பொங்கலோ பொங்கல்!
ஷைலஜா
வாழ்வே ஒரு வழிபாடுதான் ! ஆம் ஒவ்வொரு நாளும் வாழ்வது நம் கையில் இல்லை அதனால் தான் பாரதி,’பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்கிறான்.ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வதே வாழ்க்கை…அதனால் தான் ஆங்கிலத்தில் past present future எனப்பிரிக்கிறார்கள்…நிகழ்காலமானது ப்ரஸண்ட் எனப்படுவது அது நமக்கு பரிசுதான். நமக்குக்கிடைக்கும் பரிசை நாம் போற்றி மகிழ்வது இயல்புதானே! வாழ்வை நேசிக்கவேண்டும் வாழ்வைக்கொண்டாட வேண்டும்…எப்படிக்கொண்டாடுவது என்றால் பண்டிகைகளால்தான் வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.
தமிழரில் வெவ்வேறு மதத்தவர்கள் உண்டு. ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு பண்டிகைகள் விழாக்கள் உண்டு. ஆனால் அனைத்து மதத்தினரும் வேற்றுமையின்றி விரும்பிக்கொண்டாடும் பண்டிகை பொங்கல்தான். ஏனென்றால் இது இருட்டை விலக்கி உலகைஒளி மயமாக்கும் ஆதவனைப்போற்றும் பண்டிகை. ஆதவன் உலகிற்குப்பொதுவானவன். சகல ஜீவராசிகளுக்கும் தாவரங்களுக்கும் ஆதவன் ஜீவசக்தியாய் இருக்கிறான். கவிமணி சொல்வாரே, ‘சூரியன் வருவது யாராலே சந்திரன் திரிவது எவராலே காரிருள் வானில் கனமழை பொழிவது எவராலே யார் இதற்கெல்லாம் அதிகாரி அதை நாம் எண்ணிட வேண்டாமோ?’ என்று.
சிலப்பதிகாரம் கூறுகிறது’ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்..திங்கள் போற்றுதும் திங்கள் போற்றுதும்’ என்று கண்ணகி விளிப்பதைப்பார்த்தால் மக்கள் இயற்கை தெய்வ வழிபாட்டில் ஈடுபாட்டுடன் இருந்ததை அறிய முடியும். சூரியன் இடம் பார்த்து ஒளி பாய்ச்சுவதில்லை அனைவருக்குமானவன் ஆதவன். இயற்கைக்கும் இறைமைக்கும் பேதம் கிடையாது. அனைத்தையும் ஒன்றாகபாவிப்பதுதான் ஞானம்..
இந்த ஞானம் வந்தால் நமக்கு வேறென்ன வேண்டும்’என்கிறான் பாரதியும்.
தை பிறந்தால் வழி பிறக்குமாம்! அப்படி ஒரு சிறப்பு இந்த மாதத்திற்குத்தான்.. பொங்கல் பண்டிகை மட்டுமின்றி முதல் நாள் போகி மறுநாள் மாட்டுப்பொங்கல் என்று மூன்று நாட்கள் கொண்டாடும் பெருமை வாய்ந்த பண்டிகை இதுதான்! அதிலும் இயற்கை தெய்வத்தை, மனிதர்களைப்போல உழைக்கும் மாடுகளை சிறப்பிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் என்று உழைக்கும் வர்க்கத்தைப்போற்றும் திருநாட்கள். தொடர்ந்து திருவள்ளுவர் திருநாள் என்று பொதுமறை எழுதிய வள்ளூவனாருக்கு விழா எடுப்பது பொருத்தமானது.
தை மாதம் சூரிய வழிபாடு மிகச்சிறந்தது. இது நாம் ஆதவனுக்குச்செய்யும் நன்றியாக நினைக்கிறோம்.அன்றாடம் இருள் விலக்கி ஒளிபரப்பும் இயற்கை தெய்வத்திற்குப்பொங்கலிட்டு புத்தாடை அணிந்து விளக்கேற்றி வழிபடுகிறோம்.
புத்தாண்டு பிறந்ததும் வரும் முதல் பண்டிகை இதுதான். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் உன்னதத்திருநாள் பொங்கல் திருநாள்!
கர்னாடகத்தில் சங்கராந்தி என்று பொங்கலைக்கொண்டாடுவார்கள் அன்றையதினம் வெல்லமும் எள்ளும் வழங்குவார்கள்.அன்பெனும் இனிப்பையும் எள் எனும் சிநேகித உணர்வும் அன்று ஒன்றுபடுவதாக சொல்கிறார்கள். இனிய நட்புகொண்ட உணர்வை வளர்த்துக்கொண்டு பண்டிகைகளை திருப்பாவை அருளிய ஆண்டாளின் வாக்குப்படி கூடி இருந்து குளிர்ந்துமகிழ்வோம்!
பொங்கலோ பொங்கல்!