இது இன்னுமொரு நாளா …?
–உமாமோகன்.
சீக்கிரமே சலிப்படைந்துவிடுகிறோம் எல்லாவற்றிலும்…எனக்கு நினைவு தெரிந்த நாளாகப்பாடிக்கொண்டிருக்கிறீர்கள்…
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் -என்றபாடலை …
தலைமுறை தலைமுறையாக இதுதானா என்று சலித்துக் கொண்டார் ஒரு நண்பர்.
நானும் யோசித்துப் பார்த்தேன் …
கேட்ட அவருக்குக் கேட்ட நாளிலேயே புரிந்துவிட்டதா ..பதிந்துவிட்டதா ..பின்பற்றினாரா என்றெல்லாம் குறுக்குக் கேள்விகள் எழுப்பினால் என்ன விடைதருவாரோ. தெரியவில்லை.
நண்பர் என்று சொல்லிவிட்டேனே தவிர அவர் அனுபவத்திலும் வயதிலும் என்னைவிட இருதலைமுறை மூத்தவர்.எனவே குறுக்குக் கேள்விகள் எழுப்பாமல் சிறு புன்னகையோடோ “தேவையிருக்கிறதே சார் “என்று பொதுவான பதிலுடனோ நகர்வது வழக்கம்!
முதல்வகுப்பில் எண்ணும் எழுத்தும் படித்தது சரி, நான்தான் முதுகலை தாண்டிவிட்டேனே இன்னும் ஏன் எண்ணும் எழுத்துமே நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இன்னும் முதல் வகுப்பில் சேர்பவர்களுக்கு அதுதானே அரிச்சுவடி!
வகுப்புகளை வேண்டுமானால் பிரித்துவைத்து அவரவர் அவரவர் நிலையில் நிறுத்திவைப்பது சாத்தியம். பொதுவில் நிற்கும் ஊடகங்களிடம் இதுபோல் எதிர்பார்க்கலாமா? அவர்கள் முதுகலை தாண்டியவர்களை மட்டுமல்ல முதல்வகுப்பில் நுழைபவர்களையும் கலந்துதான் கவனிக்க வேண்டும்.
“வெள்ளைக்காரன் காலத்தைப் பாத்தவங்களே விடைபெற்றுப் போயாச்சு ..இன்னும் என்ன சுதந்திரக்கதைகள்…ரெண்டு புதுப்படம் பார்த்தோமா…கொஞ்சம் சிரிச்சோமான்னு இருந்தாப்போதும் என்றே விடுமுறைக் கொண்டாட்டமாக அணுகப்படுகிறது ஆகஸ்ட் 15 ம்.
வடிவேலு பாஷையில் சொல்வதென்றால் “லைட்டா..”
ஏன் இருந்தாலென்ன..என்ன தவறு?
ஒருவன் நல்ல பொருளீட்டும் சக்தியோடு இருக்க,
மற்றொருவரோ, உடற்குறையோ, திறமைக்குறைவோ, சமயத்தில் முயற்சிக் குறைவோ காரணமாக முந்தும் நிலையில் இல்லாவிட்டாலும் அனுசரித்துப் பங்கிட்டுக்கொள்ளும் ஒருங்கிணைந்த குடும்பவாழ்வே நம் அடித்தளம். இன்றோ,கணவன் மனைவிக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வுஇருந்தாலும் உனதா எனதா என வாக்குவாதம் வாய்தா போடும் நிலை.இதுவேதான் தேசம் என்ற கட்டமைப்பிலும் எதிரொலிக்கிறது.
எனக்குக் கிடைத்தால் போதும்
என்று குழந்தை கைப்பண்டமும் தட்டிப்பறிக்கும்
விலங்கு நிலையில் திரிகிறோம்!
நிலம் எனக்கு வளம் தந்தால் போதும்!
நீர் என் எல்லையில் ஓடினால் போதும்!!
காடோ,மேடோ கைக்குக் கிடைப்பதும் ,கண்ணுக்குத் தெரிவதும்…
எல்லாம்..எல்லாமும் எனக்கு..எனக்கு…எனக்கு..!!!
நுகர்வுக் கலாசாரத்தின் உலகவிளைவு இது… உள்ளூர் சுதந்திரத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
ஒரு வீடு கட்டமைக்கப்படும் சீரிய பழக்கவழக்கங்கள் குலையாமல் இருந்தால் குடும்பம் குலையாமல் இருக்கும் என்று நம்புகிறோம்.நம் நாடு எப்படி கட்டமைக்கப்பட்டது என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டால், புரிந்துகொண்டால், மண்ணுக்கு விரோதமாகச் செயல்பட மனம் வராது என்று ஒரு நம்பிக்கை!
செய்யும் பணியில் செம்மையும்,சீர்மையோடுசிந்தித்து செயல்படுவதும்
பணியாளர் கடமைஎன்பதை நினைவூட்ட வேண்டியிருக்கிறது..
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சொன்ன நாட்டில் ..கடனேஎனப் பணி செய்து நழுவுவோரைத் திருத்த வேண்டியிருக்கிறது.
சம்பளம் என்பது வருவதற்காகமட்டுமே தரப்படுகிறது என்றும் செய்யவேண்டியவற்றைச் செய்வதற்கோ,செய்யாமல் இருப்பதற்கோ,செய்யக்கூடாதவற்றைச் செய்வதற்கோ தனியாகப் பெறும் ஊதியமே கையூட்டு என்றும் இ பி கோ சொல்லாத ஒன்றைப் பொதுமைப் படுத்த நினைப்போரை அவசரமாக அடித்துத் திருத்த
வேண்டியிருக்கிறது…
உன் உடல்நலன் பேணுவது உன் பொறுப்பு..
உன் குடும்பம் காப்பது உன் பொறுப்பு என்பதையெல்லாம் விளம்பரப் படுத்த வேண்டியிருக்கிறது…
ஏன் இவ்வாறு நிகழ்கிறது…
என்ன செய்தால் மீளலாம்..?-சிந்திப்போம்