சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி
— தஞ்சை வெ.கோபாலன்.
பாரத நாட்டின் 68ஆம் சுதந்திர நாள் விழாவினை மகிழ்வோடு கொண்டாடுகின்ற நேரத்தில் தமிழகத்தில் ஏதாவதொரு பகுதியின் பங்களிப்பை நினைவுகூரலாம் என்று நினத்தபோது, மனதில் வந்தது திருச்சி மாவட்டம். சுதந்திர வேள்வியில் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துக் கொண்டு சென்ற பெருமை அன்றைய காங்கிரஸ் இயக்கத்துக்கு உண்டு. 1920-30களில் திருச்சி மாநகரத்தில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகம் இரட்டைமால் வீதியில் இருந்தது. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் கல்லூரியைவிட்டு வெளியேறி காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாற்றிய காலம் அது. மாவீரன் வ.வெ.சு.ஐயர் பிறந்த ஊரும் திருச்சியில் வரகநேரி எனும் பகுதியில்தான். சிவகங்கைக் காரராக இருந்தும் வ.வெ.சு.ஐயரின் அன்பிற்குப் பாத்திரராகி அவருடன் திருச்சி பகுதிகளில் காங்கிரசில் பணியற்றியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். இவர் காட்டுப்புத்தூர் எனும் ஜமீன் கிராமத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய காலத்தில்தான் மகாத்மா காந்தியை ரயிலை நிறுத்தி தரிசனம் செய்தார். கரூரில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையுடன் கூட இருந்து காங்கிரஸ் இயக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்படிப்பட்ட சுத்தானந்த பாரதியார் சுதந்திரப் போரில் திருச்சியின் பங்கை விவரித்திருக்கிறார்.
சுத்தானந்த பாரதியார் 1907 முதல் சுதந்திர இயக்கத்தில் பங்கு பெற்றவர். பல பெரிய தலைவர்களுடன் தொடர்பு கொண்டவர். இவருடைய ‘சிங்கநாதம்’, ‘முன்னேற்றப்பாடல்’, ‘காந்தி காலட்சேபம்’, ‘இந்திய சரித்திரக் கும்மி’ போன்றவை அப்போதெல்லாம் மேடைகளில் முழங்கின. வ.உ.சி., வ.வெ.சு.ஐயர், சிவா ஆகியோர் இவரை சிறை செல்லவிடாமல் இயக்கத்தில் ஈடுபடவைத்தனர். தமிழ்நாட்டில் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பியவை பாஞ்சாலங்குறிச்சியும், பின்னர் சிவகங்கை மருது சகோதரர்களும்தான் என்பது இவர் கருத்து. வ.வெ.சு.ஐயர் மூலம் சவர்க்காரிடம் தொடர்பு ஏற்பட்டது.
ஐயரின் கட்டளைக்கிணங்க சுத்தானந்தர் திருச்சி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகள் காட்டுப்புத்தூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அப்படி பணியாற்றிய சமயத்தில் ஒருமுறை இவர் புதுச்சேரியிலிருந்து பாரதியாரையும், ஐயரையும் திருச்சிக்கு அழைத்துவந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். திருச்சியில் இவர்கள் டாக்டர் தி.சே.செள.ராஜன், கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார், டாக்டர் சாமிநாத ஐயர் ஆகியோரைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு கடலூருக்குச் சென்று அங்கு வ.உ.சியின் தொண்டரும் ஆஷ் கொலை வழக்குக்குப் பிறகு தலைமறைவான மாடசாமி ஓட்டிய படகில் புதுச்சேரி சென்றடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்று வரை அந்த மாடசாமி என்ன ஆனார் என்பது தெரியாமலே போய்விட்டது. அவரை புதுச்சேரியில் பார்த்ததாகவும், சிலர் கொழும்புவில் பார்த்ததாகவும் சொல்லியிருக்கிறார்களே தவிர அவர் முடிவு எங்கு எப்போது நடந்தது என்பது தெரியாமலே ஒரு தியாகியின் வாழ்வு முடிந்து போயிற்று.
மாடசாமியைப் பற்றி சுத்தானந்த பாரதியார் சொல்வதைப் பார்க்கலாம்: “மாடசாமி மறவன், அசகாய சூரன், வாள் வீச்சில் இணையற்றவன். முதல் உலகப் போரின்போது ஜெர்மானிய எம்டன் கப்பல் சென்னையில் குண்டுபோட்டது; பின்னர் அங்கிருந்து அது சிங்கப்பூருக்குப் போய்விட்டது. வழியில் புதுச்சேரியில் கடலில் மூன்று மைலுக்கு அப்பால் நங்கூரம் பாய்ச்சி நின்றது. இந்த விவரம் புரட்சிக்காரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே வ.வெ.சு.ஐயர் சுத்தானந்த பாரதியாரை மாடசாமியுடன் படகில் எம்டன் கப்பலுக்கு அனுப்பினாராம். அந்த கப்பலில் வந்த வீரன் செண்பகராமனைக் கண்டு ஐயர் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவரிடம் கொடுத்திருக்கிறார். அதைப் படித்துப் பார்த்த வீரன் செண்பகராமன் “தயார், வருகிறேன்” “Coming back; be alert” என்று எழுதிக் கொடுத்து ஐயரிடம் கொண்டுபோய் கொடுக்கச் சொன்னாராம்.
ஐயரையும் வீர சவர்க்கரையும் குறித்து சுத்தானந்த பாரதியாருக்கு அளவுகடந்த பெருமை. அவர் சொல்கிறார்: “ஐயரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கிப் பார்த்தால் கோழைக்கும் ஆண்மை பிறக்கும். கப்பலில் இருந்து குதித்துக் கடலில் நீந்திக் கரையேறிய சவர்க்கரைப் பிரெஞ்சுக் கடற்கரைப் பிரதேசமான மார்சேயிலிஸ் துறைமுகத்தில் மேடம் காமா அம்மையார் காப்பாற்ற வந்ததையும், பிரெஞ்சு போலீசார் அவரைப் பிடித்து கப்பலில் சிறையில் அடைத்து சித்ரவதை செய்து புனே எரவாடா சிறைக்குக் கொண்டுவந்து தண்டனை கொடுத்து அவரை அந்தமான் தனிமைச் சிறையில் அடைத்ததையும் பார்த்தால் கோழையும் வீரம்கொண்டு எழுந்துவிடுவான்” என்கிறார்.
அவர் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறார். நமது வரகநேரிச் சிங்கம் புதுச்சேரியில் இருந்து கொண்டு புரட்சித் தீயை வளர்த்ததும், வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுத்து அனுப்பி ஆஷ் துரையை எமனுலகம் அனுப்பியதும், பின்னர் நடந்த கலவரங்களும் இந்த காலத்து மனிதர்கள் அறிவார்களா? என்கிறார். வ.வெ.சு.ஐயருக்கு லண்டனில் லத்தீன் மொழி ஆசிரியராக இருந்தவர் புருவோ என்பார். அவர் ஐயரிடம், நீர் இனிமேல் புரட்சி இயக்கங்களில் ஈடுபடுவதில்லை என்று பிரிட்டிஷ் சர்க்காருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தீர்களானால், உம்மை மன்னித்து திருச்சியில் பாரிஸ்டராகப் பணியாற்ற அனுமதிக்கச் செய்கிறேன் என்றாராம். அதற்கு ஐயர் அவரை ஒரு புலியைப் போல் பார்த்து, என் நாட்டைக் காட்டிக் கொடுக்கச் சொல்கிறீரா? அதுமட்டும் எந்த நாளிலும் நடைபெறாது என்று கர்ஜித்தாராம்.
1917இல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தார். அப்போது ஐயர் அவரைச் சென்று சந்தித்தார். அப்போது காந்திஜி ஐயரிடம் “துப்பாக்கி எடுத்தால் அது துர்பாக்கியமாகவே முடிந்துவிடும். நாம் ஒரு வெள்ளையரை சுட்டால், அவன் ஆயிரம் இந்தியரைச் சுட்டுக் கொல்வான். அவனிடம் துப்பாக்கி உண்டு; பீரங்கிகள் உண்டு நம்மிடம் திருட்டுத் துப்பாக்கிகளைவிட்டால் வேறு என்ன உண்டு? பலாத்கார எண்ணத்தை விட்டுவிடுங்கள். அது என்றைக்கும் பலன் தராது. நமக்குள் ஆன்ம சக்தி உண்டு. சத்தியமே வெல்லும், தியாகமே நிலைக்கும்” என்று உபதேசித்தார். அன்றுமுதல் ஐயர் மனம்மாறி வன்முறையை கைவிட்டு காந்தியத்தில் நம்பிக்கை வைத்தார் என்கிறார் சுத்தானந்த பாரதியார்.
ஐயர் தேசபக்தன் இதழ் ஆசிரியராக ஆனதும் சுத்தானந்த பாரதியாரை அழைத்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரிக்கரையில் ஒரு குருகுலம் தொடங்க வேண்டும் என்றாராம். இருவரும் திருச்சி கரூர் சாலையிலுள்ள திருப்பராய்த்துறைக்குச் சென்றார்கள். அங்கு சேஷகிரி ஐயர் என்பவரைப் பார்த்தார்கள். அவர்களுடன் குணசீலம், முக்கொம்பு ஆகிய இடங்களுக்குச் சென்றபின் ஐயர் காவிரிக் கரையில் அமர்ந்து 1008 காயத்ரி மந்திர ஜபம் செய்தாராம். இந்த இடத்தில் முப்பது ஏகர் நிலப்பரப்பு கிடைத்தால் ஆசிரமத்தை இங்கேயே தொடங்கலாமே என்பது ஐயரின் எண்ணம். ஆனால் அந்த எண்ணம் ஈடேறும் முன்பாக ஐயருக்குத் தண்டனை கிடைத்து பெல்லாரி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டார் என்கிறார் சுத்தானந்தர்.
பின்னாளில் அதே திருப்பராய்த்துறையில் சுவாமி சித்பவானந்தர் ஒரு ஆசிரமம் தொடங்கி சிறப்பாக நடத்தினார் என்றும், ஐயர் திருநெல்வேலி பாபநாசம் அருகில் ஆசிரமம் தொடங்கினார் என்றும் கூறுகிறார் சித்பவானந்தர்.
திருச்சி காந்தியத்தின் பாசறையாக விளங்கியது. கரூரில் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையும், திருவரங்கத்தில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனும், திருச்சியில் வக்கீல் ஹாலாஸ்யம் அய்யரும், பி.ஆர்.தேவரின் வீரப்பணியும் செயல் துணிவும், டி.எஸ்.அருணாசலத்தின் செயல் திறமையும் அரிய தொண்டுகளும் மறக்கமுடியாதவைகள் என்பது சுத்தானந்தர் கருத்து. திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் இந்தி கற்பிக்கப்பட்டது. கதர் தொண்டு துவக்கப்பட்டது. ஊர் ஊராகச் சென்று தொண்டர்கள் கதர் துணியைத் தலையில் சுமந்து விற்றார்கள்.
சுத்தானந்த பாரதி தன் ஆசையையும் சொல்கிறார். திருச்சி காவிரிக்கரையில் ஐம்பது ஏக்கர் நிலம் கிடைத்தால், நல்லதொரு கல்வி நிலையமும், கலைகள், தொழில் விளங்க தொழில் நிலையங்களும் பாரத சங்கம் சார்பில் நடத்த விருப்பம். ஐயரின் திருமகனார் டாக்டர் வி.வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அப்போது துறையூரில் மருத்துவராக இருந்தவர்) உதவி செய்தால் அந்த கனவு நனவாகும். நாடு வாழ, மக்கள் நலம்பெற பாரத சங்கம் தொடங்கி ஆக்கப்பணிகளில் ஈடுபடுவோம் என்று முடிக்கிறார் சுத்தானந்த பாரதியார். அவர் கனவு ஈடேறியதா?
ஆதாரம்: “திருச்சி மாவட்ட சுதந்திரப் போராட்ட மலர்” ஆசிரியர் அரியலூர் சபாபதி. 1976. 44, வைகைநல்லூர் அக்ரஹாரம், குளித்தலை, திருச்சி மாவட்டம் 639104.
கட்டுரை ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்.