இதுபோல் இல்லை ஒருநாடு!
இதுபோல் இல்லை ஒருநாடு
இதுவே இதுவே என் வீடு
இரவும் பகலும் இசையோடு
இதயம் திறந்து நீ பாடு!
அன்னையின் நெஞ்சில் பால்சுரந்து
அதற்கெனக் குழந்தை பிறப்பதுபோல்
முன்னே ஞானம் காத்திருக்க
முளைத்தான் மனிதன் இம்மண்ணில்!
தன்னில் ஆழும் தவமேதான்
தாய்த்திரு நாட்டின் துவக்கமடா!
தரிசன மாகிய சத்தியமே
கவிமிகு மறையாய்ப் பெருகுதடா!
பகுத்தறிவுக்கோ பொற்கட்டில்
பரஞா னத்திற் கிதுகொட்டில்
பழயோ கத்திற் கிது மச்சில்
முக்திக் கிதுதான் தாய்வீடு
மூளும் கலைகளின் தலைநகரம்
முதலும் முடிவும் அறிந்தபல
முனிவர்கள் வாழும் ஒரு கூடு!
ஆன்மா என்பதைக் கண்டதனை
அறிவித் ததுநம் திருநாடு
ஆள்வது வினைவழி விதியென்றே
அறிந்து சொன்னது நம்நாடு
தான்யா ரென்பதைக் காணுவதும்
மன்னுயிர் நலமே பேணுவதும்
தாரணி வாழ்வின் நோக்கமென
வகுத்துச் சொன்னது நம்நாடு!
அறிவியல் மதத்தை ஆண்டதிங்கே
அரசர்கள் துறவுகள் பூண்டதிங்கே
ஆலயம் மெளனம் எனவகையாய்
அவரவர் வழிகள் வாழ்வதிங்கே
உறியில் இருந்த உண்மைகளை
ஊரில் முழங்கும் நாவிங்கே
உண்மையின் ஒருதாய் மடியிங்கே
உலகில் இதுபோல் நாடெங்கே?
தாயே! உன்றன் தாள்பணிந்தோம்!
தருக்கழிந்தோம்! தலைநிமிர்ந்தோம்!
தருணம் வந்த விசைப்பினிலே
தடைகள் உடைக்க நடக்கின்றோம்!
மாயை நடுவே சூழ்ந்ததனால்
மலினப் பட்டோம் நாணுகிறோம்
மாற்றியுன் மாண்பைக் காட்டிடுவோம்
மறுபடி ஜெயக்கொடி நாட்டிடுவோம்!
15.08.2014 / வெள்ளி / 07.25