பொங்கிவரும் ஆனந்தப்பொங்கல் ..!

ராஜராஜேஸ்வரி ஜெகமணி

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்  

பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே 

பொங்கல் பிறந்ததும் பொங்கிவரும் பொங்கலிது

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நெல்லுக்கும் உழவர்க்கும் மடிதரும் நிலம்

உயிர்தரும் நீர் மூச்சுதரும் காற்று ஒளிதரும் சூரியன்

மழைதரும் ஆகாயம் என்ற ஐம்பூதங்களுக்கும்

நன்றியோடு விழா எடுக்கும் பொன்னாள்

பொங்கும் மங்களம்எங்கும் பொழிய

பொங்கலே நீ… பொங்கி….வழிக

பழையன கழிந்து புதியன புகுந்துதடைகள் தகரும்

தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்

நினைவுகள் நிஜமாகும்

கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும்

தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

 

அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம், முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால் பக்குவம் உண்டாகி “பொங்கல்’ போல் அருட்பிரசாதமாக்கி

உண்மையை உணர்ந்து நம்மை நாமே பக்குவமாக்கி இறைவனுக்கு அர்ப்பணிப்பதே பொங்கல் கொண்டாடுவதின் தத்துவம் …

பொங்கல் திருவிழா நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத வழிபாட்டுக்குஉரிய நாளாக திகழ்கிறது … 


கிராமங்களில் பொங்கலிடும் மண்பானை பூமியில் இருந்து களிமண்ணால் செய்யப்படுகிறது. 


பானையில் நீர் விட்டு, பனை ஓலை மூலம் நெருப்பு வைத்து அரிசியைக் கொதிக்க வைக்கிறோம்.

நெருப்பு எரிவதற்கு காரணமாக காற்று இருக்கிறது. 


வெட்ட வெளியில் பொங்கல் வைப்பதன் மூலம் ஆகாயத்தை பார்க்கிறோம். பொங்கல் வைக்கும் புகையும் வளிமண்டலத்துக்கு நன்மையையே செய்கிறது. 


இதன்படி பஞ்சபூதங்களை வழிபடும் வைபவமாக பொங்கல் அமைந்துள்ளது.

 

கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை.

நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு தித்திப்பாய் இனிக்கும்.

இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது.

உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும்.

கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது.

வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்னும் தத்துவம் உணர்த்தவே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

மங்கலகரமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்.

மண் எத்தகைய தன்மையுடையதாக இருந்தாலும், அதை தனது இருப்பிடமாக எடுத்துக்கொண்டு, அங்குள்ள நீர் வளத்தைப் பயன்படுத்தி விளைந்து விடும். கிழங்கு வகையைப்போலவே, மணப்பெண்ணும் தனது கணவன் வீட்டிலுள்ளவர்கள் எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

 தன்னையும், புகுந்த வீட்டையும் வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்பட வேண்டும்.

இதை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில் உருளை, மரச்சீனி, சீனிக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு கிழங்கு வகையை கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மகிமை மிக்க மஞ்சள்   இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்வதால் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக் கொள்கிறார்கள்.

புத்தாடையில் மஞ்சள் தடவி அணிகிறோம்.

எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம்.

திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று   சடங்கு இருந்தது.

முனைமுறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிக்கவேண்டும் …

எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம்.

சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழிஅனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தங்கத்தான்.

மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுகிறோம்.

அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்” மஞ்சள் கீறுதல் ‘ என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே  நோக்கம்..

இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *