நுவல்- புத்தக மதிப்புரை

 

பவள சங்கரி

வாழ்வியலின் வண்ணங்கள்!

பிரபல சிறுகதை எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களின் சில ஆய்வுக் கட்டுரைகளின் நுட்பமான கருத்துக்களில் கவரப்பட்டதன் விளைவு, அவருடைய மற்ற படைப்புகளையும் தேடிப்பிடித்து வாசிக்கத் தூண்டியது. சிங்கையின் முன்னணி எழுத்தாளர்களின் ஒருவரான திருமதி கமலாதேவி அரவிந்தன் நாவல், சிறுகதைகள், நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், என அனைத்துத் தளங்களிலும் தம் தனிப்பட்ட முத்திரைகளைப் பதிததவர். சமகால இலக்கியங்களில் இவருடைய எழுத்து நவீனத்துவம் என்ற வகையில் தனித்து நிற்கக்கூடியது. மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், தம் சிறு வயது முதலே தமிழ் மொழியின்மீது கொண்ட தீராக் காதலால் கவிதையில் ஆரம்பித்து, தற்போது தமிழ் இலக்கிய வரலாற்றில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். பெண் எழுத்தாளர் என்றால் ஒரு வரையறைக்குள்தான் எழுத முடியும் என்ற இலக்கணத்தை முறியடித்து, வெகு யதார்த்தமாக எந்தக் கட்டுப்பாடும், இல்லாமல் சரளமாக எழுதும் மிக வித்தியாசமான நடை இவருடையது. இதுதான் நவீன பாணி எழுத்தோ என்று எண்ணும் போது பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. ‘நுவல்’ என்ற இந்த தொகுப்பு 13 வித்தியாசமான சிறுகதைகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளதும், கவர்ச்சியான த்லைப்புடன் எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  ’முகடுகள்’ என்ற முதல் கதை முதுமையின் கொடுமையை, அதன் இயற்கை உபாதைகளை, நேரடியாக வாசகரையே அனுபவித்து உணரச் செய்யும் வகையில் தத்ரூபமாக வரையப்பட்ட காவியம் எனலாம்.. சம்பவங்களின் கோர்வை கதைக்களத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிக யதார்த்தம்.

  ‘மிதவை’ என்ற கதை, வெகு இலாவகமாக கலாச்சார மாற்றத்தையே உராய்ந்து பார்ப்பது ஆச்சரியமேற்படுத்துகிறது. திரை மறைவில் சர்வ சாதரணமாக நடக்கக்கூடும் சம்பவங்கள்தான் என்றாலும், அதை நாசூக்காகச் சொன்ன விதம் சுவையைக் கூட்டியுள்ளது. ஏழ்மை என்ற எல்லைக்குள், வாழ்க்கையின் ஓட்டம் என்பதற்காக எதுவும் தவறில்லையோ என்று சிந்திக்கத்தூண்டும் எழுத்து. நல்ல துணை நலம் பெறாத ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு சாமான்ய மங்கையின் மன நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ள கதை.

  ‘உற்றுழி’, நட்பினால் பெற்ற தர்மசங்கடத்தை தெளிவாகச் சுட்டும் சிறுகதை. பெண்ணியம் என்ற அற்புதமான, ஆக்கப்பூர்வமான ஒரு கோட்பாடை தவறாகப் புரிந்து கொண்டு பெண்ணினத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்தும் புல்லுறுவிகளை அடையாளம் காட்டியுள்ள கதை. வசனங்கள் ஒவ்வொன்றும் முகத்தில் அறைந்தாற்போன்ற  தாக்கத்தை ஏற்படுத்துவதை காணச்சகிக்காது வெலவெலத்துப்போய் நிற்கும் நாயகியின் ஆச்சரிய பாவத்தை அப்பட்டமாக உணரச்செய்யும் நடை!

