சீர்காழி -அக்கினிபுரீசுவரர்
உ
நமசிவாய
ஞானசம்பந்தரின்
சீர்காழியில்
அக்கினிபுரீசுவரர்
திருக்கோயில்
கருத்துரை
‘முத்துமுதலி’
மயிலை
தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் திருமுறைகளாம், தேவாரம் திருவாசகம், எனும் தொடக்கத்தினவான
12 திருமறைகளில் முதல் மூன்றாகத் தொகுக்கப் பெற்றவை, 1350 ஆண்டுகள் முன் சமயக் கோளரியாகத்
திகழ்ந்த திருஞான சம்பந்தர் இயற்றியன ஆவதும், சீர்காழி அவர் பிறந்தஊர் என்பதும், சிறு பாலுண்பிள்ளைப் பருவத்திலேயே அம்மையின் அருளால் சீர்மை சால் தமிழ்ப் புலமை பெற்று ஏழிசை பண்ணமைந்த 386
பதிகங்களாகக் காணும் 4180 பாடல்கள் இயற்றினமையும் 5113 ஆண்டுகள் கடந்துள்ள கலிகாலமாம்
இந்நாளில் யாவரும் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.
ஆனால் இந்நாள் ‘சட்டைநாதர்’ எனும் துணைப்பெயருடன் திகழும் ‘தோணியப்பர்’ திருக்கோயில்‘ காழி
நகரில் விரிந்த பரந்துள்ளதும், ஆண்டுதோறும் ஆங்கு மிக நேர்த்தியாக நிகழ்தப்படும், ஞானசம்பந்தருக்கு
அம்மை ஞானப்பாலினைப் ஓர் வள்ளத்தில் பீற்றிக் கொடுத்த, ‘வரலாற்று நினைவு விழா’வை சிலரறிவர்.
‘இருமையின்மை’க் கருத்தை முன்வைத்த, 1200 ஆண்டுகள் முன்பிறந்த, அறிஞர் ‘சங்கரர்’, ‘திராவிடசிசு’
எனக் குறித்த, நம் ஞனசம்பந்தப் பிள்ளையார், பழந்தமிழ் சங்க நூல்களில் ஒன்றான, புறநானூறில் 166 ம்
பாடல் தலைவனாக ‘ஆவூர்மூலம்கிழார்’ பாடிய ‘சோணாட்டுப்பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான்‘ ‘விண்ணம்தாயன்’
குலமாகும், ‘கவுணியன்’ குலத்துத் தோன்றியவராக, வரலாறுள்ளது. அதனால் தானோ!! அப்பிள்ளை முதல்முதல்
திருவிராகம், பல்பெயர்பத்து, திருவிருக்குறள், மொழிமாற்று, யாழ்மூரி, தாளச்சதி, ஏகபாதம், மாலை மாற்று,
கூட சதுக்கம், எழு கூற்றிருக்கை, பயோதரப் பத்து, ஈரடி மேல்வைப்பு, நாலடி மேல்வப்பு, சக்கரமாற்று என
அந்நாள் புதிதாம், யாப்பு, இசை வகைகளில் அமைத்த நூல்களை, இயற்றினார் எனக் காண்கின்றோம்.
காழிப் பெருங்கோயிலுக்கு தென்மேற்கே, சிறிது தூரத்திலேயே, நம் ஞானசம்பந்தருக்கு, இசைக்கிசைந்து
கொட்ட, கைத்தாளம் கொடுத்த, அப்பனுறை திருமுன்னாம், ‘ஓசைகொடுத்தநாயகி‘ உடனுறை, ‘திருத்தாள
முடையார்கோயில்’, என வழங்கப்படும், ஓர்காலத்தே, இலந்தைமரங்கள் நிறைந்திருந்த, ‘திருக்கோலக்கா’
எனும், சீர்காழியைப் போன்றே மூவர் தேவாரமும் பெற்ற தேவாரத் தலம், அமைந்துள்ளது.
பெருங்கோயிலாம், தோணியப்பர் கோயில் ஈசானமூலையில், (தென்)’திருமுல்லவாயி’லுக்கு பிரிந்து செல்லும்
கற்சாலைக்கு வடபுறாமாக, முன்னுறை தீர்த்தக் குளத்துடன் அமைந்த, ஓர் பழம் கற்றளிதான் ‘அருள்மிகு
அக்னிபுரீசுவரர்*கோயில்’ ஆகும். இஃது தேவாரப் பதிகங்களில் குறிக்கப்படாத தானாலும் சாலப் பழமை
எழில் மிக்கு திகழக் காணும் சோழர்கால கல்வெட்டுகளுடன் கூடிய, கருவறை-இணை-மண்டப கற்றளியான
இறையிலாகும். அம்மைக்கு ஒர் சிறு திருமுன்னும் திருமஞ்சனக் கிணறும் அச்சிறு வாளகத்திலே உள்ளது.
முன்பு சிதலமான இக்கேயில் இந்நாள் நன்கே பழுது பார்க்கப் பெற்று சில திங்களில் வழிபாட்டினுக்கு வந்து
விடும் நிலையிலுள்ள ஒன்றாகும். எனவே வழிபட வருவோருக்கு அருள் பாலிக்க தொன்மை மிக்க சீர்மிகு
சீர்காழித் திருக்கேயில்கள் மூன்று ஆகிவிடும்
நேரில் சென்று பார்த்தபோது 90% திருப்பணிகள் முடிந்துள்ளமையை படக் கருவியில் கொணர்ந்தேன். காண்க.
திருச்சிற்றம்பலம்
*
‘அக்கினிபுரீசுவரர்’ என்ற பெயர் சென்ற நூற்றாண்டிலோ அதற்கும் பிறகோ யாரோ ஒருவர் வடமொழியில்
இருப்பது சிறப்பு என வைத்துவிட்ட நிலை. ஆனால் கோயிலைக் கட்டிய மன்னன்/பெருந்தலைவன்
அல்லது அதற்கு அடுத்து வந்தோர் கல்வெட்டிலே பொளித்து இருப்பது கொண்டே (பழமையான) பெயர்
அமைய வேண்டும். கோயில் கல்வெட்டில் காணும் பெயர் “கழுமலத்து திருமுடைய நாயனாருக்கு”
எனக்காண்கின்றது. திருப்பணிகள் செய்தோர் மீண்டும் கல்வெட்டுடைய கற்களை அடுக்கி சிமெண்டு சாந்து
கொண்டு சந்திகளை பூசும்போது பட்ட கறைகளால் திருத்தமாக படிக்க இயலவில்லை. கல்வெட்டுகளை
படிக்க சிறப்புப்பயிற்சி பெற்றோரிட மிருந்தோ அல்லது முன்பே படிஎடுத்த நகல்களிலிருந்தோ திருத்தமான
பெயரைத் தேட முயல்வோம் ஐயம் கிளைக்கும் இவ் வரிகளை இணைத்துள்ள படத்தினில் காண்க.
mERkkuppakam.jpg 363K View Download |
therkkupakkam.jpg 335K View Download |
vadakkuppakkakalveTTu2.jpg 290K View Download |
kalvettu-kazumalam.jpg 273K View Download |
therkku-mUvar.jpg 263K View Download |
vadakkuppakkam.jpg 253K View Download |
therkke-anan-santhanakuravar.jpg 251K View Download |
vadakkuppakka kalveTTu1.jpg 244K View Download |
1b-thiruunaazhi.jpg 238K View Download |
oarkizhakkuppaarvi.jpg 210K View Download |
1a-pugumun-paarvai.jpg 204K View Download |