எப்படிக்கொண்டாட வேண்டும் சுதந்திரத்தை?!!..

0

கேப்டன் கணேஷ்

 

காலையில் நேரமே எழுந்து, குளித்து, நல்லுடை உடுத்தி, பள்ளி அல்லது அலுவலகம் சென்று, ஏற்றப்படும் மூவர்ண தேசியக் கொடிக்கு வணக்கம் வைத்து, காந்தி, நேரு, படேல் மற்றும் பிற விடுதலைப் போராட்ட தியாகிகளைப் பற்றி முக்கிய விருந்தினர் விடுக்கும் வழக்கமான உரைகளைக் கேட்டுவிட்டு, வழங்கப்படும் இனிப்புக்களை வாங்கிச் சுவைத்துவிட்டு, நேரே இல்லம் திரும்பி, தொலைக்காட்சியில் ‘சிறப்பு மானாட மயிலாட’ பார்த்து ‘சுதந்திரத்தை’க் கொண்டாடுங்கள் என நான் எழுதுவேன் என நீங்கள் எதிர்பார்த்தால் மேற்கொண்டு படிக்காதீர்கள் இக்கட்டுரையை!

‘சிந்துஸ்தான்’, பிறகு ’இந்துஸ்தான்’, பிறகு ‘பாரதம்’, சுதந்திரத்தின் பின் ‘இந்தியா’.  மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இன்றைய இந்தியர்கள் பரந்த மனம் மிக்கவர்களாய் இருந்தனர்.  வரிசையாய் படையெடுப்புக்கள்.  ஆளும் இனத்தை, படையெடுத்து வந்த புதிய இனம் வென்றது.  ஆட்சி அதிகாரம் வரிசையாய் மாறிக்கொண்டே வந்தது. ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் வெளியிலிருந்து வந்த இனங்கள், இந்தியர்களுடன் இரண்டறக் கலந்தன.  இன்றைய இந்தியர்களிடையே, இவர் இவ்வினத்தைச் சார்ந்தவர் என பாகுபாடு காண இயலாத வகையில் ஒருமைப்பாடு மிளிர்கிறது!

பல்வேறு இனங்கள் ஆண்டாலும், அனைத்து இனங்களும் இந்தியாவை தன் தாய்நாடாய் தான் கருதின!  எடுத்துக்காட்டாக துருக்கியர் மற்றும் முகலாயர்கள்!  இவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  இப்படியாக வெளியில் இருந்து வந்த அனைத்து இனங்களும் ’இது நம் நாடு, இதனை நன்முறையில் பாதுகாத்து, ஆண்டு, முன்னேற்றமடையச் செய்ய வேண்டும்’ என்று தான் நினைத்தன, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை!

ஐரோப்பியர்களின் கடல் வழிப் போக்குவரத்து ஏறக்குறைய ஐநூறு வருடங்களுக்கு முன்பே தொடங்கினாலும், அவர்களின் அடங்காத செல்வப் பசி உச்சம் தொட்டது முன்னூறு வருடங்கள் முன்பு தான்.  போர்ச்சுகீசியர் கடல் வழி கண்டுபிடித்தாலும் அவர்களைத் தொடர்ந்து வந்த டச்சு, பிரென்சு மற்றும் ஆங்கிலேயர் பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.  விளைவு இவர்கள் அனைவரும் இங்கே கடை விரிக்கத் தொடங்கினர்.

அன்றைய ஆட்சியாளர்களும் மக்களும், ஐரோப்பியரை பஞ்சம் பிழைக்க வந்த கூட்டமாய்த் தான் பார்த்தனர்.  ’நம்மால் தான் இவர்களின் வியாபாரம் ஓடுகிறது!  இவர்களின் வயிற்றுப் பிழைப்பு நம் கைகளில்!’ என்ற மாயைத் தோற்றத்தில் மக்கள் மகிழ்ந்திருந்தனர்.  வந்த ஐரோப்பியரிடையே வணிகப் போட்டி, அதிகாரப் போட்டியின் காரணமாக நடந்தன நாய்ச்சண்டைகள் பல.  இந்தியாவோ, நாய்ச் சண்டைகள் நடக்கும் மைதானமாகிப் போனது.  சண்டையிட்டவை ஐரோப்பிய நாய்கள்.  கடிபட்டதென்னவோ இந்திய மக்கள்.  புரையோடியதென்னவோ இந்திய உணர்வுகள்.

வியாபாரம் செய்ய வந்த வணிகர்கள், ஓநாய்களாய் உருமாறி நாட்டினைக் கபளீகரம் செய்தது கயமைத்தனம்!  அவர்களால் நமது முன்னோர்களின் மனத்தில் ஆழமாய் விதைக்கப்பட்ட  நச்சு விதை தான் அடிமைத்தனம்!  ’நாம் அடிமைத்தளையில் இருக்கிறோம்!’ என்பதை உணரக் கூட முடியாதவாறு மக்களை மாயக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து அடைத்தனர் ஆங்கிலேயர்கள்.  கல்வி மறுக்கப்பட்டது.  முக்கிய பொறுப்புள்ள பதவிகள் மறுக்கப்பட்டன.  மீறி பதவிகள் வழங்கினாலும், தங்களுக்குப் பக்கவாத்தியம் இசைக்கும் இந்தியப் புல்லுறுவிகளையே தேர்ந்தெடுத்தனர் ஆங்கிலேயர்கள்.  இப்புல்லுறுவிகளின் துணை கொண்டு, இன்னமும் நானூறு ஆண்டுகளுக்கு அனைத்து ஆங்கிலேயர்களும் வசதிகளுடன் வாழும் அளவிற்கு இந்தியச் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன.  அனைத்து செல்வங்களும் கிழக்கிந்தியக் கம்பெனியாலும் இங்கிலாந்து அரச குடும்பம் மற்றும் சபையினரால் பிரித்துக்கொள்ளப்பட்டன.  ”ஊரான் வீட்டு நெய்யே……”!!!!!!

ஷேர் ஷா சூரி என்ற இஸ்லாமிய தளபதி,  முகலாய மன்னர் ’பாபர்’ ன் தளபதியாக இன்றைய பீகார் பகுதியின் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்தவர்.  பாபரின் மறைவிற்குப் பிறகு, அவரது வாரிசான ஹுமாயூன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்ட போது ஷேர் ஷா சூரி ஆட்சியைக் கைப்பற்றினார். வட இந்தியா மற்றும் மத்திய இந்தியா ஆகியன ஒருங்கிணைந்த பகுதிகளை சில காலம் ஆண்டார்.  இவரின் திட்டங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் இன்றளவும் வரலாற்று ஆய்வாளர்களால்  புகழப்படுகின்றன.  பின்நாளில் வந்த முகலாய பகதூர்ஷா அக்பரைவிடவும் இவர் திறமை வாய்ந்தவர் எனக் கருதப்படுகிறார். சூரியின் சீர்திருத்தங்களுக்கு முக்கிய காரணம் அவர் இந்தியாவை தன் நாடாய்க் கருதியதுதான்!

ஆங்கிலேயர்களும் திட்டங்கள் தீட்டினர். அவற்றைச் செயல்படுத்த செலவீனங்களையும் எதிர்கொண்டனர். எதற்காக? சாலைகள் அமைத்தனர்.  இருப்புப் பாதைகள் அமைத்தனர். எதற்காக? இந்திய முன்னேற்றத்தை மனத்தில் கொண்டா? இல்லை! அமைக்கப்பட்ட சாலைகளும், இருப்புப் பாதைகளும் அவர்களின் செல்வச் சுரண்டலை ஊக்குவிக்கும்.  கொள்ளையைத் துரிதப்படுத்தும்! இங்கே ஆங்கிலேயர் செய்த செலவீனங்கள் இங்கிலாந்துப் பணம் அல்ல.  இங்கே சுரண்டிய  செல்வத்தில் ’காக்காய் கடி’ கடித்து இந்தியர்களை நோக்கி வீசப்பட்ட எலும்புத் துண்டு.

இப்படி இருந்த காலத்தில், ஆங்காங்கே, சுதந்திர தாகத்தின் வெப்பத்தால் புரட்சித் தீப்பொறி எழுந்தாலும், அவையனைத்தும் கையூட்டு, சூழ்ச்சிகள், கபட ஒப்பந்தங்கள் போன்ற சாக்கடை நீரினால் ஆங்கிலேயர் அணைத்தனர்.  இந்தியாவில் கையூட்டை தொடக்கிவைத்த பெறுமை ஆங்கிலேயரையே சாரும்!  ஒவ்வொரு ஒப்பந்ததையும் இறைவனைப் பொதுவாய் வைத்து எழுதுவர் ஆங்கிலேயர்.  தக்க சமயத்தில் ஒப்பந்தத்தை மீறி அதை ஒன்றுமில்லாமல் செய்வர்.  இப்படியாக இவர்கள் இந்தியர்களை மட்டுமல்ல, இறைவனையும் ஏமாற்றினர்!  (இது நடந்ததைக் கூறும் ஒரு கட்டுரை.  காழ்ப்புணர்ச்சியைத் தூண்டக் கூடிய ஒன்று அல்ல!)

இவ்வாறு ஆங்கிலேயர் அணைத்த ஒரு நெருப்பு தான், 1857ல் நடந்த ’சிப்பாய்ப் புரட்சி’ என ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட முதலாம் இந்திய சுதந்திரப் போர்!  வெவ்வேறு இடங்களில் வெடித்த இப்புரட்சி ஒருங்கிணைக்கப் படாவிட்டாலும், இந்தியாவை இனி அதிக நாட்கள் சுரண்ட முடியாது என்ற எண்ணத்தை ஆங்கிலேயர் மனத்தில் உள்ளூர விதைத்தது இந்நிகழ்வு!  இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றால், நான் ஒரு புத்தகமே போட வேண்டும்! இதற்குப் பிறகு என்ன நடந்தது என நான் கூறத் தேவையில்லை.  நீங்களே நன்கு அறிவீர்!

கிழக்கிந்தியக் கம்பெனியாலும், ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும், இந்திய சுய ஆட்சி அதிகாரம் கோரியவர்கள் தீவிரவாதப் போராளிகளாய்த் தான் பார்க்கப்பட்டனர்.  மிதவாதிகளாய்ச் செயல்பட்ட காந்தியும் அவரது தொண்டர்களும் நாடு முழுவதும் சிறையிடப்பட்டனர்.  உப்புக் காய்ச்சினர்,  கப்பல் ஓட்டினர், செக்கு இழுத்தனர், கசையடி பட்டனர், நாடு கடத்தப்பட்டு அந்தமான் ‘காலா பானி’ சிறையில் அழுகி இறந்தனர் இந்தியர்கள்.

இந்நிலையில் நாம் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள் மட்டுமல்லாமல், அவர்களை ஒருங்கிணைக்க உறுதுணை புரிந்த ஆலன் ஆக்டேவியன் ஹ்யும், வில்லியம் வெட்டர்பன், அன்னி பெசண்ட் அம்மையார் போன்றோருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.  ஹ்யும் மற்றும் வெட்டர்பன் மற்ற இந்தியத் தலைவர்களோடு இணைந்து உருவாக்கிய ஒரு அமைப்பு தான் இந்திய தேசிய காங்கிரஸ்.  இன்றைய காங்கிரஸ் -ன் மூலம்.  இன்றைய காங்கிரஸ் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.  இங்கு நான் அரசியல் பேசவில்லை!

சட்ட ரீதியிலான கூடுதல் உரிமைகளை இந்தியர்களுக்கு வழங்கிய ரிப்பன் பிரபு, கடைசி நிமிடம் வரை சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்தி, வேறு வழி இல்லாமலும், மனமில்லாமலும் இந்தியாவை பிரிக்க சம்மதித்த மவுண்ட் பேட்டன் பிரபு ஆகியோரையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.  இவர்கள் அனைவரும் இந்தியாவில் வாழ்ந்து பார்த்தவர்கள்.  இந்தியருக்கு எதிரான கொடுமைகளையும், அவர்கள் சுரண்டப்படுவதையும் அருகில் இருந்து பார்த்து உணர்ந்தவர்கள்.  மனம் பரிதவித்தவர்கள்.  அவர்களின் மனித நேயத்திற்கு நன்றி.

நம் நாட்டினை ஆங்கிலேயரிடம் இருந்து மீட்க இவ்வளவு இடர்கள்!  எவ்வளவு கண்ணீர், செந்நீர், மரணம், தியாகம்!

ஒரு வழியாக 1947ம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 15ம் நாள் இந்தியா தனது முன்னூறு ஆண்டுகால அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற்றது. ஆங்கிலேயர்கள் நம்மை சுதந்திரமாய் தான் விட்டுச் சென்றனர்.  நம்மை அடுத்துக் கைப்பற்றியவர்கள் நமது அரசியல்வாதிகள்.  இவர்களிடம் இருந்து நம்மை யார் விடுவிப்பது!

அனைத்தையும் சொல்லாமல், சில கருத்துக்களை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன். 1997 ம் ஆண்டு இந்திய 50ம் ஆண்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த இராணி விக்டோரியா அவர்களிடம் பல இந்திய அரசியல்வாதிகளும் கோஹினூர் வைரத்தைத் திருப்பித்தர வேண்டுகோள் விடுத்திருந்தனர்.  ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்பும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அடிமைப்படுத்திய அதே நாட்டின் இராணியை அழைத்தது வெட்கக்கேடு.  அவரிடம் வைரத்தைத் திருப்பிக் கேட்டு வேண்டுகோள் வைத்தது அதைவிடக் கேவலம்.

இந்தியா காமன்வெல்த் அமைப்பில் ஒரு உறுப்பினராக நீடிக்க வேண்டுமா? காமன்வெல்த் உறுப்பினர் தகுதி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகிறதோ இல்லையோ! காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளால் கட்டாயம் பல ’கல்மாடிகளும்’, சில ’ஷீலா தீட்சித்’களும்  உருவாவதைத் தடுக்க முடியுமா???!!!

ஐயா! மற்றும் அம்மையீர்! அன்றைக்கு குற்றவாளிகளை நாடு கடத்தும் நிலமாகப் பயன்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவும் ஒரு காமன் வெல்த் நாடு.  இன்றைய கட்டப் பஞ்சாயத்து நாடான அமெரிக்காவின் அண்டை நாடாகிய கனடாவும் ஒரு காமன் வெல்த் நாடு. என்ன ஒரு அதிசயம்!  இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற அமெரிக்கா ஒரு காமன் வெல்த் நாடு அல்ல!  அமெரிக்கா ஒரு வல்லரசு!  இந்தியா வல்லரசாகி தானும் கட்டப் பஞ்சாயத்து செய்தால், நாமும் காமன் வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்க அவசியமில்லையா!  ஆனால் கட்டப் பஞ்சாயத்து செய்ய நமது அரசியல்வாதிகள் முதுகெலும்பு உள்ளவர்களா?  அண்டை நாட்டு அடிவருடிகளாய் இருந்தால் கூட பாதுகாப்புக் கருதி மன்னித்துவிடலாம்!  இவர்கள் ஆதிக்க நாடுகளின் அடிவருடிகளாய் இருக்கின்றனரே! என்ன செய்ய?

முன்னாள் குற்றவாளிகளின் குடியிருப்பான ஆஸ்திரேலியாவில் இன்றைக்கு ஒரு இந்தியனின் நிலை என்ன? இந்தியன் சந்தேகிக்கப்படுகின்றான்! நிச்சயம் தாக்கப்படுகின்றான்! அல்லது அனேகமாகக் கொல்லப்படுகின்றான்!  படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இது தான் கதி!  ஆஸ்திரேலிய அரசு வீராவேச அறிக்கைகள் விடுக்கின்றது! ”குற்றவாளிகளை கைது செய்வோம்!”  குறித்துக்கொள்க, இந்தியர்களே! ஒரு நாளும் ”குற்றவாளிகளை தண்டிப்போம்!” என ஆஸ்திரேலிய அரசு சொன்னதில்லை!  ஏனென்றால் அவர்கள் ஆஸ்திரேலியர்கள்!  நாம் இந்தியர்கள்! கேவலம் “Expendable Commodity!”!  உங்களுக்கு உறைக்குமா இந்தியர்களே!

சவால் விடுகின்றேன்!  எவ்வளவு பேர் தங்களின் வாரிசுகளைத் திருப்பி அழைப்பீர்? எத்தனை பேர் ஆஸ்திரேலியா செல்ல மறுப்பீர்?

சுதந்திரம் வாங்கி அறுபத்தி நான்கு ஆண்டுகள் ஆகிறது.  ஆனாலும் இன்றைக்கும் ஆங்கிலேயர் பார்வையில் நாம் நாய் மற்றும் பன்றிகள் தான்!  இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களை கேளுங்கள்!  அவர்களின் அடி ஆழ மனத்தைத் தொட்டு ஆணையிட்டுச் சொல்லச் சொல்லுங்கள்!  இன்றைக்கும் நிறவெறி அடிப்படையில் இங்கிலாந்து மக்கள் நம்மவரை மறைமுகமாகத் தரக்குறைவாகத்தான் நடத்துகின்றனர்!  தடுக்க முடியுமா இந்தியாவின் ’மாண்புமிகு’க்களே?

இது கற்பனையில் நான் வைக்கும் குற்றச்சாட்டு அல்ல! துரதிர்ஷ்டவசமாக உலகம் மொத்தமும் பார்த்த, பகிர்ந்த, பரிகசித்த ஒரு நிகழ்வு! பிக் பிரதர் (Big Brother) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி!  இதில் இந்திய நடிகை ஒருவர் தரக்குறைவாக நடத்தப்பட்டதையும், அவர் மீது  நிறவெறி காட்டப்படவில்லை என நிரூபிக்க, ’ஜேட் கூடி’ என்ற பெண்மணி கட்டாயப் படுத்தப்பட்டு, இந்தியா அனுப்பப்பட்டதையும், அவர் இந்தியர்களுடன் ஆடிப் பாடிப் புகைப்படம் எடுக்கொண்டு போலியாகச் சிரித்ததையும், இங்கிலாந்து திரும்பியதையும் நீங்கள் மறக்க முடியுமா?  அதே ’ஜேட் கூடி’ தன் பிள்ளையை அனாதையாய் விட்டுவிட்டு புற்றுநோயால் இறந்ததைத் தான் மறக்க முடியுமா? இறைவன் செயல் என்று இந்தியர் நாம் சொல்வோம்! சாத்தான்களின் தூண்டுதலால் இந்தியரிடம் உறவாடிய ’ஜேட் கூடி’ஐ இறைவன் தண்டித்தார் என அங்கிலேயர் சொல்வார்கள்!

உங்களின் நண்பர்களையும், பிள்ளைகளையும் தோண்டித் துருவிக் கேட்டுப் பாருங்கள்!  செல்வம் தவிர்த்து உண்மை சொல்ல அவர்கள் உண்மையான இந்தியராய் இருத்தல் வேண்டும்! முடியுமா அவர்களால்?

இதற்கான காரணங்களை இந்த சுதந்திர தினத்தின் சிந்தனையாக எடுத்துக்கொள்வோம்! ஒவ்வொரு நாளும் நாம் எண்ணிப் பார்க்காவிட்டாலும் இன்றாவது நினைத்துப் பார்ப்போமே!  வழக்கமான நமது சுதந்திர தின கொண்டாட்டத்தை சற்றே மாற்றுவோம்!  இன்றைய இளைய தலைமுறையினருக்கும் , குழந்தைகளுக்கும் சற்றே ’இந்தியம்’ புகட்டுவோம்!  மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராளிகளை நினைவு கூர்வோம்!

இந்தியர்களாய் இருப்போம்! இந்தியர்களாய் உணர்வோம்! சுதந்திரத்தைப் போற்றுவோம்!

வாழ்க இந்தியா!  வெல்க இந்தியா!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *