பொங்கலோ பொங்கல்
நடராஜன் கல்பட்டு
உண்ண உணவும்
பருகிட நல் நீரும்
என்றும் நமக்களிக்கும்
செங் கதிர் ஆதவனுக்கு
நன்றி நவிலும் நேரமிது
..
புது நெல் குத்தி புத் தரிசி கொண்டு
பொங்கல் வைத்து
செங் கரும்புடனே
மஞ்சள் இஞ்சிக் கொத்தும் படைத்து
மிகு நல் சூரியன்
அடி பணிவோம்
பொங்கலோ பொங்கலென
குரல் கொடுப்போம்
..
பால் தரும் பசுவினையும்
பாய்ந்து துள்ளி விளையாடும் கன்றினையும்
ஏர் கட்டி நில முழுதிட உதவும் எருதினையும்
நீர் கொண்டு கழுவியே
பாங்காய்ப் பசு மஞ்சள் பூசி
செங்குருதிக் குங்குமத் திலக மிட்டு
தாழ்ந்து வணங்குவோம்
பொங்கலோ பொங்கலெனக்
குரல் கொடுப்போம்
..
மஞ்சள் பூசிக் குளித்த
மங்கையர் மலர் முகத்து
மங்கா ஒளி கண்டே
உள்ளம் குளிர்வோம்
பொங்கலோ பொங்கலென
குரல் கொடுப்போம்
(வண்ணப் படம் இணைய தளத்தில் இருந்து. கருப்பு வெள்ளைப் படம் க.ந.நடராஜன்.)