எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

1a

 

            தாய்மண்ணை காக்க வேண்டி
           தம்முயிர் ஈந்த எங்கள்
           தகைவுடை எண்ணங் கொண்டோர்
           தாழினைப் போற்றி நிற்போம்

           இந்தியன் என்னும் எண்ணம்
            எல்லோரின் மனத்தில் நிற்க
           வந்த நம் சுதந்திரத்தை
            வாழ்த்தியே நாளும் நிற்போம்

            சுதந்திரம் பெற்ற நாட்டில்
            சும்மா நாம் இருந்திட்டாமல்
            பெரும்பணி ஆற்ற வேண்டும்
             பெருமைகள் சேர்க்க வேண்டும்

            இரும்புடை நெஞ்சத்தாரை
             இளகிடச் செய்ய வேண்டும்
            பெரும்பகை வெல்ல வேண்டும்
            பெண்மையை போற்ற வேண்டும்

            அரசியலில் அரக்கத்தனம் அழிக்கவேண்டும்
            அனைவருக்கும் நல்லதீர்வு கிடைக்கவேண்டும்
            உரசலெல்லாம் ஓடிவிடச் செய்யவேண்டும்
             உண்மைக்கே மதிப்பளித்து நிற்கவேண்டும்

            காந்தியை நினைக்க வேண்டும்
             கருணையை வளர்க்க வேண்டும்
             சாந்தியை போற்ற வேண்டும்
             சமத்துவம் பேண வேண்டும்

           இந்திய மண்ணில் நாளும்
            இங்கிதம் வளர்தல் வேண்டும்
          சொந்தமாய் நாட்டை எண்ணி
           சுதந்திரம் பேணிக் காப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *