வண்ணத் தூரிகைக் காவியங்கள்
தேமொழி
என் தூரிகையின் வண்ணச் சிதறல்களைப் பற்றிய என் எண்ணச் சிதறல்கள், ஒரு மங்கிய ஓவியம் போன்ற காலம் கடந்த தெளிவில்லாத நினைவுகள். நான் ஓவியம் வரையக் காரணமாக இருந்தவர்கள் என் மாதா, பிதா, குரு, மாமா மற்றும் எனது கல்வி.
எனது மிகச் சிறுவயதில், அதாவது ஐந்து வயதில் முதல் வகுப்பில் படித்த பொழுது, குழந்தைகள் தினத்திற்காக இருக்கலாம் ஆனால் சரியாக நினைவு இல்லை, ஒரு ஓவியப் போட்டி நடந்தது. நகரம் முழுவது உள்ள பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றார்கள். என் பள்ளியிலும் என் ஆசிரியை எங்களைப் பேருந்தில் மற்றொரு பள்ளிக்கு ஓவியப் போட்டிக்காக அழைத்துப் போவதாகச் சொன்னார்கள். செய்தி தெரிந்த அம்மா எனக்கு எண் இரண்டை எழுதி, அதற்கு ஒரு மூக்கு(அலகு), கண், அடியில் பானை போல ஒரு பெரிய வட்டம் போட்டு, வயிறு போல வரைந்து ‘வாத்து’ வரையக் கற்றுக் கொடுத்தார்கள். எனவே முதலில் நான் நினைவு தெரிந்து வரைந்த உருவம் வாத்து. பங்கேற்றதை ஊக்கப் படுத்துவதற்காக ஒரு சான்றிதழ் கொடுத்தார்கள். என் அம்மா அதைப் பலகாலம் பத்திரமாக வைத்திருந்தார்கள். அதன் விதி என்ன ஆயிற்று என்று நினைவில்லை. முதல் பரிசு மட்டும் வாங்கியிருந்தேன் என்றால் அம்மா என்ன செய்திருப்பார்களோ தெரியவில்லை.
பயிர்களுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல பிறகு என் சித்திரக் கலையை மதிப்பெண் போட்டு வளர்த்தவர் என் அப்பா. கோடை விடுமுறைகளிலோ, அல்லது கண்ணைக் கவரும் அழகிய படங்கள் கிடைத்தால் அதை என் கையில் கொடுத்து வரையச் செய்து, மூலப் படத்துடன் ஒப்பிட்டு ஒரு மதிப்பெண்ணும் கொடுப்பார். என் தந்தையின் நண்பர் ஒருவர் பொங்கல் வாழ்த்து அனுப்பினார். அவர் சிறந்த ஓவியர் என்பதால் தானே வரைந்த ஓவியங்களை வாழ்த்துக்களாக அனுப்புவார். அவ்வாறு அவர் அனுப்பிய பொங்கல் வாழ்த்தைப் பார்த்து வரைந்ததுதான் இந்த “மஞ்சுவிரட்டு” ஓவியம்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது எனக்கு வண்ண ஓவியம் தீட்ட ஆசை வந்தது. வண்ணங்களும் தூரிகைகளும் வாங்கித் தரச் சொல்லி அம்மாவை நச்சரித்தேன். அம்மா மிகவும் சிறு வயது என நினைத்திருக்கக் கூடும், வாங்கித் தரவில்லை. ஊரிலிருந்து மாமா வந்தார். கடைத்தெருவுக்கு அழைத்துப் போய் ஏதாவது வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்கு திரும்பிச் செல்வது அவர் வழக்கம். ஆனால் அவர் ஏதாவது வேண்டுமா என்று கேட்டால், நாங்கள் அதை வாங்கிக் கொடுங்கள், இதை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்கக் கூடாது என்பது அம்மாவின் கண்டிப்பானக் கட்டளை. ஆனாலும் அதை மீறி, மாமாவிடம் வண்ணங்கள் வேண்டும், தூரிகை வேண்டும் என்று கேட்டகவும் அவர் எதிரிலேயே அம்மாவிடம் திட்டு வாங்கினேன். மாமாவும் தனது தங்கையை சமாதானப் படுத்திவிட்டு நான் கேட்டவைகளை வாங்கிக் கொடுத்தார். இதனால் அவரும் என் கலை ஆர்வத்திற்கு தன்னால் இயன்ற பங்கைச் செய்திருக்கிறார்.
பிறகு என் ஓவிய ஆசிரியர், அவர் பெயர் கங்காதரன் ஆக இருக்கக் கூடும். அவர் பெயர் என்ன என்று கேட்டால் சொல்லியதில்லை. மாணவிகள் நாங்களாகத் துப்பு துலக்கி மாஸ்டரின் பெயர் அதுவாக இருக்கக் கூடும் என முடிவு செய்தோம். மாமா வாங்கித் தந்த வண்ணங்களைக் கொண்டு நான் கன்னா பின்னா என்று வர்ணம் தீட்டி, என் ஓவியப் பாடத்தின் நோட்டுச் சுவடிகளை வீணடித்தாலும் நன்றாக இருக்கிறது என்று ஊக்கப்படுத்தினார். பென்சில் ஓவியம் வரையவே அடுத்த மாணவிகள் முகத்தைத் தூக்கிய பொழுது, நான் தேவை இல்லாமல் வர்ணங்களைப் குழப்பி வெள்ளை அடித்தது அவருக்குப் பிடித்துப் போயிருக்கக் கூடும். எப்பொழுதோ அப்பாவை சந்தித்த பொழுது நான் அருமையாக வரைவதாக அப்பாவிடமும் சொல்லிவைத்தார்.
பிறகு கல்லூரியில் விலங்கியல் பாடம் எடுத்தாலும் எடுத்தேன், எப்பொழுது பார்த்தாலும் ரெகார்ட் நோட்டில் வரைவது தவிர வேறு வேலையே இருந்ததில்லை. வரையத் தெரியாதவர்களையும் ஓவியர்களாக உருவாக்கி அனுப்பியது விலங்கியல் படிப்பு.
வரைவது இருக்கட்டும் ஏதாவது பரிசு வாங்கினாயா? என்று கேட்கக் கூடாது. ஏதோ ஒன்றிரண்டு ஆறுதல் பரிசுகள் அவ்வளவே. கல்லூரியில் ஒருமுறை மூன்றாம் பரிசு, ஓவியர் ஜெயராஜ் கொடுத்த ஆறுதல் பரிசு (அவர் ஜெ… என்று கையொப்பமிட்ட ஒரு கைக்குட்டை) வாங்கியிருக்கிறேன். நான் மிகவும் பெருமையாகக் கருதுவது கல்லூரி நாட்களில் தமிழக அளவில் நடந்த ஓவியப் போட்டியில் பங்கேற்று, பாரதியாரின் “காணி நிலம் வேண்டும்” கவிதைக்கும், பாரதிதாசன் கவிதை ஒன்றிற்கும் வரைந்த வண்ண ஓவியங்களைத்தான். தமிழக அரசு நடத்திய இந்தப் போட்டியில் ஆறுதல் பரிசாக நூறு ரூபாயும், ஒரு சான்றிதழும் கிடைத்தது. ஓவியத்தை தொழிலாகவும், சிறப்புப் பாடமாகவும் கொண்ட ஓவியர்கள் இடையில் பொழுது போக்காக ஓவியம் வரையும் எனக்கும் கிடைத்த அந்தப் பரிசு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
ஆனால், திருமணம், குழந்தைகள் என்று காலப் போக்கில் வாழ்க்கை தடம் மாறிச் சென்ற பிறகு இப்பொழுது படங்கள் அதிகம் வரைவது இல்லை. நான் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை தேடி எடுத்து ஸ்கேன் செய்து வைத்திருக்கிறேன். அந்த சேகரிப்பில் இருக்கும் ஓவியமே இந்த “மஞ்சுவிரட்டு”.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2
அருமை