  ‘தாகம்’ என்ற சிறுகதை ஒரு பெண்ணால் மட்டுமே எழுதக்கூடியது என்பதை அறுதியிட்டுக் கூறும், விவரணைகள். தாரிணியின் உணர்வுகளை உள்ளிருந்து அனுபவித்தது போன்ற வர்ணனை! மாதந்தோறும் ஒரு பெண்ணிற்கு வரும் மரணாவஸ்தை என்று ஒரு வரியில் கூறினாலும், அந்த ரணம், சாதாரணம் அல்ல என்பதை தெளிவாக்கும் எழுத்துக்கள். பெண்மையைப் பிரிக்கும் ஏழு கூறுகள் போன்று ஆசிரியர் கூறும் விளக்கங்கள் மூலமாக அவருடைய ஆழ்ந்த இலக்கிய ஞானத்தையும் அறிய முடிகிறது.. அன்னியோன்யமான மண வாழ்க்கையில் கணவன், மனைவியின் உளவியலை அழகாக படம் போட்டுக் காட்டும் உத்தி சுவைகூட்டுகிறது

  ‘நுகத்தடி’, மனிதம் மலர்த்தும் மகத்தான கரு. ’நெகிழித் தாள்’ போன்ற இன்தமிழ் வார்த்தைப் பயன்பாடு வலு சேர்க்கிறது. தன் ஊரும், பெயரும் தனக்கே தெரியாத, பரிதாபத்திற்குரிய மனநிலை பாதிக்கப்பட்ட லஷ்மிகளின் நிலையையும், அதை உணர்ந்து, அவர்களுக்குச் சேவை புரியும் உன்னத உள்ளமும், வாசகரின் நெஞ்சை உருகச் செய்வன.

  ‘மின்மினி’  அமானுஷ்யம் குறித்த வித்தியாசமான சிறுகதை. வித்தியாசமான அனுபவமும் உணரச்செய்ய்க்கூடியது.. ‘சோறு’ மிக வேறுபட்ட கோணத்தில் வடிக்கப்பட்ட சித்திரம்! ‘நுவல்’ மிக அழகான புனைவு! ‘நண்டு’ மெல்லிய உணர்வுகளை அடித்தளமாகக் கொண்டு, பெரிய தத்துவத்தை விளக்க முற்பட்ட கதை. ‘நாசி லெமாக்’, கலாச்சார மாற்றங்களும், பெண்மைக்கேயுரிய சுயமரியாதையின் வெளிப்பாடும், ஒரு ஆணின் அர்த்தமற்ற அலட்டலையும் அழகாக் வெளிப்படுத்தியுள்ள கதை.

  ‘காக்காய் பொன்’, வாசகரின் உணர்வை பல வகையிலும் சீண்டிப்பார்க்கும் வித்தியாசமான, வெளிப்படையான கதை.. ‘நயம் பட உரை’, இலக்கியவாதிகளின் உலகினுள் ஏற்படும் நீயா – நானா என்ற ஆணவப் பார்வை, இறுதித் திருப்பத்துடன் சுவையான விருந்து! ‘விரல்’ ஒரு கட்டுமானத் தொழிலாளியின் நொந்த உணர்வுகளை நிதர்சனமாய் பிரதிபலிக்கும் சிறுகதை.

  முத்து முத்தான நல்ல தமிழ் நடை மற்றும் உள்ளம் தொடும் சிறந்த கருவினாலும் கதை நாயகர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே அழகானதொரு உறவுப்பாலம் அமைத்துள்ளது பாராட்டிற்குரியது. மொத்தத்தில் ‘நுவல்’ மிக  மாறுபட்ட கோணங்களில் புனையப்பட்ட சிறந்த கதைகளின் தொகுப்பு எனலாம்.

1 thought on “நுவல்- புத்தக மதிப்புரை

  1. இரண்டு மாமியும் பிரமாதம். பவளா வர வர மிளிர எழுதுகிறார். அதான் புத்தகமெல்லாம்
    ரயில் வண்டி மாதிரி, எனக்கு எல்லா கதைகளையிம் படிக்கணும், கமலம். இங்கிலாந்தில் எங்கே கிடைக்கும். மதிப்பீடு கன ஜோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *