இன்னம்பூரான்

புத்தாண்டு கொண்டாடி இரு வாரங்களில் தைப்பொங்கல் திருவிழா வருவது தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏன் தெரியுமா? கலகலத்து உளுத்துப்போன புத்தாண்டுத் தீர்மானங்களை உயிர்ப்பிக்க இது ஒரு அரிய தருணம். தைப்பொங்கலுக்கு தெய்வம் ஆதவன். அவனுக்கு சமர்ப்பணம்: அப்போதைய அறுவடையின் நெற்கதிர். அதாவது வாழ்வாதாரமான பசி தீர்த்து, உடல் வளர்க்கும் அன்னம். வேள்வித்தீ திறந்த வெளியில், ஆதவனை நோக்கி தவமியற்றுகிறது. குயவனொரு சிற்பி. அவன் பிடித்துக்கொடுத்த, ‘டங்க்’ ‘டங்க்’ என்று ‘விக்கி’ வினாயக் ராமின் கடம் போல இசையொலிக்கும் புதுப்பானை. இனிப்பூட்டுவது தங்கப்பாளமாக ஜொலிக்கும் வெல்லம். பொங்கி வழிகிறது சர்க்கரை பொங்கல். நளபாகம் நம் வீட்டுப்பெண்கள். முதல் நாள் போகி பண்டிகை. கண்டான் முண்டான்களை கழித்து, ஒட்டடை அடித்து, சுவர்களுக்கு வெள்ளையடித்து, கூட்டி, மெழுகி, வீட்டை வேள்விக்கேற்ப சுத்தீகரம் செய்தாகி விட்டது. மறு நாள் மாட்டுப்பொங்கல். புனருத்தாரணம் செய்த தீர்மானங்களுக்கு மாப்பு அன்று மட்டும். ஜமா சேர்த்துக்கொண்டு உயிர் காலேஜு, செத்த காலேஜூ எல்லாம் போகணும். விஸ்வரூபம் வீட்டிலிருந்தபடி பார்க்கணும். ‘தோற்கன்றுகள்’  நிறைந்த தர்மமிகு சென்னையில் ‘பாற்கன்றும்’ காமதேனுவும் கிடைக்குமா என்ன? ‘சங்க காலத்துக்கு முன்னதாக மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மாவீரன் தமிழன்‘ என்று வல்லமையில் ஒரு கட்டுரை எழுதினாப்போச்சு, அடுத்த வருடம், வல்லமை ஆசிரியரம்மா அழைப்பு விடுத்தால்.

விஷயத்துக்கு வருவோம். புத்தாண்டு தீர்மானங்கள் எல்லாம் மறந்து போச்சு. விரட்டி, விரட்டி கேட்டால் பொத்தாம்பொதுவாகத்தானே பேசமுடியும். அது தானே தொட்டில் பழக்கமும். நன்னடத்தை, நல்லொழுக்கும், நல்வழி, நல்லாடனார் சொன்னவை என்று அடுக்கி வைத்ததை அவிழ்த்தால் போச்சு என்று டபாய்க்க பார்க்கிறீர்கள். அது தான் நடக்காது. இதெல்லாம் வருடாவருடம் குருட்டுத்தனமாக சொல்லி விட்டு செய்யாதவை. அதெல்லாம் போகட்டும். ரசிகமணி. டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள் தொ.மு.பாஸ்கர தொண்டைமானுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும், ‘ வீட்டில் அம்மா எல்லாரும் செளக்கியம் தானே‘ என்று கனிவுடன் விசாரிப்பார். ராஜாஜி கூட அப்படித்தான். அவர் கவர்னர் ஜெனரலாக இருந்த போது, சென்னை வந்தால், விமான தளத்தில் கனவான்களும், சாமான்யர்களும், லேசுப்பட்டவர்களும், சாமான்யமாக லேசுபடாதவர்களும், மரியாதை நிமித்தம், குழுமியிருப்பார்கள். இந்தக்காலம் போல பத்து ரவுண்டு அடிக்கும் பொன்னில்லா பொன்னாடைகள் கிடையாது. அதிகமாகப்போனால் ஒரு பூச்செண்டு அல்லது இரண்டு எலுமிச்சை. அவர் ஆளுக்கு ஒரு வார்த்தை வைத்திருப்பார். முதல்வரை வாழ்த்துவார். கல்வி அமைச்சரிடம் புதுப்பாடம் பற்றிக் கேட்பார். ஜெயில் சகபாடியிடம் ‘பேரன் என்ன செய்கிறான்‘ என்பார். ஆக மொத்தம் எல்லாரையும் அன்பினாலும், அக்கறையினாலும் அணைத்துக்கொள்வார். ஜபர்தஸ்தும் கிடையாது; சிபாரிசும் கிடையாது; டாம்பீகம் காத தூரம். நான் விஷயத்துக்கு வரவில்லை என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது. இன்னுமா புரியவில்லை?

பொங்கல் திருவிழாவின் முதல் தீர்மானம்: கனிவும், அன்பும், அக்கறையும், வாய்மையும், தூய்மையும் கூடிய எளிமை, அன்றாட வாழ்க்கையில். அன்பு செலுத்த பாடமொன்றும் எடுக்கத்தேவையில்லை. நற்றன்னையை நினைத்துக்கொள்ளுங்கள்; போதும். ‘பர்த்தியாக‘ (டி.கே.சியின் சொல்) ஒன்றும் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வளவு தான். அக்கறை அன்பின் சேடி. இயல்பாகவே கூடி வரும். தனி நபர்கள் மீதுள்ள அக்கறை தான் சமுதாய விழிப்புணர்ச்சிக்கு ஆதாரம். சிக்கலில்லா வாழ்க்கைக்கு

வாய்மையை போல் உதவுவது வேறு யாதுமில்லை. இது குழந்தைகளுக்குத் தெரியும். வயது ஏற ஏற கபடம் கூடுகிறது. ‘The child is the father of the man’ என்று தெரியாமலா சொன்னான்! தூய்மைக்குக்கூட ராஜாஜி தான் உதாரணம். மனத்தூய்மையினால் தான் அவர், பிரதமராக, முதல்வராகவோ, கவர்னராகவோ, கவர்னர் ஜெனரலாகவோ, மத்திய அமைச்சராகவோ, திருச்செங்கோடு தபஸ்வியாகவோ, எதுவாகவோ இருந்தாலும், வெறும் ராஜாஜியாக இருந்தார். மனத்தூய்மைக்கு இடைவிடா பயிற்சி வேண்டும். சோதனைகள் வந்த வண்ணம் இருக்கும். அதெல்லாம் பெரிய பிரச்னை இல்லை. ஏனெனில், மனத்தூய்மை பரிக்ஷையில் பங்கு கொள்வதே ஆதாயம். படிப்படியாக வெற்றி. ஐயம் யாதுமில்லை. ராஜாஜி கல்கத்தா ராஜ்பவனை ஆட்டி வைத்து விட்டார். ஒரு வாளி ஜலத்தில் வேட்டி துவைத்து, தானும் குளிப்பது எப்படி என்று செய்து காட்டி, அசத்தி விட்டார். ‘கந்தையானாலும் கசக்கிக்கட்டு’. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, பராபரமே!

ஆக மொத்தம், பொங்கல் திருவிழாவின் முதல் தீர்மானம் எளிது. அடுத்து என்ன செய்யலாம்? தேகாப்பியாசம் செய்யலாம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி. பஸ்கியும் தண்டாலும் உடலுக்குறுதி. ஆணும், பெண்ணும்.சிறார்களும் நாள் தோறும் அரை மணியாவது உடற்பயிற்சிக்கு செலவழித்தால், சுவாச பயிற்சிகளை முறையே கற்றுக்கொண்டால், தியானம் செய்தால், மருத்துவச்செலவு கணிசமாகக் குறையும். மகிழ்ச்சி கூடும். இல்லறம் செழிக்கும்.

பட்டியலில் இன்னும் ஆயிரம் தீர்மானங்கள் இருந்தாலும், மூன்றாவது தீர்மானம், ‘சிறுகக்கட்டி பெருக வாழ்’. அதாவது மூன்று தீர்மானங்களை யோக்கியமாக நிறைவேற்றினால், அவை ஆயிரத்துக்கு சமானம். எனவே, மூன்றாவது தீர்மானம்: அன்றாடம், பிரதியுபகாரம் எதிர்ப்பார்க்காமல், குடும்பம், சுற்றம், அண்டை அசலார், பேட்டை, ஊர், சமுதாயம் எல்லாவற்றும் முடிந்தவரை பணி செய்யவேண்டும். குடும்பம் ~ சிறாருக்குக் கல்வி; சுற்றம் ~ இன்பதுன்பங்களில் பங்கேற்பு; அண்டை அசலார் ~ நன்மொழி; பேட்டை: துப்புறவு; ஊர்: கூடி வாழ்வது; சமுதாயம்~ விழிப்புணர்ச்சி. இவை சில உதாரணங்கள்.

பிட் நோட்டீஸுக்கு நன்றி: http://beccaobergefell.com/wp-content/uploads/2012/12/New-years-resolution.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *