத்   தேடிக் கொண்டிருந்தனர் ஆங்கிலேயச் சிப்பாய்கள். அவரும் டிமிக்கிக் கொடுத்து எல்லோருடைய கண்களிலும் படாமல் தப்பித்துக் கொண்டிருந்தார். ஒருசமயம் அலஹாபாத்தில் ஒருநண்பர் வீட்டில் இருந்தார்.

எப்படியோ அதுதெரியவந்து அந்தவீட்டைச் சுற்றிப் போலீஸ்படை  அமர்த்தப்பட்டிருந்தது. அங்கிருந்த  திருமதி. ஸ்ரீதேவிமுட்சாதி தன்னை மிக அழகாக அலங்கரித்துக் கொண்டு, நல்ல விலையுயர்ந்த புடவை உடுத்தி  ஒரு பெரிய  கூடையில் பழங்கள்  இனிப்புக்கள் நிரப்பி அதைத் திரு. சந்திரசேகர் ஆஸாதிடம் கொடுத்துத் தூக்கி வருமாறு
செய்தாள். அவரை வேலைக்காரனைப்போல் நடிக்கச் செய்தாள்.

“சீக்கிரம்!  சீக்கிரம்!  நாழி ஆக்காதே  என் அண்ணா  ராக்கிக்காக  ஆவலுடன்  காத்துக்கொண்டிருப்பார்.
இப்போதே நான் ரொம்ப லேட். நீ வேறு ஆடிஅசைந்து வருகிறாய். உம்.. நட நட!”என்று அவரைப்பார்த்துக்  கோபித்துக் கொள்வதுபோல் நடித்தாள். போலீஸ்  இன்ஸ்பெக்டர் அழகாக வழியை விட்டார். அப்போது அந்த அம்மணி ஆஸாதின்  கூடையிலிருந்து ஒருலட்டுவை எடுத்து  “பாயி சாஹேப் கொஞ்சம்  ஸ்வீட்  சாப்பிடு” என்று திசையைத் திருப்பினாள். பின் என்ன? வேகமாகப் போய் காரில்அமர்ந்துகொண்டனர். இன்ஸ்பெக்டரை முட்டாளாக்கிவிட்டுத் தப்பித்துச்சென்றனர். பின் எல்லாப் போலீசும் உள்ளே போய்ப்பார்க்க  ஒருவரும்அங்கு இல்லை. ராக்கியினால் அவர்  உயிர் தப்பியது. இந்த ராக்கி தினம் ஆஸாதுக்குத் தப்பி ஓட  சுதந்திரம்  கிடைத்தது.

லாலா லஜ்பத்ராய் கொலைக்குப் பிறகு ஆங்கிலேயர்களைப் பழிக்குப்பழி வாங்க துடித்துக்கொண்டிருந்த பலரில்ஆஸாதும் ஒருவர். இதற்குத் தகுந்த சந்தர்ப்பம் எதிர்ப்பார்த்து அதுவரைத் தலைமறைவாக ஜான்ஸி அருகில் ஒருகாட்டில் ஒருகுடிசை கட்டியபடி அங்குப் பயிற்சிக்கூடத்தையும் அமைத்தார். அருகில் மிக அழகான ஹனுமான்கோயில் இருந்தது. அதற்குமேலும் அழகூட்டச் சதார்நதியும் “சலசல” என்று  ஓடிக்கொண்டிருந்தது.

அங்குப் பல கிராமக்குழந்தைகளுக்கும் போதித்தார். கார் ஓட்டவும் கற்றுக்கொண்டார். ஆனால்அவர்கூட இருந்துகுழியைப் பறித்த ஒருவன் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் இருக்கும் இடத்தை மேல்இடத்தில் சொல்லிவிட்டான். 1931-இல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி போலீஸ் ஆசாத்தை வளைத்துப்போட்டது.

கொஞ்சநேரம் தனியாக ஒரு சின்ன பிஸ்டலுடன் போராடிப் பார்த்தார். பின், நிலைமை மோசமாக ஆனவுடன் அவர்களிடம் பிடிப்பட்டுத் தூக்கிலிடப்படும் காட்சியை விரும்பாமல் தன் நெற்றியிலே  தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டார்.

அவர்  பாடியஇருவரிகள்…
”துஸ்மன் கீ கோலியோன் காஹம் ஸாம்னா கரேங்கே
ஆசாத்
ஹீ ரஹே ஹைன், ஆசாத் ஹீ ரஹேங்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *