சுதந்திர தின நினைவோட்டங்கள்……..……..
எஸ் வி வேணுகோபாலன்
எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கட்டும் என்று கொட்டு முரசு!
ஓசூர் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க இந்த ஜூலை மாதம் 25ம் தேதி சென்றிருந்தபோது கிடைத்த அனுபவம் மறக்க முடியாத சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அந்தக் குழந்தையின் பெயர் கண்ணம்மை. கிருஷ்ணகிரி தொன் போஸ்கோ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பவர். மாற்றுத் திறனாளியான அவரை அவரது தாயும், கண்காட்சிக் குழு தலைவர் துரையும் கைலாகு கொடுத்து மேடையில் ஏற்றி நாற்காலியில் அமர்த்தும்வரை தெரியவில்லை, அடுத்த ஆறு நிமிடங்கள் எந்த காகிதத் தாளையும் கையில் வைத்திராமல் அழகு தமிழில் “சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்” என்ற பொருளில் அமர்க்களமாக அவர் பேச இருக்கிறார் என்பது! எத்தனை தலைவர்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை தியாகங்கள் என்று அந்தச் சிறுமி தனது உடல் குறைபாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கண்களில் பெருமிதம் பொங்க,கைகளால் இதயத்தைத் தொட்டுத் தொட்டுக் காட்டி ஆற்றிய உரை எழுச்சிகர நினைவலைகளை உள்ளத்தில் எழுப்பியது.
தியாகி மணவாளன் இசைக்குழு உருவாக்கமான “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா தோழா…” (பாடல், சுதந்திரப் போராட்ட வீராங்கனை கே பி ஜானகியம்மாள் அவர்களது வளர்ப்புமகன் சங்கர் ராஜ் எழுதியது என்பார் காஸ்யபன்) பாடலைக் கேட்பவர்கள் கரைந்து உருகாமல் இருக்க முடியாது. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக எத்தனை எத்தனை போராட்டங்கள்… எவ்வளவு தியாகங்கள்!
வ உ சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராகத் துணிந்து கப்பல் ஓட்டிக் காண்பித்தவர். அவரைச் சிறையிலடைத்தது பிரிட்டிஷ் அரசு. சுப்பிரமணிய சிவா பல்லாண்டுச் சிறைவாசத்திற்குப் பிறகு தொழுநோயாளியாகத் திரும்பிவந்தார். ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ’ என்று எழுதினார் மகாகவி பாரதி. 1921லேயே மரித்த அவர், சுதந்திரம் கிடைப்பதற்குப் பல்லாண்டுகள் முன்பே, நம்பற்குரிய நம் வீரர் கம்பத்தின்கீழ் நிற்றல் காணீர் என (தாயின் மணிக்கொடி பாரீர்) கம்பீர முழக்கம் செய்தார்.
தாயின் மணிக்கொடி என்பது ஒரு தேசத்தின் இறையாண்மை, சுயாதிபத்தியம் ஆகியவற்றைக் குறியீடாகக் கொண்டிருப்பது. நாம் இருக்கும் நாடு நமதென்பதறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதுணர்ந்தோம் என்ற பாரதி வரிகளின் உருவகம் சுதந்திரக் கொடி ! 67 ஆண்டு சுதந்திரத்திற்குப்பின் நமது அடுத்தடுத்த ஆட்சியாளர்கள், நம்பற்குரிய வீரர்களாக இருந்திருக்கின்றனரா என்பது இன்றைய இந்தியா தவிர்க்க முடியாத கேள்வி.
சுதந்திர இந்தியாவில் என்னென்ன சாதிப்போம் என்ற பெரிய பட்டியலைக் கனவாக்கி அளித்துச் சென்றார் மகாகவி. பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார், மிடி பயம் கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார் என்ற அந்த கீதம் அமரத்துவம் வாய்ந்தது. உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் என்ற உன்னத இலட்சியத்தைத் தொடும் அந்த வரிசையில் எத்தனையோ செய்திகள் உண்டு. உழைப்பு, உழைப்புக்கான மதிப்பு, சொந்தக் காலில் நிற்பதன் துடிப்பு, யாருக்கும் தலை வணங்காத நிமிர்ந்த நன்னடை இந்த தேசத்தின் அழகு என்பதை நமது விடுதலை போராட்டச் செம்மல்கள் ஒரே குரலில் இசைத்த கானத்தின் பிரதிபலிப்பு அது.
