ஒரு வேப்பமரமும் சில சாமிகளும்

ஸ்ரீஜா வெங்கடேஷ்

வேப்பமரத்தடியில நிண்ணு உச்சி மரத்தையே வெறிச்சுப் பாத்திக்கிட்டுருந்தா செல்வி. அவ கண்ணுல இருந்து தண்ணீ கொட்டிக்கிட்டே இருக்கு.சின்னப் புள்ளே , மிஞ்சிப் போனா வயசு பத்திருக்கும் , பச்ச மண்ணு அதுக்கு என்ன அப்படி கஷ்டம் இருக்கும்னு கேக்கீயளா? அந்தப் புள்ளைக்கும் இருக்கு , துக்கம் இருக்கு. என்ன துக்கம்னு சொன்னா “பூ! இம்புட்டுத்தானா இதுக்கா இத்தன சோகம்”னு சொல்லிட்டு நீங்க பாட்ல போயிருவீய!  அவ சோகம் உங்களுக்குப் புரியணுமானா மொத இருந்து சொன்னாதான் வெளங்கும் ,.  இப்பம் கதைக்குப் போறதுக்கு முன்னக்கூட்டி அவ ஏன் அளுதான்னு மாத்திரம் சொல்லிப் போடுதேன். அவ நிண்ணுக்கிட்டு இருந்தால்லா ஒரு வேப்ப மரம் , அதான் அவுக வீட்டு வாசல்ல நிக்கே? அந்த மரத்த வெட்டப் போறாகளாம். அதான் இப்புடி அளுது பிள்ள.

“மரத்த வெட்னா இவளுக்கு என்ன? பூமி சூடு சாஸ்தியாகிக்கிட்டே போகுதுண்ணு சொல்றாகளே ஒரு வேள அது தெரிஞ்சு அழுகிறாளோ”  அப்புடீன்னு படிச்சவுக நீங்க நெனச்சிரப் படாது. அந்த ஈர மண்ணெல்லாம் ஒரு எளவும் அந்தப் பட்டிக்காட்டு களுதக்கித் தெரியாது. “பின்னே?” . நானும் ஒரு பட்டிக் காடு தானே எனக்கு மட்டும் எதை மொத சொல்லுதது , எத பொறவு சொல்லுததுண்ணு தெரியுமா? ஏதோ ஆரமிச்சிட்டேன் , பொறுமயாக் கேளுங்க.

அம்பாசமுத்திரத்திரத்துல இருந்து தெங்காசி போற மெயின் ரோடு இருக்குல்லா?  அதுல கடயம் தாண்டி கொஞ்ச நேரத்துல வருமே மத்தளம் பாறை ,  அது தான் நம்ம பிள்ள செல்விக்கி ஊரு. பஸ் ஸ்டாப்ப விட்டு கொஞ்ச தூரம் நடந்தா சின்னச் சின்ன வீடுங்க வரிசையா வரும்.  அதுல ஒரு வீட்டு வாசல்ல கொட புடிச்சா மாரி ஒரு வேப்ப மரம் நிக்கில்லா அதான் செல்வி வீடு. அவுக வீட்ல மொத்தம் மூணே பேரு தான். செல்வி ,  அவுக அம்மா , அப்பா அவ்ளோதான். ஒரே செல்ல மகா அவா. அவுக அம்மா சொல்லுதாப்புல பிள்ள தங்ககொடம் தான். அவுக அப்பா தெங்காசிலேந்து , ஆலங்கொளம் போற பாதையில ஒரு செங்கச் சூள இருக்கு. அதுல லோடு அடிக்க டைவரா இருக்காரு. அம்மா போன நாலாம் வருசம் வரைக்கும் வீட்டுல பீடி சுத்துனா , அப்புறம் தான் யார்ட்டயோ சொல்லி வெச்சு சத்துணவுக் கூடத்துல ஆயா வேல கெடச்சது. அவளும் சம்பாரிக்க ஆரமிச்சா.

செல்விப் பிள்ளக்கி சின்னத்துல இருந்தே வாசல்ல இருக்க வேப்ப மரந்தான் வெளயாட்டுத் தோளி.  அவா தவள்ந்தது , நட பளகுனது எல்லாமே அந்த வேப்ப மரத்தடியில தான். அவளுக்கு ஒரு வாய்ச் சோறு ஊட்டுதது பெரும்பாடு அவா அம்மைக்கி. பொறவு தான் கண்டு பிடிச்சாவோ வாசல்ல நிக்க வேப்பரத்தடியில வெச்சு சோறு குடுத்தா பிள்ள மூஞ்சி காட்டாம சாப்பிடுதுன்னு. செல்வி வளர வளர மரத்து மேல அவா வெச்சிருந்த பாசமும் வளருது. பள்ளிக்கூடத்துல சேத்து விட்டாக செல்விய. போக மாட்டம்ணு ஒத்தக் கால்ல நிண்ணா செல்வி. “மரத்த விட்டு பிரிஞ்சி இருக்கணுமே?”ன்னு அளுகா. பிள்ள அம்மையை விட்டு வரமாட்டேன்னு சொல்லும் , அப்பன விட்டு இருக்கமாட்டேன்னு சொல்லும் இவா வித்தியாசமா வேப்ப மரத்தை நெனெச்சு அளுதா. அவுக அம்மா தான் ஒரு தந்திரம் செஞ்சா “ஏட்டி நீ ஸ்கூலுக்குப் போனா நெறய விஷயம் நடக்கும்லா? அதே ஒம்மரத்துக்கிட்ட சொல்லலாம்லாடி. ஒங்க டீச்சர் பத்தி , பாடத்தப் பத்தியெல்லாம் மரம் தெரிஞ்சிக்கிடும்லா?” ன்னு அவா சொன்னதும் செல்வி வாய் தொறக்காம பள்ளிக்கொடம் போக ஆரமிச்சிட்டா.

பள்ளிக்கொடம் விட்டதும் நேரே வீட்டுக்கு வந்திடுவா செல்வி. புஸ்தகப் பைக்கட்ட வெச்சிட்டு அவுக அம்மை கொடுக்க கடுங்காப்பியயும் , பண்டத்தையும் எடுத்துக்கிட்டு நேரே மரத்தடிக்கு வந்துடுவா. அதுங்கீள தான் சாப்புடுதது , குடிக்கது எல்லாம். செத்த நேரம் மரத்தோட பாடு பேசுவா. ஸ்கூல்ல டீச்சர் எல்லாக் கணக்கும் சரியாப் போட்டான்னு செல்வி முதுகுல தட்டிக் குடுத்தாங்களே அதச் சொன்னா. மரத்துக்கு ஒரே சந்தோஸம். காத்தே அடிக்காம இருக்கச்சில செல இலைங்கள உதுத்துது செல்வி மேல. “இப்படியெல்லாம் நடக்குமா?” அப்டீங்கற சந்தேகம் உங்களுக்கு. இதெல்லாம் அவுக நம்பிக்கயப் பொறுத்த விசயம். செல்வி அப்புடி நம்புனா. அவ்வளோதான். . கொஞ்ச நேரம் களிச்சி செல்விய ஒத்த பிள்ளைங்க வெள்ளாட வருவாக. ஆனா செல்வி மரத்தடிய விட்டு நகரவும் மாட்டா , மத்தவுக மரத்தோட சொந்தம் கொண்டாட விடவும் மாட்டா.

செல்விக்கிப் பிடிக்காத ஆளு யாருன்னு பாத்தா அது பாம்படக் கெளவி தான். அவதான் சாங்கியாலம் காத்தாட வந்து ஒக்காருவா மரத்தடியில.அவ மட்டுமா வருவா? கூடவே வேற செல கெளவிங்களும் வந்து ஊர்ப்பொரணி பேசுவாக.” ஏன் ஆச்சி , ஒங்க வீட்டு திண்ணையில் ஒக்காந்து பேசலாம்லா? ஏன் எங்க மரத்தடிக்கு வாரீக? அப்டீன்னு செல்வி ஒரு நாள் கேட்டுப் போட்டா. பாம்படக் கெளவிக்கு வந்துச்சே கோபம். “ஏட்டி என்ன இது ஒங்க வீட்டு மரமா? விட்டா பட்டா போட்டுருவே போல்ருக்கே? காத்தாட ஒக்கரலாம்னு வந்தா இவா என்ன சீலப்பேன் கணக்கா கொடயுதா? எந்திக்க முடியாதுடி என்ன செய்வே? வந்துட்டா மரத்த சொந்தம் கொண்டாடிக்கிட்டு”ன்னு ஏசுனா. விடுவாளா செல்வி? வயசாளீன்னும் பாக்காம இவளும் பதில் பேசிப் போட்டா. கெளவி சும்மாயில்லாம செல்வி அம்மைட்ட வந்து வத்தி வெச்சுட்டுப் போயிட்டா. அன்னிக்கி செல்விக்கி சரியான அடி. அவுக தாய்மாமா அம்பை வெலக்கு எசக்கி கோயில் பூசாரி வந்து சமாதானப்படுத்துனப்புறம் தான் சரியாச்சு. அதையும் செல்வி மரத்துக்கிட்ட சொன்னா. “நீயே சொல்லு நீ எனக்கு மட்டுந்தானே சொந்தம்? அதை சொன்னா எல்லாரும் என்ன ஏசுதாக , அம்மையும் அடிச்சிட்டா . அம்மை அடிச்சது சரியா? சொல்லு?”ன்னு கேட்டா செல்வி. அப்போ அவளோட மரம் காத்துக்குக்கூட தலையாட்டாம செலயா நிண்ணது. அதப் பாத்து செல்விக்கி சந்தோசம்னா சந்தோசம் அப்டி ஒரு சந்தோசம்..

செல்விக்கி பிடிச்ச இன்னோரு ஆளு அவுக தாய் மாமாதான். எசக்கி கோயில் பூசாரிங்கறதால மொரட்டு மீசையும் , செவந்த கண்ணுமா இருந்தாலும் செல்வியக் கண்டுட்டா மனசெல்லாம் பூவாயிரும் அவருக்கு. என்ன காரணமோ தெரியல அவுரு கல்யாணமே கட்டிக்கிடல. பிள்ளயப் பாக்கணும்னு நெனெச்சாப் போதும் ஒடன்னே பஸ் பிடிச்சிருவாரு. அச்சு முறுக்கு , கடல முட்டாயி , குச்சி முட்டாயின்னு வெத வெதமா வாங்கி வரதால செல்வி அவுரு எப்படா வருவாருண்ணு காத்துக் கெடப்பா. தின் பண்டம் மட்டுமே காரணமில்லே அதுக்கு! அவுரு வந்ததும் “ஏட்டி! ஒம்மரம் எப்படியிருக்கு? என்ன சொன்னுச்சு? என்னியப் பத்தி என்னமுங்கேட்டுதா?”அப்டீம்பாரு. அது செல்விக்கி ரொம்பப் பிடிக்கும். ஒரு தடவ செல்வி கூட படிக்க மாரியம்மா தன் பென்சில செல்வி களவாண்டுட்டான்னு செல்வி மேல பளி போட்டா. ” நான் வேணும்னே எடுக்கலே! பாக்க அது என் பென்சில் மாரியே இருந்துது. அதான் தெரியாம எடுத்துட்டே”ன்னு எவ்வளவோ சொல்லியும் யாரும் கேக்கல. மாரியம்மாளோட சேந்துக்கிட்டு எல்லாரும் இவள “களவாணி , களவாணி” அப்டீன்னு கேலி செஞ்சாக. செல்வி அளுதா பாருங்க அப்டி அளுதா. அதையும் மரத்துக்கிட்ட சொன்னா. இது களிஞ்சு கொஞ்ச நாள்ள மாரியம்மா செல்வியொட மரத்தடிக்கி வெளயாட வந்தப்போ மரத்தோட வேரு தடுக்கி தொபுக்கடீர்னு விளுந்தா. நல்ல அடிபட்டு ரத்தம் வந்திட்டுது. அது மரம் செஞ்ச வேலயில்லாம பின்னே என்னவாம். இத செல்வி சொன்னப்போ அவ தாய்மாமா மட்டுந்தான் தான் நம்புனாரு.

அன்னைக்கி செல்வி ஸ்கூலுக்குப் போகல. அவுக ஆச்சிக்கித் திதி. அதுனால செல்வி ஒரு வடயக் கடிச்சிக்கிட்டு வளக்கம் போல மரத்தடியில வேடிக்கப் பாத்துக்கிட்டு இருந்தா. ஒரு நாளும் இல்லாத திரு நாளா அன்னிக்கு ஒரு ஜீப்பு வந்துது. அதிகாரிங்க எல்லாம் எறங்குனாக. ஒரு டேப்ப வெச்சி ரோட்ட அப்படியும் இப்படியும் அளந்தாக. மரத்தையும் அளந்தாக. என்னமோ குசுகுசுன்னு பேசிக்கிட்டாக. செல்விய மதிச்சு அவா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல ஆளில்லே!. செல்வி போயி அவுக அப்பாவக் கூப்பிட்டுக்கிட்டு வந்தா. அவுரு வந்து கேட்டாரு.அப்பந்தான் சங்கதி வெளிய வந்துது. ரோட்ட அகலப் படுத்தப் போறாகளாம். அந்த மரம் அதுக்கு எடஞ்சலா இருக்கறதால அத வெட்டப் போறாகளாம்னு தெரிய வந்துது. அப்பலேர்ந்து அள ஆரமிச்சவதான் செல்வி. இன்னமும் நிறுத்தல. யார்கூடவும் பேசவும் மாட்டங்கா. சோறு தண்ணி செல்லலே. வீடே என்னவோ எளவு வீடு மாரி ஆயிட்டது.

பஸ்ஸுல வந்து எறங்குனாரு எசக்கி கோயில் பூசாரி. வளக்கமா ஓடி வந்து “எனக்கு என்ன மாமா வாங்கியாந்துருக்கே?ன்னு கேக்கற செல்வி ஆளையே காணும். அவுக அம்மையும் “வாருங்க அண்ணாச்சி. நல்ல இருக்கீயளா?”ன்னு ஒப்புக்குக் கேட்டா. வந்தவருக்கு என்னவோ சமாசாரம் இருக்குன்னு வெளங்கிப் போச்சு. பைய விசாரிச்சாரு. செல்வி அம்மை வெளக்கமா சொன்னா. அவருக்கு ரொம்ப மனசு கஷ்டமா ஆகிப் போச்சு. செல்வியக் கூப்டாரு. “பிள்ளய கண் கொண்டு பாக்க முடியலியே! தண்ணியில்லாத பயிரு மாரி வாடிப் போச்சே”ன்னு நெனெச்சவரு செல்வியப் பாத்து “ஏட்டி கண்ணத் தொடை. ஒன் தாய் மாமன் நான் சொல்லுதேன். அந்த மரத்த வெட்ட விட மாட்டேன். என்ன ஆனாலும் சரி. அந்த மரம் கண்டிப்பா வெட்டுப் படாது. என்னிய நம்புளா! நான் என்னமேனும் செய்யிறே”ன்னு சொன்னாரு. அதைக்கேட்டு செல்வி மொகத்துல கொஞ்சோண்டு சிரிப்பு எட்டிப் பாத்தது.

ஆச்சு இது நடந்தும் ஒரு வாரம் ஆகிப் போச்சு. இன்னும் பத்து நாள்ள மரத்த வெட்டப் போறதா எல்லாரும் பேசிக்கறாக. செல்வி பளயபடி உம்மணாமூஞ்சி ஆயிட்டா. ஒரு வெள்ளிக் கெளம விடிகாலையில ஏதோ சத்தம் கேக்கேன்னு இவா எந்திச்சு அவ அம்மை பெறத்தால வந்து வாசல்ல பாத்தா. யாத்தே! என்ன சொல்ல? செல்வி வீட்டு வேப்ப மரத்தச் சுத்தியும் ஒரே கூட்டம். ஒருவேள மரத்த தான் வெட்டுதாங்களோன்னு செல்விக்கி ஈரக்கொலையெல்லாம் நடுங்கிப் போச்சு. நல்ல வேள அப்பிடி ஒண்ணும் இல்லே. நெறயா பேரு மரத்தச் சுத்தி நிக்காக. பாம்படக் கெளவி சூடம் காட்ட , ஒரு ஆளு குங்குமம் குடுக்காரு. மரத்தச் சுத்தி செவப்புச் சேல கெட்டியிருக்கு. எல்லாரும் மரத்த விளுந்து கும்புடுதாக. இவுகளுக்கு ஒண்ணும் வெளங்கல பாத்துக்கிடுங்க.இவுக இப்புடி நிக்கதப் பாத்துப் போட்டு ஒரு ஆளு , அதான் குங்குமம் குடுத்தாரே அவுரு இவுக பக்கத்துல வந்து “நீங்க முளிக்கதப் பாத்தா ஒங்களுக்கு விசயமே தெரியாது போலுக்கே? அப்படீன்னாரு , இவுக தலயாட்டவும் அவரு சொல்ல ஆரமிச்சாரு.

அம்பை வெலக்குல இருக்குல்லா ஒரு எசக்கி கோயில் அங்க இருக்க பூசாரி மேல நேத்து ஆத்தா வந்து அருள் வாக்காச் சொன்னா பாத்துக்கிடுங்க.ஆத்தா உக்கிரமா  பூசாரி மேல வந்து ஆடுன ஆட்டம் இருக்கே! யாத்தாடி! மனுசனால ஆட முடியாது அப்படியாப்பட்ட ஆட்டம். அப்படி  வந்த ஆத்தா தான் மத்தளம் பாறையில இருக்கற ஒரு மரத்துல வேம்புலி அம்மனா குடியிருக்கதாகவும் , அங்க அவள கும்பிட்ட பேர்களுக்கு கேட்ட வரம் தாரதாகவும் சொன்னா. அந்த மரத்த அடையாளம் காட்டதுக்கு , அது மேல ஒரு செகப்பு சீல இருக்கும்னு சொல்லியிருக்கா ஆத்தா. விடிஞ்சு பாத்தா இந்தா இந்த வேப்பமரத்துல செவப்பு சீல கெட்டியிருக்கு , குங்குமமும் கொட்டியிருக்கு. ஆத்தா சக்தி வாஞ்ச தெய்வம்னு நிரூபிச்சிட்டா. அப்டீன்னு சொல்லி பக்திப் பரவசத்துல கன்னத்துல போட்டுக் கிட்டாரு புதுப் பூசாரி.அதையெல்லாம் கேக்க கேக்க சந்தோசப் பட வேண்டிய செல்விக்கி ஏனோ தெரியல அளுக வந்துது.

மரத்த வெட்ட. வந்த அதிகாரிங்கள பாம்படக் கெளவியும் , புதுப் பூசாரியும் சேந்து பயமுறுத்தினாக. போதாக்கொறக்கி ஊரு ஆளுக வேற  சாமி வெசயம் , மரத்த வெட்டுனா  ஆத்தா பாம்பு ரூபத்துல வந்து தண்டிக்காமே விட மாட்டான்னு சொன்னாக. பாம்புன்னா படையே நடுங்கும்பாக அரசு அதிகாரிங்க எந்த மூலைக்கி? அவுகளும் மனுசங்க தானே? . அதயெல்லாம் கேட்டு  அவுகளும் தெய்வ குத்தம் ஆயிரக்கூடாது, தேவப் பட்டா கொஞ்சம் கெளய மட்டும் அப்பப்போ வெட்டிக்கிரலாம். மரம் பாட்ல ரோட்டோரமா இருந்துட்டுப் போவட்டும்னு முடிவு பண்ணிட்டாக. ஊர் மக்கள் , பாம்படக் கெள்வி , புது பூசாரின்னு எல்லாருக்கும் சந்தோசம் சாடிக்கிட்டு வருது. ஆனா செல்வி மட்டும் பாவம் யானைக மத்தியில பூனக்குட்டி மாரி இருக்கா.

செல்வி மரத்த யாரும் வெட்டல்லே! ஆனா இப்பம்லாம் அந்த மரத்தச் சுத்தி எப்போதும் ஆளுக இருக்காக. அதுவும் அந்த பாம்படக் கெளவி மரத்த விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகள மாட்டம்ங்கா.  புதுப் பூசாரியும் அவளும் மாறி மாறி காவல் இருக்காக மரத்துக்கு. புதுசா உண்டியல் வெச்சது ஒரு காரணமாயிருக்கலாம். சாங்கியால நேரத்துலதான் கூட்டம் இன்னும் சாஸ்தியா இருக்கு. அதனால் செல்வியால அங்ஙன வெளயாட முடியல. இவா மரத்துப்பக்கம் போனாலே எல்லாரும் வெரட்டுதாக. அதுவும் பாம்படக் கெளவி செல்விய கிட்டயே சேக்க மாட்டம்ங்கா. ஏனோ செல்வியால அவள எதுத்து ஒண்ணும் பேச முடியல. கண்ணுல தண்ணீ வெச்சிக்கிட்டு மரத்தையே பாத்துட்டு கெடக்கா.

செல்வி தாய் மாமா முகமெல்லாம் சிரிப்பா வந்தாரு. செல்வி சந்தோசமா இருப்பான்னு நெனெச்சு வந்தவருக்கு இவளப் பாத்ததும் பொசுக்குன்னு போச்சு. “ஏட்டி ஏன் கோட்டிக்காரி மாரி இருக்கே? ஒம் மரத்தத்தான் வெட்டலேல்லா. பொறவு என்ன எளவுக்கு இப்புடி மொகத்தத் தூக்கி வெச்சிருக்கே?”அப்டீன்னாரு. செல்விக்கிக்குப் பேச முடியாமே துக்கம் தொண்டக் குளில நிக்கிது. கண்ணீரு  குத்தால அருவி மாரி கொட்டுது. விக்கி விக்கி அளுதுக்கிட்டே ” மாமா என்னிய மரத்துக் கிட்டயே சேக்க மாட்டங்காக! மாமா ! அது என் ஃப்ரெண்டுல்லா , எல்லாரும் சேந்துக்கிட்டு அத  சாமிங்காக. சாமி கூட எப்புடி மாமா வெளாயடுவேன்? சாமி எப்படி என் ஃபிரெண்டாகும்?” ன்னு கேட்டு ஓன்னு அளுதா. அவுக தாய்மாமா அம்பை வெலக்கு எசக்கி கோயில் பூசாரி பிரமையடிச்சு நெட்ட மரமா நின்னாரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *