பொங்கலோ…. பொங்கல்! பெண்களோ….பெண்கள்!
நடராஜன் கல்பட்டு
“ஏன்னா… இப்பொ அந்தப் பாழாப் போன கம்ப்யூடரெ மூடீட்டு ஏந்து வரப் போறேளா இல்லையா?”
“தோ வரேண்டீ. இந்த ஒரு பின்னூட்டத்தெப் படிச்சூட்டு வரேன். துபாய்லேந்து பாலாஜீ பாஸ்கரன் எழுதி இருக்கார் பாரு.”
“அப்பிடி என்ன எழுதி இருக்கார் அவர்?”
“படிக்கிறேன் கேளு. ‘தாத்தா நீங்க பறவைக்ளெப் பத்தி எழுதி இருக்குறதெப் படிச்சேன். வாழ்க்கையெ எப்படிப் ஃபுல்லா ரசிச்சு வாழ்ந்திருக்கீங்கன்னு புரியுது’ந்னு எழுதி இருக்கார்டீ அவர்.”
“ஆமாம்… அவங்க ஒங்களெத் ‘தாத்தா’ன்ன ஒடனே ஒங்க உச்சி குளுந்து போச்சாக்கும்? என்னெக் கேட்டாத் தானே தெரியும் வாழ்க்கையெ நீங்க எப்பிடி ஃபுல்லா ரசிச்சு வாழ்ந்தீங்கன்னு?
சனி, ஞாயிறு, விடுமுறைன்னு வந்தா கேமிராவெத் தோள்லெ மாட்டிண்டு வெளிலெ போயிடுவேள். மத்த நாள்லெ வீட்டுலெ இருக்குறப்பொ ஃபிலிம் டெவெலப் பண்றேன், பிரிண்ட் போடறேன்னு இருட்டறைக்குள்ளெ போயிடுவேள் மணிக் கணக்கா. ஒரு ட்ராமா சினிமான்னு கூட்டிண்டு போயிருக்கேளா? நெஞ்செத் தொட்டுப் பாத்துச் சொல்லுங்கோ. ஒரு நகெ நட்டுன்னு தான் வாங்கிப் போட்டுருக்கேளா?
இதெயெல்லாம் நான் கேட்டா, ‘கல்யாணம் ஆன புதுசுலெ சோ ட்ராமா ஒண்ணுக்கும், காதலிக்க நேரமில்லெ சினிமாவுக்கும் அழெச்சிண்டு போயிருக்கேனேடி. மறந்து போச்சாடீ? நகெ நகெங்கறயே. இதோ ஒம் மூஞ்சிலெ தெரியற புன்னகெயெ விடவாடி கடேலெ விக்கற நகெ அழகா இருக்கும்’ பேள். ‘நட்டு வேணும்னா சாமான் உள்ளெ பொட்டி பொட்டியா வெச்சிருக்கேனேடி. அதுலெ பாத்து ஒனக்கு வேணுங்கற சைஸுலெ நட்டு எடுத்துக்கோயேண்டீ’ ம்பேள். ‘நான் என்னடீ குடிக்கப் போறேனா? இல்லெ சின்ன வீட்டெத் தேடிப் போறேனா? கேமிராவெ எடுத்துண்டு படம் புடிக்கத் தானேடீ போறேம்’ பேள்.”
“அது கரெக்ட்டு தானேடீ?”
“வாலு போச்சு கத்தி வந்துதும்பாளே அது மாதிரி கேமிரா போச்சு. இப்பொ கம்ப்யூடர் வந்துது ஒங்களுக்கு. ஒலகமே மறந்து போயிடும் அதுலெ ஒக்காந்துட்டேள்னா. நான் ஒத்தி இருக்கேங் கறதாவது ஞாபகம் இருக்கா இல்லியா?”
“அதெப்டிடீ மறந்து போகும்? காலம்பர அஞ்சரை மணிக்குக் காப்பி, எட்டு மணிக்கு ரெண்டு பிஸ்கெட்டோட ஒரு டம்ப்ளர் பாலு, பத்தரைக்கு சாப்பாடு, மூணு மணிக்கு டிபன் காப்பி, ஏழு மணிக்கு சப்பாத்தியோ, இட்லியோ, தோசையோ இல்லே தயிர் சாதமோ, ஒம்பது மணிக்கு ஒரு கிளாஸ் பாலூன்னு யாருடி டயம் தப்பாமெ குடுக்கறா தினோம் எனக்கு? நீதானேடி குடுக்கறே? எப்டிடீ மறப்பேன் உன்னெ? ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ ன்னு ஔவையாரோ யாரோ சொல்லி இருக்காளேடீ. ஒன் சமையல்லெ ஒரு கல் உப்பு கூடவே இருக்குன்னு சொல்லிக் காட்டலேடி நான் இப்போ. விசுவாசம் இல்லாதவன் மனுஷனே இல்லேன்னு சொல்ல வரேண்டீ.”
“அதெல்லாம் உடுங்கோ. நாளெய்க்கு என்னன்னு தெரியுமோ?”
“என்னடீ? யாராவது ஊருலேந்து வராளா?”
“யாரும் வரலெ. பொங்கல் வரது.”
“ஆகா… பொங்கல் வரதா? அப்பொ சக்கரெப் பொங்கல் கெடெய்க்கும்னு சொல்லு. ஏய் அந்த பொங்கல்லெ முந்திரிப் பருப்பெகஞ்சத்தனம் பண்ணாமெ கொஞ்சம் தாராளமாப் போடுடீ. நெய்யும் கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். சுஷ்கம் புடிக்காதேடீ.”
“முந்திரியும் நெய்யும் கேக்கறதா ஒங்களுக்கு? அதுக்குள்ள மறந்து போச்சா போன வாரம் டாக்டர் என்ன சொன்னார்னு?”
“என்னடி சொன்னார்?”
“ஒங்களுக்குக் கொலெஸ்ட்றால் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அதுனாலெ இன்னெமெ தேங்கா, முந்திரி, நெய் இதெல்லாம் டோடலாக் கட் பண்ணணும்னு சொன்னாரே. மறந்து போச்சா?”
“டாக்டர் கெடக்கார்டீ. பண்டிகெ என்ன தினோமா வரது? பண்டிகெ வந்தா பள்ளிக் கூடம் ஆபீசுன்னு எல்லாம் லீவு உடலே? அது போல டாக்டர் அட்வைசுக்கும் லீவு உடுடீ.”
“சரி லீவு உடலாம். மொதெல்லெ அந்தக் கம்ப்யூடெரெ மூடி வெச்சூட்டுக் கடெய்க்குப் போய் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வெத்தலெ, பூ, பழம் எல்லாம் வாங்கிண்டு வாங்கோ.”
“செஞ்சூட்டாப் போச்சு.”
அரை மணி நேரத்துக்குப் பின்:
“ஏன்னா… இது என்னான்னா ஒத்தெக் கரும்பு? அதுவும் தோகை இல்லாமெ மொட்டையா? என்னிக்கானும் ஒங்க அப்பா அம்மா ஒத்தெ மொட்டெக் கரும்பெ வெச்சு சூரிய பகவானுக்குப் பூஜெ பண்ணிப் பாத்திருக் கேளான்னா?”
“கரும்பு என்ன வெலெ தெரியுமாடீ? போன வருஷம் அம்பது ரூபாக்கு ஒரு ஜோடி வாங்கினேன். இந்த வருஷம் எண்பது ரூபா கேக்கராண்டீ. அதுவும் குட்டி குட்டியா கோணலா இருக்குற கரும்பு. நன்னா நேரா வெளெஞ்ச கரும்ப வெலெ கேட்டா மயக்கமே வரதுடீ. ஜோடி நூறு நூத்தி இருபதுங்கறான்.”
“கேக்க மாட்டான் பின்னெ? தங்கம் வெலெ ராக்கெட்டுலெ ஏறி ஆகாசத்துக்குப் போறது. வெங்காயம் வெலெ எங்கேயோ போயிடுத்து. கரும்பு வெலெ மட்டும் தரையிலேயே இருக்கணுமா என்ன? ஏறாதா பின்னெ? அதுவும் இந்த வருஷம் மழெயில்லாமெ பயிரெல்லாம் நாசமாயிடுத்துன்னு சொல்லறா. அது போறது. மொட்டெக் கரும்பெ ஏன் வாங்கிண்டு வந்தேள்?”
“நான் வாங்கறச்சே அது தோகையோட தாண்டீ இருந்துது.”
“வழிலெ தோகை மட்டும் பறந்து போச்சாக்கும்?”
“இல்லேடீ. நான் ஒரு கைலெ மஞ்செக் கொத்து, இஞ்சிக் கொத்து, பூ, பழம், வெத்திலெ இதெல்லம் இருந்த பையெத் தூக்கிண்டு இன்னூரு கையிலெ கரும்பெத் தூக்கிண்டு வந்தேனா..”
“என்ன ஆச்சு? பின்னாடியே மாடு வந்து தின்னூடுத் தாக்கும்?”
“இல்லேடீ. பின்னாடி லேந்து திடீல்னு ஒரு சத்தம், ‘யோவ் கஸ்மாலம்… கரும்பெ நெட்டுக் குத்தா தூக்கீட்டுப் போக்க் கூடாது? பின்னாடி வரவன் கண்ணெக் குத்துறியே’ ன்னு. நான் என்னடீ ராமர் வில்லெத்த் தூக்கிண்டே இருக்காரே எந்தப் படத்துலெ பாத்தாலும் அந்த மாதிரியாடீ கரும்பெத் தூக்கிண்டு வரமுடியும்? அப்பிடியேத் தூக்கிண்டு வரலாம்னாலும் அந்த கரும்பு எலெ வந்து என் கண்ணெக் குத்தாது? அதான் கடெய்க்குத் திரும்பிப் போய் அதெ வெட்டிக் குடுக்கச் சொல்லி எடுத்துண்டு வந்தேன். தோகை இல்லாட்டா என்ன? சாமிக்குத் தெரியுண்டி நாம அவருக்குக் கரும்பெத் தான் நேவேத்யம் பண்றோம்னு.”
“இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லெ. சரி… ஒங்களெ வெத்தெலெ வாங்கிண்டு வரச் சொன்னேனா? இல்லெ சொத்தெலெ வாங்கிண்டு வரச் சொன்னேனா? மேலெயும் கீழெயும் நல்ல எலையா இருக்கு. நடுவுலெ நெறெய பூச்சி அரிச்ச எலையா இருக்கு. ஒங்களெப் பாத்த்துமே கடெக் காராளுக்குத் தெரிஞ்சூடறதுன்னா நீங்க ஒரு சரியான ஏமாந்த சோணகிரி, இவர் தலெலெ எதெக் கட்டினாலும் பதில் பேசாமெ வாங்கிண்டு போவார்னு. எங்கெ இப்பிடித் திரும்புகோ. ஒங்க நெத்திலெ ஏதாவது எழுதி ஒட்டி இருக்கான்னு பாக்கறேன்.”
“ஏய் வாண்ட்டாண்டீ. ரொம்ப ஓவராப் போறே. சாது மிரண்டாக் காடு கொள்ளாதுன்னு சொல்லுவாளெ அது தெரிமோன்னோ ஒனக்கு?”
“சரி…. இதென்ன? ஒங்களெ ஒரு ஜோடி மஞ்செக் கொத்தும் ஒரு ஜோடி இஞ்சிக் கொத்தும் வாங்கிண்டு வரச் சொன்னா காஞ்சு போன எலையோட ரெண்டே ரெண்டு செடி, அதுவும் கிழங்கு இல்லாமெ வாங்கிண்டு வந்திருக்கேள்? கெழங்கு கனமா இருக்குன்னு கடேலெயே பிச்சுப் போட்டூட்டு வந்துட்டேளா? நான் எப்பிடி பொங்கல் பானெய்க்கு ஒரு செட்டு, சாதப் பானைக்கு ஒரு செட்டுன்னு மஞ்செக் கொத்து இஞ்சிக் கொத்து கட்டுவேன்? மறு நாள் கனுவுக்கு கன்னுப் பொடி காக்காப் பொடி வெய்க்க மஞ்சள் எலெய்க்கு எங்கெ போவேன்? நெத்திலெ தீத்திக்க பச்ச மஞ்சள் கெழங்குக்கு எங்கே போவேன்?”
“நான் பிச்சுப் போடலேடீ. கடெக்காரனே பிச்சுத் தனியா வெச்சிருந்தான். அதுலெ ரெண்டு குடுப்பான்னா ‘இருவது ரூவா குடு சார்’ ங்கறான்.”
“இருபது ரூபாப் போனாப் போறது. போய் ரெண்டு மஞ்சள் கெழெங்க வாங்கிண்டு வாங்கோ.”
“மறுபடியும் போகணுமா?” (மனதுக்குள்: “ஆண்டவா… நீயும் என்னெப் போல ஒரு ஆம்பிளெ தானே. இதெல்லாம் பாத்துண்டு நீ ஏன் சும்மா இருக்கே?”)
“பொங்கலோ பொங்கல்…….பெண்களோ பெண்கள்!”