என்ன சுதந்திரம் பெற்றுவிட்டோம்?
நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரம் வருவதற்கு முன்பே ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடுவோமே’ என்று பாரதி பாடிவிட்டார். சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா எப்படி இருக்கும் என்று அவர் கண்ட கனவுதான் என்ன? சுதந்திரம் வந்துவிட்டால் இந்தியக் குடிமக்கள் எல்லோரும் இந்திய நாட்டு மன்னர்கள், எல்லோரும் சமம் என்று கனவு கண்டார் பாரதி. அந்தக் கனவு பலித்ததா?
சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா ஜனநாயக நாடாக ஆனது என்பது உண்மைதான். அதற்கு முன் நம்மை ஆண்டவர்கள் இங்கிலாந்திலிருந்து அனுப்பிவைக்கப்படுவார்கள். இப்போது நம்மை ஆளுபவர்களை நாமே தேர்தெடுத்துக்கொள்கிறோம். நமக்கென்று ஒரு அரசியல் சாசனம் இருக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் மூலம் அதில் மாற்றங்கள் கொண்டு வரவும் நம்மால் முடியும். ஆனால் எல்லாப் பிரதிநிதிகளும் ஜனநாயக முறையில், அதாவது பணம், கள், ஜாதி, பயமுறுத்தல் முதலியவற்றின் பிரயோகம் இல்லாமல்- தேர்தெடுக்கப்படுகிறார்களா? அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஜனநாயக முறையில் அவர்கள் செயல்படுகிறார்களா? ஜனநாயக ஆட்சியில் மக்கள் கண்ணியத்தோடு சமமாக நடத்தப்படுகிறார்களா என்ற கேள்விகளுக்கு ஆமாம் என்று நம்மால் பதில் கூற முடியுமா?
சுதந்திரப் போராட்டத்தில் தன்னலமின்றி ஈடுபட்டவர்கள், தேசத் தந்தை காந்திஜியோடு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூட சுதந்திரத்திற்குப் பின் அரசியலில் பங்கேற்ற போது சுயநலவாதிகளாக மாறினார்கள். தவறான வழிகளில் சொத்துகளைக் குவித்தார்கள். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களுக்கு இப்போது நாட்டைப் பற்றி என்ன அக்கறை இருக்கும்? சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு பிறந்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சுதந்திரம் பெறுவதற்குத் தியாகிகள் செய்த தியாகங்கள் பற்றியெல்லாம் அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் இவர்கள் விரும்பவில்லை. இதனால் நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களின் கஷ்டங்களைப் பற்றியோ இவர்களுக்கு கவலை இல்லை. சுதந்திர இந்தியா ஊழல் மலிந்த நாடாக, உலக அரங்கில் ஊழலில் முதல் இடத்தைப் பெற்ற நாடாக உருவாகியது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த நாட்டுப்பற்று எங்கே போய் ஒழிந்துகொண்டது என்று தெரியவில்லை.
ஆண்டுகள் செல்லச் செல்ல சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி ஊழல் புரிவோர் நிறைந்த கட்சியாக மாறத் தொடங்கியது. சுதந்திரத்திற்காகப் போராடிய கட்சி என்ற பலத்தை வைத்துக்கொண்டே காங்கிரஸ்காரர்கள் பணம் சேர்க்கத் தொடங்கினர். அரசியல் பதவிகள் கிடைக்காத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தனிக் கட்சி ஆரம்பித்தனர். காங்கிரஸில் பல பிரிவுகள் தோன்றின.
காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல, மற்றக் கட்சிகளிலும் பல பிரிவுகள் தோன்றின. பிராமண ஆதிக்கத்தை ஒழிக்கப் பெரியார் ஆரம்பித்த திராவிடக் கட்சி இன்று பலவாறாகப் பிரிந்து கிடக்கின்றது. இந்தக் கட்சிகளுக்கிடையே கொள்கைகளில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. பதவியும் அதிகாரமும் தங்கள் கைகளில் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தார்கள். பெரியார் கட்சி ஆரம்பித்ததின் நோக்கங்களையெல்லாம் இவர்கள் மறந்து எத்தனையோ காலம் ஆகிவிட்டது. இவர்கள் மனத்தில் இப்போது இருப்பதெல்லாம் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் எப்படிச் சொத்துச் சேர்ப்பது என்பதுதான். பெரியார் ஆரம்பித்த கட்சியின் பெயரால் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு, பெரியாரின் சீடர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக்கொண்டு காலம் தள்ளுபவர்களை பெரியாரின் ஆவி மன்னிக்குமா?
பிரிட்டிஷை எதிர்த்துப் போராடியபோது இந்தியா என்ற ஒரு தேசத்திற்காகப் போராடினார்கள். சுதந்திரம் வந்த பிறகு அந்த எண்ணம் போய் என் மாநிலம், என் மொழி, என் ஜாதி என்று குறுகிய மனப்பான்மையில் போராடத் தொடங்கினர். அப்போது இந்தியாவிற்கு பிரிட்டன் ஒன்றுதான் எதிரி. சுதந்திரத்திற்குப் பிறகு ஜாதிச் சண்டை, மொழிச் சண்டை, மாநிலங்களுக்கு இடையே சண்டை என்று பல எதிர்மறைகள் ஏற்பட்டன. ‘எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே, பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே’ என்ற பாரதியின் தீர்க்கதரிசனம் என்னவாயிற்று?
அது மட்டுமல்ல, பெரும் பணம் படைத்தவர்களும் அரசியலில் அதிகாரம் பெற்றவர்களும் தங்கள் பண் பலத்தையும் அதிகார பலத்தையும் உபயோகித்துத் தங்களை மேலும் பலப்படுத்திக்கொண்டனர். லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் சகஜமாகிவிட்டது. நிர்வாண மனிதர்கள் மத்தியில் கோவணம் கட்டியவன்தான் பைத்தியக்காரன் என்பது போல் லஞ்சம் வாங்காதவன் பிழைக்கத் தெரியாதவனாகக் கருதப்படுகிறான். ‘நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே, கெட்ட நயவஞ்சக்காரனுக்கு நாசம் வந்ததே’ என்றார் பாரதி. ஆனால் இப்போது ஊழல் புரிபவர்களும் மற்றவர்களை ஏமாற்றிப் பணம் சேர்ப்போரும் அல்லவா கெட்டிக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள்; பெரிய மனிதர்களாகக் காட்சி அளிக்கிறார்கள்?
படித்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போனாலும் கல்வித்தரம் உயர்ந்ததாகத் தெரியவில்லை. பகுத்தறிவு வாதங்கள் எல்லாம் எங்கோ போய் ஒளிந்துகொண்டன. மூட நம்பிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாட்டுக் கோயில் ஒன்றில் பூசாரிகள் பக்தர்கள் தலைகளில் தேங்காயை உடைக்கிறார்கள். இது என்ன கொடுமை. சிலருக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு நேர்த்திக்கடனாம். இதில் பங்கு கொண்ட பக்தர்களுக்கும் சரி, பூசாரிகளுக்கும் சரி ஏன் புத்தி இப்படிக் கெட்டுப் போயிருக்கிறது என்று தெரியவில்லை. இப்படிப் பட்ட மக்களைப் பார்த்து ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று பாரதி மனம் புழுங்கினான். எல்லோரும் கல்வி கற்று, பகுத்தறிவு பெற்று நேர்மையாக வாழும் காலம் வரும் என்று பாரதி கண்ட கனவு எங்கே?
பாரதத்தாயே, உன் கைகளுக்கு அந்நியன் பூட்டியிருந்த விலங்குகளை அறுத்தெறிந்தோம். ஆனால் உன் மக்களே உனக்குப் பூட்டியிருக்கும் லஞ்சம், ஊழல், மோசடி, அரசியல்வாதிகள் அடிக்கும் பகல் கொள்ளை இவற்றையெல்லாம் எப்போது களைந்தெறியப் போகிறோம்?
பாரதி கண்ட சுதந்திர பாரதம் எங்கே? இன்று நாம் காணும் சுதந்திர இந்தியாவிற்காகவா அவன் பாடினான்; ஆடினான்?