ஆஹா என்ன ருசி!
விசாலம்
பொங்கல் திருநாள் என்றவுடனே எனக்கு முன்பு அமெரிக்காவில்பொங்கலை சுவைத்த நாள் ஞாபகம் வருகிறது இது என்ன பெரிய பிரமாதம் ! அங்குதான் எல்லா இந்தியப்பொருட்கள் எல்லாம் கிடைக்கின்றனவே அவைகளை வாங்கி வீட்டில் செய்தாலே அருமையான பொங்கல் ரெடியாகிவிடும் என்கிறீர்களா?
ஆனால் நான் சுவைத்ததோ ஒரு அருமையான ரெஸ்டாரண்டில்…
நியூயார்க் நகரத்தில் என் சகோதரனின் மகன் இருக்குமிடம் இந்த அருமையான ஹோட்டல் அருகில் தான் /நடந்தே போய்விடலாம்
தினமும் பிஸ்ஸா , பிரெட் .பன் சௌமீன் என்று சாப்பிட்ட என்னைப் பரிதாபமாகப் பார்த்த என் சகோதரன் என்னை பாசமாக அழைத்தான்
‘ஏ விஷால் உனக்கு இன்னிக்கி ஒரு சேஞ்சாக ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போகப்போகிறேன் பார்த்தால் அசந்து போய்விடுவாய் ”
“அப்படி என்ன ஸ்பெஷல் அங்கே
அதுவா சஸ்பென்ஸ் என்றபடி கண்ணைச்சிமிட்டியபடி என்னைத் தயாராகச் சொன்னான்
நானும் என்னை அலங்கரித்துக்கொண்டு கிளம்பினேன் நாங்கள் இருந்த இடம் எட்டாவது அவென்யூ 32 வது தெரு . அங்கிருந்து காலாற பேசியபடியே நடையைக் கட்டினோம்
“எங்கே மணி எங்கே?”
அதோ பார் மேலே போர்டை பொங்கல் என்று எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறது ”
“ஆமாம் சாய்ந்தெழுத்தில் ரொம்ப அழகா இருக்கே ! இது என்ன இப்படி ஒருதமிழ்ப்பேரை அதுவும் பொங்கல் பண்டிகைப்பேரை வச்சு ஹோட்டல் ! அதுவும் நியூயார்க்கில வாவ் நெய் வாசனை ஊரைத் தூக்கறதே ”
” ஆமாம் இங்க சர்க்கரைப்பொங்கலும் வெண்பொங்கலும் ரொம்ப ஸ்பெஷல் ஸ்ரீரங்கத்துல படைக்கறா மாதிரி”
அந்த இடத்தின் பெயரைப் பார்த்தேன் லெக்ஸிங்க்டன் அவென்யூ என்று இருந்தது
புல் என்று எழுதியிருந்த கதவை இழுத்தபடி உள்ளே சென்றால் என் கண்ணையே எனக்கு நம்பமுடியவில்லை
வாசலில் ஒரு பெரிய பசுமாட்டின் சிலை எங்களை வரவேற்றது பொங்கல் ஹோட்டலுக்கும் பசுவுக்கும் என்ன பொருத்தம்
கோமாதா எங்கள் குல மாதா என்ற பாடல் ஞாபகம் வந்தது அந்தப் பசுவின் உடலில் பலகோடி தேவைதைகளும் கணங்களும்
முத்தேவர் தேவியர் வாசம் செய்கிறார்கள் என்று என் தாய் கோமாதாவிற்கு எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பூஜை செய்வதை கண்டிருக்கிறேன் தவிர பொங்கல் மறுநாள் மாட்டுப் பொங்கலின் போது மாடுகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இல்லையோ !
அந்தப் பசுவின் பால் தான் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது . அதுவும் பொங்கலன்று பால் பொங்கி வருவதையே மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது அதனால் இந்தப் பொங்கல் ஹோட்டலும் பசுமாடும் கனப்பொருத்தமாக எனக்குப்பட்டது
இதையெல்லாம் எண்ணித்தான் இந்த நியூயார்க் ஹோட்டல் முதலாளி இந்தப்பெயரைத் தேர்ந்தெடுத்து வாயிலில் அழகான பசுமாட்டின் உருவமும் வைத்திருக்கக்கூடும்
எல்லா இருக்கைகளிலும் ஒரே அமெரிக்கன்ஸ் கொஞ்சம் இரோபியன்ஸ் . எல்லோரும் மிகவும் ஜாலியாக சுடச்சுட பொங்கலை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர் .
அங்கிருந்த சூழ்நிலை இந்தியசூழ்நிலையாக இருந்தது நாங்கள் நுழைந்தவுடன் ஒருவன் முகத்தில் புன்னகைப்பூக்க ஓடி வந்தான் வாங்கோ வாங்கோ என்று அன்புடன் அழைத்து எங்களை அமர வைத்தான் அவன் தமிழ் என்று தெரிந்தவுடன் எனக்கும் பாசம் பொங்கியது
“ஏம்பா உங்க பேரு என்ன “?
“ரமேஷ் மேடம் ” என்றபடி மெனு கார்டை எங்களிடம் பணிவாக சமர்ப்பித்தான் அதில் கொட்டைஎழுத்தில் முதல் இடமாக இருந்தது
சர்க்கரைப்பொங்கல் ,வெண்பொங்கல் அதுவே சிம்மாசனத்தில் ராஜா போல் அமர மற்ற பொருட்களான தோசை ,வடை இட்லி போன்றவைகள் மந்திரிகள்: போல் கீழே எழுதப்பட்டிருந்தன நாங்கள் பொங்கல் எடுத்துவா என்று சொல்ல ரமேஷும்
ஒரு வெற்றிப்புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்தபடி உள்ளே போனான் சில நொடிகளிலேயே கையில் பல பொங்கல் தட்டுகளுடன் சர்க்கஸ் போல் பேலன்ஸ் போகாதபடி மிக அழகாக ,லாவகமாக தூக்கி வந்தான் பின் எங்களிடம் சமர்ப்பித்தான்
ஆஹா என்ன அழகான தட்டு அதன் மேல் அழகான வாழை இலை …… இரு அழகான பாத்திரங்களில் வெண்பொங்கலும் , சர்க்கரைப்பொங்கலும் நெய் மணக்க மேலே, முந்திரிப்பருப்புகள் எங்களை வா வா என்றழைக்க ஆண்டாளும் திருப்பாவையும் தான் மனதில் நின்றது போதாததற்கு வெண்ணெயும்
மேலே உருகியபடி நின்றது கூடவே தேங்காய் சட்னியும்தான் . இந்த வயதுக்கு கொலஸ்ட்ரல் ஏற்றும் இது தேவையா என்ற கேள்வி எழுந்தாலும் இது போல் வாய்ப்பு இனி எப்போது வருமோ ? யார் கண்டார்கள்? என்று உள்மனது பச்சைக்கொடி காட்ட கையில் ஸ்பூன் ஏற ரசித்தபடி வெண்பொங்கல் என் வாயில் விழுந்தது .
உண்மைதான் இது போல் பொங்கலை நான் சாப்பிட்டதேயில்லை கோயில் பிரசாதத்தில் இருக்கும் ருசி இங்கும் இருந்தது
ஒரு சமயம் பொங்கல் மிக அன்பாகப்படைக்க அந்த அன்பே இனிப்பை அதிகம் கூட்டுகிறதோ !
நான் மெள்ள ரமேஷைக் கூப்பிட்டு இந்த பொங்கலின் ரெசிப்பியைக் கேட்டேன் அவன் சிரித்தபடி தொழில் ரகசியம் என்றான்
இந்த இடம் இருக்குமிடம் 110 லெக்ஸிங்டன் அவென்யூ நியூயார்க் .. இதேபோல் பல இடங்களில் பலரும் பொங்கல் . இட்லி தோசை என்ற
பெயர்களிலெல்லாம் ஹோட்டல் ஆரம்பித்திருக்கிறார்கள்
இயந்திர வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் உத்தியோகத்தில் இருக்கும் வரை இது போல் ஹோட்டல் தான் அவர்களுக்கு வரப்பிரசாதம் .
அன்பர்கள் எல்லோருக்கும் என் அன்பு கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்