உயர்நிலைப் பள்ளியில் கற்கும் முதல் பாடமே, இந்தியா ஒரு வேளாண் நாடு என்று தொடங்கும். ஆனால், விவசாயத்தை இனியும் நம்பி உயிர் தரிக்க முடியாதென கூட்டம் கூட்டமாக மக்கள் இடம் பெயர்வதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முந்தைய பிரதமர் மன்மோகன் சிங், விவசாயத்தில் இத்தனைபேர் ஈடுபடத் தேவையில்லை என்றே அறிவித்தார். வேளாண் இடுபொருள், உரம், தண்ணீர் என்ற எதுவும் கிடைக்காத விவசாயி, கந்துவட்டிக்குக் கடனை வாங்கி உழைத்த மண்ணில் விளைந்த பொருளுக்கு நியாய விலையும் கிடைக்காத நிலையில் பூச்சி மருந்தைத் தனக்கும் ஊற்றிக் கொண்டோ, தனது தோட்டத்து மரத்திலேயே கயிற்றை மாட்டியோ தனது வாழ்வை முடித்துக் கொண்டதை வெறும் செய்தியாகக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது நாடு. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று லட்சம் பேரின் கதை அது.
இன்னொரு புறம் உணவு பாதுகாப்பு பற்றிக் கவலை கொள்ளாத நிலையில், ஒரு பஞ்சத்தை நோக்கிக் கூட நகரும் அபாயத்தை எதிர்நோக்குகிறது இந்திய சமூகம்.
மரக்கால் உருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம்
நாழி யுருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்
ஆழாக்கு உருண்ட பஞ்சம் ஆளனைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்துத் தனிவழியே நின்ற பஞ்சம்
கூறை பறி கொடுத்துக் கொழுநனைத் தோற்ற பஞ்சம்
கணவனைப் பறிகொடுத்துக் கைக் குழந்தை விற்ற பஞ்சம்
என்று தாது வருட பஞ்சத்தைப் பேசும் பழம்பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஏற்கெனவே விலைவாசி நிலைமை, விலையை வாசிக்கவே மட்டும் வைத்து, பொருள்களை வாங்க விடாது செய்து கொண்டிருக்கிறது. காய்கறி, பழங்களை அன்றாடம் வாங்குபவர்கள் செல்வர்களாக மட்டுமே இருக்க முடியும் என்கிற இந்த நிலையைத் தான் வளர்ச்சி பொருளாதாரம் என்று அழைக்க விரும்புகின்றனர் தாராளமய கொள்கையின் காதலர்கள்.
எல்லாக் கல்வியும் பொறியியலை நோக்கி, அதுவும் ஐ டி, ஐ டி, ஐ டி என்று கூவிக் கூவி அழைத்தவர்கள், ஒன்றரை லட்சம் இருக்கைகள் கேட்பாரற்றுக் கிடக்கும் பொறியியல் கல்வியை இனி யார் தலையில் கட்டுவது என்று தவித்து நிற்கும் கல்விச் சூழல். அவுட்சோர்சிங் இனி கிடையாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா சொல்ல நேர்ந்ததும், இங்கே உள்நாட்டில் எத்தனை அதிர்ச்சி மாற்றங்கள்.மருத்துவக் கல்வியை லட்சக் கணக்கிலிருந்து கோடிக்கு உயர்த்தியிருப்பது இந்த வளர்ச்சி பொருளாதாரம்தான். ஒரு பக்கம் இட ஒதுக்கீடு என்றாலே தகுதி போச்சு, தகுதிக்கு மரியாதை போயே போச்சு என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், பணத்தால் எந்தக் கல்வியையும் விலைக்கு வாங்க முடியும் அராஜகத்திற்கு எதிராக ஏன் சுண்டுவிரலைக் கூட உயர்த்துவதில்லை? நன்கொடை என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும் கல்வி வள்ளல்கள் ஊழலை ஒழிக்கும் கூட்டணிகளை அமைக்கும் வன்முறையை என்ன சொல்வது….சுதந்திரத்திற்குத் தமது இன்னுயிர் இந்த தவப்புதல்வர்களும், புதல்வியரும் இந்தக் கொடுமைகளுக்காகவா அத்தனை தியாகம் புரிந்தனர்..
டிராஜன் குதிரை வழியாக ஒரு நாட்டினுள் ஊடுருவி ஆட்சியையே தோற்கடித்த பழைய கதையின் புதிய அரங்கேற்றமாக, பன்னாட்டு மூலதனத்தின் வருகை ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்களும், முன் நிபந்தனைகளும் ஆட்சியாளர்களின் கொள்கைகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பு அச்சம் அளிக்கிறது. தொழிலாளர் கொள்கை மீது கைவைக்கப்படுகிறது. அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நிதித் துறை தனியார்வசம் நகர்த்தப் படுகிறது. தேச பாதுகாப்புத் துறையில்கூட அந்நிய மூலதன நுழைவு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அனுமதிக்கப்படுகிறது.
சொக்கட்டான் ஆட்டத்தில் தருமரசர்கள் அடுத்தடுத்து எல்லாவற்றையும் வைத்து இழந்து கொண்டிருந்ததை, பாஞ்சாலி சபதத்தில் சாடுவார் மகாகவி. கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில்காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும் என்று சீறியெழும் அவரது சினம்.
அங்கே கை வைத்து, இங்கே கை வைத்து வரலாற்றிலும் தங்கள் கையை வைத்துவிட்டனர் இன்றைய ஆட்சியாளர்கள். மாற்றத்திற்கான வாக்கு கோரிய மோடி அரசு, வரலாற்றை மாற்றி எழுதத் துடிக்கிறது. வகுப்புவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள முற்படாமல், வரலாற்றைத் திருத்தி எழுத, காந்தி கொலை வழக்கு ஆவணங்களையே அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆர் எஸ் எஸ் அமைப்பையும், தங்களது நாயகர்களையும் அந்த வழக்கிலிருந்து விடுவிக்க முடியாதவர்கள், தீர்ப்பை இப்படி திருத்தி எழுதத் தலைப்பட்டுள்ளனர்.
ஒருபுறம் பல அடுக்கு மாடிகள் கட்டி வாழும் அம்பானிகள், மறுபுறத்தில் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூடச் செலவு செய்ய வழியற்ற 83.6 கோடி பேர். இதுதான் நவநாகரிக இந்தியா.
ஏற்றத் தாழ்வுகளும், உலகமயம் சீர்குலைக்கும் பண்பாட்டுக் குழப்பங்களும் குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற கொடுமைகளை அதிகரிப்பதை இந்த சுதந்திர தினம் கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. ஆண் பெண் சமத்துவத்திற்கான குரலை முன்னெப்போதையும்விட உரத்துப் பேசவும், ஆரோக்கியமான சமூகத்தை நிலைநாட்டவும் இளைஞர்கள் உறுதி எடுக்கக் கோருகிறது நாடு.
உலகமய பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் கட்சியோடு மிகப் பெரிய அளவில் மாறுபடாத பா ஜ க, மக்களைப் பிரித்தாளும் தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக எடுத்து முடிக்கத் தொடங்கியதன் வெளிப்பாடுதான், நஜ்மா ஹெப்துல்லாவையே சிறுபான்மை தகுதிக்கு எதிராகப் பேச வைத்தது. காஷ்மீர் மாநிலத்திற்கான 370 சரத்து பிரச்சனையை கையில் வெறியோடு எடுத்திருப்பது. இந்தியைத் திணிக்க முற்பட்டிருப்பது.
சாதி மதங்களைப் பாரோம் அன்பு தன்னில் செழிக்கும் இவ்வையம் என்றார் பாரதி. எல்லாப் பிரிவினைகளையும் கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்கிறது சங் பரிவாரம். தாயின் மணிக்கொடி பட்டொளி வீசுகையில் அதனருகே அனைத்துப் பிரிவு மக்களும் உற்சாகம் பொங்க ஒன்றுபட்டு நிற்கும் காட்சியைப் பாடிய கனவுகளைத் தகர்க்க முனையும் இன்றைய ஆட்சியாளர்கள் தேச பக்தி, மதச் சார்பின்மை அனைத்திற்கும் புதிய விளக்கம் அளித்து வருவதை இந்த சுதந்திர தினம் அதிர்ச்சியோடு பார்க்கிறது. உண்மையான தேச பக்தர்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துச் சொல்லுமாறு அசைந்து அசைந்து வேண்டுகிறது தாயின் மணிக்கொடி.
நம்பிக்கை முனையிலிருந்து புறப்படுகிறது முற்போக்கு ஜனநாயக சக்திகளின் அர்ப்பணிப்புப் பணி. உலகெங்கும் எழும் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிரான போர்க்குரல்கள் நமக்கான முழக்கமாக எதிரொலிக்கின்றன. ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களும் நமது போராட்டங்களுக்கான உற்சாக ஆதரவை நல்குகின்றன. ஏகாதிபத்திய சக்திகளின் போர் முயற்சிகளுக்கு எதிராகத் திரளும் எந்த தேசத்தின் மக்களும், நமது நேச சக்திகளாகின்றனர்.
சுதந்திர தினம் ஒரு கொண்டாட்ட தினம்தான். அன்பைக் கொண்டாடுவோம். நேயத்தைக் கொண்டாடுவோம். ஒற்றுமையைக் கொண்டாடுவோம். ஒருமைப் பாட்டைக் கொண்டாடுவோம். தேச விரோத சக்திகளின் ஆட்டம் முடிந்ததென்று முரசு கொட்டுவோம். கண்ணம்மை என்ற அந்தச் சின்னஞ்சிறுமியின் கண்களில் தெறித்த இனபத் துள்ளல் அதைத் தான் பிரதிபலித்தது.
**************
நன்றி: இளைஞர் முழக்கம்: ஆகஸ்ட் 2014